SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2019-04-08@ 16:03:16

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா


இந்த டயட் மேனியாவில் முட்டை டயட்டைப் பற்றிதான் பார்க்கப்போகிறோம். முட்டை டயட் எனும் எக் டயட் நம் ஊரில் காலங்காலமாக பயில்வான்களும் குஸ்திக்காரர்களும் இன்னபிற மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர்களும் பின்பற்றி வருவதுதான். உடலில் தேவையற்ற ஊளைச் சதையை உணவு மற்றும் உடற் பயிற்சி மூலம் எரிக்க எக் டயட் மிகச் சிறந்த தேர்வு. கட்டுமஸ்தான உடல் வேண்டும் என்றால் எக் டயட்டுடன் உடற்பயிற்சிகளையும் பின்பற்றலாம். இன்றும் கிராமப்புறங்களில் பட்டிகளுக்குப் போய் உடலை முறுக்கேற்றுபவர்கள் தங்களுக்குள் போட்டி வைத்தால் முட்டை வாங்கிக்கொடுப்பதைத்தான் சவாலாகச் சொல்வார்கள்.

அதாவது, தோற்றவர் வென்றவருக்கு அவர் கேட்கும் அளவுக்கு முட்டை தர வேண்டும். முட்டையை ஒரு மனிதன் ஒரு நாளில் எவ்வளவு உண்ணலாம் என்பதில் உணவியல் நிபுணர்களிடையேகூட கருத்து வேறுபாடு உள்ளது. சிலர், ‘அளவாக ஒன்றிரண்டே உண்ண வேண்டும்’ என்கிறார்கள். ’சிலர் அதற்கு எல்லாம் கணக்கு கிடையாது. வயிறு நிரம்பும் வரை உண்ணலாம் தவறு இல்லை’ என்கிறார்கள். இன்று பேலியோ டயட் போன்ற டயட்டுகளின் வெற்றியைப் பார்க்கும்போது முட்டையை வயிறு முட்ட உண்பதில் தவறு இல்லை என்றுதான் தோன்றுகிறது. முட்டை டயட் என்று பொதுவாகச் சொன்னாலும் இதில் பலவகை உள்ளன.

புரோட்டினை அடிப்படையாகக் கொண்ட இந்த டயட் முறைகளில் முட்டைதான் அதைத் தரும் பிரதான உணவு. பொதுவாக, முட்டை டயட்டில் ஸ்டார்ச் நிறைந்த கார்போஹைட் ரேட்களான அரிசி, கோதுமை, ரொட்டி, மக்காச்சோளம், உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கு இடம் இல்லை. ஜீரோ கலோரி பானங்களை எல்லா முட்டை டயட் வகைகளுமே ஏற்றுக்கொள்கின்றன. அதுபோலவே, தினசரி நீரும் மூன்று லிட்டர் பருக வேண்டும். பச்சை முட்டை செரிமானத்துக்குச் சற்று சங்கடமானது. எனவே, விளையாட்டு வீரர்கள் தவிர மற்றவர்கள் தவிர்க்கலாம். முட்டையை வேகவைத்து, அவித்து, பொரித்து என விரும்பியபடி சமைக்கலாம். ஆனால், கண்டிப்பாக  எண்ணெய் அல்லது நெய்யைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக, வெறுமனே முட்டையை மட்டும் எடுத்துக்கொள்வதைவிட ஹை புரோட்டின், லோ கார்போஹைட்ரேட் கூட்டணியை எடுத்துக்கொள்வதே பாரம்பரிய முட்டை டயட்டாக உள்ளது. காய்கறிகளில் புரோகோலி, காலிஃபிளவர் மிகவும் உகந்தது. பழங்களை அளவாக இருவேளை மட்டும் சாப்பிடலாம். அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றையும் குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலை உணவாக இரண்டு முட்டைகளுடன் கார்போ குறைந்த காய்கறிகள் சாப்பிடலாம்.

மதியம் முட்டையுடன் காய்கறி சாலட். இரவும் முட்டையுடன் கார்போ குறைந்த காய்கறிகள் சாப்பிடுவது ஒருவகை பாரம்பரிய எக் டயட். வெளிநாடுகளில் முட்டையுடன் கிரேப் ஃப்ரூட் சாப்பிடும் டயட் முறை ஒன்று உள்ளது. வெறுமனே மூன்று வேளையும் முட்டை மட்டுமே சாப்பிடும் எக் டயட்கூட உண்டு. ஆனால், இதை சில நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒரேவகை உணவைச் சாப்பிடுவது நிச்சயம் உடலுக்கு நல்லதல்ல.முட்டையில் வைட்டமின் டி, பி12, இரும்புச்சத்து, பொட்டாசிய சத்து, கால்சியம் உட்பட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளோடு புரோட்டின் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. முட்டையில் உள்ள நல்ல கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி ஊளைச்சதையைக் குறைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே, பாரம்பரிய எக் டயட் மேற்கொள்வது உடல் எடைக் கட்டுப்பாட்டுக்கும் உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.

எக்ஸ்பர்ட் விசிட்

உணவு சார்ந்து நம்மிடையே இருக்கும் மூடநம்பிக்கைகள் கொஞ்ச நஞ்சமல்ல. உணவு விதிகள் எப்போதும் அனைத்தும் அனைவருக்கும் அப்படியே பொருந்துவன அல்ல. சில விதிகள் நபர் மற்றும் சூழல் சார்ந்து மாறுபடும். இந்தியாவின் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் வசுந்தரா அகர்வால் சில ஃபுட் மித்ஸை இங்கு கட்டுடைக்கிறார்.

மித்: தினசரி எட்டு டம்ளர் நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.உண்மை: ஒருவர் எத்தனை டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பதை எண்ணிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் உடலியல் தேவைகளுக்கு ஏற்ப இந்த விகிதம் மாறுபடும். மேலும் நீரை மட்டுமே அருந்தாமல் காய் மற்றும் பழச்சாறு, பால், பழங்கள், காபி, டீ, கூல் போன்ற முறைகளிலும் நீரை எடுத்துக்கொள்வதே நல்லது. எனவே, எவ்வளவு என்பதை கணக்காக அல்லாமல் தேவை அறிந்து பருகுங்கள்.

மித்: டார்க் ரொட்டிகள்தான் வெள்ளை ரொட்டிகளைவிட ஆரோக்கியமானவை.உண்மை: இரண்டு ரொட்டிகளுக்கும் இடையே நிறத்தில் வேறுபாடு இருப்பது என்னவோ உண்மைதான். அதனால் அதன் ஊட்டச்சத்து விகிதத்தில் எல்லாம் எந்த மாறுதலும் ஏற்படாது. டார்க் ப்ரெட் என்பது கேரமல் பூசப்பட்ட ரொட்டி அன்றி வேறில்லை. வாங்கும் முன்பு அதில் என்னென்ன கலந்துள்ளன என்பதைப் பார்த்து வாங்குவதே நல்லது.மித்: சாலட்கள் மிகவும் ஹெல்த்தியானவை. அவற்றை தினசரி உண்ணலாம்.

உண்மை: டயட் இருப்பவர்கள் சாலட்டை மிக நல்ல உணவு என்று நம்புகிறார்கள். லெட்டூஸ் சேர்ந்த சர்க்கரையும் டாப்பிங்ஸும் நிறைந்த சாலட் ஒரு பீஸாவைவிட மேலானது அல்ல. சாலட்டின் மேல் அலங்காரமாய் அமர்ந்திருக்கும் வெண்ணெய், உலர் பழங்கள், நட்ஸ் ஆகியவற்றில் நிறைய சத்துகள் இருப்பதால் அவை சேர்ந்த சாலட்டை தவிர்ப்பதே நல்லது.மித்: ஆர்கானிக் உணவுகளே ஆரோக்கியமானவை.

உண்மை: தற்சமயம் உலகம் எங்கும் ஆர்கானிக் மோகம் தலைவிரித்தாடுகிறது. உண்மையில் ஆர்கானிக் என்ற ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால் நாம் சாப்பிடும் மிட்டாய்கள் முதல் சிப்ஸ் வரை அனைத்தும் ஆரோக்கியமாகிவிடாது. அதை நம்பினால் நாம்தான் ஏமாற்றப்படுவோம். சர்க்கரை, கொழுப்புப் பொருட்கள் போன்றவை ஆர்கானிக் பொருட்களில் இருந்தாலும் ஆபத்துதான். எனவே, கவனமாக தேர்ந்தெடுங்கள்.மித்: எடை குறைய வேண்டும் என்றால் கார்போஹைட்ரேட்டை தவிர்க்க வேண்டும்.உண்மை: நம் உடலின் ஆற்றலை தக்கவைக்கவும் நமது மனக்குவிப்பு, ஸ்டாமினா மேம்படவும் கார்போஹைட்ரேட் முக்கியம்.

எனவே, முழுமையாகத் தவிர்ப்பது என்று இல்லாமல் அளவாக எடுத்துக்கொள்வது என்ற விகிதத்திலாவது கார்ப்ஸ் நிச்சயம் தேவை.மித்: டார்க் சாக்லெட் சாப்பிட்டால் எடை குறையும்.உண்மை: டார்க் சாக்லெட் சாப்பிட்டால் நம் சுவை மொட்டுகள் குஷியாகும். ஆனால் எடை குறையுமா? டார்க் சாக்லெட்டில் உள்ள பாலிபீனால்ஸ் உடலின் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த சாக்லெட் எப்படி தயாரிக்கப்படுகிறது. என்னென்ன ப்ராசஸ் அதில் நிகழ்கிறது. என்னென்ன சத்துகள் உள்ளன என்பதும் மிகவும் முக்கியம். எனவே, எல்லா டார்க் சாக்லெட்களும் எடை குறைக்காது.

உப்புப் பெறும் விஷயம்

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நாக்குக்கு உணர்த்தியாய் பழமொழி கண்டுபிடித்து வைத்திருக்கும் கூட்டம் நாம். உலக அளவில் உப்பைக் கண்டுபிடித்து அதை உற்பத்தி செய்து உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து கல்லா கட்டிய பழங்கால சமூகங்களில் தமிழ் சமூகமும் ஒன்று என்றால் நம்ப முடிகிறதா? யெஸ்! அது உண்மைதான். கடலும் கடல் சார்ந்த பகுதியையும் நெய்தல் எனச் சொல்லும் நம் மரபு, அந்தப் பகுதிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உப்புக் காய்ச்சும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தோம். சங்க இலக்கியங்கள் உமணர் எனப்படும் உப்பு வியாபாரிகள், உப்புத் தொழில் செய்வோர் பற்றி பல நூறு குறிப்புகள் உள்ளன. உலக அளவில் தமிழர்கள், கிரேக்கர்கள், சீனர்கள் ஆகியோர்தான் பல ஆயிரம் ஆண்டுகளாய் உப்புத் தொழில் நுட்பம் அறிந்தவர்களாய் இருக்கிறோம்.

உலக வரலாற்றையே மாற்றிய பெருமை உப்புக்கு உண்டு. பல போர்கள் உப்பினாலேயே அதன் வணிகத்தினாலேயே நடைபெற்றிருக்கின்றன. பண்டமாற்று முறையில் காசுக்குப் பதிலாக உப்பைக் கொடுத்தும் வாங்கும் பழக்கமும் இங்கு இருந்துள்ளது. இப்போதுகூட நம் பண்பாட்டில் உப்பு என்பது லட்சுமி அதாவது செல்வம் என்றே போற்றப்படுகிறது. உப்பைக் கொடுத்து தங்கம், தந்தம், தோல், மிளகு, சர்க்கரை, கோலா கொட்டைகள், மணிகள் போன்றவை மட்டுமல்ல அடிமைகளைக்கூட வாங்கியிருக்கிறார்கள்.

இப்படி, அடிமையாக வாங்கியவர்களை உப்பளங்களில் பணிக்கு அமர்த்தி உப்பு உற்பத்தியை அதிகரித்திருக்கிறார்கள். மார்க்கோபோலோ எழுதிய வரலாற்றுக் குறிப்பில் பேரரசர் முகம் பதிக்கப்பட்ட உப்புக் கட்டிகள் அமோல் என்ற நாணயமாக பயன்படுத்தப்பட்டது என்கிறது. பிற்காலத்தில் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு உப்பை செலவாணியாகக் கொடுப்பது நின்று போனது. அப்படியும் ஒருசிலர் உப்பைக் கொடுத்து வாங்க முயன்றபோதுதான் ‘உப்புப் பெறாத விஷயம்’ என்ற சொலவடை தோன்றியது. எனினும் ஒரு சில இடங்களில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதி வரை இந்த உப்பு செலவாணி நடந்துகொண்டுதான் இருந்தது.

1812ல் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே உரிமைக்கான போர் நடந்தபோது பிரிட்டன் அமெரிக்காவுக்குச் செல்லும் உப்பு வரத்தை நிறுத்த உணவைப் பதப்படுத்த முடியாமல் அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதே போல் பிரெஞ்சுப் புரட்சியின் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக மக்கள் மேல் விதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான உப்பு வரியும் இருந்தது. வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் உப்புக்கு இருந்த முக்கியத்துவத்தை காந்தியார் உணர்ந்ததால்தான் தண்டி யாத்திரை மூலம் சுதந்திரப் போராட்டத்தை வலுவாக்கினார்.

பிரிட்டனின் உப்பு வணிகத்தைப் பாதிக்கும் வகையில் நாமே உப்பு தயாரிக்கப் போகிறோம் என்று அறிவித்தார். சம்பா நெல்லையும் உப்பையும் கூலியாகக் கொடுக்கும் வழக்கமே சம்பளம் என்ற சொல்லாக மாறியது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். லத்தீன் மொழியில் சலேரியம் என்ற சொல்லுக்கு உப்பு என்று பொருள். உப்பை சம்பளமாகக் கொடுப்பதால்தான் அதற்கு Salary என்ற பெயரே வந்தது.

ஃபுட் சயின்ஸ்

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் முதலாவ தான வைட்டமின் பி1 பற்றி இந்த இதழில் பார்ப்போம். இதனை தயாமைன், தயமின் என இருவகையாகவும் அழைப்பார்கள். நம் உடலில் சேரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தை ஆற்றலாக மாற்ற இந்த பி1 வைட்டமின் மிகவும் அவசியம். நம் உடலின் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் அடிப்படையானது இது. நரம்பு மண்டலம், தசைகள், இதயம் ஆகிய உறுப்புகளில் இதன் பணி முக்கியமானது.

பி1 வைட்டமினும் மற்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போலவே நீரில் கரையக்கூடியதுதான். இந்த வைட்டமினின் இருப்பு 1897லேயே கண்டுபிடிக்கப்பட்டாலும் 1926ம் ஆண்டில்தான் இதனைத் தனியாகப் பிரித்து எடுத்தார்கள். 1936 முதல் இது வைட்டமின் மாத்திரைகளாகவும் சந்தைக்கு வரத் தொடங்கியது. தயமின் பற்றாக்குறை ஒரு முக்கியமான பிரச்சனை. பிறந்த பச்சிளம் சிசுக்களுக்கு இது இருந்தால் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியக்கூடும். எடைகுறைவு, எரிச்சலான உணர்வு, குழப்பம் உள்ளிட்ட நரம்பியல் பிரச்சனைகள், பெரிபெரி, ஆப்டிக் நியூரோபதி எனும் கண் நோய் உட்பட பலவிதமான நோய்களுக்கு பி1 வைட்டமின் போதாமையும் ஒரு காரணம்.

தயமின் என்பது ஆர்கனோசல்பர் எனப்படும் உயிர் கந்தகக் கட்டுமானத்தால் ஆனது. அமினோபைரிமைடின், தைசோலியம் என்ற உயிர் வளையங்கள் மெத்திலின் பாலங்கள் மூலமாகக் கட்டப்பட்டுள்ள மூலக்கூறு அமைப்புதான் தயமின் என்று சொல்கிறார்கள். தயமின் என்பது அதிகபட்சமாக 1.4 மி.கி உடலில் இருக்கலாம் என்கிறது உலக சுகாதார ஆய்வு நிறுவனம். பருப்புகளின் மேற்புறம் உள்ள நுண்ணுயிர்களிலும் ஈஸ்ட், நட்ஸ், முழு தானியங்கள், மாட்டுக்கறி, பன்றிக்கறி ஆகியவற்றில் பி1 எனும் தயமின் நிறைந்திருக்கிறது.

உணவு விதி #23

முளைகட்டிய தானியங்களை உண்ணுங்கள். பொதுவாக தானியங்கள் மிகச் சிறந்த நியூட்ரிஷியண்ட்களாக இருப்பவை. அதிலும் முளைகட்டிய தானியங்கள் என்றால் புரதச்சத்து முதல் வைட்டமின்கள் வரை அனைத்துமே மிகச் சிறப்பாகக் கிடைப்பதோடு மாவுச்சத்தும் நார்ச்சத்துமேகூட இருக்கும். இதனால் உடலுக்குத் தேவையான எனர்ஜியும் கிடைக்கும். செரிமானமும் எளிதாகும். மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் டைமில் இதை உண்பது நல்லது.

-இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்