SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2019-04-04@ 15:52:40

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா

ட்யூகன் டயட் என்ற டயட்தான் இன்று ட்ரெண்டிங் டயட். யெஸ், இதை வடிவமைத்தவர் பெயர்தான் ட்யூகன். பியர் ட்யூகன் ஒரு புகழ் பெற்ற  மருத்துவர். தன்னிடம் ஒபிஸிட்டி காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களை சுமார் இருபது ஆண்டுகளாக ஆராய்ந்து ஒரு புதிய டயட் முறையை  உருவாக்கினார். கடந்த 2010ம் ஆண்டு ட்யூகன் ‘ஒல்லியாவது எப்படி என்று எனக்குத் தெரியாது’ என்று ஒரு நூலை எழுதினார். அவ்வளவுதான். என்ன  ஏதென்றே தெரியாமல் வாங்கிக் குவித்தார்கள் மக்கள்.

அந்த புத்தகம் பதினான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட, ஓவர் நைட்டில் ட்யூகன் டயட் உலகப் புகழ்பெற்ற டயட்கள் வரிசையில் இடம் பெற்றது.  ட்யூகன் தனது மருத்துவப் பணியை ஆரம்பித்தபோது ஒபிஸிட்டி பிரச்சனை இருந்த பலரும் லோ கலோரி உணவுகளை சிறிய அளவில் சாப்பிட  வேண்டும் என்பதே பரிந்துரைக்கப்படும் டயட்டாக இருந்தது. ட்யூகன் இதற்கு மாற்றாக ஒரு டயட் முறையை உருவாக்கினார். இந்த டயட்  உண்ணக்கூடிய உணவுகள் என நூறு உணவுப் பொருட்களைப் பட்டியலிடுகிறது.

அதுபோலவே, தாக்குதல், மிதத்தல், தொகுத்தல், நிலைத்திருத்தல் என நான்கு நிலைகளைப் பற்றி பேசுகிறது. இதில் தாக்குதல் நிலை என்பது  இரண்டு முதல் ஏழு நாட்களில் மூன்று கிலோ வரை அதிரடியாக எடையைக் குறைக்கும் உணவுத் திட்டத்தைக் கொண்டது. இதில் சுமார்  அறுபத்தெட்டு வகையான புரோட்டின் நிறைந்த உணவுகளை வயிறு முட்ட உண்ணப் பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு அடுத்த மிதத்தல் நிலை என்பது  குறைக்க வேண்டிய எடையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்வது. இதில், புரோட்டின் நிறைந்த உணவுகளோடு இருபத்தெட்டு வகையான  காய்கறிகளும் உண்ண வேண்டும்.

அவகேடோ போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த காய்கறியையும் உருளைக் கிழங்கு போன்ற மாவுச் சத்து நிறைந்த காய்கறியையும் தவிர்க்க வேண்டும்.  பொதுவாக, வாரம் ஒரு கிலோ என்று எடையைக் குறைத்துக்கொண்டு வந்து நாம் விரும்பும் அளவு வரை எடையைக் குறைக்கலாம். எனவே, இந்த  நிலையின் காலகட்டம் என்பது ஒருவரின் எடை குறைப்பு இலக்குக்கு ஏற்ப மாறுபடும். தொகுத்தல் நிலை என்பது எதிர்காலத்தில் எடை அதிகரிப்பு  நிகழாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பழங்கள், ரொட்டி, வெண்ணெய், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் ஆகியவை வழக்கமான  டயட் போலவே இதில் அறிமுகமாகும்.

இறுதியான நிலைத்திருத்தல் நிலையில் அவரவர் விருப்பப்படி எந்த உணவை வேண்டுமானாலும் உண்டு அதே எடையைப் பராமரிக்க வேண்டும்.  இதற்கு சில விதிகள் உள்ளன. புரோட்டின் உணவை வாரம் ஒரு நாள் எடுக்க வேண்டும். ஓட்ஸை தினமும் உண்ணலாம். இந்த இறுதி நிலை  வாழ்நாள் முழுமைக்குமான டயட் காலம் உடையது. பேலியோ டயட் என்பது தன்னுடைய டயட்டின் காப்பி என்று சொல்லும் ட்யூகன் டயட்டில்  சிலருக்கு சிறுநீரகப் பிரச்சனைகள், இதயப் பிரச்சனைகள் வருவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி உங்களுக்கு இது  செட் ஆகுமா என்று தெரிந்த பிறகு பின்பற்றுவது நல்லது.

எக்ஸ்பர்ட் விசிட்

கோடை வரும் முன்பே வெக்கை வந்துவிட்டது. தாகம் தாகம் என்று உள்ளுறுப்புகள் எல்லாம் அலறத்தொடங்கிவிட்டன. கோடை காலத்தில் போதுமான நீர்ச்சத்தைப் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தியாவின் புகழ்பெற்ற டயட்டீஷியன் அர்ச்சனா பட் என்னென்ன உணவுப் பொருட்களில் எவ்வளவு நீர்ச்சத்து இருக்கிறது என்று இங்கே நமக்காகச் சொல்கிறார்கள். நோட் திஸ் பாயிண்ட் தோழிஸ்!

* தர்பூசணியில் 91.5 சதவீத நீர்ச்சத்து உள்ளது. கோடைக்கு ஏற்ற பழம் என்றால் தர்பூசணிதான். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தையும் சிறப்பாக்குகிறது.
* வெள்ளரிக்காய் தர்பூசணியைவிட பெஸ்ட். இதில், 96.7 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் நமது வளர்சிதை மாற்றத்தைச் சிறப்பாகச்   செயல்படச் செய்கின்றன.
* எலுமிச்சையில் 96.5 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள சிட்ரிக் அமிலம் உள்ளுறுப்புகளில் உள்ள புண்களை ஆற்றுவதோடு,  செரிமானத்தைத் தூண்டுகிறது.   நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
* தக்காளியில் 94.5 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் ரத்தத்தைப் பெருக்குகின்றன.
* கேரட்டில் 90.4 சதவீத நீர்ச்சத்து உள்ளது. கேரட்டில் உள்ள கரோட்டினாய்டுகள் கண்களுக்கு மிகவும் நல்லவை.
* காலிஃபிளவரில் 92.1 சதவீத நீர்ச்சத்து உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சத்துகள் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றவை.
* புரோகோலியில் 90.7 சதவீத நீர்ச்சத்து உள்ளது. புரோகோலியில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. இதுவும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும்  நல்லது.
* ஸ்ட்ராபெர்ரியில் 90.7 சதவீத நீர்ச்சத்து உள்ளது. ரத்தத்தை அடர்த்தியாக்கும் இரும்புச்சத்து நிறைந்தது.
* கீரைகளில் 91.4 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும், இதில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வைட்டமினகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துகள்  உடலுக்கு மிகவும்   அவசியமானவை.

கோடை காலத்தில் இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நீர்ச்சத்து எப்போதும் நிறைந்திருக்கும். உற்சாகமும் புத்துணர்வும் ததும்பும்.

கமகமக்கும் தேநீர் வரலாறு

டீ என்றதுமே மூளை சுறுசுறுப்பாகிவிடுகிறது அல்லவா? இந்த சுறுசுறு பானத்தின் மூலம் எது என்று தேடிப்போனால் அது சீனாவாக இருக்கிறது. சீனத்தில் தேநீரை சாசுய் என்கிறார்கள். அதிலிருந்தே சாய், சாயா போன்ற சொற்கள் உருவாகியிருக்க வேண்டும். நமது தனித் தமிழ் இயக்கம் ஏனோ இப்பெயர்களில் உடன்பாடு இல்லாமல் தேநீர் என்ற புதிய நாமகரணத்தை வழங்கிவிட்டது. ஆனாலும் டீ என்ற சொல்லையே தமிழகத்தில் அதிகம்  பயன்படுத்துகிறோம்.

சரி தேநீர் கதைக்கு வருவோம். நமது பல்லவ அரசனான போதி தர்மர் சீனாவுக்குப் போய் மிகப் பெரிய புத்தத் துறவியாகி சென் புத்தமதத்தை உருவாக்கிய கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருமுறை போதி தர்மர் கண் திறந்த நிலையில் தியானம் இருக்க முயன்றாராம். அப்படி வெகு நேரம் தியானம் செய்தபோது இரவில் தம்மையும் அறியாமல் தூக்கத்தில் இமைகள் மூட, தியானத்துக்கு இடைஞ்சல் என்று இமைகளையே பிய்த்து  எரிந்தாராம். அவர் பிய்த்து வீசிய இடத்தில் இரண்டு தேயிலை செடிகள் முளைத்ததாம்.

அதனால்தான் தேநீரைக் குடித்தால் நமக்கு உறக்கம் வருவதில்லையாம். இந்த தொன்மக் கதை இன்றும் சீனாவில் பிரபலம். போதி தர்மரின் காலம்  கி.பி ஐந்தாம் நூற்றாண்டு என்கிறது வரலாறு. ஆனால், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் தேநீர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. எனவே, இந்த போதி தர்மர் கதை ஒரு சுவாரஸ்யமான கதை என்பதற்கு மேல் எதுவும் இல்லை என்றாகிறது. சீனப் பண்பாட்டில் தேநீருக்கு மிக கெளரவமான இடம் உள்ளது.

அவர்களின் ஒவ்வொரு பண்டிகைகளிலும் தேநீர் தயாரிக்கும் மற்றும் பருகும் சடங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதைப்போலவே, ஜப்பானியர்களும் தேநீரை மிக முக்கியமான பானமாகக் கருதுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு தேநீர் சென்ற நூற்றாண்டில்தான் வந்தது. இந்தியாவின் மலைவாசஸ்தலங்கள் முழுதும் தேயிலையைப் பயிரிட்ட வெள்ளையர்கள் அவற்றுக்கு நுகர்வோர் இங்கு இல்லை என்று வம்படியாக நமக்குக் கொடுத்தார்கள்.

அதாவது, அக்காலங்களில் கூலி முக்குகளில் தினமும் காலை வேளையில் இலவசமாகத் தேநீர் தருவார்களாம். இலவசத் தேநீரை ஓரிரு வருடங்கள் குடித்துப் பழகிய நம் மக்கள் ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகிவிட அதன் பிறகு இலவசமாகத் தருவதை நிறுத்திவிட்டார்களாம். இவ்வாறாக, தேநீர் குடிக்கும் பழக்கம் வலிந்து நம் மீது திணிக்கப்பட்டது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். என்ன இருந்தாலும் தேநீரின் ருசிக்காக வெள்ளையர்களை நாம் மன்னித்துவிடலாம்.

உணவு விதி #24

சாப்பிட்டவுடன் உறங்காதீர்கள். உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரமாவது விழித்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் சாப்பிட்ட உணவு கொஞ்சம் செரிமானமாகி உடல் உறக்கத்துக்குத் தயாராகியிருக்கும். சாப்பிட்டவுடன் உறங்கும்போது செரிமானம் பாதிக்கப்படுகிறது. இதனால், அஜீரணம், வாயுக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஃபுட் சயின்ஸ்

ரிபோஃப்ளேவின் (Riboflavin) இதைத்தான் வைட்டமின் பி2 என்று சொல்கிறார்கள். பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின், குடும்பத்தில் இரண்டாவது முக்கிய வைட்டமினான இதுதான் நமது உடலின் அடிப்படையான வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியம். நமது மேற்தோல் முதல் எலும்பின் உட்புறம் வரை நீக்கமற நிறைந்திருக்க வேண்டிய முக்கியமான வி.ஐ.பி இவர்.

ஃப்ளேவின் மோனோ க்ளியோடைட் மற்றும் ஃப்ளேவின் அடினைன் டைனியூஸ்லியோடைடு எனும் இதன் இரு கூறுகள்தான் ஃப்ளோவோ புரோட்டின் எனும் அடிப்படையான என்சைம் செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதவை. 1920ல் கண்டறியப்பட்ட இந்த வைட்டமினை பதிமூன்று ஆண்டுகள் கழித்து 1933ல் பிரித்தெடுத்தார்கள். அடுத்த இரு ஆண்டுகளில் இது வைட்டமின் மாத்திரைகள் வடிவில் உலா வரத்தொடங்கிவிட்டன. இம்மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையோடே எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி1, பி3, பி6 போன்றவை உடலில் சிறப்பாகச் செயல்பட  பெஸ்ட் பார்ட்னராகவும் வைட்டமின் பி2 இயங்குகிறது.

உடலில் உள்ள செல்கள் குறித்த காலத்தில் இறந்து, புதிய செல்கள் உற்பத்தியாக இது மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியமான இந்த வைட்டமினில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை ரிபோஃப்ளேவின் குறைபாடு என்கிறோம். வாய்ப்புண், நாக்குப் புண், சிவந்த நாக்கு, குடல் புண்கள், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் எல்லாம் பி2 குறைபாட்டின் கோளாறாகவும் இருக்கக் கூடும். முட்டை, பச்சைக் காய்கறிகள், பால்  பொருட்கள், மாமிசம், காளான், புரோகோலி, காலிஃபிளவர் உட்பட பல்வேறு பொருட்களில் இந்த வைட்டமின் நிறைந்துள்ளது.

ஃபுட் மித்ஸ்

நம்பிக்கை : குறைவாக சாப்பிட்டால் எடை அதிகரிக்காது. சாப்பிடாமல் இருந்தால் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். உண்மை: இந்த இரண்டுமே தவறான நம்பிக்கைகள்தான். குறைவாகச் சாப்பிடுகிறோம். அதிகமாகச் சாப்பிடுகிறோம் என்பதைவிட என்ன சாப்பிடுகிறோம் என்பதுவே உடல் எடையைத்  தீர்மானிக்கிறது. அரையும் குறையுமாகச் சாப்பிடுவதால் நேரமற்ற நேரத்தில் பசி எடுக்கும்.

இதனால், அந்த சமயத்தில் கன்னாபின்னாவென்று கண்டதையும் தின்று கலோரி எகிறி எடை கூடவே வாய்ப்பு அதிகம். அதுபோல, சாப்பிடாமல் இருப்பது மிகவும் தவறு. இதனால், உடலின் வேதிச் சமன்பாடு குறைகிறது. வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து இது நிகழும்போது ஹார்மோன் கோளாறுகளுக்கு இட்டுச் சென்று நினைத்ததுக்கு மாறாக அளவுக்கு அதிகமாக எடை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. எனவே, குறித்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை அளவாக உண்பதே சிறந்தது.

- இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்