SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போஸியா விளையாட ஜலந்தர் போனோம்

2019-05-16@ 15:36:46

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கையில் ரொம்பவே சோர்ந்து போய் இருக்கீங் களா? எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என புலம்புபவரா? உடனே கிளம்புங்க. மகிழ்ச்சியும்  உற்சாகமும் பொங்கி வழிய.. கூடி விளையாடி, சிரித்து மகிழும் இவர்களைப் பார்த்துவிட்டு வாங்க. கண்டிப்பாக அவர்களின் உற்சாகம் உங்களையும்  தொற்றிக்கொள்ளும். ஏனெனில், இவர்கள் அத்தனை பேரும் மாற்றுத் திறனாளிகள். ஆனால் பல்வேறு துறையில் பம்பரமாய் சுழல்பவர்கள். ஆம்.  ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான வித்யாசாகர் சிறப்பு பள்ளி வளாகத்தில்  குழுவாக இணைந்து போஸியா விளையாட  பயிற்சி எடுக்கிறார்கள் இவர்கள். இன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் வரை பயணித்து இரண்டு தங்கம்  மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களோடு தமிழகம் திரும்பி இருக்கிறார்கள். வெற்றியாளர்கள் மூவரும் தங்கள் அனுபவத்தை நம்மிடம் பேசியபோது...

சதீஷ், சென்னை

‘‘ஒலிம்பிக் நடந்த இடத்தில் நடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் நிறைய விளையாட்டுக்கள் உள்ளது. அதில் போஸியாவும்  ஒன்று. இந்த விளையாட்டு 1984ல் ஆரம்பிக்கப்பட்டாலும் பல நாடுகளில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இந்தியாவிலும் இதே நிலைதான்.  2016ல் ஏக்தா ஃபவுண்டேஷன் மூலமாக நாங்கள் குழுவாக இந்த விளையாட்டை சென்னையில் விளையாட ஆரம்பித்தோம். இதில் நான் போஸியா  விளையாட்டின் ஒருங்கிணைப்பாளர். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு அரசு வங்கி ஒன்றில் பணியில் இருக்கிறேன்’’  என்று, ஜலந்தரில் தான் பெற்ற வெள்ளிப் பதக்கத்தோடு உற்சாகமாக நம்மிடம் பேசினார்.

‘‘போக்குவரத்துப் பிரச்சனை என்பது எங்களுக்கு மிகப் பெரும் தடை. எனவே எங்களைப் போன்றவர்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டு வெளியில்  வருவதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எதையாவது ஒரு விசயத்தை தொடங்கி, அதில் ஆர்வத்தைக் கொடுத்தால்தான் முயற்சி செய்து வெளியில்  வருவார்கள் என யோசித்தோம். விளைவு, போஸியா விளையாட்டில் இந்திய அளவில் டீம் இல்லை என அதை விளையாட தொடங்கினோம்.  தொடக்கத்தில் இரண்டு மூன்று பேரை வைத்துத்தான் ஆரம்பித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நிறைய மாற்றுத் திறனாளி நண்பர்கள் இணையத்  தொடங்கினார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி என்றால் வெளியில் வர எங்களுக்கு இப்போது ஒரு காரணம் இருக்கிறது.

இல்லையென்றால்  வெளியில் எங்கு போவது? என்ன செய்வது என யோசித்துக்கொண்டே இருந்திருப்போம். சில மாற்றுத் திறனாளி நண்பர்களால்  நினைத்ததும் கிளம்பி வர முடியாது. ஏனென்றால் வீல்சேர் பயன்பாட்டாளர்களுக்கு எப்போதும் ஒருவர் உதவி தேவை. நமது ஊரின் போக்குவரத்து  கட்டமைப்பு எங்களுக்கு அத்தனை உகந்ததாக இல்லை.சமீபத்தில் ஏக்தா ஃபவுண்டேஷன் மூலமாக போஸியா விளையாட்டிற்காக தேசிய அளவிலான  போட்டி ஒன்றை சென்னையில் நடத்தினோம். ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா,  ஆந்திரா, தமிழ்நாடு என பத்து மாநிலத்தில் இருந்து வந்து மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த முறை இந்த விளையாட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்தது. 35 முதல் 40 பேர் இதில் கலந்து கொண்டோம். தமிழ்நாட்டில் இருந்து மூவர்  பங்கேற்றோம்.  போஸியாவில் பிசி-1ல் இருந்து பிசி-5 வரை மொத்தம் 5 பிரிவுகள் உண்டு. பிசி-1ல் பாலை தூக்கிப் போட முடியும். ஆனால் ஒரு  உதவியாளர் அருகில் இருப்பார். பிசி-2ல் எந்த உதவியாளரும் தேவையில்லை. அவர்களாகவே பாலை தூக்கிப் போடுவார்கள். பிசி-3 மற்றும் பிசி-4 கிட்டதட்ட ஒரே நிலை. ரொம்பதூரம் பாலைத் தூக்கிப்போட முடியாத வர்கள். இவர்களுக்கு உதவியாளரும ரேம்ப்பும் வழங்கப்படும். ரேம்ப்  வழியாக பாலை உருட்டிவிட்டு இவர்கள் விளையாடுவார்கள். பிசி-5 உதவியாளர் இருப்பார். ஆனால் கொஞ்சம் லிமிட்டாக வழங்கப்படும். இந்த 5  பிரிவுகளில், சென்னையில் இருந்து வந்த லெட்சுமி பிசி-2 பிரிவிலும், ரூபா ராஜேந்திரன் பிசி-3 பிரிவில் தங்கமும் வென்றார்கள். நான் பிசி-3 பிரிவில்  வெள்ளிப் பதக்கத்தையும் வென்றோம்’’ என்றார்.

ரூபா ராஜேந்திரன், சென்னை

‘‘போஸியாவிற்கான போட்டி சென்ற ஆண்டு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முயற்சி செய்யலாம் என்று நாங்கள் டீமாக  களமிறங்கினோம். வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுத்தது. பிறகு விடாமல் தொடர்ந்து பயிற்சி  எடுத்தோம், சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த தேசிய கால் இறுதிப் போட்டியிலும் டீமாக விளையாடி இருக்கிறோம். இந்த முறை பஞ்சாப்பில்  நடந்தது. தனிநபர் விளையாட்டு போட்டி. எனக்கு இதில் தங்கம் கிடைத்தது.போஸியா விளையாட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பயிற்சி  எடுக்கிறேன். சதீஷ் எனது நண்பர். பவர் வீல் சேர் ஃபுட் பால் விளையாடத்தான் முதலில் அவரைத் தொடர்பு கொண்டேன். அவர்தான் எனக்கு  போஸியா விளையாட்டை அறிமுகம் செய்தார். விளையாட்டின் நுணுக்கங்களை அவர்தான் எனக்கு கற்றுத் தந்தார், நிறைய நம்பிக்கை கொடுத்தார்.  வாரத்தில் ஒரு நாள் வெளியில் செல்கிறோம், நண்பர்களை சந்திக்கிறோம் என்றுதான் துவக்கத்தில் சென்றேன். ஆனால் விளையாடத் தொடங்  கியதுமே ஆர்வம் வந்துவிட்டது. விடாமல் பயிற்சி செய்தேன். இன்று வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டேன்.

போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 2 நாள் நடந்தது. 4 நாட்களுக்கு திட்டமிட்டு நான், நண்பர் சதீஷ், லெக்ஷ்மி பிரபா என மூவரும் கிளம்பினோம்.  இதில் சதீஷ் மற்றும் லெக்ஷ்மி பிரபா இருவருமே மூளை முடக்குவாதத்தில் பாதிப்படைந்தவர்கள். நான் வளர்ச்சி குறைவு. மூவருமே தானாக  செயல்பட முடியாத நிலை. சதீஷ்க்கு அவர் அப்பா, லெக்ஷ்மிக்கு அவரது அம்மா, எனக்கு என் உதவியாளர் ஜோதி துணைக்கு வந்தார்கள்.  சென்னையில் இருந்து6 பேரும் ரயிலில் கிளம்பினோம். மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் கொடுத்து டிக்கெட் பதிவு செய்தாலும், எங்களுக்கு  ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அப்பர் பெர்த்தாக இருந்தது. பல இன்னல்களுக்கு நடுவே எங்கள் பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் டெல்லி  சென்றோம். அங்கு தாஜ்மஹால், யமுனை நதி, இந்தியா கேட் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம்.

சில இடங்களில் எங்களின் வீல் சேர்களை மடக்கி வைத்து ரிக்ஷாவிலும், ஆட்டோவிலும் பயணித்தது புது அனுபவம். டெல்லியில் மெட்ரோ  ரெயிலிலும் பயணித்தோம். அடுத்த நாள் டெல்லியில் இருந்து ஜலந்தர் சென்றோம். ஜலந்தரில் உள்ள லவ்லி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு  நடைபெற்றது. அங்குள்ள மாணவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டோம். போஸியா விளையாட்டில் நான் முதல் ரவுண்டில் 3 புள்ளிகள்  வித்தியாசத்திலும் இறுதி ரவுண்டில் 9 புள்ளிகள் வித்தியாசத் திலும் வெற்றி பெற்றேன். எங்கள் மூவருக் குமே பதக்கம் கிடைத்ததில் நிறைய  மகிழ்ச்சி. இதில் இருந்தே பாரா ஒலிம்பிக் கில் விளையாடுவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.ஜலந்தரில் இருந்து திரும்பி வரும்போதும்  அப்பர் பெர்த்தாக இரயில்வே நிர்வாகம் எங்களுக்கு வழங்கி இருந்தது. இரயில் பயணங்கள் மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கு அத்தனை  ஏற்புடையதாக இல்லை. நாங்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது’’ என முடித்தார்.

லெக்ஷ்மி பிரபா, சென்னை

மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட லெக்ஷ்மி பிரபா, போஸியா விளையாட்டில் பிசி-2 பிரிவில் தங்கம் வென்றவர். சொந்தமாக  குழந்தைகளுக்கான மாண்டிசோரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.‘‘கோட்டூர்புரத்தில் உள்ள வித்யாசாகர் சிறப்பு பள்ளியில் பயின்ற மாணவி நான்.  எனக்கு 12 வயது இருக்கும்போதே, அந்தப் பள்ளியின் இயக்குநர் பூனம் நடராஜனைப் போல சிறப்புக் குழந்தைகளுக்கு உதவும் பள்ளி ஒன்றைத்  தொடங்க வேண்டும் என விரும்பினேன். 12ம் வகுப்பு முடித்ததுமே, குழந்தைகளுக்கான ப்ளே சென்டர் மேனேஜ்மென்ட் முடித்து, மாண்டிசோரி  பயிற்சியும் முடித்தேன். பிறகு பெற்றோரின் உதவியோடு மாண்டிசோரி பள்ளியை ஆரம்பித்தேன். ஃப்ரீ ஸ்கூல் மாதிரி 3 வயதுக்குள் உள்ள 22  குழந்தைகள் என்னிடம் வருகிறார்கள். ஒரு சில சிறப்புக் குழந்தைகளும் உண்டு. என் கூடவே எனது அம்மா மற்றும் உதவி ஆட்கள் இருக்கிறார்கள்.போஸியா விளையாட்டிற்காக நாங்கள் ஜலந்தர் சென்று வந்தது எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய மிராக்கிள். பஞ்சாப் வரை எப்படி மூவரும்  சென்று திரும்பப் போகிறோம் என முதலில் மலைப்பாக இருந்தது.

ஆனால் எங்கள் நண்பர் சதீஷ் அந்த அளவுக்கு பயணத்தை பக்காவாகத் திட்டமிட்டார். வாடகைக்கு கார் எடுக்கும்போதுகூட, எங்கள் மூவரின் வீல்  சேர்களையும் எப்படிக் கழட்டி எந்த மாதிரி டைரக்‌ஷனில் வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி, இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்களிடம்  முன்னதாகவே அறிவித்து இரயிலை சற்று தாமதம் படுத்தி கிளம்ப வைத்தது, இறங்கும் இடத்தில் தன்னார்வலர்களை ஏற்பாடு செய்து ஆங்காங்கே  எங்களை இறக்கி, ஏற்றி என எல்லா வற்றையும் மிகவும் கச்சிதமாகச் செய்தார். பயண நேரத்தையும் சரியாக திட்டமிட்டார். விளையாட்டு போட்டி  நடந்த இடம் பல்கலைக்கழகம்  என்பதால் அங்கே எங்களுக்கு நிறைய மாணவர்கள் உதவினார்கள். இந்த நான்கு நாட்களும் பொதுமக்களோடு நாங்கள்  பயணித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததோடு, மக்களின் உணர்வுகளை நிறையவே புரிந்துகொள்ள முடிந்தது’’ என்றார்.கடந்த முறை  பிரேசிலின்ரியோ-டீ-ஜெனீரோவில் நடந்த 15வது பாரா ஒலிம்பிக்கில், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தின் குக்கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன்  தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது நம் நினைவில் வந்தது. சாதனையாளர்கள் பிறப்பதில்லை,  உருவாக்கப்படுகிறார்கள்.

-மகேஸ்வரி நாகராஜன்
படங்கள் : ஆ.வின்சென்ட்பால்


போஸியா விளையாட்டு

*    6 சிவப்பு, 6 ஊதா, 1 வெள்ளை நிறம் என மொத்தம் 13 பந்துகள் இதில் இடம்பெறும்.
*    வெள்ளை நிற பந்தே டார்கெட். அதன் அருகில் பந்தைப் போடுகிறவர்களே வின்னர்.
*    தனிநபர் விளையாட்டு என்றால் ஒரு ஆளுக்கு 6 பந்து. குழுவாக இணைந்து விளையாடும்போது 3 பந்து வரும்.
*    தனிநபர், இணையர், குழு விளையாட்டு என எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம்.
*    கையை உயரத் தூக்கி போட முடியாதவர்களுக்காக விளையாட ரேம்ப் வசதி உண்டு.
*    போஸியா விளையாடத் தேவையான பந்துகள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது.
*    13 பந்துகளின் விலை 10 முதல் 15 ஆயிரம் வரை விலை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ilavarsar_pakisthn111

  பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

 • kavan_manavai11

  அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

 • seuol_expooo1

  தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

 • pumbkin_comp111

  அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

 • bday_day11

  ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்