SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்த் திரையின் துருவ நட்சத்திரம் காஞ்சனா

2019-12-03@ 11:05:01

நன்றி குங்குமம் தோழி

செல்லுலாய்ட் பெண்கள்-71

காஞ்சனாவைத் திரையில் பார்த்தாலே மனம் ஏதோ ஒருவித உற்சாகத்தில் துள்ளும். அக்காலகட்ட இளைஞர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த அழகுப்பதுமை அவர். 1970களில் தென்னிந்தியத் திரைஉலகின் நடிப்புலக ராணியாக, கனவுக் கன்னியாகக் கொண்டாடப்பட்டவர். 60, 70, 80களில் அனைத்துத் தென்னக மொழிப் படங்களில் உச்சம் தொட்ட நடிகையாகத் திகழ்ந்தவர்.

தமிழைப் பொறுத்தவரை திரை நட்சத்திரங்களில் அவர் ஒரு துருவ நட்சத்திரம். தொடர்ச்சியாக ஒரு காலகட்டத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி, அபூர்வமாக எப்போதேனும் தமிழ்ப் படங்களில் அபூர்வ நட்சத்திரமாக தென்படுவார். ஏராளமான வண்ணப் படங்களில் அவர் அழகு மிளிர ஜொலித்ததாலோ என்னவோ, ‘கலர் காஞ்சனா’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.  

1964ல் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில்  கதாநாயகியாக அறிமுகமானவர் எப்படி 50களின் நடிகைகள் வரிசைக்குள் வந்தார் என்ற கேள்வி எழுவது இயல்பு. 1957 ஆம் ஆண்டில் நடிகை அஞ்சலி தேவி தன் கணவரும் இசையமைப்பாளருமான ஆதி நாராயண ராவ் இருவரும் இணைந்து தயாரித்த சொந்தப் படமும் மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த கதையுமான ஸ்வர்ண சுந்தரி (தெலுங்கு), அதன் தமிழ் வடிவமான ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ இரு திரைப்படங்களிலும் தேவதையாக சிறு வேடத்தில் தோன்றி நடித்தவர்.

அதன் பின்னரே ஸ்ரீதரால் நாயகியாகத் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். நடிகைகள் காஞ்சனா, ஜெயந்தி, ராஜஸ்ரீ மூவரையும் முதன்முதலாகத் தங்கள் சொந்தப் படத்தில் அறிமுகப்படுத்திய பெருமை நடிகை அஞ்சலி தேவிக்கு உண்டு. வசதியான குடும்பப் பின்னணி - ஆனால் தனிமையும் வெறுமையும் அன்றைய சென்னை ராஜதானியில் அமைந்த பிரகாசம் மாவட்டத்தில் (பின்னர் அது ஆந்திரப் பிரதேசம்) ஆகஸ்ட் 16, 1939ல் சாஸ்திரி - வித்யு லதா தம்பதியின் மூத்த மகளாகப் பிறந்தவர் பகவதுல வசந்த பாமாதேவி. பெற்றோர் இட்ட அந்தப் பெயர், பின்னர் வசுந்தரா தேவியாக அவர்களாலேயே மாற்றப்பட்டது.

அப்பெயருடனே அவர் வளர்ந்தார். மிக வசதியான குடும்பம் என்றாலும் பெற்றோர்களிடையே இடைவிடாமல் ஏற்பட்ட பிணக்கு, சச்சரவுகளின் காரணமாகப் பெரும்பாலும் அவர் தனித்து விடப்பட்ட, அன்புக்கு ஏங்கிய குழந்தையாகவே இருந்துள்ளார். அந்தத் தனிமை உணர்வைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கில் மிக இளம் வயதிலேயே பெற்றோர் அனுமதியுடன் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் இரண்டிலும் தன் முழு கவனத்தையும் செலுத்தி அதை முறையாகப் பயின்றவர்.

தெலுங்குத் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகன் ஏ.நாகேஸ்வர ராவ் அண்டை வீட்டுக்காரர் என்பதால் சிறு வயது முதலே அவரோடு நட்புடன் பழகியவர். பள்ளிக் காலத்திலும் கல்லூரி நாட்களிலும் தோழிகளுடன் பைக் சவாரி செய்தல் என  துறுதுறுப்பும் சுட்டித்தனமும் மிக்க இளம் பெண். வீட்டை விடுத்து வெளியுலகமே  அவருக்கு பெரு மகிழ்ச்சியை வாரி வழங்கி இருக்கிறது.

அந்தரத்தில் பணியாற்றிய அழகு மங்கை

குடும்பத்தின் அமைதியின்மையே அவரை பணிக்குச் செல்லத் தூண்டியது. அவரது கவர்ச்சிகரமான அழகு விமானப் பணிப்பெண்ணாகும் வாய்ப்பை அளித்தது. அப்போதெல்லாம் விமானப் பணிப்பெண்கள் மிக மிக அழகானவர்களாக, கவர்ச்சிகரமானவர்களாக, திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற விதிகளையும் விமானக் கம்பெனிகள் விதித்திருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்தப் பணிக்கு அழகே மிகப் பெரிய முதலீடு. அப்போது அவர் போட ஆரம்பித்த அந்தக் கொண்டையைப் பல திரைப்படங்களிலும் தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறார். அதில் முதன்மையானது ‘சிவந்த மண்’. 600 ரூபாய் ஊதியத்தில் விமானப் பணிப்பெண்ணாக மிக உயரத்தில் இந்தியா முழுமைக்கும் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தவர்.

விமானத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் அப்போது உயர் வர்க்கத்தினரும் திரைத்துறையினரும் மட்டும்தானே. அவ்வாறுதான் இயக்குநர் சி.வி.தரும் விமானப் பயணியாக வசுந்தராவுக்கு அறிமுகமானார். வசுந்தரா தேவியின் அசத்தலான அழகும் கொள்ளை கொள்ளும் கவர்ச்சிகரமான சிரிப்பும் எல்லோரையும் போல் அவரையும் ஈர்த்தது.

தன் படங்களில் அவரை நாயகியாக்கும் அளவு அது சென்றது. முதலில் சற்றுத் தயங்கினாலும் பின்னர் வசுந்தராவும் அந்த வாய்ப்பினை ஏற்றுக் கொண்டார். அதற்கு ஏற்கனவே அவர் திரைப்படங்களில் தோன்றிய அனுபவமும் ஒரு காரணம். அப்படித்தான் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கதாநாயகியுமானார்.

காதலை மட்டுமே கொண்டாடிய காதலிக்க நேரமில்லை

இந்தப் படத்துக்கு முன்பு வரை பரீட்சார்த்தமான கதைகளையும் சோகச் சித்திரங்களையும் அளித்து வந்த இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் முழு நீள நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து அப்படத்தைத் தன் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘சித்ராலயா’ பானரில் தயாரித்து இயக்கினார். 1930களில் கொடி கட்டிப் பறந்த நடிகை வசுந்தரா தேவி (ஆனால், அவரது இயற்பெயர் வேதவல்லி. இவர் நடிகை வைஜெயந்தி மாலாவின் தாயாரும் கூட.) திரையுலகில் நன்கு அறியப்பட்ட பெயர் என்பதாலும், தர் தேர்வு செய்த பெயர் கல்பனா; அந்தப் பெயரிலும் ஏற்கனவே ஒரு நடிகை இருந்ததால், வசுந்தரா தேவி, காஞ்சனா என பெயர் மாற்றப்பட்டார்.

படத்தின் ஆரம்பமே காஞ்சனாவின் பாடலுடன் மெரீனா கடற்கரையில் தொடங்கும். மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலும் மஞ்சள் நிற சல்வார் கமீஸும் முகம் நிறைய புன்னகையும் நிரம்பிய காஞ்சனாவைப் பார்ப்பதே கொள்ளை அழகு; மனம் நிறைந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.‘என்னப் பார்வை உந்தன் பார்வை’ பாடலை எத்தனை முறை தொலைக்காட்சிகளில் காணும்போதும், அவரின் மெல்லிய நடன அசைவுகளுடன் கூடிய அப்பாடல் மனதை மயக்கவே செய்கிறது. அதிலும் அக்காலகட்டத்தில் சல்வார் என்பது மிக மிக அரிதாகவும் தமிழகப் பெண்கள் அணியக்கூடாத உடையாகவும் இருந்ததால், காஞ்சனா மீது ஏற்பட்ட காதலைப் போலவே அந்த சல்வாரின் மீதும் அக்காலகட்டத்துப் பெண்கள் பலருக்கும் பெரும் காதல் ஏற்பட்டது.

படத்தின் மூன்று ஜோடிகளுமே காதலில் திளைத்துக் களித்தார்கள். அத்தனை பாடல்களுமே அதன் இனிமையால் செவிகளை நிறைத்தன. ‘காதலிக்க நேரமில்லை... காதலிப்பார் யாருமில்லை’ என வயதான வேடத்திலிருக்கும் கதாநாயகன் ஆட முத்துராமன், கம்பீரக் குரலிசை நாயகன் சீர்காழி கோவிந்தராஜன் பாட, இளம் காஞ்சனாவின் முகத்தில் தென்படும் கோபமும் கொந்தளிப்பும் ஆக்ரோஷமும் அடடா ரகம்.

பாடலின் பின்பகுதி சரணத்தில் ’அவ்வுலகம் சென்று வந்தேன்; அமுதம் குடித்து வந்தேன்’ என வேடம் கலைத்து உற்சாக தொனிக்கு மாறும் வேளையில் அப்படி ஒரு பரவசம் காதலனைக் கண்டதும் காஞ்சனாவின் முகத்தில் எழுவதை பார்க்க வேண்டுமே. அவரும் இணைந்து ஆடும் ஆட்டம் அத்தனை ரம்யமானது. மிகக் கொண்டாட்டமான ஒரு ஆடல், பாடல் காட்சி அது. ஆனால், இப் படத்தில் தான் சரியாக நடிக்கவில்லை என்ற குறை காஞ்சனாவுக்கு இருந்துள்ளது. ரசிகர்களாகிய நமக்கு அப்படி எல்லாம் தோன்றவில்லை.

பார்த்தேன்... சிரித்தேன்...ரசித்தேன் அந்த உத்தரையை...

எல்லோரும் நன்கு அறிந்த மகாபாரதக் கதையின் ஒரு பகுதியாக தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘வீர அபிமன்யு’ படத்தின் இளம் நாயகி, அபிமன்யுவின் ஆத்மார்த்தமான காதலி, அன்பு மனைவி உத்தரையாக தோன்றிய காஞ்சனாவை மறக்க முடியுமா? அவ்வளவு கவர்ச்சி அவரிடம் கொட்டிக் கிடந்தது. அபிமன்யுவும் உத்தரையும் கானகத்தில் சந்திக்கும் காட்சியே அற்புதமானது. ‘வேலும் வில்லும் விளையாட’ எனத் தொடங்கும் அவர்களின் காதல் தொடர்ந்து வேல் விழியையும் வில்லாளனையும் ஒன்றிணைத்தது.

இப்படத்தில் நடிப்பதற்கும் காஞ்சனாவுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. விஸ்வரூபமெடுத்து வானளாவ உயர்ந்து நிற்கும் கடோத்கஜனின் தோளில் ஏறிக் குதித்துக் குறும்புகள் செய்வதும், அபிமன்யுவுடன் காதலில் திளைத்து ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்’ என சுசீலாவின் இனிய குரலில் அந்தப் பாடலை என்றென்றைக்கும் இசை ரசிகர்களுக்கு சாசுவதமாக்கியதும் கூட காஞ்சனாவின் பங்களிப்புகளில் முதன்மையானது. பாடல் கூட்டு முயற்சிதான், அதில் நடிகையின் பங்களிப்பும் முதன்மையானது. பாடலைக் கேட்கும்தோறும் பார்க்கும்தோறும் ஏ.வி.எம்.ராஜனும் காஞ்சனாவும் மனத்திரையில் தோன்றுவதை யாரால் தடுக்க இயலும்.

அபிமன்யு போருக்குப் புறப்படும் போதும் அவன் போரில் வீர மரணமடைந்தான் எனக் கேள்வியுற்றதும் ஒரு பிச்சியின் மனநிலையுடன் சிரிப்பதும் அழுவதுமாக இரட்டை மனநிலையுடன் தன் நடிப்பால் அவர் வசீகரித்ததை என்னவென்று எழுத?  
மோட்டார் சுந்தரம் பிள்ளையின் மூத்த மகள்

முதன் முதலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள்களில் மூத்தவராக, திருமணமான பெண்ணாக ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் தோன்றினார் காஞ்சனா. ஆம்! தோன்றினார் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஏனெனில் நடிப்பதற்கான வாய்ப்புகளே இல்லாத படம் அது. பிற மகள்களான ஜெயலலிதா, ராஜ் கோகிலா (இவர் நடிகை மீனாவின் சித்தியும் கூட) வுக்குக் கூட நடிக்க வாய்ப்பிருந்தது. கணவன் படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மகனின் படிப்பு கெடக்கூடாதே என்பதால் மருமகளைத் தாய் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் மாமனார் சுந்தரராஜன்.

மகன் படிப்பை முடிக்கும் முன் எதற்குத் திருமணம் செய்து வைப்பானேன்; பின் மருமகளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்புவானேன். அந்தக் கால லாஜிக் நமக்குப் புரிபட மாட்டேனென்கிறது. மனைவி மீது கொண்ட காதலால், தகப்பனாருக்குத் தெரியாமல் ரகசியமாக மாமனார் வீட்டுக்கு வந்து மனைவியைச் சந்திக்கிறான். இந்தச் சந்திப்பு பலமுறை தொடர்கிறது. விளைவு மருமகளுக்கு மசக்கை. அதை மறைக்க முடியுமா? மாமனாரோ மருமகள் நடத்தை கெட்டுப் போனதாக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்.

அந்த உத்தம புத்திரனோ தந்தைக்குப் பயந்து வாயே திறக்கவில்லை. பின்னர், பல சிக்கல்களுக்குப் பின் இந்தத் திருவிளையாடலை நிகழ்த்தியவன் அவருடைய மகன்தான் என்பது அந்தப்  பணக்காரப் பெரியவருக்குப் புரிய வைக்கப்படுகிறது. இது எப்படி இருக்கிறது? இங்கு சந்தேகம் என்ற விஷக்கணை எப்போதும் பெண்ணை நோக்கியே வீசப்படும் என்பதற்கு இம்மாதிரியான கதாபாத்திரங்களும் காட்சிகளுமே சாட்சி. அந்த ஒடிசலான குடும்பப் பாங்கான காஞ்சனாவும் கூட ஈர்க்கத்தான் செய்தார். அவருக்கு ஜோடி இளம் சிவக்குமார்.  

அடக்கமான குடும்பத் தலைவியே ஆனாலும் கவர்ச்சிக் கன்னிதான் ‘பாமா விஜயம்’ படம் முழுதும் காஞ்சனாவுக்கு நகைச்சுவை வேடமே. தனக்கு நகைச்சுவையாக நடிக்க வருமோ என்ற தயக்கத்துடனேயே அவர் அப்படத்தில் நடித்து வெற்றியும் பெற்று விட்டார். அதுவரை கவர்ச்சிகரமான நாயகியாக, கனவுக்கன்னியாக அவரைப் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையிலிருந்து இது முற்றிலும் ஒரு மாறுபட்ட படம்.

மூன்று மருமகள்களும் (சௌகார் ஜானகி, ஜெயந்தி) ஒற்றுமையாக கூட்டுக் குடும்பத்தை நிர்வகிக்கும் அழகினை ‘ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே..’ என்ற அந்த ஒரு பாடலிலேயே மெய்ப்பித்து விடுவார்கள். அந்தப் பாடலில் காலையில் தொடங்கி மாலை வரை ஒரு குடும்பத்தில் பெண்கள் செய்யக்கூடிய அத்தனை பணிகளும் அடக்கமாகி விடும்.

இதுதான் அவர்களின் அன்றாடம். அவ்வளவு அழகான காட்சிப்படுத்தல் அந்தப் பாடல் காட்சி. நாள் முழுதும் வேலை செய்தாலும், மாலை நேரத்தில் ஆடலும் பாடலுமாக ஒரு பொழுதுபோக்கும் அதில் கொசுறாக இடம் பெறும். பெண்களின் ஒரு முழு நாளைய கடும் வேலைப்பளுவுக்கு இடையேயான ஒரு சிறிய ரிலாக்சேஷனாகவும் அது வெளிப்படும். புராணப் படத்தின் தலைப்பாக இருந்தபோதும், அண்டை வீட்டுக்காரராகக் குடியேறும் பாமா (ராஜ) என்னும் ஒரு நடிகை ஒரு நடுத்தரக் குடும்பத்துக்கு விஜயம் செய்யும் அந்த நாளுக்கான ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தயாரிப்புகளும், ஏற்பாடுகளும், போலி கௌரவமும் அந்த நடிகையின் வருகைக்குப் பின் அக்குடும்பத்தில் நிகழும் நடைமுறைச் சிக்கல்களும் என நகைச்சுவையாக நகரும் படம் அது.

கவர்ச்சி நாயகி குடும்பத்தலைவியாக அதிலும் சோடா புட்டிக் கண்ணாடியை அணிந்து கொண்டு தன் தோற்றத்தையே மாற்றிக் கொண்டவருக்கு, கவர்ச்சியாகத் தோன்றவும் இயக்குநர் கே.பாலசந்தர் இடமளித்திருந்தார். படுக்கையறையில் அவர் பாடும் ‘நினைத்தால் சிரிப்பு வரும், நினைவில் மயக்கம் வரும்’ பாடலில் முத்துராமனுடன் அவர் இழைந்து இழைந்து நடிக்கும் காட்சி உள்ளார்ந்து வெளிப்படும் காமத்துடன் அவரை மீண்டும் கவர்ச்சிக்கன்னியாகவே நிலை நிறுத்தியது. சௌகார் ஜானகியைத் தவிர, காஞ்சனா, ஜெயந்தி ராஜ என மூன்று நாயகிகளுக்குமே இப்படத்தில் இது முற்றிலும் பொருந்தும். இப்படம் ஜெமினி நிறுவனத் தயாரிப்பில் இந்தியில் ‘தீன் பஹுராணியாங்’ என வெளியானது. இதே மூவர் கூட்டணி இந்தியிலும் அமர்க்களம் செய்தது.

மிக நீண்ட சட்டப் போராட்டம் மூலம் மீண்டும் கிடைத்த சொத்துக்கள் தொடர்ச்சியாக மிக பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும், அவை அனைத்தும் அவருடைய தந்தையின் வங்கிக் கணக்குக்கே சென்றது. அதற்கு சொல்லப்பட்ட காரணம், மகளுக்குத் தந்தைதான் பாதுகாப்பும் அரணும் என்பதே. வெற்றுக் காகிதத்தில் மகளின் சொத்துகளின் பாதுகாப்புக்கென அவருடைய தந்தையார் பெற்ற கையெழுத்து காஞ்சனாவின் வாழ்வையே முடக்கிப் போட்டது.

லட்சக்கணக்கில் சம்பாதித்து சொத்துகளை ஈட்டியிருந்தபோதிலும் தன் கையில் எதுவும் இல்லாமல் தந்தையை மட்டுமே எதிர்நோக்கியிருக்க வேண்டிய அவல நிலை. அவர் நடிப்பின் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் பலவும் அவருடைய தந்தையார் சாஸ்திரி பெயருக்கு மாற்றப்பட்டிருந்தன. மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணமும் அந்தத் தந்தைக்கு எழவே இல்லை.

பிள்ளைகளின் வாழ்க்கையை வளமாக்கிப் பாதுகாக்க வேண்டிய பெற்றோரே அவருக்கு எதிரிகளாக மாறிப் போனது பெரும் சோகம். சென்னை தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் இருந்த ஆறு கிரவுண்ட் இடத்தை அவர் மீண்டும் பெற பெரும் சட்டப் போராட்டங்களைப் பல ஆண்டு காலம் நிகழ்த்த வேண்டியிருந்தது. சொத்துக்களை மீண்டும் பெற்றால் அதைக் கோயிலுக்கே எழுதி வைப்பதாக திருப்பதி வெங்கடாசலபதியிடம் அவருடைய தங்கை கிரிஜாவும் காஞ்சனாவும் நேர்ந்து கொண்டார்களாம்.

ஆரம்ப காலத்தில் அவரைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிய ஒரு பத்திரிகை, அதிலும் திரைப்பட நடிகைகளை மட்டுமே அட்டைப்படத்தில் வெளியிட்டுக் காசு பார்த்துக்கொண்டு, அதே நேரம் அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களையும் அவதூறுகளையும் பரப்பிக் கொண்டிருப்பதையே பிழைப்புவாதமாகக் கொண்டிருக்கும் அப்பத்திரிகை, பிற்காலத்தில் காஞ்சனா சொத்துக்களை இழந்து, அதை மீண்டும் பெறுவதற்கான சட்டப் போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில், அவர் கோயிலில் பிச்சை எடுத்துப் பிழைப்பதாகக் கதையளந்ததுடன் பெருவாரியான மக்களை அதை நம்பவும் வைத்தது. அப்போது இதை மறுத்து காஞ்சனா அறிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

திறமையான வழக்குரைஞர்களின் வாதத் திறமையால் 2010ம் ஆண்டில் இழந்த சொத்துக்களை காஞ்சனா மீண்டும் பெற்றார். இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் காஞ்சனாவுக்குப் பேருதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தவர் அவருடைய தங்கை கிரிஜா பாண்டே மற்றும் அவருடைய கணவர் பாண்டேவும் தான். கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் அவர்களின் சட்டரீதியான உதவியும் ஒத்துழைப்பும் காஞ்சனாவுக்குக் கிடைத்தன. சகோதரிகள் இருவரும் தங்கள் வேண்டுதலின்படியே 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள்.

தற்போதும் இதில் பெரிதாக விமர்சிக்க ஏதுமில்லை என்றாலும், அவர்கள் சொத்து அதை யாருக்கும் அளிக்கலாம் என் நினைத்தாலும், ஏற்கனவே இந்தியாவின் பணக்காரக் கடவுளாக அறியப்படும் பெருமாளுக்கு ஒரு பகுதியும் அதே நேரம் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமோ என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எப்படியாயினும் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இளம் வயது முதலே உழைத்து சம்பாதித்த சொத்துக்களை இழந்து அதை மீண்டும் பெறும் வரை தனிமையிலும் கவலையிலும் கண்ணீரிலும் காலத்தைத் தள்ளியவர் வாழ்வின் இறுதிப் பகுதியிலாவது தன் விருப்பம் போல் செயல்படவும் தன் வாழ்க்கையை வாழவும் முடிவதே ஒருவிதத்தில் மகிழ்ச்சி.

முதன்மை நாயகர்களின் ஜோடியும் பெற்ற விருதுகளும்தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், தெலுங்கில் நாகேஸ்வர ராவ், என்.டி.ராமாராவ், ஜக்கையா, சோபன் பாபு, கிருஷ்ணா, கன்னடத்தில் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், கிரீஷ் கர்னாட், மலையாளத்தில் பிரேம் நஸீர் என அனைத்து முதன்மைக் கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்தவர். இந்தியில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, 2005 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் விருது, 2007ல் ஆந்திரத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் அறக்கட்டளை வழங்கிய ‘ஸ்வர்ண கனகம்’ விருது, கர்நாடக அரசின் ராஜ்யோத்ஸவா விருது போன்ற உயரிய விருதுகள் அவரது திரையுலக வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்பட்டவை. பிற கதாபாத்திரங்களைத் தன்னுள் பொதிந்த காஞ்சனா என்ற வானவில் மீண்டும் அடுத்த இதழிலும் தோன்றும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்