SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னையர் தினத்தை அர்த்தமாக்கிய பட்டினிப் போராளி

2019-07-17@ 12:16:37

நன்றி குங்குமம் தோழி

பெண்ணுடல் கவர்ச்சிப் பொருளாக மட்டும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், தன்னுடலை ஆயுதமாக்கி இளமையைத் தொலைத்து போராடியவர் ஐரோம் ஷர்மிளா. மருத்துவமனைச் சிறையிலிருந்த தன்னை தன் தாய் பார்க்க வந்தால் அவரின் கண்ணீரைப் பார்த்து தன் மனம் மாறிவிடுமோ என்றெண்ணி போராட்டம் துவங்கிய  நாளில் இருந்தே தன் லட்சியத்தை அடையாமல் அம்மாவைப் பார்க்க மாட்டேன் என்பதில் ஷர்மிளா ரொம்பவே தீர்க்கமாக இருந்தார். தன் மகளைப் பார்க்க மன பலமின்றி அவரின் தாயார் சக்திதேவியும் மகளிடம் இருந்து விலகியே வாழ்ந்தார்.

மணிப்பூரில் ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு’ எதிராக தன்னை வருத்தி உண்ணாநிலைப் போராட்டத்தை 16 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர் ஐரோம் ஷர்மிளா. அது நிகழ்ந்தது 2000ம் ஆண்டு. அச்சுறுத்தும் இறைச்சலுடன் பச்சை நிற வண்டி ஒன்று வந்து நிற்க, அதிலிருந்த அஸ்ஸாம் ரைஃபில்ஸ் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சிலர் தட...தடவென கையில் துப்பாக்கிகளை ஏந்தி ஓடி வருகின்றனர்.

அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சில இளைஞர்களை நோக்கி, அந்த இராணுவ வீரர்கள்  துப்பாக்கியால் சுட தொடங்குகின்றனர். காரணம் புரியாமல் நின்று கொண்டிருந்த 10 பேரும் அநியாயமாகப் பலியாகின்றனர். அவர்களது உயிரற்ற உடல் தரையில் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாய் ஓட, இக்காட்சிகளை பேருந்து நிலையத்தில் நின்ற 22 வயது இளம் பெண் நேரில் பார்க்கிறார்.

கன நேரத்தில் தன் கண் முன்னே நிகழ்ந்து, உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்த அவர் பதை பதைத்து கதறித் துடிக்கிறார். கொதித்து எழுந்தவர், சிறப்பு இராணுவச் சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதிக்கிறார். அவர்தான் ‘ஹியூமன் ரைட்ஸ் அலர்ட்’ என்ற அமைப்பில் தற்காலிகமாகப் பணியாற்றியவரும் கவிஞருமான ஐரோம் ஷர்மிளா என்கிற இரோம் ஷானு ஷர்மிளா.  

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தை ஆயுதம் ஏந்தி நடத்தவில்லை, உடலை வருத்தும் பட்னிப் போராட்டமாக நடத்தினார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் நடத்தி முடித்தார். 2000ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி துவங்கிய அவரது போராட்டம் 2016 ஆகஸ்ட் மாதத்தில் முடிவிற்கு வந்தது.

தீவிரவாத நெருப்பு பற்றி எரியும் மணிப்பூர், அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, அருணாசலப் பிரதேசம், மிஸோரம் எனும் 7 வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த என்று கூறி 1958ல் இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, சந்தேகத்தின் பேரில் இராணுவம், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அது குறித்து எந்த நீதிமன்றத்திலும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்ற சிறப்பு அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இராணுவம் அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதாகவும், பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த அதிகாரத்தின் மூலமாகத்தான் இராணுவம் 10 பேரையும் சுட்டுக்கொன்றது. இராணுவம் நிகழ்த்திய இத்தாக்குதலில், கொல்லப்பட்ட 10 நபர்களில் ஒருவர் கூடத் தீவிரவாதி இல்லை என்பதுதான் வருத்தம் நிறைந்த செய்தி.

இந்த அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், இதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்த ஷர்மிளா, உணவு மற்றும் நீர் உண்ணா போராட்டத்தை ஆரம்பித்தபோது அவரின் வயது 28.  ‘ஆயுதப்படைக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன்’ என்ற ஷர்மிளாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. மகளிர் அமைப்புகள் பலவும் அவரோடு கை கோர்த்தன. இந்நிலையில் அரசாங்கம் பல விதங்களில் அவரின் குடும்பத்தினரைப் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு ஷர்மிளாவை அச்சுறுத்தியது. எந்த அச்சுறுத்தலுக்கும் மசியாத ஷர்மிளாவுக்கு ஆதரவும், அரசுக்கு எதிர்ப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

மனித உரிமை மீறலுக்கு எதிராய் உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளா,  தற்கொலைக்கு முயன்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டு மணிப்பால் மாநிலத்தின் இம்பால் மருத்துவமனையில் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டார். உண்ணாவிரதம் ஆண்டுக் கணக்கில் நீண்டது. தினந்தோறும் மூக்கின் வழியாக செயற்கை திரவ உணவு செலுத்தப்பட்டு அவரது உயிர் அரசால் 16 ஆண்டுகளாக தக்கவைக்கப்பட்டது. ஷர்மிளாவின் உள்ளுறுப்புகள் பலமிழந்தன. உடல் மிகவும் தளர்ந்தது. மாதவிலக்கும் நின்றது. உதட்டில் தண்ணீர் படக்கூடாது என்பதற்காக பஞ்சின் மூலம் பற்கள் சுத்தம் செய்யப்பட்டது.

தலை முடிகளை சீவுவதில்லை, செருப்பு அணிவதில்லை, கண்ணாடி பார்ப்பதில்லை. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் அவரின் உடல் நிலை கண்டு வருந்தும் நண்பர்களிடம் தனது நிலைப்பாட்டின் உறுதியினை தொடர்ந்து காட்டி வந்தார் அவர். இராணுவச் சட்டத்திற்கு எதிராய் தனது இளமையையும் சேர்த்தே தொலைத்த ஷர்மிளா 2016 ஆகஸ்டில் உண்ணாநிலை போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்த போது அவருக்கு வயது 44.

மணிப்பூரின் முன்னேற்றத்துக்காக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து ‘மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கான கூட்டணி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றையும் தொடங்கினார். இது மணிப்பூரின் மாநிலக் கட்சியாக செயல்படும் எனவும் அறிவித்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தவுபால் தொகுதியில் முதலமைச்சர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் 90 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார் ஷர்மிளா. விரக்தி மேலிட ‘அந்த 90 பேருக்கு நன்றி’ என கண்களில் கண்ணீர் பனிக்க தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இனி நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். அவரின் முகநூல் பதிவினைப் பார்த்தவர்களின் மனசு கனத்துத்தான் போனது. பண பலமின்றி, மக்கள் பிரச்சனைகளைப் பேச அரசியல் களம் காணும் உண்மையான போராளிகளுக்கு மக்கள் காட்டும் ஆதரவு வலி மிகுந்தது.

அதன்பிறகு பொதுவாழ்வு மற்றும் போராட்டங்களில் இருந்த தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்ட ஷர்மிளா பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற தனது நீண்டகாலக் காதலரான தேஸ்மந்த் கொட்டின்கோவை 2017ல் கொடைக்கானலில் வைத்து திருமணம் செய்து பெங்ளூருவுக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். இந்நிலையில் தாய்மையுற்ற ஷர்மிளா அன்னையர் தினத்தில் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.அன்னையர் தினத்தில் தாய்மைப்பேறு பெற்ற ஐரோம் ஷர்மிளாவுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

- மகேஸ்வரி நாகராஜன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்