SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேம்பையர் ஃபேஷியல் !

2019-08-28@ 15:45:41

நன்றி குங்குமம் தோழி

வேம்பயர் என்றால் ரத்தக்காட்டேரி என்று அர்த்தம். இது ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம். இவர்கள் மனிதனின் ரத்தத்தை குடித்து என்றும் சாகாவரம் பெற்றவர்கள். என்றும் இளமையுடன் இருப்பவர்களும் கூட.
ஆண், பெண் யாராக இருந்தாலும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் அழகு நிலையங்கள், மருத்துவமனைகள் என்று படை எடுக்கிறார்கள். இவர்களுக்காகவே வரப்பிரசாதமாக வந்துள்ளது வேம்பயர் ஃபேஷியல்.

வேம்பயர் ஃபேஷியலா? இது என்ன புதுசா இருக்குன்னு நினைக்க தோன்றுகிறதா? ஆம்.பெயருக்கு ஏற்ப கொஞ்சம் திகில் கலந்த புதுவிதமான ஃபேஷியல் தான். இந்த ஃபேஷியலை நாம் பார்லரில் குளிர் அறையில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு செய்ய முடியாது. மருத்துவமனையில் இதற்கான சிறப்பு மருத்துவரிடம்தான் செய்துகொள்ள முடியும்.

அப்படி என்ன இந்த ஃபேஷியல் செய்யும்? முகத்தை இறுக்கி, சுருக்கங்கள் மறைய செய்து, இளமையான தோற்றத்தை தரும். மருத்துவ மொழியில் இதற்கு பிளேட்ெலட் ரிச் பிளாஸ்மா (platelet-rich plasma), சர்ஜிகல் ஃபேஸ்லிஃப்ட் (surgical facelift) என்று பல பெயர்கள் உண்டு. ஆனால் செயல்முறை ஒன்றுதான்.

நம் உடலில் இருக்கும் ரத்தத்தை எடுத்து, சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், பிளாஸ்மா செல்கள் எனப் பிரித்திடுவார்கள். பிறகு அதிலிருக்கும் வளர்ச்சி காரணிகளை மட்டுமே எடுத்து முகத்தில் சிறிய ஊசி மூலம் செலுத்துவார்கள். ‘‘இந்த வேம்பயர் ஃபேஷியலை செய்துகொள்பவர்கள் முதிர்ச்சியை தவிர்த்து எப்போதும் இளமையான தோற்றத்துடன் வாழலாம்’’ என்கிறார் சரும நிபுணர் மருத்துவர் ஷர்மதா.

‘‘இந்த சிகிச்சைக்கு வேம்பயர் ஃபேஷியல் என்று பெயர் இருப்பதால், மக்கள் சிலர் அழகு நிலையங்களிலும் இதை செய்துகொள்ளலாம் என்று நம்பி அங்கு செல்கின்றனர். ஆனால் இது ஒரு மருத்துவ சிகிச்சை. மருத்துவர்கள் மட்டுமே செய்யக்கூடியது. அவர்கள்தான் முறையான ரத்தப் பரிசோதனைகள் செய்து பாதுகாப்பாக இந்த சிகிச்சையை கையாள முடியும். தவறாக செய்தால் வேறு பல பிரச்சனைகள் வரும்.

இதனால் எப்போதுமே சரும நிபுணர்களிடம் மட்டுமே வேம்பயர் ஃபேஷியல் செய்துகொள்ள வேண்டும்” என்றார்தொடர்ந்து பேசிய மருத்துவர், ‘‘தோல் நிபுணர்கள் இந்த சிகிச்சையை செய்வதற்கு முன், ரத்தத்தை சோதனை செய்து, பின் அதிலிருக்கும் வளர்ச்சி காரணிகளை பிரித்து எடுப்போம். இந்த செயல்முறைக்குப் பின், முகம் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, அதில் பிரித்து வைத்திருக்கும் வளர்ச்சி காரணிகளை முகத்தில் செலுத்துவோம். 24 மணி நேரத்தில் முகத்தில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

இது பொதுவாக 35 வயதை கடந்தவர்கள் செய்துகொள்ள கூடிய சிகிச்சை. ஒரு மணி நேர சிகிச்சை என்ற போதும், ரத்தத்தை ஊசி வழியாக செலுத்தும் போது, லேசான வலியிருக்கும். ஆனால் சிகிச்சை முடிந்த சில நாட்களிலேயே முகத்தில் நல்ல மாற்றங்கள் தெரியவரும். இது முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கண்களுக்கு கீழ் இருக்கும் பைகள், பொலிவிழந்த தோல் போன்ற பிரச்சனைகளை நீக்கி, சருமத்தினை இறுக்கி ஃப்ரெஷ் லுக் தரும். இந்த சிகிச்சை அவரவர் ரத்தத்தை எடுத்து மட்டுமே செய்யப்படும்.

ஒரே இன ரத்தமாக இருந்தாலும், மற்றவர்களின் ரத்தத்தினை பயன்படுத்த கூடாது” என்கிறார் மருத்துவர் ஷர்மதாஆண், பெண் என அனைவருமே இந்த சிகிச்சையை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது ஒரு முறை செய்துகொண்டால், தனியாக க்ரீம்கள், மேக்-அப் எனப் பயன்படுத்த தேவையில்லை என்பதால், தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இது ஒரு மருத்துவ சிகிச்சை என்பதை மக்கள் உணர்ந்து அதற்கேற்ப தீவிரத்துடன் அணுகவேண்டும். பாதுகாப்பான முறையில் நடைபெறும் போது, எந்த பக்க விளைவுகளும் இல்லாமல், நல்ல பயன்கள் கிடைக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்