SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறிக்கோள் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்காது!

2019-11-07@ 11:54:20

நன்றி குங்குமம் தோழி

“போட்டிகள் நிறைந்த இந்த ஸ்மார்ட் காலத்தில் இளைஞர்களின் வெற்றிக்குத் தேவை வேகமும் விவேகமும். தன்னம்பிக்கையின் தனித்த அடையாளமாகத் திகழும் விவேகானந்தர், “குறிக்கோளை அடையும் வரைப் போராடி வெற்றிப் பெறவேண்டும்” என்கிறார். நமது வாழ்க்கையின் வெற்றிப்பாதை நோக்கிச் செல்வதற்குத் தன்னம்பிக்கை மட்டுமே ஆயுதம். வெற்றி பெறுவோம் என்று உறுதியாக ஒரு நிலைப்பட்ட மனதுடன் எண்ணும் போது வெற்றி நிச்சயப்படுகிறது. இதுவே, நான் வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம்” என்கிறார் ‘எம்.சி’ நந்தினி.

பேச்சு ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு வேண்டிய ஒரு மாபெரும் அடிப்படையான அரிய கலை. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கின்ற வல்லமை பேச்சுக் கலைக்கு உண்டு. இது கல்லாதவரையும் கற்றவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு ஈர்ப்புக் கலை. ‘மாஸ்டர் ஆஃப் செரிமனி - எம்.சி’ என்ற அந்த கலை மூலம் பல சேவைகளை செய்து வருகிறார் நந்தினி.

‘‘நான் நெய்வேலி பொண்ணு. அங்கேயே தான் படித்தேன். நான் படிச்சது கிரிஸ்டியன் பள்ளி என்பதால், என்னுடைய பள்ளியை கன்னியாஸ்திரிகள் தான் நிர்வகித்து வந்தனர். சேவைக்கு பெயர் போனவர்கள் இவர்கள். சின்ன வயசில் இருந்தே அவர்களின் சேவையை பார்த்து வளர்ந்த எனக்கு... இது போன்ற சேவையில் நானும் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

சேவை என்றாலே அதற்கு முன்னோடி அன்னை தெரசாதான். அதனால் அவர்களை பற்றிய வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை வாங்கி படிச்சேன். அது மட்டும் இல்லை, பள்ளியில் திருக்குறள் வாசிப்பது, பிரேயரில் பாடுவதுன்னு எந்த ஒரு மேடை நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் அங்க முதல் ஆளா நிற்பேன். என்னுடைய இந்த எம்.சி பட்டத்திற்கும் இது தான் அடித்தளம்’’ என்றவர் வாய்ப்புக்காக காத்து இருக்காமல் அதை தன்வசமாக்கிக் கொண்டுள்ளார்.

‘‘திறமை இருந்தாலும் வாய்ப்புகள் நம்மை தேடி எப்போது வரும் என்று சொல்லிட முடியாது. வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது மட்டுமில்லை... வாய்ப்புகளை தேடி நாமும் தயக்கமில்லாமல் பயணிக்க வேண்டும். அப்போது தான் நம்மால் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க முடியும். மேலும் இந்த துறையை பொறுத்தவரை சகிப்புத் தன்மை மிகவும் முக்கியம். என்னதான் கஷ்டங்கள் நம்மை புரட்டிப் போட்டாலும் அதை வெளியே காண்பிக்காமல் புன்னகையுடன் கடந்து செல்ல வேண்டும். அப்படித்தான் நான் என் கஷ்டங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு பல நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்தி இருக்கேன்’’ என்றவர் ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார்.

‘‘வேலை ஒரு பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தாலும், வேலை முடிந்து மாலையில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஈவென்ட்சுக்கு போயிடுவேன். சின்னச் சின்ன நிகழ்ச்சிகளாகத் துவங்கி தற்போது ஓரளவு எல்லோருக்கும் தெரியும் ஒரு பெண்ணாக பிரபலமாகியிருக்கிறேன். என்னதான் நல்ல சம்பளத்திற்கு வேலைக்குப் போனாலும், ஒரு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அதில் கிடைப்பதில்லை.

பல நிகழ்ச்சிகளில் கிடைத்த அனுபவம் கொண்டு சொந்தமாக “Chennai Event Professional” என்கிற அமைப்பைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். நாம் வாழ்வில் கடந்து வந்த பாதையை என்றுமே மறந்துவிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அதேபோல் எனக்கு ெதாகுப்பாளராக வேண்டுமென்கிற ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கான வழியைத் தேடித் தந்தது, ஆர்.கே.தமிழரசன் சார் அவர்கள்தான். இவர் பல வருடங்களாக ஈவென்ட் மேனஜ்மென்ட் துறையில் இருந்து வருகிறார்.

குருவான இவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டி” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் நந்தினி.நிகழ்ச்சிகள் இல்லாத வாழ்க்கையே இன்று இல்லை. நமது நல்ல காரியங்களை வெளிப்படுத்தவும், சாதனைகளை, சந்தோஷங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வைக் கூட பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர்.

இதில் கண்டிப்பா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒருவர் தேவைப்படுகிறார். அவர் பிரபலமான முகமாக இருப்பதைவிடத் திறமையானவராக இருப்பதே முக்கியம். நிகழ்ச்சிக்கு ஏற்ற வகையில் கேம்ஷோக்கள், அதைச் சுவாரசியமாக நடத்துவதற்கான அனுபவம் பெற்றிருக்கவேண்டும். அதே சமயம் அங்கு எந்த ஒரு நிகழ்வையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் வேண்டும்.

சும்மா பேசினால் மட்டும் போதாது என்பதை நான் என் அனுபவத்தில் கற்றுக் கொண்டேன். அதற்கான முயற்சியும் ஆர்வமும் மிக முக்கியம். ஒரு நிகழ்ச்சி தொடக்கம் முதல் கடைசி வரை மக்களுக்கு பிடித்த மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில நிகழ்ச்சிகளில் திட்டமிட்டு செய்வதற்கான சூழல் கிடைக்கும். ஆனால், ஒரு சிலவற்றில் அப்படி முன்கூட்டியே தயாராக முடியாது. ஆன்ஸ்பாட்டில் செய்ய வேண்டும்.

அந்நேரம் நமது பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் ரொம்ப முக்கியம். இத்துறையினை பெண்கள் பகுதி நேரமாகவும் எடுத்து செய்யலாம்’’ என்றார். நந்தினி தனக்கான அடையாளத்தை உருவாக்கியதுடன், சின்ன வயது ஆசையான சமூக சேவைகளையும் சேர்த்து செய்து வருகிறார். இவென்ட் தொகுத்து வழங்குவதை பகுதி நேரமாக வேலை பார்ப்பவர்களுக்கு இலவசமாக கற்றுத் தருகிறார். “பிளட்டோனோர்’’ என்ற குழுவை அமைத்து ரத்ததான வசதிகளையும் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்துள்ளார்.  “நமது வாழ்வில் வெற்றி பெறக் குறிக்கோள் மட்டும் போதாது. அதை அடையவேண்டும் என்ற ஆர்வமும் இருக்க வேண்டும். எந்த செயலும், நம்மால் உறுதியாக செய்ய முடியும் என்று நம்முடைய மனதில் மேலோங்கி நிற்க வேண்டும். அந்த நம்பிக்கைதான் குறிக்கோளின் வெற்றியை நம் வசமாக்கும்’’ என்கிறார் ‘எம்.சி’ நந்தினி.

ஆனந்தி ஜெயராமன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்