SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகள் மொழியில் குழந்தைகளுக்கான புத்தகம்…

2019-02-20@ 15:24:49

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளின் உலகம் குதூகலமானது. கனவுகளும் கற்பனைகளும் வண்ணங்களாலும் நிறைந்தது. அந்த உலகத்திற்குள் அவர்கள் மொழியில், அவர்கள் நடையில் பயணித்தால் எந்த விசயத்தையும் மிகச் சுலபமாக அவர்கள் மனதில் ஏற்றிவிட முடியும். 2018ம் ஆண்டு பட்டியலில் இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையங்கள் பற்றிய குழந்தைகளுக்கான புத்தக வரிசை ஒன்றை அகமதாபாத்தில் உள்ள மாப்பின் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியாவில் சிறப்புப் பெற்ற இடங்களான சாஞ்சி, மகாபலிபுரம், கேவலாதேவ் பறவைகள் சரணாலயம், குதுப்மினார், சத்ரபதி சிவாஜி ரயில்முனை

போன்றவற்றின் சிறப்பு, அதன் முக்கியத்துவம், அதன் வரலாறு இவற்றை குழந்தைகளை எளிதில் படிக்கவும், புரிந்துகொள்ளவும், வரலாற்றைப் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க விரும்பும் மிகச் சிறந்த படைப்பாளர்கள், சூழலியலாளர்களிடம் இருந்து தகவல்களையும் புகைப்படங்களையும் பெற்று, மிகச் சிறந்த ஓவியர்களின் கை வண்ணத்தில், பக்கங்களை வண்ணங்களால் நிறைத்து மழலைகளின் மொழியிலேயே நினைவிடங்களின் வரலாற்றை பதிவு செய்துள்ளனர். வாண்டுகளை பெரிதும் கவரும் விதமாக அழகிய வண்ணப் படங்களுடன், சிறப்பான பக்க வடிவமைப்பில்,

குழந்தைகளுடனே பயணிப்பது போன்ற உணர்வைத் தரும் உரைநடையில், ஆங்கில நடையில் உள்ள புத்தகங்களை, “ஆல்” குழந்தைகள் புத்தகம் வெளியீட்டு நிறுவனம் தமிழாக்கம் செய்து குழந்தைகளுக்கான எளிய உரைநடையில் வெளியிட்டுள்ளனர். தி.அ.ஸ்ரீனிவாஸன் என்பவர் குழந்தைகள் மொழி நடையில் இந்தப் புத்தகங்களை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். பறக்கும் புலிகள் கொம்புள்ள சிங்கங்கள்: 2500 ஆண்டுகால வரலாறும் அழகாக செதுக்கப்பட்ட சிற்பங்களும் கொண்ட சாஞ்சி ஸ்தூபி பற்றியும் அதில் இடம் பெற்றுள்ள தோரண வாயில், விமானம், குடை, பிரகாரம், பறக்கும் புலிகள், கொம்புள்ள சிங்க சிற்பங்கள், சித்திர

வேலைப்பாடுகள், வெள்ளைபுறா, அதில் இடம்பெற்றுள்ள பிராகிருத மொழி, புத்தர் சிலைகள், பௌத்த மடத்தின் சிதிலங்கள் என குழந்தைகளை குதூகலத்துடன் அந்த இடத்திற்கு செல்வது போன்ற உணர்வைக் கொண்டு வந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு வந்த கங்கை: 6 மற்றும் 7ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கடற்கரையோரம் உருவாக்கப்பட்டு, 18ம் நூற்றாண்டில் தோண்டியெடுக்கப்பட்ட மகாபலிபுரத்தில் இடம் பெற்றுள்ள, தூண்களிலும், சுவர்களிலும் செதுக் கப்பட்டுள்ள கற்சிற்பங்களில் உள்ள விலங்குகள், மனிதர்கள், கடவுளர்களின் காட்சி, ஒற்றைக் கல் யானை, குடைவரைக் கோயில்கள், வெண்ணை உருண்டைக் கல்,

மகாபாரதக் கதையோடு தொடர்புடைய சிற்பங்கள், பஞ்சபாண்டவர் குகை, கடற்கரை கோயில்கள், முதலைப் பண்ணை, புலிக் குகை, முட்டுக் காடு போன்றவற்றின் படங்களோடு கதை சொல்லப்பட்டுள்ளது. பறவைகளின் ராஜ்ஜியம்: 1976ல் உருவாக்கப்பட்ட பரத்பூரிலுள்ள கேவலாதேவ் தேசியப் பூங்கா. இந்தப் பறவைகள் சரணாலயம் ஆசியாவிலேயே சிறந்த இடமாக, இந்தியப் பறவைகள் மட்டுமின்றி, சைபீரியா போன்ற தூர தேசங்களில் இருந்து பறந்து வரும் பறவைகளையும் பார்க்குமிடமாக உள்ளது. இங்குள்ள நீர்ப்பரப்புகளில் பறவைகள் ஆயிரக்கணக்கில் நீந்திக் கொண்டிருக்கும்.

அவற்றில் கருப்பு வெள்ளை நாகணவாய், பொன்முதுகு மரங்கொத்தி, செந்நாரை, மீன்கொத்தி, சாம்பல் இருவாய்ச்சி, நாமக்கோழி, ஊசிவால் வாத்து, நீலத் தாழைக்கோழி, பொன்முதுகு மாங்குயில், கரிச்சான், பஞ்சுருட்டான், சின்னான்கள், வல்லூறு, மஞ்சள் திருடி வல்லூறு, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளான், சாம்பல்நாரை, இலைக்கோழி, கூழைக்கடாக்கள்,  குருட்டு கொக்கு, காட்டுச் சிலம்பன், பூங்குருவி போன்றவற்றின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

மேகத்தை தொடும் உச்சி : தெற்கு டில்லியில் இருக்கும் குதுப்மினார். 1192 முதல் 1503 வரை 500 வருடங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டப்பட்ட இச்சின்னம்,  73 மீட்டர் உயரமும், 5 நிலைகளையும் உள்ளடக்கியது. இதில் மாடங்கள், சுழல் படிக் கட்டுகள் உள்ளன. இதன் உச்சிக்கு ஏறிச் சென்று, மேலிருந்து தெளிவான ஒளியில் நிலப்பரப்பைப் பார்த்தால் பழைய கட்டடங்களும், நிலப்பரப்புகளும் கடந்தகாலத்தையும், அம்மக்களின் வாழ்வியலையும் அறிய முடியும் என்பதை உணர்த்த குதுப்மினாரின் தோற்றம், அதன் வடிவங்கள், அதில் உள்ள கலைநயம், அதன் பாரம்பரியம் குழந்தைகளுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

காலத்தினூடாக ஒரு பயணம்: மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி ரயில்முனை பற்றி விளக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தில், இந்திய-பிரித்தானிய கட்டடக்கலையின் சிறப்பம்சங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டத்தின் பரபரப்பு, ரயில் நிலையத்தோடு இணைந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு குழந்தைகளுக்கு படங்களோடு அவர்களின் நடையில் உணர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் படத்தைப் பார்த்து படித்து உணர வேண்டிய மிகச் சிறந்த புத்தகம். குழந்தைகள் இந்த இடங்களுக்கு செல்ல நேர்ந்தால் தாங்கள் படித்ததை அப்படியே நேரில் காணும் உன்னத அனுபவத்தை அடைவார்கள்.

- மகேஸ்வரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்