SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களுக்கு சுய முன்னேற்றம் வேண்டும்!

2019-06-25@ 17:14:24

நன்றி குங்குமம் தோழி

ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் இஸபெல்லா

வல்லமை தாராயோ...

சென்னை போரூர், பூந்தமல்லி ஜே.சி.என் தெருவைச் சேர்ந்த ரெப்கோ பிரசன்னா மகளிர் சுய உதவிக்குழு ஊக்குநர் உமாதேவி, பிரதிநிதி சங்கீதா தலைமையிலான ஆறு பெண்கள் கைவினைப் பொருட்களை பல விதங்களில் தயாரித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை நாம் அணுகியபோது ஊக்குநர் உமாதேவி கூறியது..

‘‘திருமணம் என்றாலே குழந்தை பெற்று வளர்த்து ஆளாக்குவதும், கணவனுக்கு உரிய கடமைகளை செய்வதும் குடும்ப வாழ்வில் இருக்கும் பெண்ணின் தலையாய பணி என நினைத்துதான் எனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினேன். குழந்தைகள், தானே பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் நிலைக்கு வளர்ந்ததும் வேலைக்கு சென்று கணவனோடு சேர்ந்து குடும்ப பாரத்தை ஏற்க வேண்டும் என்ற  எண்ணம் என் ஆழ் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
இதனிடையே கணவனின் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட, அவரால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை.

வருமானம் போதுமானதாக இல்லாமல் குடும்பச் செலவுக்கே வட்டிக்காரர்களிடமும், அண்டை வீட்டார்களிடமும் அதிகமான வட்டிக்கு கடன் வாங்கும் நிலை உருவானது.  இந்த நிலையிலிருந்து எப்படி மீளப் போகிறோம்? குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம் என்று கலக்கம் என்னை தூங்க விடாமல் குலைத்தது.

இந்த நிலையில் பரிதவித்து நான் நின்ற போது என் தோழி சங்கீதா மூலம் மகளிர் குழு பற்றி கேள்விப்பட்டேன். அதில் சேர்ந்தேன். முதலில் சிறிய அளவில் கிடைத்த சுழல்நிதியை பெற்று அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்தேன். குழுவில் வாங்கிய கடனையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கவும் செய்தேன்.

கடன் வாங்க மட்டும் இல்லாமல் இந்தக் குழுவில் இணைந்து பணியாற்றவும் செய்தேன். குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அவ்வப்போது வழிகாட்டு முகாம் மற்றும் பயிற்சி முகாம்கள் நடைபெறும். அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். அதில் என்னைப் போன்ற பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது இஸபெல்லா மேடம்தான்’’ என்றார் உமாதேவி.

இதையடுத்து ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் இஸபெல்லாஅவர்களை சந்தித்தோம். ‘‘சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில். தந்தை சேலத்தில் தனியார் கல்லூரி பேராசிரியர். தாயார் இல்லத்தரசி. பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி வரை சேலத்தில் தான் படிச்சேன். பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றேன்.

பிறகு பி.காம் பட்டப்படிப்பில் கோல்டு மெடல் பெற்றேன். அதை முடித்த கையோடு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வங்கி நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தேன். அதை தொடர்ந்து இந்திய வங்கித்துறை கல்வி நிறுவனத்தின் சான்றிடப்பட்டப்படிப்பான சி.ஏ.ஐ.ஐ.பி படிச்சேன். எம்.பி.ஏவும் படிச்சிருக்கேன்’’ என்று தன் கல்வி பயணத்தை தொடர்ந்தவர் 1993ம் ஆண்டு தனியார் வங்கியில் அலுவலராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

‘‘வங்கியில் அலுவலராக சேர்ந்தாலும், அனைத்து முக்கிய துறைகளை பற்றியும் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு 1999ம் ஆண்டு ரெப்கோ வங்கியில் மேலாளராக பணியில் சேர்ந்தேன். இந்த வங்கியில் வெவ்வேறு முக்கிய துறைகளான கடன் வழங்கும் துறை, தகவல் தொழில் நுட்பம், வங்கி கணக்கு மற்றும் தணிக்கைத்துறை, ஓய்வூதிய துறை, மனிதவளம் போன்ற பல துறைகளில் தலைமை பொறுப்பு வகித்துள்ளேன்.

 நான் பணியாற்றிய அனைத்து துறைகளிலும் புதிய யுக்திகளை புகுத்தி அதில் வெற்றியும் கண்டு, மேலதிகாரிகளிடம் நற்பெயரையும் பெற்றுள்ளேன்.25 ஆண்டுகளாக வங்கிப்பணியில் இருந்து வரும் நான் தற்போது ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளேன். மேலும் வங்கியின் துணை நிறுவனங்களான தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு அறக்கட்டளையின் அறங்காவலராகவும், ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் தலைவராகவும், ரெப்கோ தொண்டு நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறேன்.

நான் இந்தப் பதவியில் இருக்க காரணம் கடவுளும், எனது பெற்றோர் மற்றும் கணவரும் தான். பெண்களுக்கு சுதந்திரம், இட ஒதுக்கீடு என்பதெல்லாம் பேச்சில் தான் இருக்கிறது. சுதந்திரம் இருந்த போதும், பெண்களின் தலைமையின் கீழ் பணிபுரிய சில ஆண்களுக்கு மனமில்லை. அவர்களிடம் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.

அது சில நேரங்களில் அவச்சொற்கள், பணியில் மெத்தனப்போக்கு உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தென்படுகிறது. முன்னாள் பிரதமர் நேரு கூறியது போல் ஒரு பெண் பொருளாதார ரீதியாக எப்போது சுதந்திரம் பெறுகிறாளோ அது தான் உண்மையான சுதந்திரம். அதை தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டு இன்று வரை பணியாற்றுகிறேன். பல மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுத்து சுய தொழில் புரிய வைத்து அவர்கள் பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்க நானும் ஒரு வகையில் என்னால் முடிந்த உதவியினை அவர்களுக்கு செய்து வருகிறேன்.

ஐ.டி துறையில் இருக்கும் பெண்கள் அவர்களுக்கான ஒரு நிலையை அடைந்துவிடுவார்கள். ஆனால் அடிமட்ட நிலையில் இருக்கும் ெபண்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே பெரிய சவாலாக உள்ளது. அதை மாற்ற வேண்டும். அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை அமைத்து தர வேண்டும்.

அதை ஏற்படுத்தி தரும் போது எனக்குள் ஒரு சந்தோஷம் மற்றும் நிம்மதியை அளிக்கிறது. எங்கள் வங்கியின் மூலம் சமூக தொண்டு செய்யும் போது எழாத மனநிறைவு, அடித்தட்டு பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரு வகையில் காரணமாக இருக்கும் போது உருவாகுகிறது. இந்தப் பணியை என்னால் முடிந்த வரை நான் தொடர்ந்து செய்வேன்’’ என்றார் இஸபெல்லா.

-சு.இளம் கலைமாறன்

ஆர்.சந்திரசேகர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2019

  23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்