SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசுப் பள்ளிக்கு புத்துயிர் அளித்த தலைமை ஆசிரியர்!

2019-10-14@ 11:27:13

நன்றி குங்குமம் தோழி

‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’, ‘மாதா பிதா குரு தெய்வம்’... இவை எல்லாம் வெறும் மொழிகள் அல்ல. மனித வரலாற்றில் வழி வழியாக மாறாத மணி மொழிகள். ஆசிரியர் பணி மிகவும் மகத்தான பணி. ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர் ஆசிரியை தான். அந்த வழியில் தான் தலைமை ஆசிரியரா பணிபுரிந்து வரும் பள்ளிக்கு புத்துயிர் அளித்துள்ளார் சந்திரா. 20 ஆண்டுகளாக கட்டிடமே இல்லாமல் இயங்கி வந்த பள்ளிக்கு கட்டிடம் அமைத்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளிடம் கற்பித்தலையும் சரியாகக் கொண்டு சேர்த்துள்ளார்.

‘‘1995-ல் ராமநாதபுரத்தில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கினேன். நான் பணிக்கு சேர்ந்த பள்ளியின் கட்டிடம் சிதிலமடைந்து இருந்தது. அதனால் மாணவர்கள் வெட்ட வௌியில் தான் பாடங்களை பயின்று வந்தனர். நான் பொறுப்பேற்ற நாள் முதல் எனது பள்ளியின் கட்டிடத்தை கட்டும் முயற்சியில் ஈடுபட்டேன். அது மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கு கற்பித்தல் முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வந்தேன். இதனையடுத்து 2005-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் ஒன்றியத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத மிகவும் பின்தங்கிய குக்கிராமத்திற்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்று வந்தேன்.

அங்கு பள்ளிக்கூடம் என்ற அமைப்பே இல்லாமலிருந்தது. மரத்தடி தான் வகுப்பறை. ஊர்ப் பிரச்னையைக் கேட்கவும் ஆள் இல்லை, பள்ளிப் பிரச்சனையைப் பார்க்கவும் யாருமில்லை. மரத்தடி வகுப்புகளை மாற்ற வேண்டும் என்றால் முதலில் மக்களின் ஆதரவு வேண்டும். அதை திரட்டினேன். பிறகு கிராமக் கல்விக் குழுவின் உதவியுடன் அரசிடம் மன்றாடி இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டித்தைக் கட்டினேன்’’ என்றவர் அதன் பிறகு பள்ளி மாணவர்கள் மத்தியில் பல மாற்றங்களை் ஏற்படுத்தியுள்ளார். ‘‘இங்கு நான்கு வருடம் தான் பணியாற்றினேன். அதன் பிறகு நடுக்காட்டூர் என்ற பள்ளிக்கு மாறுதல் பெற்று சென்றேன்.

என் ராசியோ என்னவோ, அந்த பள்ளிக் கட்டிடமும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனால் பள்ளி ஊரில் இருக்கும் கோவிலில் தான் இயங்கி வந்தது. மறுபடியும் பல சிரமங்களை தாண்டி, கட்டிடங்களைக் கட்டி முடித்தேன். அதோடு குழந்தைகளுக்கு சீருடை அணியும் பழக்கம், ஷூ, சாக்ஸ், அடையாள அட்டை என 2007-08 கல்வியாண்டிலேயே கொண்டு வந்ததோடு கற்பித்தலையும் சிறப்பாக்கினேன்’’ என்றவர் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கான கல்விமுறையினை மாற்றி அமைத்துள்ளார்.
 
‘‘மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழியிலும் சரளமாக வாசிக்க பழக்கப்படுத்துவது, மற்றும் கணித  அடிப்படைத் திறன்களை வளர்ப்பது தான் என் முதல் பணியாக இருந்தது. இதனுடன் கட்டிட பணியிலும் நான் கவனம் செலுத்தினேன். கிராம மக்கள் மற்றும் கிராமக் கல்விக் குழுவின் உதவியுடன் பள்ளிக்கு கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்து வெற்றி பெற்றேன். தற்போது வேறொரு பிரச்னை தலைதூக்க  ஆரம்பித்துள்ளது. எங்கள் ஒன்றியத்தில் உள்ள ஒரேயொரு அரசு ஆங்கிலப் பள்ளி இது மட்டுமே. 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வி பெற அருகில் அரசுப் பள்ளி எதுவும் இல்லை. எனவே இப்பள்ளியினை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் என் தன்னம்பிக்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்’’ என்றார் தலைமை ஆசிரியரான சந்திரா.


தொகுப்பு: தி.சபிதா ஜேஸ்பர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்