SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நான் பாசமானவள்!

2019-02-20@ 15:27:17

நன்றி குங்குமம் தோழி

நடிகை மனாரா சோப்ரா


‘‘என்னோட இன்ஸ்பிரேஷன் அக்காதான். எனக்கு மட்டும் இல்லை எங்க மொத்த குடும்பத்திற்கும் அக்கா ஒரு பாலமாக இருந்தார், இனியும் இருப்பார்’’ என்று பேச ஆரம்பித்தார் பாசமலரான மனாரா சோப்ரா. இவருக்கு அறிமுகம் தேவையில்லை. பாலிவுட்டின் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் இவரும் ஒருவர். எல்லாவற்றையும் விட பிரியங்கா சோப்ராவின் பாசமிகு தங்கை. ‘‘என்னுடைய பேட்டி வரும் போது அக்காவின் திருமணம் முடிந்து இருக்கும்’’ என்ற மனாரா தன்னை பற்றியும் தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் தில்லி பொண்ணு. படிச்சது வளர்ந்தது எல்லாம் அங்கு தான். எனக்கு படிப்பு மேல் ஆர்வம் இருந்தாலும், அதை விட பாட்டு, நடனம், நாடகம் மேல் எனக்கு தனி ஈடுபாடு உண்டு. பள்ளியில் படிக்கும் போது ஆண்டு விழாவின் போது பாட்டு, நடனம் ஏன் மேடை நாடகத்தில் கூட நான் நடிச்சு இருக்கேன். அது தான் எனக்கு சினிமா மேல் ஈடுபாடு ஏற்பட காரணம். அக்கா பிரியங்காவும் ஒரு காரணம். பிரியங்கா என்னுடன் பிறந்த சகோதரி இல்லை. எனக்கு அவர் மாமா பொண்ணு. என்னுடைய அம்மாவும் பிரியாவின் அப்பாவும் உடன் பிறந்தவர்கள்.

என்னதான் பிரியா மாமாவின் மகளாக இருந்தாலும், என்னுடைய ரோல் மாடல் அவங்க தான்.  பிரியா 2000ம் ஆண்டு உலக அழகியா தேர்வானாங்க. அதன் பிறகு சினிமா அவரை வரவேற்றது. இப்போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் இவரும் ஒருவர். சின்ன வயசில் இருந்தே எனக்கு நடனம் மேல் தனி ஈடுபாடுண்டு. அதனால் பள்ளி படிக்கும் காலத்தில் நடன பயிற்சி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். பள்ளி விட்டதும் நேரடியா நடன பயிற்சிக்கு போயிடுவேன். எனக்கு நடனம் ஆடுவது ரொம்பவே பிடிக்கும்.

ஒரு நாள் என் நடனத்தை பார்த்த என் பயிற்சியாளர் தான் நான் மேலும் நடனத்தில் நன்கு தேர்ச்சி பெறுவதற்கு மும்பை தான் சிறந்த இடம் என்பதால் என்னை அங்கு போகச் சொன்னார். அப்படித்தான் மும்பை எனக்கு பரிட்சயமாச்சு’’ என்றவர் விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ‘‘நடன பயிற்சி எடுத்துக் கொள்ள மும்பைக்கு போன பிறகு என்னுடைய நடன பயிற்சியாளர் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. விளம்பரங்களில் நடிச்சேன். சல்மான் கான், பிரியங்காவுடன் இணைந்து விளம்பரங்களில் நடிச்சு இருக்கேன். விளம்பரங்களில் நடிப்பதை பார்த்து எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது.

நான் நடிச்ச டாபர் ஆம்லா எண்ணை விளம்பரத்தின் மூலம் தெலுங்கு படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. 2013ல் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வர ஆரம்பிச்சது. தெலுங்கில் நான் நடிச்ச முதல் படம் ‘பிரேமா கீமா ஜன்தா நய்’. அதே வருடம் அனுபவ் சின்ஹாவுடன் இணைந்து ‘சித்’ என்ற ஹிந்தி படத்தில் நடிச்சேன். 2016ல் ஜக்கான்னா, திக்கா மற்றும் 2017ல் இயக்குனர் பூரி ஜெகன்னாத் அவர்களின் ரோக் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.

அந்த படத்திற்கு எனக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைச்சது. இப்போது தேஜா சாரின் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் நடிக்கிறேன்’’ என்றவர் மாடலிங்தான் என் நடிப்பு திறமையை மேம்படுத்தியதாக கூறினார். ‘‘மாடலிங்ன்னா எல்லாரும் நினைப்பது மேடையில் பல விதமான உடைகளை அணிந்து நடந்து வருவதுன்னு இல்ல. விளம்பரங்களில் நடிப்பதும் ஒரு வகையான மாடலிங் தான். நான் ரேம்ப் வாக் செய்தது கிடையாது. விளம்பரங்கள் மூலமாக தான் என்னை நான் பிரதிபலித்தேன். அது தான் என்னுடைய நடிப்பு திறமையை மேம்படுத்தியது. சினிமா இரண்டரை மணி நேர படம்.

விளம்பரம் 30 வினாடி தான். அதற்குள் உங்களின் உணர்வுகள் மூலமாக புரிய வைக்க வேண்டும். சினிமா வாய்ப்பும் எனக்கு விளம்பரம் மூலமாக தான் வந்தது. ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. அவங்களுக்கு சும்மா மரத்தை சுத்தி வரக்கூடிய கதாநாயகி தேவையில்லை. நடிப்பினை வெளிப்படுத்தும் நாயகியை தான் எதிர்பார்த்தாங்க. ஐந்து ரவுண்ட் ஆடிஷனுக்கு பிறகு தான் என்னை தேர்வு செய்தாங்க. ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே சொல்லிட்டாங்க. டயலாக் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்யணும். யாரும் பின்னாடி இருந்து சொல்லித் தரமாட்டாங்கன்னு.

அது இருந்தது 100 பக்கம். ஆங்கிலம், ஹிந்தி மட்டும் தான் எனக்கு தெரிந்த பாஷை. வேற எந்த மொழியும் தெரியாது. தெலுங்கில் டயலாக் புரிந்து அதன் பிறகு முகத்தில் எக்ஸ்பிரஷன் கொடுப்பது ரொம்பவே சேலஞ்சிங்கா இருந்தது. ஆரம்பத்தில் கஷ்டமா தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா தெலுங்கு கத்துக்கிட்டேன்’’ என்றவரிடம் அவரை பற்றி கேட்டபோது கண்கள் சிமிட்டி பேச ஆரம்பித்தார். ‘‘மனாரா என்பது கிரேக்க மொழியில் மின்னும் பொருள் என்று அர்த்தம். நான் பாசமான பொண்ணு. அதே சமயம் சேட்டையும் அதிகம் செய்வேன். 14 வயசு பொண்ணு போல தான் என்னுடைய நடவடிக்கை இருக்கும்.

நண்பர்களுடன் வெளியே போக பிடிக்கும். குறிப்பா என்னுடைய நடன பயிற்சி பள்ளிக்கு செல்வதுன்னா நான் என்னையே மறந்திடுவேன். பல ஊர்களில் பலவிதமான மக்களை சந்திக்க பிடிக்கும். நான் நிறைய பேசுவேன். என்னதான் நடிகையா இருந்தாலும் ஆடம்பரம் எனக்கு துளியும் பிடிக்காத விஷயம். மனாரா ரொம்ப சிம்பிளான பொண்ணு. பிரியங்கா பத்தி சொல்லணும்ன்னா எங்க மொத்த குடும்பத்தின் லீடர்ன்னு சொல்லலாம். எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்து இருக்காங்க. சினிமாவில் எப்படி நடக்கணும், அந்த துறையில் எப்படி இருக்கணும்ன்னு சொல்லிக் கொடுப்பாங்க.

ரொம்ப தைரியமானவள். நிறைய கத்துக்கணும் அவங்களிடம். என்னதான் என்னுடைய அக்காவாக இருந்தாலும், நான் தனித்தன்மையா இருக்கணும்ன்னு தான் சொல்லுவாங்க. அவர்களின் முகமூடியை பூசிக்கொள்ளக் கூடாதுன்னு அட்வைஸ் செய்வாங்க. அவங்களுடைய தங்கை என்பதை விட மனாரா, மனாராவாக தான் அங்கு பிரதிபலிக்கணும் என்பது அவர்களின் விருப்பம்’’ என்ற மனாரா சினிமாவை தாண்டி ஒரு வெப் சீரீஸ் பிரியை. ‘‘சினிமாவிற்கு அடுத்து சின்னத் திரையில் வெப் சீரீஸ் பார்க்க பிடிக்கும். என்னுடைய முக்கிய பொழுதுபோக்கு இது தான்.

எல்லா வெப் சீரீசும் இப்ப நல்லா இருக்கு. நான் ரொம்பவே அதற்கு அடிக்ட்ன்னு கூட சொல்லலாம். அடுத்து எனக்கு பெயின்டிங் செய்ய பிடிக்கும். சும்மா கண்ணில் பார்ப்பதை எல்லாம் வரைவதோ அல்லது மார்டர்ன் ஆர்ட் எல்லாம் என் சாய்ஸ் கிடையாது. இது ‘ஸ்டில் லைஃப் பெயின்டிங்’. அதாவது ஒரு பொருளை வேறுவிதமான கண்ணோட்டத்தில் பார்த்து வரைவது. அதன் பிறகு உடை அலங்காரம். எனக்கான உடையை நானே தான் டிசைன் செய்து கொள்வேன். சினிமா பொறுத்தவரை இப்போதைக்கு எதுவுமே இப்படித்தான்னு நான் எனக்குள் எந்த கட்டுப்பாடும் விதித்துக் கொள்ளவில்லை.

இப்ப தேஜா சாருடைய படத்தில் கமிட்டாகி இருக்கேன். இதற்கான ஷூட்டிங் முடிந்த பிறகு தான் அடுத்த அசெயின்மென்ட் பத்தி யோசிக்கணும். ஒரு நேரத்தில் ஒரு அடி எடுத்து வைக்க நினைக்கிறேன். அப்பதான் சினிமாவில் நாம் நிலைத்து இருக்க முடியும். இப்ப தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறேன். நானாக எந்த வாய்ப்பையும் தேடி போனதில்லை. வரும் வாய்ப்பை நழுவ விட்டதும் இல்லை. தமிழ் படங்களில் நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தா கண்டிப்பா செய்வேன்’’ என்றார் மனாரா மிகவும் திடமாக.

- ப்ரியா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-05-2019

  20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்