SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்!

2019-09-25@ 11:05:56

நன்றி குங்குமம் தோழி

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைகள் வெளிப்படுத்தும் குரலை விட இனிமையானது உலகில் வேறேதுமில்லை. அதிலும் பசி எடுக்கும் போது ‘ங்கா’ என்று தனது தாயை அழைக்கும் அழகு தனித்துவம். குழந்தை பிறந்ததிலிருந்து குறைந்தது ஒரு வருடம் வரை எந்த வித இடையூறுமின்றி தாய்ப்பால் தரவேண்டும் என்பது உலக நீதியாக உள்ளது. தாய்ப்பால்தான் குழந்தையின் அடிப்படை வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்குகிறது.

நவீன உலகில் பரபரப்பான சூழலில் பணிக்குச் செல்லும் பல பெண்கள் தாய்ப்பால் தருவதில் சிறிதான சுணக்கம் காட்டுகின்றனர். இது தவிரக் குழந்தைக்குத் தாய்ப்பால் தந்தால் தங்களின் அழகுகெட்டு விடும், வயதான தோற்றம் வந்துவிடும் என்ற தவறான புரிதலும் பல பெண்களிடையே நிலவுகிறது. இவை மட்டுமின்றி கர்ப்ப காலங்களில் உரிய சத்துணவை எடுக்காத காரணத்தினால் பல தாய்மார்கள் தாய்ப்பால் பற்றாக்குறைக்கு உள்ளாகின்றனர்.

உலக அளவில் 7.6 மில்லியன் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க முடியாத அவல நிலையில் இருக்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதில் 76 நாடுகளில் இந்தியா 56வது இடத்தில் உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தாய்ப்பாலின் மகத்துவத்தை எடுத்துரைக்க உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் தினத்தைக் கொண்டாடுகிறது.

இது ஒரு பக்கம் என்றால், தமிழகத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகளைப் பயன்படுத்தப் பெண்கள் தயங்குவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பாலூட்டும் பெண்கள் பணி மற்றும் பயண நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டி இருக்கும். அவ்வாறு பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுக்குப் பாலூட்டும் வகையில் 2015ம் ஆண்டு பேருந்து நிலையங்களில் தனி அறைகள் கட்டப்பட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

தமிழகம் முழுவதும் 352 பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கான தனி பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன. அங்கு சுகாதாரமான குடிநீர், அமரும் இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டன. ஆனால், பாலூட்டும் அறைகள் போதிய அளவில் பராமரிக்கப்
படாமல் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்த பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அது மட்டும் காரணமில்லை, வேறு சில காரணங்களாலும் அவற்றைப் பயன்படுத்த பெண்கள் தயங்குகின்றனர்.

இந்நிலையில் சென்னையை மையமாகக் கொண்ட தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கான கூட்டமைப்பு (TN-Forces) நிறுவனம் சார்பாகப் பாலூட்டும் அறைகளின் பயன்பாடு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் தொடர்பான சேவையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தின் அமைப்பாளர் முனைவர் க.சண்முகவேலாயுதம் இந்த ஆய்வு பற்றிக் கூறியதாவது.

“குழந்தைகளின் உரிமைகள், அதனை ஆதரித்து வழக்காடுதல் என்ற செயல்பாட்டின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். கருவிலிருந்தே குழந்தைகளுக்கான உரிமைகளை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் முக்கியமான நோக்கம். ஒரு நாளைக்கு குழந்தைகளுக்கு 7 - 8 முறை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். வீட்டிலிருக்கும் போது இது சாத்தியமாகிறது.

வெளியூருக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்களால் குறிப்பிட்ட தடவை கொடுக்க முடிவதில்லை. இதனால் வெளியூருக்கு செல்லும் போது பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் அறை அமைக்க வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அரசு ஆணைப்படி அந்த அறை குளிரூட்டும் வசதி பெற்று இருக்க வேண்டும். டாய்லெட் வசதி, குடிநீர், குப்பைக் கூடை, ஃபேன் வசதி, வெளிச்சம், ேமசை நாற்காலி என அனைத்து வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும். இதை அந்தந்த போக்குவரத்துக்கழகம், முனிசிபாலிட்டி ஆகியவற்றின் நேரடிக் கண்காணிப்பில் பராமரிக்கப்பட வேண்டும்.

இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது அனைத்து தாய்மார்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. இன்றும் ஒரு சில இடங்களில் இதனை நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த அறை பெண்களுக்கு அச்சம் தரும் இடமாக மாறி இருக்கிறது. இந்த அறைகள் தேவைப்பட்டால் மட்டுமே திறக்கப்படுகிறது. காரணம் அறைகள் 24 மணி நேரமும் திறந்து இருப்பதால் அந்நியர்களின் தங்கும் இடமாக மாறியது.

அதனால் அந்த அறைக்கு பெரிய பூட்டாகப் போடப்பட்டுள்ளது. கேட்கும் போது மட்டுமே திறக்கிறார்கள். சிலர் கேட்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் தாய்ப்பால் அறை இருக்கிறது என பலருக்கு தெரியவும் இல்லை. சில அறைகளுக்கு பாதுகாப்பிற்காக ஆண் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனாலும் பெண்கள் அங்கு செல்ல கூச்சப்படுகிறார்கள். பல இடங்களில் காப்பாளர்களே இல்லை.

2010 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சமத்துவ சட்டத்தின் படி பொது இடங்களான கடை, உணவகங்கள், பொது பேருந்து நிலையம் ஆகியவற்றில் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களை வெளியேற்றக்கூடாது என்றுள்ளது. இது பல அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறையில் உள்ளன. இதே போல் தமிழக அரசு பொது இடங்களான மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், கோயில்கள், பொது கட்டிடங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் இவ்வசதியை அளிப்பதோடு, தாய்ப்பாலின் முக்கியத்துவத்திற்கான விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
 
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலமாக இருந்தாலும் 52% பெண்கள் தான் ஆறு மாதம் வரை தாய்ப்பாலூட்டுகிறார்கள் என்று நேஷனல் ஃபேம்லி ஹெல்த் சர்வே கூறுகிறது. குழந்தை பெற்ற தாய்க்கு அமைதியான சூழல் மிகவும் அவசியம். எந்த ஒரு சண்டையோ, பிரச்சினையோ ஏற்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதில் எந்த தடையும் இருக்காது. இல்லையேல் உளவியல் பிரச்சினைக் காரணமாகத் தாய்ப்பால் சுரக்காமல் போகும் வாய்ப்புள்ளது.

பொது வெளியில் தாய்ப்பால் கொடுப்பது இன்றளவும் பெண்களுக்குப் பெரிய சிக்கலாக நீடிக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்லும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை வைப்பது அவசியம். தாய்ப்பால் கொடுக்கப்படும் போது அதற்கான வசதியை செய்து தரவேண்டியது சமூகக்கடமை. தனது குழந்தைக்கு ஒரு தாய் பாலூட்டுவதை சமூகம் அதை இயல்பாக எடுத்துக் கொள்ள ேவண்டும். பொது வெளியில் ஒரு குவளையில் சாதம் ஊட்டுவதை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை. அதுபோலவே, குழந்தைக்கு தாய் பாலூட்டும் போதும் அதைப் பிறர் உற்றுப்பார்த்து, தாய்மார்களைச் சிரமப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

அன்னம் அரசு
ஏ.டி.தமிழ்வாணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்