SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருமானம் தரும் அழகு நிலையம் !

2019-01-24@ 15:58:54

நன்றி குங்குமம் தோழி

சிறுதொழில்

நீங்களும் சம்பாதிக்கலாம் மாதம் ரூ.20 ஆயிரம்


ஒரு காலத்தில் வசதியுள்ள பெண் களின் அழகுகூடமாக இருந்தது பியூட்டி பார்லர்கள். அதிலும் நகரத்துப் பெண்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். தற்போதைய சூழலில் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பெண்களும் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். குறைந்த பட்சம் மாதம் ஒரு முறை தன் புருவங்களை தீட்டிக் கொள்ள தவறுவதில்லை. அப்படிப்பட்ட அழகுக்கலை என்பது பெண்களுக்கேற்ற சிறந்த வருமானம் ஈட்டித் தரும் தொழிலாக மாறியுள்ளது.

திருமண வைபவம், பூப்புனித நீராட்டுவிழா, பிறந்தநாள் விழா என ஒவ்வொரு விழாக்களிலும் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதில்லை. இப்படி அழகுப்படுத்திக் கொள்ளும்போது ஒரு சிலருக்கு கெமிக்கல் கலந்த அழகுசாதனப் பொருட்கள் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.

எனவே, ஒருவரின் சருமத்திற்கு ஏற்ற வகையில், முக நிறத்தைக்கூட்டி, பருக்களை அகற்றி, சுருக்கங்களைப் போக்கி, கரும்புள்ளிகளை அகற்றி மெருகூட்ட இயற்கை முறையிலான பொருட்களைக் கொண்டும், நவீன கருவிகளைக்கொண்டும் அழகுப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் அது ஆரோக்கியமான அழகைத்தரும் என்கிறார் சென்னை ஆதம்பாக்கத்தில் ஹரினீஸ்  பியூட்டி பார்லர் நடத்தி வரும் அழகுக்கலை நிபுணர் கங்கா பாலசுப்பிரமணியம்.

‘‘நான் பி.எஸ்சி பட்டதாரி. அழகுக்கலை மீது ஆர்வம் ஏற்பட்டதால் ஒரு தனியார் நிறுவனத்தில் காஸ்மெட்டாலஜி மற்றும் டிரைக்காலஜி படிப்புகளைப் படித்தேன். அதனைக் கொண்டு முதன்முதலில் எனது வீட்டிலேயே சிறியதாக தொழிலைத் தொடங்கினேன். அழகுக்கலைக்கு நான் பயன்படுத்துவது பெரும்பாலும் இயற்கை முறையிலான பழ வகைகள் மற்றும் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் காய்கறிகள்தான்.

இயற்கை முறை யிலான பொருட்களைக் கொண்டு அழகுப்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் அதிகமாக வரத் தொடங்கினர். சுமார் 2 லட்சம் ரூபாய் முதலீட் டில் இந்த பியூட்டி பார்லரை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் வந்த வாடிக்கையாளர் கள் இன்றைக்கும் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள் ளுங்களேன்’’ என்றவர், அழகுக்கலையில் உள்ள அடிப்படை அறிவியல் பற்றி பேசினார்.

‘‘சரும நிறத்தைக் கூட்ட Herbal, Cream Bleaching சிகிச்சையை செய்யலாம். கூந்தலை ஒரு நாளைக்கு அல்லது நிரந்தரமாக நேராக்க Smoothening, Straightening, விருப்பத்திற்கு ஏற்ப சுருளாக்க Perming.... என நாம் விரும்பியபடி நம்மை அழகுப்படுத்தலாம். அழகுக் கலை என்பது ஓர் அறிவியல்.

இன்றையச் சூழலில் முறையாக அழகுக்கலையைக் கற்பதற்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் இவற்றின் பாடங்கள் குறித்த அடிப்படை அறிவு அவசியம் தேவை. அழகுக் கலையை கற்பதற்கு இவையெல்லாம் தேவையா என சிலர் கேட்கலாம். என்னை கேட்டால் மிகவும் அவசியம் என்றுதான் சொல்வேன்’’ என்றவர் அதற்கான காரணங்களை விவரித்தார்.

‘‘உதாரணத்திற்கு பெண்களுக்கு சருமத்தில் ஏற்படும் முகப்பருவை எடுத்துக் கொள்வோம். முகப்பரு ேதான்ற முக்கிய காரணம் காற்றில் உள்ள பாக்டீரியா கிருமிகள். இது உயிரியல். சூரிய ஒளியினால் ஏற்படக்கூடிய சரும கருமைக்கு சூரிய ஒளியை தெரிந்து கொள்ளணும். இது இயற்பியல்.

ஓசோன் மற்றும் அரோமா எண்ணெய்களைப் பற்றி தெரிந்து கொண்டால் அது வேதியியல். இந்த அடிப்படை விஷயங்களை 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். எனவேதான் பல பயிற்சி நிறுவனங்கள் அழகுக்கலை பயில்வதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படை கல்வித்தகுதியாக நிர்ணயித்துள்ளன. முன்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால்தான் அழகுக்கலை பயிற்சிக்கான சான்றிதழ் கிடைக்கும் என்றிருந்தது.

 இப்போது மத்திய அரசின் தொழிற்பயிற்சி  நிறுவனமான (எம்.எஸ்.எம்.இ.) நிறுவனத் தில் அழகுக்கலை பயிற்சி பெறுபவர்கள் 8ம் வகுப்பு படித்திருந்தாலே மத்திய அரசின் சான்றிதழ் பெறலாம். ஆர்வமும் ஈடுபாடும் பயிற்சிக்கான முதல் அடிப்படைத் தேவையாகும். இக்கலையில் பயிற்சி பெற, வயது வரம்பு தேவையில்லை. ஆனால் அரசுச் சான்றிதழ் பெற 8 அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் பெறுவதற்கான வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை ஆகும்.

பயிற்சிகளில் பல வகைகள், பல நிலைகள் உள்ளன. குறுகிய காலப் பயிற்சி, இரு வாரப் பயிற்சி, 6 வாரப் பயிற்சி, 3 மாதப் பயிற்சி, 1 மாதப் பயிற்சி... இவற்றில் பேசிக், அட்வான்ஸ்டு, ஹை டெக் என்று பல நிலைகள் உள்ளன. பெண்கள் தமது விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட நிலையை தேர்ந்தெடுத்து படிக்கலாம். ஒப்பனை, மெகந்தி டிசைனிங், நகப்பூச்சு, கூந்தல் அலங்காரம், ஃபேசியல், பிளீச்சிங், பெடிக்யூர், மெனிக்யூர், ஆயில் மசாஜ், ஹென்னா கண்டிஷனர், டையிங், வாக்ஸிங், திரெட்டிங், மணப்பெண் அலங்காரம் என ஏராளமான அழகு பராமரிப்பு  முறைகள் உள்ளன.

ஒவ்வொன்றையும் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இவை அடிப்படை. இதிலேயே அட்வான்ஸ்டு, ஹை டெக் என்று போகும்போது சிறிது செலவு கூடும். அதற்கேற்ப வருமானமும் உண்டு. இந்த மூன்று பயிற்சிகளையும் நான் அளித்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் இன்றைக்கு ஒரு நிரந்தர வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பயிற்சி முடித்தவுடன் தொழில் ஆரம்பிப்பதைவிட சில மாதங்கள் தரமான அழகு நிலையத்தில் பயிற்சி பெறுவது நல்லது. அனுபவரீதியாக, செய்முறையில் நிறையக் கற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் தன்னம்பிக்கையும் ஆர்வமும் அதிகரிக்கும். அதே போல் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பிரச்னைகள் வேறுபடும். குறிப்பாக சருமங்களில் பல வகைகள் உண்டு.

ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்ப பிரச்னைகளும் மாறுபடும். இந்த பிரச்னைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டியது அழகுக்கலையில் முக்கியம். அதேபோல தலைமுடியில் ஏற்படும் பிரச்னைகளான தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்னைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் க்ரீம், சொல்யூஷன், பேக் போன்றவற்றைப் பற்றிய அறிவு தேவை.

வாடிக்கையாளர்களின்  கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில், அறிவியல் ரீதியில் அழகு சிகிச்சை பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளரைக் கவரும் வகையில் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள ஆரம்ப நிலையில் தரமான அழகுக் கலை நிலையத்தில் பயிற்சி பெற வேண்டும்.

அழகுநிலையம் தொடங்குவதற்கான முதலீடு எவ்வளவு ஆகும் என்பது நம்முடைய நிதி சக்தியை பொறுத்து அமையும். முதலில் அழகு நிலையம் தொடங்குவது பற்றியத் திட்டமிடல் தெளிவாக இருக்க வேண்டும். அழகு நிலையம் தொடங்கப் போகும் இடம், அந்த இடத்தில் வசிப்போர் மற்றும் வாடிக்கையாளர் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதைப் பொறுத்தே நம்முடைய அழகு நிலையத்தின் பட்ஜெட் அமையும்.

கிராமப்புறம் என்றால் குறைவாகவும், நகர்ப்புறம் என்றால் சிறிது அதிகளவிலும் முதலீடு தேவைப்படும். குறைந்தபட்சம்  ரூ.5000 முதல், ரூ.25,000 வரை  முதலீடு தேவைப்படும். ஒவ்வொரு நாளும் புதிதாக வரும் அழகுக் கலை பற்றிய உயர்தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது அவசியம். இதன் மூலம் நம்முடைய தொழில் மற்றும் அழகுக் கலை சார்ந்த திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

மேலும் வருமானமும் அதிகரிக்கும். சராசரியாக மாதம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம். இந்த துறையில் மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிப்பவர்களும் உண்டு. வருமானம் என்பது வாடிக்கையாளர்களின் தேவைகளை நாம் திறம்பட பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களை தக்கவைத்துக் கொள்வதை பொறுத்து அமையும்’’ என்றார் அழகிய புன்சிரிப்புடன் கங்கா பாலசுப்பிரமணியம்.

தோ. திருத்துவராஜ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்