SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்டுபிடிப்புகள் நமக்கானது மட்டுமல்ல..!

2019-07-01@ 14:52:57

நன்றி குங்குமம் தோழி

“சிந்திப்பதில் பொறுமையும், செயலில் விடா முயற்சியுமே என் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். இதைத் தவிர எனக்கு வேறு எந்தச் சிந்தனையுமே கிடையாது” என்ற நியூட்டனின் வார்த்தைகளை பின்பற்றி, தாங்கள் கண்டுபிடித்த பொருளுக்காக முதல் பரிசு பெற்றுள்ளனர் மூன்று மாணவர்கள். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) முன்னாள் மாணவர்களின் ‘பால்ஸ்’ அமைப்பின் சார்பில், மாணவர்களால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் வண்ணம் ‘ENGINEERING A HEALTHY WORLD’ என்கிற தலைப்பில் போட்டியொன்றை ஒருங்கிணைத்தனர்.

இதில், சென்னை ஸ்ரீவெங்கடேஷ்வரா என்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்து வரும் மாணவர்களான சகுந்தலா, அனுஷையா நாராயணன், அஷ்வின் குழு முதல் பரிசு பெற்றுள்ளனர். எதனால் அவர்களுக்கு முதல் பரிசு, அப்படி என்னதான் கண்டுபிடித்தார்கள் என்பதை மூவரும் இணைந்து விளக்கினர். “எங்கள் துறை சம்பந்தமான போட்டிகள், கான்பிரன்ஸ் போன்றவை பற்றிய தகவல்கள் அடிக்கடி மெயிலில் வரும். அதில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுவோம். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் சென்னை ஐஐடி-யில் பால்ஸ் அமைப்பினர் ஒருங்கிணைக்கும் நிகழ்வு பற்றி தெரிந்து கொண்டோம்.

பால்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளிலிருந்து தமிழக அளவில் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஐந்து டீம் பங்கேற்றார்கள். நூறு டீம் பங்கேற்றதிலிருந்து 29 டீம் பைனலுக்கு செலக்ட் ஆனார்கள். அதில் எங்கள் கல்லூரியிலிருந்து இரண்டு டீம் வந்தோம். இறுதியில் எங்கள் குழுவினர் முதல் பரிசை தட்டிச் சென்றோம்” என்றனர். இந்தப் போட்டிக்கு முன் பல போட்டிகளிலும் பங்கெடுத்திருக்கிறோம் என்று பேசத் துவங்கிய சகுந்தலா, “நாங்கள் முன்பு பங்கு பெற்ற போட்டிகளில் எங்களின் யோசனைகள் மட்டுமே கொடுத்திருக்கிறோம். ஆனால், இந்த போட்டியில்தான் முதல் முறையா ரியல் டைம் புராஜெக்ட் பண்ணி இருக்கிறோம்.

இதற்கு முன் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜி ஏற்பாடு செய்திருந்த ‘ஹேக்கத்தான்’ என்ற போட்டியில் பங்கெடுத்தோம். இதில் ஆப்(app) டெவலப்மென்ட் செய்ய வேண்டும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நாடு இந்தியா. அதனால் விவசாயிகளுக்கு உதவும் வகையில் எங்களது புராஜெக்ட் அமைந்தது. அதில், ஒரு விவசாய பொருளுக்கு அன்றைய விலை என்ன என்பது பற்றிய அப்டேட் தெரிவிக்கப்படும். எந்தெந்த பொருள் என்ன விலையில் விற்கலாம் போன்ற தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு வெங்காயம் எடுத்துக் கொண்டால் அந்தந்த நாட்களுக்குள் விலை போனால்தான் ஆதாயம் கிடைக்கும்.

இல்லையென்றால், சரியான பாதுகாப்பு இல்லாத போது அது அழுகி வீணாகிவிடும். அந்த மாதிரி இருக்கிற பொருட்களுக்கு வாழ்நாட்களை அதிகரிக்க செய்வது எப்படி என்ற யோசனையோடு, வெங்காயத்தின் தோல்,  நிலக்கடலையின் தோல்களைப் பயன்படுத்தி அதிலிருந்து புதிய பொருள் கண்டுபிடிக்கலாமா என்ற யோசனைகளும் கொடுப்போம்” என்று பேசிக் கொண்டிருந்த சகுந்தலாவைத் தொடர்ந்து அனுஷையா பேசினார். ‘‘எங்கள் கல்லூரியிலிருந்து இண்டர்ஸ்ட்ரியல் விசிட்டுக்கு கூட்டிட்டு போவாங்க. அப்ப ஒரு சில இடங்களில் நிலக்கடலை தோலை கேக் மாதிரி செய்து, அதை எரிபொருளாக பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம்.

அதை பார்த்தப் பின், ஏன் இதை எரிபொருளாக பயன்படுத்தக் கூடாது என்று எங்களுக்குத் தோன்றியது. டீசல், பெட்ரோல் போன்றவற்றுக்குப் பதிலாக நிலக்கடலை தோலைப் பயன்படுத்தி இயற்கை முறையில் ஃபூயூல் தயாரிக்கலாம். இப்படிப் பயன்படுத்தும் போது சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம். இதனால் காற்று மாசுபாட்டைத் தடுப்பதோடு விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும். மேலும் நிலக்கடலை தோலில் நைட்ரஜன் கண்டண்ட் அதிகமாகவே உள்ளது” என்றார். இது போன்ற ஐடியாக்கள் கொடுத்ததன் மூலம் ஹேக்கத்தான் போட்டியிலும் முதல் பரிசு பெற்றுள்ளனர் இந்த மூவர் குழு.

‘‘நகரத்தில் இருக்கும் எங்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. இந்த போட்டிகளில் கலந்து கொண்டபின்தான் விவசாயிகளின் மதிப்பு என்ன என்று தெரிந்தது. அவர்கள் நம் நாட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கொண்டோம். எனவே அவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அதனால் அதிக பயன்களை நாம் நுகர்வதாலும் விவசாயம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆரம்பிச்சோம்’’ என்றனர் மூவரும். ‘‘எங்களுக்கு இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே கல்லூரியில் இது போன்ற போட்டிகளில் பங்குபெறுவதற்கான அழைப்பு வரும். கிடைக்கும் வாய்ப்பினை ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாதுன்னு நாங்க மூவரும் நினைச்சோம்” என்று கூறும் அஷ்வின்,

“தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்று அறிவித்தது அரசு. அதற்கு மாற்றாக என்ன செய்யலாமென்று யோசிக்கும் போது மக்காச்சோளத்தின் மேல் தோலினை பயன்படுத்தி ஏதாவது செய்யலாம் என முடிவெடுத்தோம். இதனை எங்களது பேராசிரியர் நளினிகாந்தியிடம் விளக்கினோம். அவரும் மக்காச்சோளம் பற்றிய பல தரவுகளை எங்களுக்கு கொடுத்துப் படிக்க வைத்தார். அதன் பின் எங்கள் குழுவில் அவரும் இணைந்து, இந்த போட்டியில் முதல் பரிசு வெல்வதற்குக் காரணமாகவும் இருந்தார்” என்றார். ‘‘மக்காச்சோளத்தின் அறுவடைக்குப் பின் அதன் மேல் தோலினை எரித்துவிடுவார்கள். சோளத்தின் தோலுக்கு வெப்பத்தைத் தாங்கக் கூடிய தன்மையுண்டு’’ என்று கூறும் சகுந்தலா,

“அப்படி வீணாகக் கூடிய பொருளை பயனுள்ளதாக மாற்றினால் விவசாயிகளுக்கும் பயன் நமக்கும் பயன். எனவே இந்த போட்டியில் எங்களது பிராஜெக்ட்டுக்காக மக்காச்சோளத்தின் மேல் தோலினால் சிறிய கப், ஸ்ட்ரா போன்ற பொருட்களை தயாரிக்கலாம் என்று முதல் நிலையில் எங்களின் யோசனையை சமர்ப்பித்தோம். எங்க யோசனை தேர்வானது. அதன் பிறகு அடுத்த கட்ட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். எங்களின் யோசனைக்கு முழு வடிவம் கொடுக்க மூவரும் அயராது உழைத்தோம்” என்றார். தற்போது முழு வடிவம் பெறாமல் இருக்கும் இவர்களது இந்தக் கண்டுபிடிப்பை முழு வடிவமாக்கினால், குடிசை தொழிலாகவும் செய்யலாம் என்கிறார்கள்.

‘‘எங்கள் கல்லூரியின் ஆய்வுக் கூடத்தில் உள்ள உபகரணங்கள் மற்றும் முறையான ஆய்வு வசதிகளோடு செய்யும் போது பிளாஸ்டிக்கிற்கு சிறந்த மாற்றாக இதைவிட வேறு இருக்க வாய்ப்பில்லை’’ என்ற அனுஷையா இதை குடிசை தொழிலாக செய்யலாம் என்று தன் யோசனையை தெரிவித்தார் ‘‘இதனை குடிசை தொழிலாக செய்யும் போது, அவர்களுக்கு, எந்த வெப்பநிலையில் இதனை மோல்ட் செய்ய வேண்டும், என்னென்ன வடிவத்தில் செய்யலாம் போன்ற விஷயங்களை சொல்லிக் கொடுக்கலாம். இது எளிமையாக இருப்பதோடு, அவர்களுக்கான வாழ்வாதாரமாகவும் அமையும்.

அதற்கு இன்னும் நாங்க நிறைய ஆய்வு செய்யணும். சிறிய அளவில் செய்யும் போதே அதற்கான விடை பாசிட்டிவாக இருக்கும் போது, இன்னும் பெரிய அளவு ஆய்வு செய்வதற்கான இடம் கிடைத்தால் எங்களால் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிறைய கண்டுபிடிக்க முடியும்” என்றார். ‘‘ஆராய்ச்சியில் நாம் கண்டுபிடிக்கும் பொருள் இந்த சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்’’ எனக் கூறும் சகுந்தலா, “நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதை உன்னிப்பாக கவனித்தாலே தெரிந்து விடும் என்ன தேவை இருக்கிறது என்பது. ஆனால், பல கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக அமைந்தாலும், சில கண்டுபிடிப்புகளினால் அழிவுகளைத்தான் அனுபவித்திருக்கிறோம்.

எனவே நாம் கண்டுபிடிப்பது நமக்கு மட்டும் பயன் அளிப்பதோடு இல்லாமல், வரும் காலத்தினருக்குமானதாக இருக்க வேண்டும். நிறைய படிக்க வேண்டும். நம்மை சுற்றி நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நாம் தான் அந்த வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார். எது பிடித்திருக்கோ அதில் முழு கவனம் செலுத்துங்கள் என்று கூறும் அனுஷையா, “இந்தியாவில் பல துறைகளில் வேலை இல்லை என்கிறார்கள். நமது தேடல் அவ்வளவாகவே இருக்கிறது. சில மாணவர்கள் தங்களது பிராஜெக்ட் ஒர்க்குக்காக மட்டுமே அவர்களது ஆராய்ச்சி இருக்கிறது. ஆனால் அப்படி இருக்கக் கூடாது. படிப்பு முடித்த பின்பும் அது பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

சிலர் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டால் இரண்டு, மூன்று  மாதம் செய்துவிட்டுக் கைவிட்டுவிடுகிறார்கள். சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று அரைகுறையாகவும் செய்கிறார்கள். ஒரு சிலர் இது போன்ற போட்டிக்காக மட்டுமே செய்வதோடு நின்று விடுகிறார்கள். எனவே ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் பொறுமையாகவும், அந்த கண்டுபிடிப்பு இந்த சமூகத்திற்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்” என்றார். உலகிலேயே முதன் முறையாக இக்கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கும் இம்மாணவர்கள், இயற்கை என்ன கொடுத்திருக்கிறதோ அதை அப்படியே பயன்படுத்தி வேறொரு பொருளாக மாற்ற வேண்டும் என்கிறார்கள்.

மற்ற பொருட்களின் கண்டுபிடிப்புகளிலிருந்து வேறுபடும் இவர்களது கண்டுபிடிப்பில் அதிக அளவு வேதிப் பொருட்களோ, ரசாயன கலப்போ செய்யாமல் உருவாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் போன்ற பொருட்களை டி கம்போஸ் செய்வது கடினம். ஆனால், இதை நூறு சதவீதம் செய்யலாம் என்று உறுதியளிக்கின்றனர். இதில் வைத்து உணவு உண்ணும் போது எந்த ஒரு பின்விளைவுகளும் இல்லையாம். சமகாலத்தின் பாதி கண்டுபிடிப்புகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து காப்பாற்றுவதற்காகவே அமைந்திருக்கிறது. எனவே இனி வரும் கண்டுபிடிப்புகள் வரும் தலைமுறைக்கானதாகவும் இருக்க வேண்டும் என்பதை புரிய வைத்துள்ளனர் இம்மூவர்.

- அன்னம் அரசு 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்