SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2019-03-27@ 16:01:22

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா

விரதம் இருப்பதும் ஒரு வகை டயட் முறைதான் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். நம் ஊரில் பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் சிலர் சஷ்டி விரதம், வெள்ளிக் கிழமை விரதம், அமாவாசை விரதம், ஆடி மாத விரதம், தைப்பூச விரதம், பங்குனி உத்திர விரதம், மாரியம்மன் விரதம் என விதவிதமான விரதங்கள் இருப்பார்கள். ஆண்களும் ஐயப்பன் விரதமும் வள்ளலார் நோன்பும் மேற்கொள்வார்கள். இன்னும் சிலர் ஒரு விரதத்திலிருந்து இன்னொரு விரதத்துக்கு நகர்ந்துகொண்டே இருப்பார்கள். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் விரதம் இருப்பார்கள்.

இந்த விரதங்கள் ஆன்மிகத்தின் பெயரால் மருத்துவத்தைப் போதிக்கும் அற்புதங்கள் என்று வியப்பார்கள் சிலர். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், இப்படி தொடர்ந்து விரதம் இருந்துகொண்டே இருப்பது நல்லதா என்று கேட்டால், நிச்சயம் ஆரோக்கியம் கிடையாது என்பதே மருத்துவர்களின் பதிலாக இருக்கிறது. மதங்களை கடந்து இன்று இன்டர் மிடன்ட் விரதங்கள் டயட் உலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றன. மருத்துவர்களேகூட இந்த விரதங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். குறிப்பாக, இன்டர்மிடன்ட் விரதங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்று இருக்கின்றன.

அதிலும் 5:2 என்ற விகிதத்தில் இன்டர்மிடன்ட் விரதம் மேற்கொள்வதுதான் இப்போதைய ட்ரெண்ட். அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் ஆரோக்கியமான கலோரிகளை உடலில் சேர்க்கும்படியாக நன்கு உண்பது. அடுத்த இரண்டு நாட்கள் அதில் வெறும் இருபத்தைந்து சதவீத கலோரிகளை மட்டுமே எடுத்துக்கொள்வதுதான் இந்த 5:2 இன்டர்மிடன்ட் டயட் முறை. விரத நாட்களில் பெண்கள் 500 கலோரிகளும் ஆண்கள் 600 கலோரிகளுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விரதங்கள் நீண்ட கால அளவில் எடைக்குறைப்புக்குப் பெரிதாக உதவாது.

ஆனால், இதய சார்ந்த நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கவும் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தவும் உதவும் என்கிறார்கள். வாரம் ஒரு நாள் நீர் மட்டுமே அருந்தும் விரதம் சர்க்கரை நோயை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும் என்கிறார்கள். இரண்டு முதல் நான்கு நாட்கள் விரதம் இருப்பதுகூட ஒருவகையில் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள பழைய நோய் எதிர்ப்பு செல்களை நீக்கவும் பழுதுபார்க்கவும் இந்த விரதம் உதவும் என்கிறார்கள்.

ஆனால், இப்படியான விரதங்கள் மூலம் எப்படி இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்றும் பார்க்க வேண்டும். விரதம் இருக்கும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தும் உயிர்ச்சத்துகளும் உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்காமல் போவதால் உடல் அதை தனது தசைகளிலும் கல்லீரலிலும் இருந்து பெற்றுக்கொள்ளும். அதாவது உணவு உண்ட எட்டு மணி நேரங்களுக்குப் பிறகும் அடுத்த வேளை உணவை வயிற்றில் போடாவிட்டால் தனது உடலில் ஏற்கெனவே சேகரமாயிருக்கும் சத்துக்களை உடைத்து தனக்கான குளுக்கோஸை எடுத்துக்கொள்ளும்.

இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும், கொழுப்புகளில் இருந்த கசடுகள் நீங்கி உடல் டீடாக்ஸ் அடையும். இதன் மூலம்தான் ரத்த அழுத்தமும், இன்சுலினும் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், அடிக்கடி விரதம் இருப்பதும் எப்போதும் விரதம் இருந்து கொண்டிருப்பதும் மிகவும் ரிஸ்க்கான விஷயம். இதனால் செரிமான சுரப்புகள் பாதிக்கப்படும். வயிற்றுப்புண், அல்சர், பித்தப்பை கற்கள், செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பின்னாட்களில் இவை குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்களுக்கே அழைத்துச் சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, விரதமாய் இருந்தாலும் அளவாய் இருப்பதே ஆன்மிகத்துக்கும் நல்லது. லெளகீகத்துக்கும் நல்லது.

எக்ஸ்பர்ட் விசிட்

நீர்தான் மனித வாழ்வின் கண்கண்ட அமிர்தம். நல்ல தாகத்தின்போது நீரின் சுவை அமுதத்தை மிஞ்சுவது. தற்போது பலருக்கும் சரியான அளவில் நீர் பருகும் பழக்கமே இருப்பது இல்லை. இந்தப் பழக்கம் மிக ஆபத்தானது என்கிறார் இந்தியாவின் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் மஞ்சரி சந்திரா. உடலுக்குத் தேவையான அளவு நீரைப் பருகாமல் இருப்பதைப் போலவே அளவுக்கு அதிகமாகப் பருகுவதும் ரிஸ்க்தான் எனும் டாக்டர் சந்திராவின் டிப்ஸ் இதோ…

நம் உடல் ஆரோக்கியமாக இயங்க நீர் மிகவும் அவசியம். ஏனெனில் நம் உடல் கட்டுமானத்தின் பெரும்பகுதி நீர்ச் சத்தால் ஆனது. ஸ்ட்ரெஸ் அதிகமாக இருப்பவர்களுக்குகூட நீரைத்தான் அதிகம் பருகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பது நல்லதுதான். ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்காதீர்கள். எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பதில் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்வார்கள். இதற்குக் காரணம் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள் என்பதுதான்.

பொதுவாக, தினசரி ஒன்பது முதல் பனிரெண்டு டம்ளர் நீர் பருகுவது நல்லது. அதாவது இரண்டரை முதல் மூன்று லிட்டர் நீர் பருக வேண்டும். நீர் பருகுவதற்கு முக்கியமான விதி தாகம் எடுத்தால் நீர் பருக வேண்டும் என்பதுதானே தவிரவும் வயிற்றை நிரப்ப நீர் பருக வேண்டும் என்பது அல்ல. எனவே, தாகமின்றி நீரைப் பருகாதீர்கள். தீவிரமான நோய்கள் இருந்து மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே அதிகமான நீரைப் பருக வேண்டும். நம் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறதா? சரியாக இருக்கிறதா? குறைவாக இருக்கிறதா என்பதை வெளியேறும் சிறுநீரின் நிறத்தைக்கொண்டே கணக்கிடலாம்.

பொதுவாக, சிறுநீரின் நிறம் என்பது சற்று வெளிறிய மஞ்சள் வண்ணம்தான். வெள்ளை வெளேர் என சிறுநீர் வெளியேறினால் உங்கள் உடலில் நீர்ச்சத்து கொஞ்சம் அதிகரித்துவிட்டது என்று பொருள். அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்று பொருள். எனவே, உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற அளவுக்கான நீரைப் பருக வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். புத்தகங்களில் சொல்லப்பட்டதை மட்டுமே நம்பாதீர்கள். நீர்ச்சத்துக் குறைவதைப் போலவே அதிகமாக இருப்பதும் நம் காலத்தின் பிரச்சனைகளில் ஒன்று.

குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு இந்தப் பிரச்சனை கணிசமாக இருக்கிறது. அதே போல் வொர்க் அவுட் செய்பவர்களும் அளவுக்கு அதிகமாக நீரைப் பருகி விடுகிறார்கள். இப்படி அளவுக்கு அதிகமாக நீரைப் பருகினால் ரத்தத்தில் சேர வேண்டிய சத்துக்களை அது அடித்துக்கொண்டு போய்விடும். மேலும் இதனால் சிறுநீரகமும் பாதிக்கும். நம் உடல் செல்லில் சோடியம் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கும். அளவுக்கு அதிகமான நீர்வரத்து இந்த சோடியத்தைக் கரைத்துவிட்டால் ஹைப்போநட்ரீமியா போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, உங்கள் உடலின் தேவையை அறிந்து அளவாக நீர் பருகுங்கள்.

ஃபுட் சயின்ஸ்

பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்பீர்கள். வைட்டமின் பியில் மட்டுமே சுமார் ஒன்பது வகையான பிரிவுகள் இருப்பதால் இதன் தொகுதியை பி-காம்ப்ளெக்ஸ் என்று சொல்கிறார்கள். இவை அனைத்துமே நீரில் கரையும் பண்புள்ளவை. நமது செல்லின் கட்டுமானத்தில் மிகவும் அடிப்படையான பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நம் உடலுக்குத் தேவையான பல விஷயங்களை செய்கின்றன. பி1 எனப்படும் – தயமின், பி2 எனப்படும் ரிபோஃப்ளேவின், பி3 எனப்படும் நியாசின், நிகோட்டினாமய்டு, மோனோநியூக்ளீயோடைடு, ட்ரிப்டோபான், பி5 எனப்படும் பேந்தோதனிக் அமிலம்,

பி6 எனப்படும் பைரிடாக்ஸின், பைரிடாக்சல், பைரிடாக்சாமைன், பி7 எனப்படும் பயோட்டின், பி9 எனப்படும் ஃபோலேட்ஸ், பி12 எனப்படும் கோபாலமின்கள் என பலவகைப்படும் இந்த பி-காம்ப்ளெக்ஸ் குடும்பத்தைப் பற்றி அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொன்றாக சற்று விரிவாகப் பார்ப்போம். பொதுவாக, பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின் மாத்திரைகளில் இவை அனைத்தும் இருக்கும். இதைத் தவிர தனித் தனியான சத்துக்கள் உள்ள மாத்திரைகளும் இருக்கின்றன. மருத்துவரின் பரிந்துரையோடு இவற்றை உண்பதுவே எப்போதும் நல்லது.

நெய்யில் கலக்கும் வனஸ்பதி

நெய்யின் நற்பலன்களில் முக்கியமானது அதில் நிறைந்திருக்கும் நல்ல கொழுப்புதான். ஆனால், அந்த நன்மைக்கே ஆப்புவைக்கும் வகையில் நெய்யில் வனஸ்பதியைக் கலக்கிறார்கள். வனஸ்பதியில் கெட்ட கொழுப்பு நிறைந்திருக்கிறது. நெய்யோடு இது சேரும்போது சுவை மாறுபடுவதோடு, தரமும் கெட்டுப்போகிறது. எனவே, தரமான நம்பத் தகுந்தவர்களிடம் மட்டுமே நெய்யை வாங்குங்கள். முடிந்தால் வெண்ணெயை வாங்கி நெய்யாக உருக்கிக்கொள்வது நல்லது.

நீளமான நூடுல்ஸ் வரலாறு

நூடுல்ஸ் இன்று குழந்தைகளிடம் அதிரிபுதிரி ஹிட் உணவு. உணவைக் கண்டாலே ஓடும் குழந்தைகள்கூட நூடுல்ஸ் என்றால் குஷியாகிவிடுகிறார்கள். இரண்டே நிமிடத்தில் சமைத்துவிடலாம் என்பதால் அம்மாக்களுக்கும் ஈஸி. தோரியம் கலக்கிறார்கள். நிறைய ப்ரசர்வேட்டிவ்ஸ், அடிக்டிவ்ஸ் கலக்கிறார்கள் என்று என்ன புகார்கள் வந்தாலும் நூடுல்ஸ்களின் கிராக்கிக்கு பங்கமே இல்லை. சகலமும் வணிகமாகிவிட்ட உலகில் நூடுல்ஸும் அப்படியானதில் ஆச்சர்யமில்லை. ஆனால், நூடுல்ஸின் வரலாறு இத்தனை பஞ்சாயத்துகள் கொண்டது இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக பல கோடி மனிதர்கள் தங்களின் அடிப்படை உணவாக நூடுல்ஸை உண்டு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.

நூடுல்ஸின் பூர்விகம் சீனாதான். கி.பி. 25ம் ஆண்டில் கிழக்கு ஹான் சாம்ராஜ்யத்தில் நூடுல்ஸ் தயாரிக்கப்பட்ட வரலாற்று குறிப்பு ஒன்று உள்ளது. இதுதான் முதல் வரலாற்றுப் பதிவு என்றாலும் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நூடுல்ஸ் சீனர்களால் உண்ணப்பட்டிருக்கிறது என்கிறார்கள். சீனாவின் லஜியா பகுதிகளில் கிடைத்த தொல்லியல் அகழாய்வுகளில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூடுல்ஸ் பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளதாம். சீனர்கள் கோதுமை, மைதா, அரிசி உட்பட பல்வேறு உணவுப் பொருட்களைக்கொண்டும் நூடுல்ஸைத் தயாரித்திருக்கிறார்கள்.

பெளத்த மதம் சீனாவிலிருந்து ஜப்பானுக்குப் பரவியபோது சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நூடுல்ஸும் நுழைந்தது. அங்கிருந்து கொரியாவுக்கும் ஆசியாவின் இதரப் பகுதிகளுக்கும் பரவியது என்கிறார்கள். ஐரோப்பாவில் கி.பி. முதல் நூற்றாண்டின்போதே நூடுல்ஸுக்கும் பாஸ்தாவுக்கும் நெருக்கமான ஓர் உணவு தயாரிக்கப்பட்டது என்றாலும் அது நூடுல்ஸாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகள் முதல் ரோம் வரை நூடுல்ஸ் போன்ற உணவுகள் உண்ணப்பட்டிருந்தாலும் அவை நூடுல்ஸ் அல்ல. சீனர்களோடான வணிகத் தொடர்பின் காரணமாய் இம்மாதிரியான உணவு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். போன நூற்றாண்டில்தான் நூடுல்ஸ் ஒரு சர்வதேச உணவாக வடிவெடுத்தது.

உணவு விதி #22

சாப்பிட்டதும் இனிப்பை உண்ணாதீர்கள். நிறைய பேர் உணவு உண்டவுடன் ஏதேனும் ஒரு இனிப்பை உண்பதைப் பழக்கமாக வைத்திருப்பார்கள். சர்க்கரையில் உள்ள வேதிப்பொருட்கள் செரிமானத்தை கொஞ்சமே கொஞ்சம் எளிதாக்கும்தான். ஆனால், இதில் அதைவிட கெடுதலே அதிகம். உடலில் ஏற்கெனவே உணவின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் நிறைந்திருக்கும்போது இனிப்பின் குளுக்கோஸும் அதனோடு சேர்வது நல்லது அல்ல. தொடர்ந்து இதைச் செய்யும்போது உடலின் இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்படக்கூடும். எனவே, உணவு உண்ட பிறகு இனிப்புகளை இயன்றவரை
தவிர்த்திடுங்கள்.

- இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்