SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் : செய்துத்தர வேண்டும்? சொல்லித்தர வேண்டும்?

2019-08-21@ 16:03:19


‘பொம்பளைப்புள்ளய பெத்துட்டு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன்’ என்ற டயலாக்கை பழைய தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருப்போம். கிட்டதட்ட இன்று பெண் குழந்தைகள் வைத்திருக்கும் அனைவரின் மைண்ட் வாய்ஸாகவும் இதுதான் இருக்கிறது. அந்த டயலாக் சென்ற தலைமுறையின் பெண்ணடிமைத்தன சிந்தனைகளில் இருந்தும் ‘இவளை எவன் கையிலாவது புடிச்சிக்கொடுத்துட்டா போதும். நாம் நிம்மதியா இருக்கலாம்’ என்ற பழைய சமூக அமைப்பின் மனோபாவங்களிலிருந்தும் உருவானது. ஆனால் -இன்றைய பெற்றோரோ அப்படியான கவலையில் அல்ல. வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் பத்திரமாக வீடு திரும்புவாளா? அவளுக்கு பள்ளியில் பணியிடத்தில் பாதுகாப்பு இருக்குமா? வரும் வழியில் நிம்மதியாக, நல்லவிதமாகப்பயணிக்க முடியுமா? பத்திரமாக வந்துசேர்வாளா? என்கிற மனநிலையில் இந்த டயலாக்கை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் கிளம்பிய இடத்துக்கே வந்து சேர்ந்து இந்திய சமூக வரலாறு ஒரு வட்டமடித்து நிற்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கடந்த இரண்டாயிரம் வருடங்களில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியப் பெண்கள் மீது இப்போதுதான் கட்டற்ற வன்முறை நிகழ்த்தப்படுகிறது என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. அறிவில், நாகரிக வளர்ச்சியில் நம் முந்தைய சமூகங்களைவிடவும் நன்கு முன்னேறிவிட்டோம் என்று பீற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம் நவீன சமூகத்தில்தான் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை கட்டுக்கடங்காமல் நாளொரு சீரழிப்பும் பொழுதொரு கொலையுமாய் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.இந்திய சமூகத்தில் பெண் என்பவள் காலங்காலமாய் வீட்டுக்கானவள். அவள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கான எந்த வாய்ப்பையும் இங்கிருந்த பெரும்பாலான இந்திய சமூகங்கள் தந்திருக்கவில்லை. விவசாயம் உள்ளிட்ட சில பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் அந்தந்த சமூகத்து ஆண்களின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டிலேயே பெரும்பாலும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவள் தன் குடும்பம் என்ற அமைப்பை விட்டு வெளியே வருவதற்கான வாய்ப்பே பெரும்பாலும் இல்லை. அப்படியே வந்தாலும் அவளின் நடத்தையைச் சந்தேகப்படுவதன் மூலம் அவள் உடலை ஒடுக்கி மனதை ஒடுக்கும் ஓர் உளவியல் நெருக்கடியை உருவாக்கி அதைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயங்கியல் விதிக்கு இணங்க இந்திய சமூகத்திலும் இந்தப் பார்வைகளில் மாற்றம் ஏற்பட்டது. பொருளாதார நலன்களுக்காக வேலைக்குச் செல்ல பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது முக்கியம் என்று உணரப்பட்டது. பெண் வீட்டை விட்டு  வெளியேறுவது அவளின் குடும்பத்துக்கு மட்டும் அல்லாமல் சமூகத்துக்கும் மிகப் பெரிய நன்மை என்ற புரிதல் உருவானது. இந்தத் தேவைதான் பெண் கல்வி, பெண்கள் பணிக்குச் செல்வது, பெண் உரிமை என்று சகல விஷயங்களையும் பேசஅடிப்படையாக அமைந்தது.பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். கல்வி கற்றார்கள். பணிக்குச் சென்றார்கள். பிற சமூகத்து ஆண்களோடு பழகவும் அவர்கள் முன் தோன்றவும் தொடங்கினார்கள். இன்று ராணுவம் முதல் ராக்கெட் துறை வரை பெண்கள் இல்லாத தொழிலே இல்லை. ஆண்களுக்குப் பெண் இளப்பமில்லை என்பதை அன்றாடம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் நம் பெண்கள்.

ஆனால், எல்லா விளைவுகளுக்கும் ஓர் எதிர்விளைவு இருக்கும் அல்லவா? அதுதான் இந்த விஷயத்திலும் நடந்தது. பெண்கள் வீட்டைவிட்டு வராத வரை அவர்கள் மீது நிகழ்ந்துகொண்டிருந்த வன்முறை என்பது குடும்ப அளவில் இருந்தது. இன்றோ அது குடும்ப வன்முறை என்பதாகமட்டும் அல்லாது சமூக வன்முறையாகவும் வளர்ந்து நிற்கிறது. அதைத்தான் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது இந்தியப் பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். கடந்த நாற்பது வருடங்களாகத்தான் கிட்டதட்ட அனைத்துச் சமூகங்களிலிருந்தும் பெருமளவில் கல்வி கற்கவும் பணிக்குச் செல்லவும் பெண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விகிதம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ கிட்டதட்ட அதே அளவுக்குப் பெண்கள் மீதான வன்முறையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை என்பது அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் கிட்டதட்ட இங்கு உள்ள ஒவ்வொரு ஆணுமே குற்றம் செய்ய தயங்காதவனாகத்தான் இருப்பான் போலும் என்று நாம் அஞ்சும் அளவுக்கு இந்தக் குற்றங்கள்பெருகிக்கொண்டிருக்கின்றன.

வீட்டைவிட்டு வெளியே வந்து ஆணின் பார்வையில் படும் பெண் அவனால் வன்முறைக்கு உள்ளாவது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறதுதான் அதற்காக, இதற்குப் பயந்து பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியுமா என்ன? மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்துவதைப் போல் அதைத்தான் இன்று சிலர் தீர்வாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நம் சமூகத்தை மீண்டும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கொண்டுபோய் விட்டுவிட்டு வரும் வேலை இது. பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை என்பது தனிநபர், குடும்பம், அரசு என்ற அனைத்து மட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே நடைபெற முடியும். தனிநபராகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் உள்ள குடிமக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றமும் அரசின் இதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுமே இத்தகைய குற்றங்கள் குறைய வழிவகுக்கும்.

பெண்கள் பற்றி ஆண்களுக்கு உடமையுணர்வு (Possessiveness) இல்லாத மனநிலையும் இவள் ஒரு சக உயிர். இவளும் ஒரு மானுடஜீவி என்கிற சமநோக்கு ஏற்படாத வரை இத்தகைய கொடூரக் குற்றங்கள் குறையாது என்பதே எதார்த்தம். தனி நபரைப் பொறுத்தவரை இந்த விழிப்புணர்வு என்பது மிகச் சிறிய வயதிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் உடல் அமைப்பு வித்தியாசம் பற்றி அசூயையோ, அருவருப்போ, மாறுபட்ட எண்ணங்களோ இல்லாத வகையில் அதுவும் ஓர் இயற்கையான உடலியல்பே என்ற எண்ணம் வரும்படியான கருத்துக்களை விதைக்க வேண்டும்.வெறுமனே பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்தால் போதாது. ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளின் உடலியல் பற்றி அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ப கற்றுத்தர வேண்டும். பால் சார்ந்த வேறுபாடுகளை சக குழந்தை களிடம் காட்டக் கூடாது. வன்முறையில் ஈடுபடக் கூடாது என்பதைப் போன்ற கருத்துகளை எல்லாம் குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.
தொலைக் காட்சி, சினிமா, ஊடகங்கள் ஆகியவற்றில் வெளிப்படும் பாலியல் பாகுபாடுகள் பற்றிய பேச்சுக்கள், பாடல்கள், கேலிகள், அவமானப்படுத்தல்கள் இருந்தால் லஜ்ஜையின்றி அதை ரசித்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்போதே ஆண் குழந்தைகள், இளைஞர்களிடம் இது எவ்வளவு தவறானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பொதுவெளியில் நிகழும் பெண்கள் மீதான வன்முறைகளைச் சொல்லி அவை ஒரு வளர்ச்சியுற்ற சமூகமாக நமக்கு எவ்வளவு அவமானம் என்று கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தை என்றில்லை மாற்றுப் பாலினத்தவர் உட்பட எந்த ஒரு மனிதரையும் கண்ணியமாய் மதிக்கவும், நட்பு பாராட்டவும் வேண்டும் என்ற மனநிலையைக் கற்றுத் தர வேண்டும். குடும்பங்களில் நிகழும் பெண்கள் மீதான பாகுபாடு, வன்முறை ஆகியவற்றை நீக்கி ஜனநாயகமான குடும்பங்கள் அமைய உரையாட வேண்டும். பணிக்குச் செல்லும் பெண்கள் உள்ள வீடுகளில் பெண்களேதான் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என்று சொல்லாமல்கணவன்  - மனைவி இருவரும் சேர்ந்து பகிர்ந்து செய்ய வேண்டும். குழந்தைகளை ஆண் பெண் குழந்தைகள் எனப் பேதம் பாராட்டாமல் வளர்ப்பதோடு வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தும்போதும் வெளியே அழைத்துச் செல்லும்போதும் பேதம் பாராட்டாமல் இருவரையும் ஒன்று போலவே நடத்த வேண்டும். உதாரணமாக, சமையலை பெண் குழந்தைதான் செய்ய வேண்டும். விளையாட ஆண் குழந்தைதான் செல்ல வேண்டும் என்று நினைக்காமல் ஆண் குழந்தைகளுக்கும் சமையலைக் கற்றுக்கொடுக்கலாம். பெண் குழந்தைகளை ஷட்டில் கார்க் போன்ற விளையாட்டுகளில் அனுமதிக்கலாம்.

விளையாட்டு, நடனம், பாட்டுப் போட்டி போன்ற எக்ஸ்ட்ராகரிகுலர் செயல்பாடுகளிலும் இருவரையும் ஈடுபடுத்தலாம். இது போன்ற செயல்களால் ஆண் பெண் சமம் என்ற மனோபாவம் இருவருக்குமே வரும். இதனால், பெண் குழந்தைகள் தன்னம்பிக்கை கொள்வார்கள். ஆண் குழந்தைகள் பொறுப்பாய் இருப்பார்கள்.பாலியல் கல்வியை ஆண் பெண் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். இதை எல்லாம் ஆசிரியர்கள்தான் செய்ய வேண்டும் என்றில்லை. நல்ல நூல்களை அவர்களுக்குப் பரிசலிப்பதன் மூலம் அவர்களே இதைப் புரிந்துகொள்ள உதவலாம். சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கச் சொல்லலாம். பாலியல் கல்வி என்பது வெறுமனே செக்ஸ் மட்டும் அல்ல. பால் சார்ந்த வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் களையும் கல்வியும்தான். பாலியல் கல்வியை அந்தந்த வயதினருக்கு ஏற்ப கற்றுத் தர வேண்டும். உதாரணமாக, சிறுவர் சிறுமியர்க்கு பாலியல் வேறுபாடுதான் கற்றுதர வேண்டுமே தவிர செக்ஸ் அல்ல. அடலசண்ட் பருவத்தினருக்கோ உடலியல் வேறுபாடுகளோடு செக்ஸ் எஜுகேஷனும் அவசியமாகிறது.அரசு தரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக செய்வதற்கு நிறைய உள்ளது.

ஏற்கெனவே, வரதட்சணைக் கொடுமை, பெண் மீதான வன்முறை, பெண் குழந்தைகள் வன்கொடுமை, பாலியல் வல்லுறவு உட்பட பல்வேறு விதமான சட்டங்களும் மகிளா கோர்ட் போன்ற பெண்களுக்கான நீதியமைப்புகளும் இங்கு இருக்கின்றன. ஆனாலுமேகூட பெண்கள் மீதான வன்முறை இங்கு
நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அரசுத் தரப்பிலும் இதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் இத்தகைய வன்கொடுமைகள் அரசியல் மற்றும் அதிகாரத் தரப்போடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதும் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் இல்லை. சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்முறை நிகழ்வுகளையே எடுத்துக்கொள்வோம்.இதில் அரசியலும் அதிகாரமும் நேரடியாகவே தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், வெளியே சொன்னால் மானம் போய்விடும் என்ற அச்சத்திலும் அதிகாரத்தை எதிர்க்க பயந்தும் பல பெண்கள் அமைதியாக இருக்கிறார்கள். அரசு இப்படியான விஷயங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பெண்கள் வெளியே சொன்னால் அவர்கள் மானம் போய்விடும் என்ற நிலை இங்கு மாறாத வரை இங்கு பெண்கள் துணிந்து தங்களுக்கு நிகழ்ந்த வன்முறையைச் சொல்ல முன்வரமாட்டார்கள். ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தால் அவள் ஏன் வெளியே சொல்ல வெட்கப்பட வேண்டும். பொய்யான ஒரு புனிதத்தை அவள் உடலில் புகுத்தி; அவளையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் கயமையை நாம் மாற்றிக்கொள்ளாத வரை பெண்கள் இத்தகைய குற்றங்களை அடையாளம் காட்ட முன்வர மாட்டார்கள் என்பதை நாம் புரிய வேண்டும். இப்படி துணிந்து வெளியே வந்து சொல்லும் பெண்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தர வேண்டியது அரசு மற்றும் பொதுமக்கள் அனைவரின் கடமையாகவும் உள்ளது.பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்கள் யாரென கவனித்தால் நமக்குச் சில தெளிவுகள் கிடைக்கும். இத்தகைய குற்றங்களில் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்களின் தனிமை அல்லது சமுதாயத்தில் அவர்களின் விளிம்புநிலை, வறுமையான சூழல் இவற்றைப் பயன்படுத்தி நடைபெறுகின்றன.

சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்காகவும் கல்விக்காகவும் வரும் பெண்கள் உதிரிகளாகவே இங்கு இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இங்கு வந்துதான் கல்லூரியிலும் பணியிடத்திலும் வசிப்பிடத்திலும் தங்களுக்கான தோழமைகளை உருவாக்கிக்கொள்ள நேர்கிறது. இதனாலேயே இவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. இப்படியான பெண்கள் ஆளரவமற்ற இடங்களில் அகப்படும்போது வக்கிரக்காரர்கள் இவர்களைத் தங்கள் மிருக வெறிக்குப் பலியாக்கிவிடுகின்றனர். இப்படியான இடம் பெயர்ந்து வாழ நேர்ந்துவிட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசாங்கத்தின் கடமை. இன்றைய தேதியில் தமிழகத்தில் எத்தனை பெண்கள் இப்படி வசிக்கிறார்கள். அவர்களுக்கிருக்கும் தங்குமிடங்கள் ஆகியவை பற்றி எல்லாம் அரசிடம் போதுமான தகவல்கள் இருக்கின்றனவா தெரியவில்லை. முதலில் இத்தகைய தகவல் வங்கி உடனேஏற்படுத்தப்பட வேண்டும்.

இதைத் தொடர்ந்து பெண்களுக்கான தங்குமிடங்கள், ஓய்விடங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் மிக மிக அதிக எண்ணிக்கையில் அரசாங்கத்தால் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள அனைத்து ஹாஸ்டல்கள் உள்ளிட தங்குமிடங்களும் முறையான தணிக்கைக்கும் கண்காணிப்புக்கும் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கெனத் தனி அரசு  எந்திரங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நகரங்களில் எந்த இடத்திலும் எந்தவொரு பெண்ணுக்கும் சென்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்க ஓர் அரசு இல்லம் இருக்கிறது என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் மிகவும் முக்கியம். மேலும், இதைக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்று பொதுமைப்படுத்தியும் சொல்லலாம். அதாவது, சிறுவர்களையும் உள்ளடக்கிச் சிந்திக்கலாம். பெண்களுக்குஏற்படுத்தப்படும் பாதுகாப்பு மையங்களிலேயே குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் அளிக்கலாம். குறிப்பாக, ஆண் பெண் இருவருமே வேலைக்குப் போகும் வீடுகளின் குழந்தைகள் நேரடியாக அரசாங்கத்தின் பாதுகாப்புக்குள் வர வேண்டும். இது சாத்தியமற்றது போலத் தோன்றலாம். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இதற்கான ஏற்பாடுகள் கொஞ்சம் மெனக்கெட்டால் செய்துவிடலாம்.

பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பாதிக்கப்படும்போது அதிகார வர்க்கம் அலட்சியமாக நடந்துகொள்வதைத் தவிர்க்க, காவல் நிலையங்களில் அந்தந்தப் பகுதியிலுள்ள பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் நியமிக்கப்படக் கூடாது. மேலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் புகார் அளிக்க நேரடியாக மேலதிகாரிகளிடம் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டியுள்ளது. இன்று மாணவிகளையும் இளம்பெண்களையும் குறிவைத்து நடத்தப்
படும் பாலியல் தாக்குதல் வெறும் தனிநபர் பாலியல் குற்றங்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சமீபத்தைய பொள்ளாச்சி விவகாரம் போன்றவை இந்தப் பிரச்னையை ஒரு மிகப் பெரிய நிழல் உலக வணிகத்தின் பகுதியாகச் சித்தரிப்பதை நாம் உணர வேண்டும். உலகம் முழுதும் உள்ள பெரும் பணமுதலைகளுக்கு பலியாகவே இத்தகைய அபலைகள்
பயன்படுத்தப்படுகிறார்கள்.

போதை பொருள் கடத்தலும் பெண் கடத்தலும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய தொழில்கள் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். சர்வதேச அளவில் மிகப் பெரிய நெட்வொர்க்கை வைத்து நடத்தப்படும் இந்தத் தொழில்கள் அரசியல்வாதிகளை மட்டும் அல்ல அரசாங்கங்களையே விலைக்கு வாங்கக்கூடியவை. எனவே, இத்தகைய தொழில்ரீதியான குற்றங்களை முற்றிலுமாகத் தடுப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும் இதற்கென தனியாகச் சட்டங்கள்இயற்றுவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.

-  இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்