SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணே... உன்னை நீ நேசிக்க கற்றுக்கொள்

2019-06-26@ 17:25:22

நன்றி குங்குமம் தோழி   

உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பொதுவான விஷயம் என்ன என்று யூகித்து சொல்ல முடியுமா? என்று கேட்டால், ‘ஷாப்பிங், மேக்-அப், சாக்லேட்டுகள், உணர்ச்சியூட்டும் கதைகள்” என்ற பதில்களே வரக்கூடும். பொறுங்கள், உங்களுக்கு ஒரு வியப்பு காத்திருக்கிறது. அனைத்து பெண்கள் மத்தியிலும் பொதுவாக இருக்கிற ஒரு பண்பியல்பு என்பது, எந்த ஒரு விஷயத்தின் மீதும் தங்களையே மனஅழுத்தத்திற்கு ஆளாக்கிக்கொள்கின்ற அவர்களது திறமைதான் என்கிறார் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் கதிரியக்க சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் அனிதா.

‘‘6 வயதிலுள்ள எனது அண்ணன் மகள், 60 வயதாகும் எனது அம்மா, எனது சமையல்காரர், நான், எனது நாத்தனார், எனது சக பெண் பணியாளர்கள், எனது பெண் உதவியாளர்கள், பெண் நண்பர்கள் மற்றும் எனது வாழ்க்கையில் நான் சந்திக்கிற ஏறக்குறைய ஒவ்வொரு பெண்ணுமே ஏதாவது ஒரு விஷயத்தின் மீது, ஒருவர் விடாமல் அனைவருமே மனஅழுத்தத்தில் இருப்பதாக தோன்றுகிறது.

வேலைக்கு செல்கிற பெண்களாகவோ அல்லது குடும்ப பணிகளை மேற்கொள்கிறவர்களாகவோ, யாராக இருப்பினும், தங்களையே மனஅழுத்தத்திற்கு ஆளாக்கிக்கொள்கின்ற விஷயத்தைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் இருப்பதில்லை. மன அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் பெண்களால் எதிர்கொள்ளப்படுகின்ற மிக பொதுவான ஆபத்து என்பதாக இருந்தாலும், அது மிகைப்படுத்தி சொல்லப்படும் விஷயமல்ல.

நீல்சன் நிறுவனம் 21  வெவ்வேறு நாடுகளில் சமீபத்தில் நடத்திய ‘நாளைய பெண்கள்’  என்ற கருத்தாய்வின்படி, உலகில் இன்றைக்கு அதிக மனஅழுத்தத்திற்கு ஆட்பட்டிருப்பவர்கள் இந்திய பெண்கள்தான். பெரும்பாலான நேரங்களில் இந்திய பெண்களில் 87%, மனஅழுத்த உணர்வை தாங்கள் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

மற்றும் மனதை தளர்வாக்கிக்கொள்வதற்கு, ரிலாக்ஸ் செய்வதற்கு தங்களுக்கு நேரமே இல்லையென்று 82% கூறியிருக்கின்றனர்.
இந்தியாவின் மரபுசார்ந்த, பாரம்பரியமான ஒரு பெண் குழந்தையின் வளர்ப்புமுறையானது. அவளது வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் மிகச்சரியாக, உயர் நேர்த்தியோடு  இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. ஒரு தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, மருமகளாக, முதலாளியாக, தலைமை அதிகாரியாக, பணியாளராக இருப்பதை தவிர குறைவான வேறு எந்த மாற்று வழிமுறைகளுக்கு இடம் அங்கு இருப்பதில்லை.

‘நேர்த்தியான ஏதாவது ஒருவராக’ ஒரு பெண் இருக்க வேண்டுமென்ற மிக நீண்ட பட்டியலுக்கு முடிவே இருப்பதில்லை. பணி செய்யும் இடத்திலும்கூட, ஒரு பெண் பணியாளர் குறித்து நிலவுகின்ற ஒரு பொதுவான தவறான எண்ணத்தை உடைத்தெறிய, எதிர்கொள்ள அவளது திறனையும், பொறுப்புறுதியையும், ஒரு பெண் நிரூபித்தாக வேண்டியிருக்கிறது. இந்த நிர்பந்தங்கள் அனைத்தும் மனஅழுத்தத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

நேர்த்தி நிலை அல்லது செம்மை வாதம் என்பதை  அடைவதற்காக ஒருபோதும் முடிவடையாத யுத்தமானது, நம்மில் அநேகரை தொடர்ந்து ஒரு மனஅழுத்த மண்டலத்துக்குள் நிலை நிறுத்துகிறது. இந்த முடிவடையா பயணத்தில் வாழ்க்கையின் அழகை கண்டு ரசிக்க இயலாதவாறு முற்றிலும் பார்வைத்திறன் அற்றவர்களாக நாம் மாறிவிட்டோம். அவ்வாறு இருப்பதும்கூட முற்றிலும் சரியானது தான் என்பதை நீண்டகாலம் ஆகும் வரை நாம் உணர்ந்துகொள்ளவில்லை.

கற்றுக்கொள்ளும்போது தவறுகளை செய்வதில் தவறில்லை. மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களாக இருக்கும்போதே வாழ்க்கையை முழுமையாக வாழ்வது முற்றிலும் சாத்தியமானது. வாழ்க்கையில் இருக்கின்ற குறைபாடுகளை, நேர்த்தியற்ற நிலைகளை, பலவீனங்களை உணர்ந்து, ஏற்றுக்கொள்கின்ற மற்றும் அதுபற்றி குறை கூறாத  அல்லது நம்மையே குறைவானவர்களாக உணராத கலையை நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நாம் எதிர்பார்த்தவாறு சரியாக நடக்காத அல்லது முடிவடையாத ஒவ்வொரு விஷயத்திற்கும் நம்மையே நாம் குறை கூறிக்கொண்டு
வேதனைப்படுவதால் மனஅழுத்த உணர்வின் ஆபத்துக்கு நம்மையே நாம் உட்படுத்திக்கொள்கிறோம். மனஅழுத்தமானது  அதனோடு சேர்த்து விரும்பத்தகாத பல அழையா விருந்தாளிகளைக்கூட அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், நீரிழிவு, தலைவலி, பதற்றம், மனச்சோர்வு, எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் போன்றவை சிலவாகும். மன
அழுத்தமானது, முதுமை அடைதலையும் விரைவாக்கி முன்கூட்டியே உயிரிழப்புக்கு நம்மை இட்டுச் செல்கிறது. நம்மிடமிருக்கும் வாழ்க்கை என்ற இயற்கையின் வெகுமதியை, மனஅழுத்தமானது, ரகசியமாக நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொண்டு போய்விடுகிறது.

இந்த தருணத்தில் உண்மையாக வாழ்வதற்கும், ரசித்து அனுபவிப்பதற்கும் நம்மை ஒருபோதும் அனுமதிக்காத கொடுங்கோலனாக, சர்வாதிகாரியாக, மனஅழுத்தம் நம்மை ஆட்டிப் படைக்கிறது. இந்த அநீதியை நம்மீதே சுமத்திக்கொள்ளும் இந்த செயல்பாட்டை பெண்களாகிய நாம் உடனடியாக நிறுத்திக்கொள்வதுதான் சிறந்தது. மனஅழுத்தம் தொடர்புடைய பல்வேறு நோய்களின் வடிவத்தில் இதன் கொடுமையான விளைவுகளையும், சுமையையும் இனியும் நாம் தூக்கி சுமக்க வேண்டுமா? ‘உண்மையிலேயே அழகான வீராங்கனைகளாக’ நாம் இருக்கிறோம் என்பதை மனதின் ஆழத்தில் வலுவாக பதியச் செய்து நமக்கு நாம் தர வேண்டிய அன்பையும், கண்ணியத்தையும், நாம் வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நம்மையே நாம் நேசிக்க கற்றுக்கொள்கிற நாளே, நாம் உண்மையிலேயே திறன் அதிகாரம் பெற்றவர்களாக திகழும் நாளாக இருக்கும்’’ என்கிறார்

டாக்டர் அனிதா.

தொகுப்பு தி.ஜெனிஃபா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakmissiletest

  இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

 • indhragandhi102

  இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

 • californiagunshot

  பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

 • isisterrorbabies

  ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

 • 19-11-2019

  19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்