SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2019-05-07@ 17:24:42

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா


டீடாக்ஸ் டயட் முறைகள் பற்றி இந்த இதழில் பார்ப்போம். நம் உடல் ஒரு மாபெரும் வேதித் தொழிற்சாலை. தினமும் பல நூறு செல்கள் அழிந்து,  புதிய செல்கள் உற்பத்தியாகி நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் பேரியக்கம் இது. இந்த வளர்சிதை மாற்றங்கள் வழியாகவே ஒருவருக்கு  வயதுக்கு ஏற்ற தோற்றம் வாய்க்கிறது. இப்படி, உடலானது தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்போது கழிவுகள் சேர்வதும் தவிர்க்கவியலாதது.  

வளர்சிதை மாற்றங்களால் மட்டுமின்றி நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றால் உடலில் கழிவுகள் சேர்கின்றன.  என்னதான் வியர்வை, சிறுநீர், மலம் என்று கழிவுகளை உடல் வெளியேற்றினாலும் நம் ரத்தம் முதல் உள்ளுறுப்புகள் வரை கணிசமான அளவில்  கழிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. இவை உடலில் சேர்ந்து நஞ்சாக மாறாமல் இருக்க வருடத்துக்கு இருமுறையாவது டீடாக்ஸ் டயட் எனும் நச்சு  நீக்க டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அந்தக் காலத்தில் நம் முன்னோர் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குக் குளிப்பது முதல் விரதம்  இருப்பது, பேதிக்கான குளிகை எடுத்துக்கொள்வது என்று மேற்கொண்ட அனைத்துமே டீடாக்ஸ் முறைகள்தான்.

இன்று டீடாக்ஸ் டயட்டில் பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வெறும் பழச்சாறுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும் டீடாக்ஸ் முறைகள்,  ஒருவேளை அல்லது இரு வேளை சாப்பிடாமலேயே வயிற்றை உலரப்போடுவதன் மூலம் டீடாக்ஸ் செய்தல், உடலில் நஞ்சை நீக்கும் மஞ்சள், மிளகு  உள்ளிட்டவற்றை உணவில் சேர்க்கும் நச்சு நீக்க சிகிச்சை எனப் பலமுறைகள் உள்ளன. மாஸ்டர் க்ளென்ஸ் என்று ஒருவகை டீடாக்ஸ் டயட்  உள்ளது. உணவை முழுமையாக தவிர்த்துவிட்டு ஜூஸ், டீ, மேப்பிள் சிரப் மற்றும் மிளகுத்தூள் தூவிய லெமனேட் ஆகியவற்றை மட்டுமே உண்பது.  இதனால் உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக நீங்குகின்றன என்கிறார்கள். மேலும், உணவு உடலில் சேராது இருக்கும்போது உடலின் செல்  கட்டுமானம் பாதுகாக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு மேம்படுகிறது.

தேவையற்ற கொழுப்பும் கரைகிறது என்கிறார்கள். ஸ்டான்லி பரோஸ் என்பவர்தான்  நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதனை வடிவமைத்தார். வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இதைப் பின்பற்றுவதில் பெரிய ரிஸ்க்  ஏதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், அடிக்கடி இப்படியான டயட்களைப் பின்பற்றினால் பின்விளைவுகள்  இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையோர் இந்த டயட்டைப் பின்பற்ற  வேண்டாம். ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு ஏற்ற டயட்தான் இது. ஆறு மாதத்தில் ஒரு நாள் சாப்பிடாமல் நீராகாரங்கள் பருகுவது நம் உடலை  ஆரோக்கியமாக்குவதோடு நமது மன வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.

எக்ஸ்பர்ட் விசிட்

ருஜுதா திவேகர் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் ஃபுட் குரு. கரினா கபூரின் சைஸ் ஜீரோ சீக்ரெட்டின் பின் இருக்கும் எக்ஸ்பர்ட். உணவு தொடர்பாகப்  பல நூல்களை எழுதி வைரலாகிக்கொண்டிருக்கும் ருஜுதா கோடை கால உணவு பற்றி சொல்லும் பரிந்துரைகள் இதோ…கோடை என்றாலே நீர்தான்  நம் ஒரே பாதுகாவலன். தினசரி மூன்று லிட்டர் தண்ணீராவது பருகிவிடுங்கள். சிறுநீர் வெள்ளை வெளேர் என்று நிறமற்றுப் போவதுதான் கோடை  காலத்தில் நம் உடல் வெப்பத்தை எதிர்கொள்ளும் குளிர்ச்சியுடன் உள்ளது என்று பொருள். எனவே, தாராளமாகத் தண்ணீர் காட்டுங்கள்.வெறுமனே தண்ணீரே பருகினால்தான் உடல் டீஹைட்ரேட் ஆகாமல் இருக்கும் என்று இல்லை. பழச்சாறு, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரி  சாலட், மோர், இளநீர் போன்ற ஹெல்த்தியான பானங்களையும் உணவு உண்ட ஒரு மணி நேரம் கழித்துப் பருகலாம். குறிப்பாக மிட் மார்னிங் அல்லது  மாலை நான்கு மணி போல பருகலாம்.

சப்ஜா விதைகளை நீரில் போட்டுப் பருகுவது உடலை நன்கு குளிர்ச்சியாக்கும். மேலும் இது உடலின் எலெக்ட்ரோலைட்டை சமச்சீராகப் பராமரிக்கும்.  அதிக சோர்வாக இருப்பவர்கள் குளுக்கோஸ் கலந்த நீரைப் பருகலாம்.மதியம் கண்டிப்பாக உணவில் தயிர் அல்லது மோர் இருக்கட்டும். இது உடலின்  சர்க்கரை அளவைச் சரியாகப் பராமரிப்பதோடு புரோ-பயோடிக் தன்மையை மேம்படுத்துகிறது.இரவு படுக்கும் முன்பு குல்கந்து ஒரு ஸ்பூன் உண்டு  விட்டுப் படுக்கலாம். இதனால், அலைச்சலால் உடலில் ஏற்பட்டிருந்த வெப்பம் நீங்கி உடல் குளிர்ச்சியடையும். நன்றாகத் தூக்கமும் வரும்.கோடை காலத்தின் பழங்கள், காய்கறிகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர், மாம்பழம் போன்றவை இந்த  சீஸனில் கிடைக்கும். வைட்டமின்கள் நிறைந்த இந்த உணவுகளை டோண்ட் மிஸ்.மதிய உணவை கொஞ்சம் அளவாகவே சாப்பிடுங்கள். அதற்காக  மிகக் குறைவாகச் சாப்பிடவும் வேண்டாம். வழக்கமாய் உண்பதைவிட கொஞ்சம் குறைவாய் சாப்பிடுவதால் செரிமானம் என்ற செயலுக்கு உடல்  உழைப்பது குறைந்து, நீர் இழப்பு குறைவாகும்.

உணவு விதி #26

உணவு உண்டதும் குளிக்க வேண்டாம் என்பதும் ஒரு முக்கியமான உணவு விதி. நாம் சாப்பிட்டதும், ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்குத்தான்  செல்ல வேண்டும். சாப்பிட்டவுடன்  குளிப்பதால் உடலில் ஏற்படும் வெப்ப இழப்பைச் சீராக்க  ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப்  பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே,  குளித்துவிட்டுச் சாப்பிடலாம் அல்லதுசாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.

ஃபுட் மித்ஸ்

தற்போது, சூப்பர் மார்க்கெட்டில் வெள்ளை நிற முட்டைகளை ஒரு டிரேவிலும், பிரவுன் நிற முட்டைகளை இன்னொரு டிரேவிலும் அடுக்கி  வைத்திருக்கிறார்கள். காலங்காலமாய் வெள்ளை முட்டைகளைச் சாப்பிட்டு பழகிய நமக்கு, பிரவுன் முட்டைகள் கோழி முட்டைகள்தானா என்றோர்  சந்தேகம் வரும். சிலர் இதை நாட்டுக் கோழி முட்டை என்று நம்பி வாங்கிச் செல்கிறார்கள். சிலர் “பிரவுன் முட்டைகள்தான் விலை அதிகம். எனவே,  அதில்தான் சத்துக்கள் அதிகம்” என்று நம்புகிறார்கள். இதெல்லாம் உண்மைதானா?

முட்டை, வெள்ளை நிறம், பிரவுன் நிறம் என்பன எல்லாம் கோழிகளைப் பொருத்த விஷயங்கள். பொதுவாக, வெள்ளை லெக்கான் இனத்தைச் சார்ந்த  கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிற கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியின் கோழியின வகைகள் பிரவுன்  முட்டைகளையும் இடுகின்றன. (நாட்டுக்கோழிகள் சற்றே பழுப்பு நிறமான வெள்ளை முட்டைகள் இடுபவை, அதனால்தான் கலப்படக்காரர்கள் அளவில்  சற்று பெரிய பிராய்லர் கோழி முட்டைகளை, டீத்தூள் டிகாக்ஷனில் முக்கி, நாட்டுக்கோழி முட்டைகள் என விற்கின்றனர்) மற்றபடி, பிரவுன்  முட்டைகளோ வெள்ளை முட்டைகளோ இதன் ஊட்டச்சத்து மதிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி. அப்படியானால், பிரவுன் முட்டைகள் ஏன் விலை அதிகமாக உள்ளன? பிரவுன் முட்டைகள் வெள்ளை முட்டைகளைவிடவும் அளவில் சற்று  பெரியவை. எனவே, அதன் விலையும் அதிகமாக உள்ளது அவ்வளவே. மற்றபடி, நிறத்தைத் தவிர வெள்ளை முட்டையின் ஓட்டுக்கும், பிரவுன்  முட்டையின் ஓட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சிலர், பிரவுன் முட்டையின் ஓடுகள் தடிமனானவை என்பார்கள். இதுவும் தவறு. அளவில்  சற்றுப் பெரியவையே தவிர, தடிமனில் வித்தியாசம் கிடையாது.அதுபோலவே, மஞ்சள் கருவிலும் வேறுபாடு இருக்காது. சிலர் பிரவுன் முட்டைகளின்  மஞ்சள்கரு, வெள்ளை முட்டைகளைவிடவும் மஞ்சளாக இருக்கும் என்பார்கள். இது தவறு. பொதுவாக, கோழி சாப்பிடும் உணவுக்கும் அதன்  மஞ்சள்கருவுக்கும் மட்டுமே தொடர்பு உண்டு. அதாவது, மக்காச்சோளம்,  சேந்தோபில் நிறமிகள், கீரை வகைகள், கீழா நெல்லி, அசோலா  போன்றவற்றைத் தீவனத்தில் கலந்து அளிக்கும்போது கருவின் மஞ்சள் தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி, கோழி முட்டையின் ஓட்டின்  நிறத்துக்கும் மஞ்சள்கருவின் நிறத்துக்கும் தொடர்பு இல்லை.

ஃபுட் சயின்ஸ்

வைட்டமின் பி4 என்று முன்பு வகைமைப்படுத்தப்பட்டிருந்த அடினைன், கார்னிடைன், கோலின் ஆகியவற்றை தற்போது வைட்டமின்கள் அல்லது  துணை வேதிப் பொருட்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் தொடரில் அவற்றைப் பார்க்க வேண்டாம்,  வேறு ஒரு தருணம் பார்க்கலாம். தற்போது வைட்டமின் பி5 என்று அழைக்கப்படும் பாண்டோதெனிக் அமிலம் பற்றி பார்த்துவிடுவோம்.  பாண்டோதெனிக் அமிலம் நம் உடலுக்கு மிகவும் அவசியம். புரதங்கள், கொழுப்பு, மாவுச்சத்து ஆகியவற்றை தொகுத்து சரியாக நம் உடலில் சேர்க்க  இது அவசியம். இதனால் வளர்சிதை மாற்றம் சிறப்பாக நடக்கும்.

நம் கூந்தல் மற்றும் சருமப் பாதுகாப்புக்கு இதன் செயல்பாடு மிகவும் முக்கியம். அதனால்தான் பாண்டோதெனிக் என்ற பெயரில் ஷாம்புக்கள்,  லோஷன்கள் ஆகியவை சந்தையில் நிறைந்துள்ளன.  இந்த வைட்டமினை ரோஜர் வில்லியம்ஸ் கடந்த 1919ல் கண்டறிந்தார். தொடர்ந்து சில  ஆண்டுகளில் இது உணவுப் பொருட்களிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மருந்தாகவும் வழங்கப்படுகிறது. நாம் உண்ணும் எல்லா உணவிலும் மிகச் சிறிய  அளவில் பாண்டோதெனிக் இருந்தாலும் முழு தானியங்கள், பயிறுவகைகள், முட்டை, இறைச்சிகள், தேன், தயிர், நட்ஸ், அவகேடோ ஆகியவற்றில்  இது நிறைந்துள்ளது. நம் ஒவ்வொருவர் உடலுக்குமான பாண்டோதெனிக் அமிலத்தின் தேவை மாறுபடும். குழந்தைகளுக்கு தினசரி 1.7 மி.கி முதல் 4  மி.கி வரையும் தேவைப்படுகிறது. பெரியவர்களுக்கு 6 மி.கி தினசரி தேவை. கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்களுக்கு 6 மி.கி முதல் 7 மி.கி வரை  தேவைப்படும்.

போரும் உணவும்

‘போர் ஒரு துயரம் என்றால் காபிதான் ஒரே ஆறுதல்’ என்று விநோதமான பழமொழி ஒன்று அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்கர்கள் இரண்டு உலகப்  போர்களையும் ஒரு உள்நாட்டு யுத்தத்தையும் எதிர்கொண்டவர்கள். அவர்களுக்குப் போரின் சகல வலிகளும் தெரியும். ஒரு நாட்டில் போர்  ஏற்படும்போது அங்கு முதலில் பாதிக்கப்படுவது உணவுப் பொருள் பகிர்மானம்தான். பண்டைய காலம் முதலே ஒரு நாட்டின் மீது படை எடுக்கும்  அண்டை நாட்டு அரசு கோட்டையை முற்றுகையிடும்போது முதலில் தடை செய்வது கோட்டைக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத்தான். உணவு  வழங்கலைத் தடை செய்தால் யாராய் இருந்தாலும் தன்னால் சரணடைந்துதானே ஆக வேண்டும்? அமெரிக்காவின் சிவில் யுத்தம் நடைபெற்ற  நாட்களில் அங்கு உணவுத் தட்டுப்பாடு நிலவியது. பஞ்சத்தால் ஏழை மக்கள் வாடித் தவித்தனர்.

ஒரு கட்டத்தில் ராணுவ வீரர்களுக்கான உணவு வழங்குதலிலும் பற்றாக்குறை உருவானது. குறிப்பாக, காபி வழங்குவதில் சிக்கல் உருவானது.  எனவே, அதனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தார்கள். இது அமெரிக்க வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்நாட்களில் ராணுவ  வீரர்கள் எழுதிய பல டைரிகள் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் அந்நாட்களில் கிட்டதட்ட பெரும்பாலானோர் எழுதியிருக்கும்  சொல் காபிதான். போர், குண்டு, பீரங்கி, அதிகாரிகள், ராணுவ வீரன், லிங்கன் என்ற எந்தச் சொல்லையும்விட காபி என்ற சொல்தான் அந்நாட்களில்  அதிகமான ராணுவ வீரர்களால் எழுதப்பட்டது என்று சொன்னால் அவர்களின் காபி பைத்தியம் எந்த அளவுக்கு முற்றியிருந்தது என்பதைப்  புரிந்துகொள்ளலாம். இப்போது மேலே சொன்ன பழமொழியைப் படியுங்கள் அது உருவான காரணம் புரியும்.

-இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • doublee_engineflightt1

  உலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!!!

 • chennai_rebbb

  சென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்

 • 11kudiyrasu12

  விண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்

 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்