SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திகட்டாத வருமானம் தரும் திருமண அலங்காரம்!

2019-09-18@ 10:50:44

நன்றி குங்குமம் தோழி

மாதம் ரூ.25 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

மணப்பெண் என்றால் அழகான கண் அலங்காரம், எடுப்பான சிகை அலங்காரம், முகத்தில் பளபளப்பு, ஆடைக்கும் உடல் நிறத்திற்கும் தகுந்த மாதிரி
உதட்டுச் சாயம், உடைக்கு ஏற்ப நகைகள்... இதுதான் திருமண அலங்காரத்தில் சிறப்பு.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் படிப்பதும், வேலைக்கு செல்வதும் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. அப்படி வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமானதும் வேலையை விட்டுவிடும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. வீட்டிலிருந்தே செய்யும் சுயதொழில்கள் பல இருந்தாலும், தனக்குள் இருக்கும் திறமையைக் கொண்டு தொழில் செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படித்தான், திருமணத்திற்கு முன்பு தான் செய்த வேலையின் நிமித்தமாக தன்னையே அலங்காரம் செய்து கொண்டவர், பின்னர் அதையே ஒரு தொழிலாக கையிலெடுத்து, இன்று மணப்பெண் அலங்காரம் செய்து சம்பாதித்து வருகிறார் சிந்து. பெங்களூரில் வசித்து வரும் இவர் தான் மணப்பெண் அலங்கார தொழில் தேர்வு செய்தது குறித்து மனம் திறக்கிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் முத்துநகரமான தூத்துக்குடி. ஆனால் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் ஃப்ரண்ட்ஸ் துணையுடன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எனக்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக (VJ - Video jockey) வேலை கிடைச்சது. தொலைக்காட்சியில் மற்றவர் பார்க்க வருவது என்பது ஒரு பெருமையாகத்தான் எனக்கு இருந்தது.

இரண்டு ஆண்டுகள் நகர்ந்து ஓடின. ஒவ்வொரு நாள் நான் கேமரா முன் நிற்கும் முன், நாங்க மேக்கப் போட்டுக் கொண்டு தான் போகணும். அதனால் ஒவ்வொரு நாளும் என்ன உடை அணியலாம், அதற்கு என்ன மாதிரி சிகை அலங்காரம், நகை அணியலாம்ன்னு பார்த்து பார்த்து கத்துக் கொண்டேன். மேலும் அதற்கான மேக்கப் மற்றும் அழகு சாதன பொருட்களை தேடித் தேடிப் போய் வாங்குவேன்.

மார்க்கெட்டில் புதுவிதமான அழகு பொருட்கள் வந்துவிட்டால் போதும் அதையும் வாங்கி டிரை செய்து பார்ப்பேன். இப்படித்தான் எனக்கு அலங்காரம் செய்வது மேல் ஆர்வம் ஏற்பட ஆரம்பிச்சது’’ என்றவர் திருமணம் முடிந்து பெங்களூரில் செட்டிலாகிட்டார். ‘‘கல்யாணமாகி பெங்களூர் போயிட்டேன். அதனால் என்னால் தொடர்ந்து தொகுப்பாளர் வேலையை பார்க்க முடியவில்லை. மேலும் அவ்வப்போது, ஷூட்டிங் போது சென்னைக்கு வந்து செல்லவும் முடியவில்லை. புதிய இடம், வேறுமாநில மக்கள், பழக்கமில்லாத மொழி எல்லாமே எனக்கு புதுசா இருந்தது.

அப்படியே ஓர் ஆண்டு ஓடியது. குடும்பம், குழந்தை, வீட்டு வேலைன்னு நான் முழுநேர குடும்ப பெண்ணாகவே மாறிட்டேன்னுதான் சொல்லணும். ஊடகத்தில் வேலைப் பார்த்த எனக்கு ஒரு கட்டத்தில் வீட்டுக்குள் ஏதும் செய்யாமல் முடங்கிக் கிடப்பது ஒரு விதமான வெறுமையை  ஏற்படுத்தியது. என்னடா இப்படி எந்த ஒரு வேலைக்கும் போகாமல் இருக்கிறோமேன்னு எனக்குள் ஒரு ஆதங்கம் ஏற்பட்டது. மேலும் இங்கு வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம்.

வீட்டில் இருந்தாலும், வெளியே எங்கு சென்றாலும் என்னை அழகுப்படுத்திக் கொண்டு தான் செல்வது வழக்கம். அப்பதான் எனக்குள் ஒரு பல்ப் எரிந்தது. கையில் தொழில் இருக்கும்போது நாம் ஏன் கவலைப்படணும்ன்னு தோணுச்சு. மணப்பெண் அலங்காரம் செய்தால் என்ன என்ற என் எண்ணத்தை உடனே என் கணவரிடம் பகிர்ந்தேன். அவர் சம்மதிக்க அதற்கான பயிற்சியில் சேர்ந்தேன். பத்து நாள் பயிற்சி தான், ஏற்கனவே ஊடகத்துறையில் இருந்ததால் எனக்கு அலங்காரம் செய்வது குறித்த அடிப்படை அறிவு இருந்தது.

அதனால் எளிதாகவும் சீக்கிரமாகவும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்’’ என்றவர் பயிற்சி முடித்தவுடன் நினைத்தபடி தொழில் செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டார். ‘‘பயிற்சி முடிச்சாச்சு, உடனே ஆர்டர்களை எடுத்திடணும்ன்னு நான் நினைச்சேன். ஆனால் நினைத்தது எதுவுமே உடனே கிடைத்துவிடாதே. இப்படியே எட்டு மாதங்கள் கழிந்தது. தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தேன். ஆனாலும் ஏதும் கிளிக் ஆகவில்லை.

இப்படியே சென்ற காலங்களில் ஒருநாள் என் கணவருடைய உறவினர் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு அந்த மணப்பெண்ணுக்கு அலங்காரம்
செய்ய சென்னையிலிருந்து ஏற்கனவே ஒரு அலங்கார நிபுணரை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் மணப்பெண்ணுக்கோ அவர் மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு போட்ட மேக்கப் சுத்தமாக பிடிக்கவில்லை. அவளுக்கு நான் பயிற்சி எடுத்து இருப்பது தெரியும். அன்று இரவு 12 மணிக்கு என்னுடைய செல்போனுக்கு அவளிடம் இருந்து செய்தி வந்தது.

‘அக்கா, விடிஞ்சா கல்யாணம். முகூர்த்தத்திற்கு நீங்க தான் எனக்கு மேக்கப் போடணும்ன்னு இருந்தது. தயவு செய்து முடியாதுன்னு
சொல்லிடாதீங்க’ன்னு குறிப்பிட்டு இருந்தா. இரவு நேரத்தில் அப்படி ஒரு செய்தியைப் பார்த்துவிட்டு குஷியாயிட்டேன். மறுநாள் காலை 4 மணிக்கே எழுந்து தயாராகி மண்டபத்துக்கு புறப்பட்டுச் சென்றேன். அந்தப் பெண்ணுக்கு முகூர்த்த மேக்கப் போட்டு அசத்திவிட்டேன்.

அதன் பின்னர் உறவுக்காரர்கள் மத்தியில் எனக்கு ஒரு நல்ல பேர் கிடைத்தது. குறிப்பாக கணவரின் குடும்பத்தினர் பக்கமிருந்து அதிக வரவேற்பு கிடைத்தது’’ என்றவர் இப்போது பிறந்தநாள், திருமணம், நிச்சயதார்த்தம்ன்னு படு பிசியாக உள்ளார். ‘‘என்னுடைய சிறப்பே ஒருவரின் சரும நிறத்திற்கு ஏற்ப மேக்கப் போடுவது தான். அதிகமாக மேக்கப் போட்டு அவர் யார் என்றே அடையாளம் தெரியாதபடி இருக்கக்கூடாது என்பது என் நோக்கம்.  

கருப்பாக இருப்பவர்களை வெள்ளையாக மாற்ற அதிக மேக்கப் பூச்சுகளை பயன்படுத்துவதில் எனக்கு இஷ்டம் இல்லை. மணப்பெண் என்றால் அழகா கண் அலங்காரம், எடுப்பான சிகை அலங்காரம், முகத்தில் பளபளப்பு, ஆடைக்கும் உடல் நிறத்திற்கும் தகுந்த மாதிரி உதட்டுச் சாயம் மற்றும் உடைக்கு ஏற்ப நகைகள்... இதுதான் திருமண அலங்காரத்தில் சிறப்பு. அதை தான் நான் பின்பற்றுகிறேன். அதே சமயம் நான் சாதாரண லோக்கல் பொருட்கள் எல்லாம் பயன்படுத்துவதில்லை.

எல்லாமே தரமானவை. என்னிடம் வரும் அனைத்து மணப்பெண்ணின் கோரிக்கை ஒன்றுதான். அலங்காரம் முடித்த பிறகு நான் நானாக இருக்க வேண்டும் என்பதுதான்’’ என்றவர் எந்த தொழிலாக இருந்தாலும் பொறுமையாக இருப்பது அவசியம் என்கிறார். ‘‘இந்தத் துறையில் வெற்றிபெற பொறுமை மிக மிக முக்கியம். தொழில் தொடங்கிய உடனே ஆர்டர்கள் வந்திடாது. நாம் செய்வதில் உள்ள சிறப்புகளைப் பார்த்து, மற்றவர் சொல்லி கேள்விப்பட்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிந்துரைப்பதின் மூலமாகத்தான் தொழில் விருத்தியடையும்.

இது போக முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என சமூக வலைத்தளங்களில் நம்மை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்கணும். சில சமயம் வெளியூர்களுக்கு செல்லணும். அதைப் பற்றி யோசித்தால் தொழிலில் வளர்ச்சியை பார்க்க முடியாது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, தூத்துக்குடி என பல ஊர்களுக்குச் சென்று திருமண அலங்காரம் செய்திருக்கேன். எனக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் மகனும் இருக்காங்க. ஊருக்கு போகும் போது கணவரும் அம்மாவும் குழந்தைகளை பார்த்துப்பாங்க.

குடும்பத்தினரின் உதவி இல்லாமல் எந்த ஒரு தொழிலிலும் வெற்றிபெற்றுவிட முடியாது. மேலும், தொழிலில் திட்டமிடல் மிகவும் அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் அலங்காரம் செய்ய வேண்டிய இடத்தில் நாம் இருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அலங்காரத்தை செய்து முடிக்க ணும். நாளுக்குநாள் மாறிவரும் அலங்காரங்கள் குறித்து நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றவர் இந்த துறையில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை பற்றி விவரித்தார்.

‘‘ஒரு திருமண அலங்காரம் என்றால் குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை வாங்கலாம். பிறந்தநாள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். அலங்கார நேரம் குறைவானதாக இருக்கும்போது அதற்கு தகுந்தாற்போல் பணம் பெற்றுக்கொள்ளலாம். நாம் வசிக்கும் பகுதிகளிலேயே பெரும்பாலும் ஆர்டர்கள் கிடைக்கும். வெளியூர் செல்வதென்றால் அதற்கு தகுந்தாற்போல் போக்குவரத்து செலவு மற்றும் தங்கும் வசதி ஆகியவற்றை பேசிக்கொள்வது நல்லது.

இப்படியாக இந்த திருமண அலங்காரம் செய்யும் தொழில் மூலம் குறைந்தபட்சமாக மாதம் இருபத்தைந்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை சம்பாதிக்கலாம். அலங்காரம் என்பது அடுத்தவர்களை அழகுப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்துவது, அதனால் இத்தொழில் திகட்டாது,
சலிப்படைய செய்யாது.

நான் தற்போது திருமண அலங்கார பயிற்சி வகுப்புகளை வீட்டிலிருந்தபடியே ஆர்வமுள்ள பெண்களுக்கு சொல்லிக்
கொடுத்து வருகிறேன். ஒரு பெரிய திருமண அலங்கார நிலையம் தொடங்க வேண்டும் என்பது என் கனவாக உள்ளது. கணவர் துணையுடன் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார் புன்னகையுடன் சிந்து!

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 08-12-2019

  08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்