SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊனப்பட்டதால் உதாசீனப்படுத்தினார்கள்

2019-05-22@ 12:33:39

நன்றி குங்குமம் தோழி

ஓடி ஆடி விளையாண்ட குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டு கால் ஊனமானாள். பெத்தவளே பிறந்தது வீணா போனது என்றெண்ணிய போது உடன் பிறந்த தங்கை உத்தரவாதம் அளித்தாள். ‘‘நீ என்ன நினைக்கிறாயோ அதுவாக ஆக முயற்சி செய். நான் துணை இருக்கிறேன். என் படிப்பை தியாகம் செய்து வேலைக்குச் சென்று உன்னை படிக்க வைக்கிறேன். நீ படி லதா’’ என்றாள். அக்காவும், தங்கையும் உடன்பிறப்புகளாக இருந்தாலும், உன்னத தோழியாகவே இருந்தாள் உமா. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்டது சின்னிவாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜி, இவரின் மனைவி ராணி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

முதலாவதாக பிறந்தவர் லதா, இரண்டாவது மகள் உமா. சிறுவயது குழந்தையாக இருக்கும் போதே லதா அமைதியாக இருந்தாள். 5 வயதாக ஆன போது மற்ற குழந்தைகள் போல் தானும் ஓடி ஆடி விளையாட எண்ணினாள். நன்றாக ஓடி விளையாடினாள். ஆனால் ஒரு மாதம் மட்டுமே. மறுமாதம் போலியோ தாக்கியது. எழுந்து நடக்க முடியவில்லை. தொடர் சிகிச்சையில் தெரிய வந்தது, வலது கால் ஊனம் என்று. வருந்தினாள் லதா. வாழ்வே இனி இல்லை. எதிர்காலம் முடிந்து போனது என கருதினாள். ஒன்றாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு முடிந்த கையோடு இனி எப்படி தொடர்ந்து படிப்பது...

மற்றவர் துணையின்றி எவ்விதம் பள்ளி செல்வது என பரிதவித்தாள். தந்தையும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார். ஐந்தாம் வகுப்பு முடித்த கையோடு படித்தது போதும் என்றாள் தாயார். ‘‘நல்லா கையும், காலும் வச்சிருக்க பொம்பள புள்ளங்க படிச்சே ஒண்ணும் செய்ய முடியல, கால் ஊனமான நீ என்னத்த கிழிக்கப்போற’’ என்று உதாசீனப்படுத்த, உடனிருந்த தங்கை, ‘‘அக்கா நீ படி, நான் உன்னை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப் போறேன்’’ என்றாள். ‘‘நோட்டு, பேப்பர், பென்சிலுன்னு செலவு பண்ண பணம் எங்கிருக்கு’’ என்ற அம்மாவின் வாயை அடைத்தாள் தமக்கை.

அக்காவை படிக்க வைக்க உமா தனியார் நிறுவனம் ஒன்றில் 12 வயதில் வேலைக்குச் சேர்ந்தாள். லதாவும் நல்ல முறையில் படித்து வந்தாள். உமாவுக்கு ஆரம்பத்தில் மாதம் ரூ.600 மட்டுமே சம்பளம் கிடைத்தது.  பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றார். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான நடந்த ஊனமுற்றோர்களுக்கான தடகளப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். அதைக்கண்டு தங்கையும், தாயும் லதாவை பாராட்டினார்கள். தொடர்ந்து படி எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம் என்றனர் இருவரும்.

உற்சாகம் கொண்ட லதா பத்தாம் வகுப்பை முடித்தார். மேல்நிலைப் படிப்புக்காக வாலாஜாபாத் அரசுப் பள்ளியில் சேர்ந்தார். லதா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, மாதம் ரூ.2000 ஆயிரம் சம்பளம் வாங்கும் நிலையில் இருந்தார் உமா. உமாவை உறவினர் பெண் கேட்டு வந்தனர். ‘‘மூத்தவள வச்சிக்கிட்டு எப்படி இளையவளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும்’’ என்று கூறிய தாயிடம், தன் படிப்புக்கு முழுக்கு போட்டு தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்தாள் லதா. உமாவுக்கு திருமணம் முடிந்தது. லதாவும் படித்து முடித்தாள். தொடர்ந்து படிக்க உதவிக்கு ஆள் இல்லை என்று வருந்திய லதாவுக்கு இறைவன் அருளினான்.

டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் டைப்பிங் பயிற்சிகளை வண்டலூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் வழங்கி வந்தது. அவர்களின் உதவியுடன் லதா படித்து முடித்தாள். பின்னர் சென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள மாம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் டைம் கீப்பராக வேலைக்கு சேர்ந்தார். தன் வருமானத்தில் ஒரு தொகையை தன் தங்கை குடும்பத்துக்கு கொடுத்தார். நன்றிக் கடனா, செஞ்சோற்று கடனா என்று கேட்டால் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது லதாவிடமிருந்து. டைம் கீப்பராக வேலைப்பார்த்த லதாவை, அதே கம்பெனியில் வேலைப்பார்த்த ஒருவர் மணமுடிக்க முன்வந்தார்.

கணவரின் உதவியுடன் அரசு வேலைக்கு பல வகைகளில் முயற்சித்த லதாவுக்கு அங்கன்வாடியில் பணியாளர் பணி கிடைத்தது. தற்போது சென்னை, பல்லாவரம், கண்ணபிரான் தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் வேலை பார்த்து வருகிறார். ‘‘என்னைப் போன்றோர் இனி உருவாகாமல் இருக்க, போலியோ சொட்டு மருந்து வழங்குவதை, சுகாதாரத்துறையை அடுத்து நான் வேலைப் பார்க்கும் துறைதான் திறம்பட செய்கிறது. அதில் எனக்கு ஒரு மனநிறைவு இருக்கிறது. போலியோ பாதிப்புகளை முற்றிலும் முறியடிக்கும் முயற்சியில் அரசுடன் நானும் இருக்கிறேன். என்னை அந்த வேலையில் அர்ப்பணித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது’’ என்றார் லதா.

- சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • adayaru_makkal_kumbha1

  அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

 • oranguttan_monkey111

  50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

 • malai_vangam11196

  196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 • amerikaa_aathal11

  900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

 • 20-06-2019

  20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்