SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசுரர்களை மயக்கிய மோகினியாட்டம்

2019-02-13@ 15:25:21

நன்றி குங்குமம் தோழி

மார்கழி மாசம் முழுதும், சென்னை கோலாகலமாக இருக்கும். இங்குள்ள ஒவ்வொரு சபாக்களும் பாட்டு, நடனம் என கர்நாடக சங்கீத பிரியர்களுக்கு ஒரு விருந்தே படைத்து வரும். விழாவில் பரதம், கர்நாடக கச்சேரிக்கு நடுவில் எல்லாரையும் இந்தாண்டு கவர்ந்தது மோகினியாட்டம். ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியில் பரதம் மற்றும் பல கர்நாடக கச்சேரிகளுக்கு மத்தியில் மோகினியாட்டத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தன்னுடைய அழகான முகபாவங்கள் மற்றும் நளின நடன அசைவுகளால் அரங்கத்தில் எல்லாரையும் கட்டிப் போட்டு இருந்தார் பெங்களூரை சேர்ந்த மோகினியாட்ட கலைஞர் ரேகா ராஜு.

‘‘நான் பெங்களூர் வாசி. என்னோட பூர்வீகம் தமிழ்நாடு, கேரளா இரண்டு மாவட்டங்கள்ன்னு தான் சொல்லணும். அப்பா தமிழ்நாடு. அம்மா கேரளா. அம்மாக்கு நடனம், பாட்டு மேல விருப்பம் அதிகம். அவங்க நல்லா பாட்டு பாடுவாங்க. அப்பா தொழிலதிபர் என்றாலும் நாடக கலைஞர். ஒரு சில மேடை நாடகங்களில் நடிச்சு இருக்கார். கலை மேல் ஆர்வம் கொண்ட குடும்பம் என்பதால், சின்ன வயசில் அதே சூழலில் வளர்ந்து வந்த எனக்கும் நடனத்தின் மேல் ஈடுபாடு செய்ய வச்சது. அப்ப எனக்கு மூன்றரை வயசு இருக்கும். அம்மா என்னை பரதநாட்டிய பயிற்சி பள்ளியில் சேர்த்துவிட்டாங்க.

நான் நடன பயிற்சி எடுக்கும் போது அம்மாவும் உடன் இருந்து நோட்ஸ் எடுத்துப்பாங்க. அதன்பிறகு வீட்டில் எனக்கு தனியா அவங்க பயிற்சி அளிப்பாங்க’’ என்றவர் குடும்ப சூழல் காரணமாக சில காலம் நடன பயிற்சியை தொடர முடியாமல் போனதாக தெரிவித்தார். ‘‘எட்டு வயசு வரைக்கும் நடனம் பயிற்சி எடுத்து வந்தேன். அந்த சமயத்தில் அப்பா செய்து வந்த தொழிலில் பெரிய இழப்பு ஏற்பட்டது, எவ்வளவுக்கு எவ்வளவு நாங்க தொழிலில் உயர்ந்து இருந்தோமோ, அப்படியே பாதாளத்தில் தள்ளப்பட்டோம். நிதி பிரச்னையால் பெரிய அளவில் பாதிப்படைந்தோம்.

இந்த சூழலில் நடனத்திற்கு சிறப்பு பயிற்சி அளிப்பது கடினமாக இருந்தது. என்னால் அதற்கான ஃபீஸ் கட்ட முடியவில்லை. பயிற்சி பள்ளியில் ஃபீஸ் கட்டினா தான் பயிற்சி அளிக்க முடியும்ன்னு சொல்லிட்டார். அதனால் என்னால் நடன பயிற்சியை தொடர முடியாமல் போனது. நடனம் மேல் அதிக ஈடுபாடு இருந்தாலும், வீட்டு சூழ்நிலை காரணமாக மூன்று வருஷம் தொடர முடியாமல் போனது. இதற்கிடையில் அப்பாவின் தொழிலும் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிச்சது. நாங்களும் மெல்ல மெல்ல தலை உயர ஆரம்பிச்சோம்.

தடைப்பட்டு போன நடன பயிற்சியை மீண்டும் தொடர ஆரம்பிச்சேன்’’ என்றவர் மோகினியாட்டம் மேல் ஈடுபாடு ஏற்பட காரணத்தை விவரித்தார்.‘‘என்னோட நடன பயிற்சி பள்ளியில் பரதம் மட்டும் இல்லை, எல்லா விதமான நடனப் பயிற்சியும் இருந்தது. மோகினி யாட்டம், குச்சுப்புடி, கதகளின்னு. அப்ப ஒரு நாள் மோகினியாட்டம் பயிற்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு அந்த நடனத்தின் நளினம் மற்றும் அசைவுகள் ரொம்பவே பிடிச்சு இருந்தது. அம்மாவிடம் கேட்ட போது சரின்னு சொல்ல, மோகினியாட்டம் கத்துக்க ஆரம்பிச்சேன்.

இதற்கிடையில் என்னுடைய கல்லூரி படிப்பும் முடிந்தது. கல்லூரி படிக்கும் போதே சி.ஏ படிச்சிட்டு இருந்தேன். சி.ஏவில் இரண்டு பேப்பர் எழுதணும். எனக்கோ நடனத்தில் தான் அதிக ஆர்வம் இருந்தது. அந்த சமயத்தில் யோசிச்சேன். நடனம் தான் என் முழு நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது. அதனால் சி.ஏ படிப்பை பாதியில் நிறுத்திட்டேன். கலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள மாஸ்டர் ஆப் பர்பார்மிங் ஆட்ஸ் (Master Of Performing Arts) படிச்சேன். எனக்கு அக்கவுன்ட்ஸ் பிடிக்கும். அதில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், எம்.பி.ஏ அக்கவுன்ட்சும் (M.B.A. Accounts) படிச்சேன்.

இதற்கிடையில் மோகினியாட்ட பயிற்சியும் தொடர்ந்து கொண்டு இருந்தேன். அதில் பி.எச்.டி மற்றும் டாக்டரேட் பட்டமும் பெற்றேன்’’ என்றவர் வசதியில்லாத குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறார். ‘‘எனக்கு தெரிந்த கலையை மற்றவர்களுக்கும் சொல்லித் தர வேண்டும் என்று நினைச்சேன். நடன பயிற்சி பள்ளியை ஆரம்பிச்சேன். மோகினியாட்டம் மற்றும் பரதம் இரண்டும் கத்துக் கொடுக்கறேன். மோகினியாட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறேன். குறிப்பா வசதியற்ற குழந்தை களுக்கு. காரணம் நான் பட்ட கஷ்டம் இந்த குழந்தைகள் படக்கடாது என்பது தான்.

ஆர்வம் இருந்தும் கட்டணம் செலுத்த முடியாமல் என்னால் தொடர முடியவில்லை. கலை கற்றுக் கொள்ள அதற்கான கட்டணம் அதிகம் தான். வசதியுள்ளவர்களால் கட்டணம் செலுத்த முடியும். ஆனால் ஆர்வம் இருந்தும் வசதி இல்லாத ஒரே காரணத்தால், இவர்களால் இந்த கலையை பயில முடியாமல் போகவேண்டுமா? அது மட்டுமில்லை தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் குழந்தைகள் நடனம் கற்றுக் கொள்ள வருகிறார்கள். என்னை பொறுத்தவரை நடனத்திற்கான மதிப்பு எல்லாருக்கும் கிடைக்கணும். கலை எல்லாருக்கும் ஒன்று தானே.

அதை நான் காசுக்காக பாகுபாடு பார்க்க விரும்பல’’ என்றவர் பரதம் போல மோகினியாட்டம் எல்லா இடங்களிலும் போய் சேரவேண்டும் என்றார். ‘‘மோகினியாட்டம் கேரளாவின் பாரம்பரிய நடனம். இதோட வரலாறு என்னென்னு சரியாக தெரியாது. மோகினி விஷ்ணுவோட அவதாரம். அவர் மோகினியாக அவதாரம் எடுத்த போது அந்த  உருவத்தில் மிகவும் அழகாக இருந்தார். வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம். யார் வெள்ளை நிற உடைப் போட்டாலும் பார்க்க பிரகாசமாக இருப்பாங்க. வெள்ளை நிறத்தில் தங்க நகைகள் அணிந்து பார்ப்பவரை கவரும் அழகில் இருந்தாள் மோகினி.

அந்த சமயத்தில் அசுரர்களும் தேவர்களும் பார்கடலை கடைந்து கொண்டு இருந்தனர். யாருக்கு அமிர்தம் கிடைக்கும் என்று போட்டி போட்டிக் கொண்டு பாற்கடலை கடைந்தனர். தேவர்கள் கடவுள்களின் அம்சமாக இருந்தாலும் இவர்களை விடபலசாலிகள் அசுரர்கள். அவர்களின் கவனம் சிதறினால் தான் அமிர்தம் தேவர்களுக்கு கிடைக்கும். மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு, அசுரர்களின் கவனத்தை சிதற அவர்கள் முன் தோன்றி நடனமாடியதாகவும், தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்ததாக புராணத்தில் கூறப்படுகிறது.

மேலும் இந்த நடனம் காற்றில் செடி கொடி மற்றும் தண்ணீரில் அலை போல மிகவும் நளினமானது. பரதத்தை பொறுத்தவரை அவர்களின் நடனம் நேர்கோடாக தான் இருக்கும். அபிநயம் பிடிக்கும் போது கூட கைகள் நேராக தான் இருக்கும். மோகினியாட்டம் வளைந்து, மிகவும் நளினமாக இருக்கும்’’ என்றவர் மோகினியாட்டம் கேரளாவை தாண்டி பரவவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ‘‘நான் பரதம், குச்சுப்பிடி, மோகினி யாட்டம் நடன பயற்சி எடுக்கிறேன். அதே சமயத்தில் மோகினியாட்டம் குறித்த விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

இந்த நடனம் தற்போது கேரளாவில் மட்டுமே பிரபலமாகியுள்ளது. அதை தாண்டி மற்ற மாநிலங்களில் அதற்கான அடையாளம் இன்னும் கிடைக்கல. இந்த நடனம் பற்றி வெளியே சொல்ல ஆட்களும் இல்லை. நான் ஸ்பிக்மேகி அமைப்பில் இருக்கேன். இந்த அமைப்பின் மூலமா, ஒவ்வொரு சின்ன கிராமத்திற்கு சென்று அங்கு மோகினியாட்ட கலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அதுமட்டும் இல்லாமல் கடந்த ஐந்து வருஷமாக எல்லா நடன விழா மற்றும் சபாக்களில் சென்று மோகினிட்டம் நடனத்தை நிகழ்த்தி வருகிறேன். அப்படித்தான் சென்னையில் முதல் முறையாக சென்னையில் திருவையாறு நிகழ்வில் நடனமாடும் வாய்ப்பு கிடைச்சது. வெளிநாடுகளுக்கும் சென்று நடனமாடி இருக்கேன்’’ என்ற ரேகா மோகினியாட்டத்தை இந்தியா முழுக்க பிரபலமாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார்.

- ப்ரியா 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்