SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது பெண்களின் கிராமம்!

2019-02-19@ 17:42:41

நன்றி குங்குமம் தோழி

எல்லா விலங்குகளிலும் ஆணை விட பெண்தான் அதிக வேட்டுவ தன்மை கொண்டிருக்கும். காரணம், பெண்ணுக்கு தன் குட்டிகளை காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இதனாலேயே இயற்கை பெண் களுக்கு அதிக மோப்பத்திறன், பார்வைக் கூர்மை, சுவை உணர்வு, கூரான செவித்திறன் ஆகியவற்றை தகவமைத்திருக்கிறது. இந்த புலன் நுணுக்கத்தினாலேயே ஆணை விட பெண் அதிக திறம்பட வேட்டையாடவல்லதாகிறது.

மனிதர்களிலும் இந்த பொது விதி இயங்கியதால், ஆதி கால மானுட பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் எல்லோருமே நாடோடிகளாய் இரை தேடி அலைந்தார்கள். இப்படி அலைந்த மானுட கூட்டங்களை பெண் தலைவிகளே வழி நடத்தி சென்றார்கள். கால மாற்றத்தின் விளைவு,  பெண் களிடமிருந்து தலைமையை கைப்பற்றினர் ஆண்கள். தற்போது, அடிமைப் போல நடத்தும் ஆண்களுக்கிடையே வாழும் பெண்கள் தமது வாழ்வில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், அவர்களைப் போலின்றி தமது வாழ்க்கையை சுதந்திரமானதாக அமைத்துக் கொண்டனர் ‘உமோஜா’ கிராம பெண்கள். கென்யா மலையின் அடிவாரம் முடிந்து பாலைவனம் தொடங்கும் இடத்தில் ‘சம்புரு’ என்ற பழங்குடி ஆணாதிக்க சமூகம், பெண்களை அடிமைப்படுத்தி ஆண்டுவந்தார்கள். இவர்களை எதிர்த்து, முழுக்க முழுக்க சம்புரு பெண்களால் கட்டமைக்கப்பட்டது தான் ‘உமோஜா’ என்ற பழங்குடி கிராமம். இங்கு, ஆண்கள் நுழைய நினைத்தால் யுத்தமே நடக்கும். குழந்தைத் திருமணம், பாலியல் சித்ரவதைகள், பெண் பிறப்புறுப்பு சிதைத்தல் என ஒவ்வொன்றும் அங்கு அன்றாடமாக நிகழும் கலாச்சாரங்கள்.  

இப்படி பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில், குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் துன்புறுத்தப்பட்டு, அதை பொறுக்க முடியாமல் தப்பி பிழைத்து குழந்தை குட்டிகளுடன் இந்த கிராமத்தில் தஞ்சம் அடைந்தவர்கள். வெளியில் இருக்கும் ஆண்கள் துன்புறுத்தினால் கூட பொறுத்துக்கொள்ளலாம்.  ஆனால், வீட்டிலேயே தனக்கு பாதுகாப்பு இல்லாதது மிகவும் வேதனைக்குரியது. உமோஜா என்றால் ‘ஒற்றுமை’.  இங்கு வசிக்கும் பெண்களும் ஒற்றுமையாக இணக்கமுடன் குடும்பமாக வாழ்கின்றனர். இந்த கிராமத்தை உருவாக்கியவர் ரெபேக்கா லோலோசோலி.

இவர் வசித்து வந்த வம்பா பகுதியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு பஞ்சமில்லை. அங்கு வசிக்கும் விலங்குகளுக்கும், பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இருவரும் ஆண்களின் கட்டளையை ஏற்று அப்படியே இயங்க வேண்டும், இல்லையென்றால் அடியும் உதையும்தான் மிஞ்சும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் ராணுவ வீரர்கள் சிலரால் ரெபேக்கா உட்பட 15 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த கொடுமைக்குப் பின் வீடு திரும்பியவர்களை கணவன்மார்கள் ஏற்க மறுத்ததோடு, துன்புறுத்தி விற்கவும் முடிவு செய்தனர்.

அதில், ரெபேக்கா இந்த கொடுமைகளுக்கு எதிராக பேசத் தொடங்கினார்.  அதை பொறுக்க முடியாத சில ஆண்கள் அவரை அடித்து சித்ரவதை செய்தனர். ரெபேக்காவின் கணவர் இதை தடுக்காமல், மாறாக அடி கொடுத்தவர்கள் பக்கம் நின்றார். இதை பொறுக்க முடியாத ரெபேக்கா பாதிக்கப்பட்ட பெண்களையும் அவர்கள் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு, தனியாக வீடு கட்டி தங்கினர். தனியே இவர்கள் சென்றாலும் ஆண்களிடம் இருந்து தொடர் மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருந்தது. கணவர்கள், உமோஜா பெண்களால் தங்களின் மதிப்பு குறைந்து போவதாக முடிவு செய்து, அவர்களை அங்கிருந்து துரத்த பல தகராறுகள் செய்தனர்.

இதனால், தமக்கென்று ஓர் இடம் வேண்டும் என முடிவு செய்து, அங்கு வாழும் பெண்கள் பாரம்பரிய நகைகளும், கைவினைகளும் விற்று பணம் சேர்த்து, சொந்தமாக அந்த இடத்தை விலைக்கு வாங்கினர். சுற்றி வேலிகள் எழுப்பி, குடில்கள் அமைத்து வாழத் தொடங்கினர். இந்த வேலிகள் கொடிய மிருகங்களிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும் பாதுகாப்பு அளித்தது. அந்தப் பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், இவர்கள் கிராமத்திற்கும் விஜயம் செய்கின்றனர். சம்புரு பெண்கள், மணிகள் கொண்டு தயாரித்த வகை வகையான அணிகலன்களையும், கைவினை பரிசுகளையும் விற்று தங்கள் வாழ்வில் சிறப்பாக வளர்ந்து வருகின்றனர்.

ரெபேக்கா முதலில் 15 பெண்களுடன் 1990 ஆம் ஆண்டு இந்த கிராமத்தை தொடங்கினார். இப்போது பெண்கள், குழந்தைகள் என, உமோஜா சமூகம் சுமார் 250 பேர் கொண்ட கூட்டுக் குடும்பமாக வளர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அங்கு ஒரு பள்ளியையும் நிறுவியுள்ளனர். கல்விதான் அனைத்து பரிணாம வளர்ச்சிக்கும் அடிப்படை என்ற கொள்கையை உறுதியாக நம்புகிறார் ரெபேக்கா. தங்கள் பிள்ளை கள் மட்டுமில்லாமல், பிற கிராமங்களில் இருந்தும் குழந்தைகள் வந்து படிக்க அனுமதித்துள்ளார். உமோஜா பெண்கள், ஆண்களை வெறுப்பவர்கள் அல்ல. பெண்களை மதிக்கும் ஆண்களை அவர்களும் மதிக்கின்றனர்.  

இந்த கிராமத்திலிருந்து சில மைல் தூரத்தில் ‘நச்சாமி’ என்று மற்றொரு கிராமம் உமோஜாவை முன்மாதிரியாக கொண்டு உருவாகியுள்ளது. நச்சாமி என்றால் ‘அன்பு’ என்று பொருள். ஆண்களும் இருக்கும் இந்த கிராமத்தில் பெண்கள் மட்டுமே தலைவர்களாக இருக்கின்றனர். இங்கு வசிக்கும் ஆண்கள், தலைவியின் விதிகளுக்கு கட்டுப்பட்டு வசிக்கலாம். நச்சாமி தலைவி, அங்கு வசிக்கும் ஆண்களுக்கு இடும் விதி, அவர்கள் ஒரு மனைவியுடன் மட்டுமே வாழ வேண்டும், பெண்களை சமமாக மதிக்க வேண்டும். இவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதை பொறுக்காத சில ஆண்கள், உமோஜாவில் நுழைந்து கலங்கத்தை உண்டாக்க அனைத்து வாய்ப்புகளையும், யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளை அங்கு போகவிடாமல் தடுப்பது, அங்கு வாழும் பெண்ணின் உறவினர்களை அனுப்பி திரும்பிவரச் சொல்வது... இது போக பல நேரங்களில் உமோஜா கிராமத்திற்கு மறைமுகமாக சென்று பணம், பொருள்களையெல்லாம் திருடுவது என பல்வேறு இன்னல்களை  கொடுத்து வருகின்றனர். இதெல்லாம், உமோஜா பெண்கள் பாதுகாப்பான இடம் அமைத்து பொருள் சுதந்திரமும், கலாச்சார சுதந்திரமும் பெற்று தனியே துணிந்து வாழ்வதால் அங்கு இருக்கும் சில ஆண்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. அதே சமயம், ரெபேக்காவின் இந்த புதுமுறை போராட்டத்தால், சம்புரு இனத்தில் சில மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது. ஆண்கள், பெண்களை சமமாக மதிக்க துவங்கியுள்ளனர். பெண் கல்வியுடன் பெண் சுதந்திரமும் பாதுகாப்பும் அதிகரித்துள்ளது.  தற்போது  உலகின் பல பகுதிகளில் ரெபேக்காக்கள் பலர் உருவாகியிருப்பது இந்த உமோஜா கிராமத்தின் வெற்றியே.

- ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்