SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கைதான் எல்லாம் !

2019-07-29@ 16:05:52

நன்றி குங்குமம் தோழி

“குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு ‘அரும்புகள்’ என்ற அமைப்பை மதுரையில் ஆரம்பித்தோம். பின் அங்கிருந்து, 1995 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்து, இன்று வரை பல வேலைகள் செய்து வருகிறோம்” என்கிறார் அரும்புகள் அமைப்பின் நிறுவனர் லதா மதிவாணன்.

குழந்தைகள், பெண்களுக்காக செயல்பட்டு வரும் இவ்வமைப்பில், ‘விமன் எம்பவர்மென்ட்’ என்கிற திட்டத்தின் மூலம் பல பெண்களை இவர்கள் வழிநடத்தி வருகிறார்கள். “திருநெல்வேலி மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்ததாக இருந்தது. விவசாயம் இல்லாத காலக்கட்டங்களில் பீடி சுருட்டுவது மட்டுமே இங்குள்ள பெண்களின் வேலை. இத்தொழில் வருமானம் தரக்கூடியதாக இருந்தாலும், அதை அடிப்படையாக வைத்து சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தோம்.

அவங்களை சேமிப்பில் ஈடுபடுத்தியதோடு, வங்கிகளில் தொழில் முனைவோருக்கான லோன்களை ஏற்பாடு செய்து கொடுத்து, அடுத்தக்கட்டத்திற்கு அவர்களை நகர்த்தினோம்” என்று கூறும் லதா இந்த ஆண்டு மட்டும் 500 பெண்களை தொழில் முனைவோராக உருவாக்குவதே லட்சியம் என்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல பெண்களை ஒருங்கிணைத்து 750 சுய உதவிக் குழுக்களை உருவாக்கி இருக்கும் லதா, நேப்கின், ஈக்கோ பேக் போன்ற பொருட்களையும் இவர்களை வைத்து தயாரித்து வருகிறார்.

“இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களுக்கு தேவையான நேப்கினை பெருகின்றனர். எங்கள் மாவட்டத்தில் அதிகமாக நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ள வர ஆரம்பித்திருக்கிறார்கள். அங்கு வேலைப்பார்க்கும் பெண்களுக்கு, கஸ்டமர்களை எப்படி தக்க வைப்பது என்பதை சொல்லிக் கொடுப்பதோடு பெஸ்ட் ஒர்க்கர் என்ற பெயரை பெற பயிற்சி அளிக்கிறோம்.

அதே போல் விவசாயம் செய்யும் பெண்கள், அதனோடு எப்படி கோழி, ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி அனைத்து விவரங்களையும் சொல்லிக்  கொடுக்கிறோம். ஒரு பெண் என்னவாக வேண்டுமென்று ஆசைப்படுகிறாளோ அதற்கு வழிகாட்டுகிறோம். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக பேசி தங்களுக்கு என்ன தேவையோ அதை அவளாள் பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறுகிறோம்” என்றார்.

2005 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி. நோய் பற்றிய விழிப்புணர்வும், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் பார்வையிலும் மாற்றம் கொண்டு வந்திருக்கும் லதா, இது வரை 107 எச்.ஐ.வி. கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்களின் உதவியுடன் மகப்பேறு பார்த்து வருகிறார்.

‘‘ஒரு கிராமத்தில் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை புறக்கணிக்கக் கூடாது. தங்களில் ஒருவராக அவர்களை கருத வேண்டுமென்று எல்லாத்தரப்புகளிலும், பஞ்சாயத்து தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

மற்றவர்கள் இழிவாக சொல்லும் போது அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவது இந்த நோயைவிடக் கொடியது. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எச்.ஐ.வி பாதிப்பில்லாமல் பிறப்பதற்கு வழிவகை செய்கிறோம். எச்.ஐ.வி உள்ள ஆணாலோ அல்லது நேரடியாக பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றிருந்தால் அவர்களை பத்துமாதம் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு வழி வகை செய்வது மட்டும் இல்லாமல் அவர்கள் தவறாமல் மருந்து மாத்திரைகளை எடுக்கிறார்களா என்றும் கண்காணிக்கிறோம்.

நான் அடையாளம் கண்டவர்கள் இன்று வரை சரியான முறையில் மருந்து எடுத்துக் கொண்டு எங்களின் ஆலோசனையை பின் பற்றி நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். தங்களின் நிலையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப பெண்கள் தங்களுடைய வாழ்க்கை தரத்தை மாற்றி வாழ்ந்து வருகிறார்கள். ஆண்கள் சிலர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தங்களை தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள்.

பிள்ளைகளுக்காக வாழவேண்டுமென்கிற பக்குவத்தோடு, சமாளித்து பெண்கள் வாழ்ந்து வருவது நாங்கள் பார்க்கும் வேலைக்கு கிடைத்த பரிசாக பார்க்கிறோம்” என்று கூறும் லதா அந்த எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களால் பிறந்த குழந்தைகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், சிங்கில் பேரண்ட் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் என 650 குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதோடு, சமூகத்தில் உள்ள சவால்களை சமாளித்து நல்ல குடிமகனாக வருவதற்கு வழி வகை செய்கிறார்.

இது ஒரு புறம் இருக்க காடுகளையும் பாதுகாப்பது பற்றிய வேலையில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார் லதா. ‘‘மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளை பாதுகாக்க பல வேலைகள் செய்து வருகிறோம். 248 கிராமங்களை ஒட்டி இருக்கும் இந்த காட்டுப் பகுதியில், ஏழ்மை காரணமாக மரங்களை வெட்டி பிழைப்பு நடத்தியுள்ளனர்.

இதனால் 1992 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பெய்த கன மழைக் காரணமாக தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து அதிக பாதிப்புக்குள்ளானது. இந்த அழிவு எதனால் என்று ஆராய்ந்த போது மரங்கள் வெட்டியதால் உண்டான மண் அரிப்பு. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள், உலக வங்கி உதவியுடன், மக்களும் உதவினால் தான் காடுகளை பாதுகாக்க முடியும் என்று எங்களை அணுகினர்.

‘அரும்பு’ அமைப்பும் இணைந்து 1996 ஆம் ஆண்டு முதல் 2002 வரைக்கும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் அந்த காடுகளை புணரமைத்தோம். இதற்காக, பாட்டு, நாடகம் என, பள்ளிகள், ஊர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் கரம் பற்றினோம். வனத்துறை நிதி உதவியோடு, அங்குள்ள கிராமங்களில் ‘வனக்குழு’ ஒன்றை உருவாக்கினோம்.

ஒரு சதவீதம் வட்டிக்கு கிடைக்கும் இந்த நிதியின் மூலம், யாரெல்லாம் காட்டை சார்ந்திருந்தார்களோ அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை வனத்துறையினர் உருவாக்கினர். மக்களுடைய பிரச்சினையை அரசு கவனத்திற்கும், அரசின் நிதிகளை எவ்வாறு கையாள்வது  என்பதை மக்களுக்கும், இடையிலிருந்து சொன்னது அரும்புகள். சவால்கள் எங்களுக்கு அதிகமாகவே இருந்தது.

இதை மாடலாக எடுத்துக் கொண்டு, நதிகள் அதிகமாக இருக்கும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், மதுரை வனத்துறையோடு இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது” என்று கூறும் லதா காட்டுத் தீயினால் உண்டாகும் பாதிப்பு பற்றியும் பேசுகிறார்.

‘‘தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில காலங்களாக ஏற்பட்டு வரும் காட்டுத் தீ எல்லாம் மனிதர்களால் உருவானது. தீ வைத்தால் மழை வரும் என்பது இவர்களது நம்பிக்கை. இந்த சயின்ஸ் உண்மையாக இருந்தாலும்,  அந்த தீ பூமிக்கடியில் இருக்கக் கூடிய நீர், காற்றில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து விடும். ஒரு முறை தீ வைத்து விட்டால் அது முற்றிலும் அணைய ஆறு மாத காலங்கள் ஆகும்.

காட்டில் உள்ள ஜீவராசிகள் பற்றி கவலைப்படாமல், தாத்தா, அப்பா வைத்தார் நான் வைக்கிறேன் என்ற மனநிலையில் தான் மக்கள் இன்றும் உள்ளனர். தாத்தாக்கு புரியாத விஷயத்தை பேரனுக்கு புரிய வைத்து வருகிறோம்’’ என்றார். சமீப காலமாக தமிழகத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு கண்டனங்களை பதிவு செய்யும் லதா, இதற்கு முக்கியக் காரணம் அரசியல்வாதிகள் என்று குற்றம் சுமத்துகிறார்.

“இயற்கை வளம் நிறைந்த மலைகள், காடுகளுக்கு அருகில் நிலத்தை தோண்டுவதோ, பாறகளை உடைப்பதோ இருக்கக் கூடாது என்று தற்போது மாநிலக் குழுவில் உள்ள கமிட்டி முடிவு செய்திருக்கிறார்கள். State Board for Wild Life என்ற குழுவில் நான் 2016 ஆம் ஆண்டு இணைந்தேன்.

இந்த குழுவில் பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள், ட்ரைபல்ஸ் உள்ளனர். இக்குழுவின் மூலம் பல பரிந்துரைகள் அரசுக்கு வழங்கியிருக்கிறோம். அதன்படி சரணாலயங்களை ஒட்டியோ, காடுகள் இருக்கும் பகுதிகளில் 5 கி.மீ  தொலைவில் கல்லூரி, ஆசிரமம், ரிசார்ட் போன்றவைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அப்படியே அனுமதிக் கொடுத்தாலும் களத்தில் வேலைப்பார்க்கும், இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் கையெழுத்து போட்டால்தான் கிடைக்கும்.
இன்று பல இளைய அரசு அதிகாரிகள், நாலு விஷயங்கள் படித்து நல்லது செய்ய வேண்டும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டுமென்று துடிப்புடன் செயல்படுகிறார்கள்.

திருநெல்வேலியிலிருந்து இரண்டு பெண்கள் இருக்கிறோம். அதில் ஒருவர் மலைவாழ் பெண். படிக்காதவர். ஆனால், காட்டை பற்றி அத்தனை
விவரங்களும் பேசுவார். எங்களின் வாழ்வாதாரம் இந்த காட்டை நம்பிதான் இருக்கிறது என அரசியல் தலைவர்கள் முன் உரத்து சொல்கிறார். இவர்களின் குரல் எழும் போது அவர்கள் சுதாரிக்கிறார்கள்.

இதனால் இயற்கை வளங்களை சுரண்டுவோருக்கு அனுமதி தருவதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார்கள்” என்று கூறும் லதா, State Level Seering Committee for Gulf of Mannaar Biosphere Reserve  என்ற குழுவிலும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு கடல் சார்ந்த விஷயங்களிலும் இயங்கி வருகிறார்.

‘‘தூத்துக்குடி முதல் தனுஷ்கோடி வரை உள்ள மீனவ மக்களிடம் கடலை எப்படி பாதுகாப்பது என்பதை எடுத்துச் சொல்கிறோம். கடலுக்குள் இருக்கும் அரிய உயிரினங்களை நமது பேராசையினால் அழிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். பெரிய பெரிய லாஞ்சுகள் போடுவது தவறு என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

லட்சக்கணக்கான கிராமத்து பெண்களுக்கு வழிகாட்டுவது பெருமையான விஷயம்’’ என்று கூறும் லதா, ‘‘இந்த தலைமுறை நல்லா இருந்தால்தான் வரும் தலைமுறை நல்ல முறையில் இருக்கும். அப்படி இருப்பதற்கு சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, இயற்கை வளங்களை பாதுகாப்பது அவசியம். இந்த செய்தியை ‘அரும்பு’ அமைப்பு மூலம் இயல்பாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறேன் என நம்புகிறேன்”
என்றார் லதா மதிவாணன்.

- அன்னம் அரசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

 • unavu_mudhalvar1

  மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்