SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றங்கள் நல்லது-நடிகை விஜயலட்சுமி

2019-09-30@ 16:37:11

நன்றி குங்குமம் தோழி

சென்னை-28 திரைப் படத்தில் செல்வி கதாபாத்திரம் மூலம் பக்கத்து வீட்டுப் பெண் போன்று அனைவருக்கும் நெருக்கமான உறவாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. 12 ஆண்டுகள் கழித்தும் இன்றும் அதே பள்ளி சிறுமி போலவே இருக்கிறார்.

பிரபல இயக்குநரின் மகளாக அறிமுகமானாலும், தற்போது தனக்கென்று ஓர் அடையாளத்தைப் பதித்துப் பயணித்து வரும் விஜி, சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘நாயகி’ தொடர் மூலம் பட்டி தொட்டி எங்கும் தனது இருப்பை நிலை நாட்டினார். ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு ‘டும் டும் டும்’ தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் விஜி, தன் அனுபவங்களைப் பகிர்கிறார்.

டும் டும் டும் தொடர்...

திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பரவலாக என்னை அடையாளம் காட்டியது சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘நாயகி’ சீரியல். அத்தொடருக்குப் பிறகு பல சீரியல்களுக்காக கதை கேட்டேன். ஆனால், ஏதும் திருப்திகரமாக அமையாததால் தான் இந்த ஒரு வருட இடைவெளி. இதற்கிடையில், ‘டும் டும் டும்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கதை கேட்டதும் ரொம்பவே பிடித்துப் போனது. சரின்னு சொல்லிட்டேன்.
பிரியா... இது வரை நான் பண்ணாத, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்.

தில்லியில் உள்ள பெரிய செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளர். யாருக்கும், எதற்கும் பயமில்லாத பெண். கல்யாணம், லவ் பிடிக்காது. லைஃப் ஜாலியா இருக்கணும். நிறைய டிராவல் பண்ணணும். ஒரே வார்த்தையில் சொல்லணும்ன்னா முற்போக்கு சிந்தனையுள்ள பொண்ணு. மனதில்
பட்டதை சட்டென்று வெளிப்படுத்திடுவா.

நிஜத்திலும் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டுமா?

இப்படியும் இருக்கணும், அப்படியும் இருக்கணும். பொதுவா எல்லா மாதிரி டைப்ல இருக்கிறது நல்லதுதானே. அப்படி இருந்தாதான் பசங்களுக்கும் போர் அடிக்காம இருக்கும். ஒரே மாதிரி இல்லாம, மாறுபாடுகள் நிறைந்ததுதான் இந்த சமூகம்.

டும் டும் டும்மின் சிறப்பு அம்சம்...

பெரிய பட்டாளமே இந்த சீரியலில் நடிக்கிறாங்க. ஒரு ஊரில் இரண்டு பெரிய குடும்பம். ஒரு சம்பவத்தினால் இரண்டு குடும்பத்திற்கு இடையே பகை ஏற்படுகிறது. எதற்கெடுத்தாலும் போட்டா போட்டிதான். அதில் ஒரு குடும்பத்தில் இருப்பவள் நான். எதிர் குடும்பத்திலிருக்கும் அத்தை பையன் ஹீரோ. எனக்கு கல்யாணம் பிடிக்காது. அவருக்கும் ஏற்கனவே கேர்ள் ஃபிரண்ட் இருக்கு. இரண்டு பேரும் ஊருக்காகக் கல்யாணம் பண்ணிக்கிறோமா, இல்லையான்னு என்கிற கருவை வைத்துக் கதை நகர்கிறது.

எல்லா சீரியல் மாதிரி இது இருக்காது. எப்போதும் அழுதுட்டு, நீளமான டயலாக் எல்லாம் கிடையாது. திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படும். ஹீரோ, ஹீரோயின் பூனை, எலி மாதிரி சண்டை போட்டுக் கொண்டே இருப்பாங்க. ஒரு வருடமா கேட்ட கதைகளில் இது என்னை ரொம்பவே இம்பிரஸ் செய்தது. காரணம் சமகாலத்தில் இந்த தலைமுறையில் என்ன நடந்திட்டிருக்கோ அதைப் பிரதிபலிப்பது மாதிரி இருந்தது. அதையே நல்ல எண்டர்டைமென்டா கலகலன்னு சொல்றோம்.

சீரியலில் நடித்தால் சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காதா?

அப்படியெல்லாம் இல்லை. இன்று எல்லாம் மாறி இருக்கிறது. ஸ்மார்ட் போன்களின் வரவால், எல்லா விஷயங்களும் சோஷியல் மீடியாக்களினால் தெரிந்து கொள்கிறோம். டிக்டாக்கில் பிரபலமானவர்கள் கூட சினிமாக்கு வராங்க. முன்புதான் ஒரு வழிமுறை இருந்தது. முதலில் சென்னைக்கு வரணும். ஒவ்வொரு ஸ்டுடியோ கதவினை தட்டணும். ஆனால், இன்றை நிலை அப்படி இல்லை. சினிமாவை தாண்டி திறமையை வெளிப்படுத்த ஆயிரத்தெட்டு தளங்கள் உள்ளன.

சீரியலிலிருந்து சினிமாவுக்கு செல்வதை விட கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பதை பற்றி கேட்டிருக்கலாம். வடநாட்டில் இருப்பது போல நாம் இன்னும் முன்னேறவில்லை. ஆனால், அந்த மாற்றமும் வரும். என்னுடைய குடும்பமே திரைத்துறை சார்ந்தவர்கள் என்பதால் எனக்கு இந்த துறையில் காலடி எடுத்து வைப்பது சாத்தியமானது. இது எத்தனைப் பேருக்கு அமையும் என்று தெரியவில்லை.

தமிழ் சினிமாவின் இன்றைய சூழல்...

முன்பை விட மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒரு பெண் தைரியமாக நடிக்க வருவதிலிருந்து சொல்லலாம். நிறைய படித்தவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். ஆடியன்ஸும் தெளிவாக இருக்காங்க. எவ்வளவு பெரிய ஸ்டார் படமாக இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் தூக்கி போட்டுறாங்க. இன்றைய பார்வையாளர்களுக்கு கண்டென்ட் தான் முக்கியமாக பார்க்கிறாங்க. நல்ல சினிமா பார்க்க வேண்டுமென்று தெளிவா இருக்காங்க.

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் பார்த்த பின் அந்த படம் நல்லா இல்லை...

இதில் என்ன சொல்ல வர்றீங்கன்னு இயக்குனரிடம் கேள்வி கேட்பதே சிரமமாக இருந்தது. அவரை பார்ப்பது கூட அபூர்வமாக இருக்கும். ஆனால், இன்று டிவிட்டரில் இரண்டு வார்த்தை போட்டால் அதற்கான பதிலை அவரே சொல்லி விடுகிறார். ஃபிலிம் மேக்கர்ஸும் பயப்படுகிறார்கள். ஆடியன்சை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

டிக் டாக்.....

நிறையப் பேர் மிஸ்யூஸ் பண்றாங்க. வீட்டுப் பக்கத்திலிருக்கும் சின்ன குழந்தைகள் கூட டிக்டாக் பைத்தியமாக இருக்காங்க. இது மாதிரி எல்லா தரப்பினரும் பார்ப்பதால் அதை பயன்படுத்தும் போது பொறுப்புணர்ச்சி ரொம்ப முக்கியம். குழந்தைகள் ஸ்மார்ட் போன், டேப் போன்ற சாதனங்களை ஈசியா ஹேண்டில் செய்றாங்க. அதில் என்ன கொடுக்க வேண்டுமென்கிற பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கு. ஒரு குழந்தையின் தாய் என்கிற ஸ்தானத்தில் எனக்கும் அந்த பொறுப்பு இருக்கு. இது சினிமா, சீரியல் இரண்டுக்கும் பொருந்தும்.

அம்மாவா, நடிகையா, தயாரிப்பாளரா, மனைவியா, மகளா - இதில் விஜயலட்சுமி யார்?

எல்லாமே தான் நான். ஒரு பொண்ணா, கல்யாணம் ஆன பின் என் சுதந்திரம் இழந்தேன். காலையில் எழுந்து காபி கொடுங்கன்னு நான் பாட்டுக்கும் உள்ள போயிட்டு, மொபைல் நோண்டிட்டு, படம் பார்த்துட்டு இருந்த எனக்கு சாப்பாடு பெட்டுக்கே வரும். ஆனால் இப்போது நிறைய கிடைச்சிருக்கு. பொறுப்பு வந்திருக்கிறது. இப்ப கூட ஃபோன் பண்ணி அவருக்கு இது பிடிக்கும், பாப்பாக்கு இது கொடுங்கன்னு சொல்லி என்னை மட்டுமில்லாமல் என்னைச் சார்ந்தவர்களையும் கவனிக்கிறேன்.

அதே கவனிப்பும் அவரிடமிருந்தும் எனக்குக் கிடைக்கிறது. இன்று இருவருக்கும் இந்த கவனிப்பு அவசியம். எங்கள் இருவரின் கவனிப்பும் குழந்தைக்கு முக்கியம். இது எனக்குப் புதுசா இருக்கு. என்னை நானே புதிதாகப் பார்க்கிறேன். ஒன்றை இழந்தால், மற்றொன்று அதைவிடச் சிறப்பாகக் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தயாரிப்பு, கவிதை எழுதுவது...

அடுத்து ஒரு த்ரில்லர் படம் தயாரிக்கும் ஐடியா இருக்கு. கவிதை எழுதுறது மறந்து போச்சு. நேரம் குறைந்துவிட்டது. வீட்டுக்கு போனா பாப்பாவோடு விளையாடணும்ன்னுதான் தோனுது. வாழ்க்கை வேகமா ஓடிட்டு இருக்கு. குழந்தையை
வீட்டில் விட்டு வேலைக்குப் போகும் எல்லா பெண்களும், அந்த குழந்தை முதன் முதலாக செய்யும் ஒவ்வொன்றையும் காணாத துர்பாக்கியசாலிகளாகத்தான் இன்று பலர் இருக்கின்றனர்.

வெப் சீரியஸ் தாக்கம்...

வெப் சீரிஸ்... இது நல்ல விஷயம். இன்று எல்லாமே நம் கைக்குள் வந்துவிட்டது. திரையில் வியூவர்ஸ் நமக்குக் கொடுக்கும் நேரம் ஒரு நிமிடம்தான். எவ்வளவோ சேனல்கள், ஸ்ட்ரீம்கள் என உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் மாற்றி மாற்றிப் பார்க்கும் போது, அந்த ஒரு நிமிடத்தில் ஏதாவது அவர்களுக்குப் பிடித்த மாதிரி செய்ய வேண்டியுள்ளது.

அதனால், காம்படீஷனும் அதிகமாகிடுச்சு. பார்வையாளர்களும் நல்ல விஷயமா, அட்ராக்டிவா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கிறாங்க. அழுதுட்டு, அரைத்த மாவே அரைத்துப் பின்னோக்கிப் போகாமல், கால மாற்றத்திற்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டியுள்ளது. எனக்குத் தெரிந்து இந்த பிராஜெக்ட் அப்படிப்பட்டதுதான். ஆடியன்ஸ் நீங்கதான் பார்த்து சொல்லணும்.

அன்னம் அரசு

ஏ.டி.தமிழ்வாணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்