SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2019-08-07@ 11:31:58

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் கடாயை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

*தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

*தோசைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

*சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

*காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

*குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை  ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்.

*வாழைத் தண்டுகள், கீரைத் தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

*பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

*வீட்டிலேயே கேக் செய்யும் போது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே  பேக் செய்யத் தொடங்குங்கள்.

*தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

*இனிப்புகள் தயாரிக்கும் போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

*ஊறுகாய் தயாரிக்கும் போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

*கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

*வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.

*பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

*வாங்கிவைத்த பால்பாக்கெட்டை ஃப்ரிட்ஜில் வைக்க முடியவில்லை. கரெண்ட் கட். அவசரத்துக்கு காய்ச்சவும் நேரமில்லை. பதட்டப்படாதீர்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் பால்பாக்கெட்டை போட்டு வைத்துவிட்டால் போதும். நான்கு மணி நேரம் கழித்துக்கூட காய்ச்சிக் கொள்ளலாம்.

*உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

*என்னதான் கழுவினாலும் பிளாஸ்க்கில் ஒருமாதிரி மக்கிப்போன வாசனை வந்துக்கொண்டே இருக்கும். வினிகர் போட்டு கழுவினால் இந்த வாசனையை துரத்தலாம்.

*காய்கறிகள் மற்றும் அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காதீர்கள். அந்த நீரை நீங்கள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றினால் ஊட்டமாக வளரும்.

*கடலை எண்ணெய் கெட்டுப் போய்விடுகிறது என்று கடைக்காரரிடம் சண்டைக்கு போகாதீர்கள். அதில் சிறிதளவு புளியை போட்டு வைங்கள். எண்ணெய் அப்படியே புதுசாக இருக்கும்.

*வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையா? கவலை வேண்டாம். இட்லி தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பாவிலோ பக்கெட்டிலோ போட்டு மூடிவைத்துவிட்டால் புளிக்கவே புளிக்காது.

*வெயில் காலத்தில் வாங்கி வைத்த கறிவேப்பிலை வாடி அடிக்கடி ‘கரு’வேப்பிலை ஆகிவிடும். அலுமினியப் பாத்திரத்தில் இலையை போட்டு மூடி வைத்துவிட்டால் இந்தத் தொல்லையை தவிர்த்து விடலாம்.

*மழைக்காலத்தில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்துப் போய் அவசரத்துக்கு பற்றவே பற்றாது. தீப்பெட்டியினுள் பத்து, பதினைந்து அரிசியை போட்டு, பெட்டியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடிவைத்துவிட்டால் எப்போது பற்றவைத்தாலும் ஒரே முயற்சியில் பற்றிக் கொள்ளும்.

*பீங்கான் கப்பில் காப்பி மற்றும் டீக்கறை அடிக்கடி படிந்துவிடும். வெங்காயத்தை வெட்டி இந்த கறையில் தேய்த்தால் பீங்கான் பளிச்.

*வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கும்போது கத்தியில் ஒருமாதிரி வாசனை தேங்கிவிடும். இந்த வாடையை போக்க நறுக்குவதற்கு முன்பாக கொஞ்சம் உப்பை கத்தியில் தடவி தண்ணீரில் கழுவிவிட்டு நறுக்கலாம்.

*கிச்சனில் இருக்கும் பாத்திரம் கழுவும் தொட்டியை எவ்வளவு சுத்தப்படுத்தினாலும் அழுக்கு முழுமையாக போகாது. கழுவுவதற்கு முன்பாக பழைய செய்தித்தாள்களை கொண்டு தேய்த்துவிட்டு கழுவினால் பலன் பளிச்சென்று இருக்கும்.

*பால் குக்கரின் அடியில் ஒட்டிக்கொண்டு என்னதான் தேய்த்தாலும் போகாமல் அடம் பிடிக்கும். பாலை காய்ச்சுவதற்கு முன்பாக பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டால் இந்த பிரச்னையே வராது.

*கேஸ் ஸ்டவ்வை எவ்வளவு துடைத்தாலும் திருப்தி தருமளவுக்கு க்ளீன் ஆகாது. தேங்காய் மற்றும் மண்ணெண்ணெய் இரண்டையும் சம அளவில் கலந்து அதில் துணியை நனைத்து துடைத்துப் பாருங்கள். திருப்திகரமாக பளீரிடும்.

*மீன் சமைத்து சாப்பிட்ட பின்னும் சமைத்த பாத்திரத்தை எவ்வளவுதான் கழுவினாலும் வாடை தூக்கும். கொஞ்சம் சீயக்காய் தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் வாசனை போயே போச்சு!

*கேஸ் ஆண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? குற்றம் சிலிண்டரில் அல்ல. கீரையை தவிர எதை சமைத்தாலும் பாத்திரத்தை மூடியே வைத்திருங்கள். எரிபொருள் நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் கணிசமாக மிச்சமாகும்.

*சர்க்கரை டின்னில் எறும்புத் தொல்லை என்பது காலம் காலமாக தொடரும் தொந்தரவு. சர்க்கரை டின்னில் நான்கைந்து கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது. டின்னை திறந்ததுமே கும்மென்ற வாசனை உங்களுக்கு போனஸ்.

*முட்டைக்கோசை சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

*சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி அடிக்கடி கூர் மழுங்கி மொக்கை ஆகிவிடுகிறதா? கவலை வேண்டாம். பயன்படுத்திய பிறகு துடைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

*மீனை சுத்தம் செய்து பல மணி நேரங்கள் கழித்தும் கையில் அந்த வாசம் அடித்துக் கொண்டே இருக்கிறதா? கவலையே வேண்டாம். மீனை கையில் எடுப்பதற்கு முன்பாக சில சொட்டு சமையல் எண்ணெயை உள்ளங்கையில் விட்டு தேய்த்துக் கொள்ளுங்கள். இந்தத் தொல்லையே இல்லை.

*வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க பாட்டி காலத்து டெக்னிக். வாங்கிய காய்கறிகள் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும். துணி காய காய அவ்வப்போது ஈரமாக்கி வைத்துக் கொள்வது உங்கள் சமர்த்து.

*கறிவேப்பிலையையும், கொத்துமல்லியையும் வதக்கி சமைக்காதீர்கள். அப்படியே பச்சையாக உணவில் சேர்த்தால் பார்ப்பதற்கும் பக்காவாக இருக்கும்.
ஊட்டச்சத்துகளும் அதில் அப்படியே தங்கும்.

*காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசிகெடாமல் இருக்கும்.

*கேக் பேக் செய்யும் போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

*கேரட்டு கசக்கிறதா? தப்பு உங்களுடையதுதான். ஃப்ரிட்ஜில் கேரட்டையும், ஆப்பிளையும் அருகருகே வைத்திருந்திருப்பீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒருவிதமான வாயு கேரட்டை கசக்கச் செய்துவிடும் பண்பு கொண்டது. ஆப்பிள் அல்லது கேரட்... இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே உங்கள் ஃப்ரிட்ஜில் இடஒதுக்கீடு கொடுங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்