SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வனப்பேச்சு

2018-12-05@ 15:56:17

நன்றி குங்குமம் தோழி

சுமதி என்பது சொந்த பெயர். ‘தமிழச்சி தங்கபாண்டியன்’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். பேச்சி என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு. சிறந்த கவிஞரும் கட்டுரையாளருமான தமிழச்சி ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று சென்னை ராணிமேரிக் கல்லூரியில் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியவர்.

பரதநாட்டியத்தினை முறையாகப் பயின்றிருக்கின்ற இவர், இலக்கியத் தளம் மட்டுமல்லாது அரங்கம் எனப்படுகின்ற மேடை நாடகத் தளத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். இதையும் தாண்டி இவர் ஒரு சிறந்த அரசியல் பேச்சாளர் என்பதும் பலர் அறிந்த விஷயம். இப்படி பன்முகத் திறமையாளராக இருக்கும் தமிழச்சி தம் எழுத்துலகம் பற்றி மனம் விட்டு நம்மோடு பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே.

“சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லாங்கிணறு. அப்பா தங்கபாண்டியன் தலைமை ஆசிரியர். அம்மா ராஜாமணியும் ஆசிரியர். ஐந்தாம் வகுப்பு வரை ஊரில் உள்ள பள்ளியில்தான் படித்தேன். பின்னர் விருதுநகரில் உள்ள பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படித்தேன். 13 வயது வரை விடுமுறை நாட்களில் பெரும்பாலும் எங்கள் கிராமத்தில்தான் இருப்பேன்.

அம்மா, பெரியம்மா, பாட்டி என கிராமத்துப் பெண்கள் சொல்லும் கதைகளை கேட்டு வளர்ந்தவள் நான். அதுமட்டுமில்லாமல் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் என்னிடம் வாசிக்கிற பழக்கம்  இயல்பாக இருந்தது. சிறுவயதில் விக்ரமாதித்தன் கதைகள், அம்புலி மாமா கதைகள் போல சிறுவர்களுக்கான புத்தகங்கள் வாசித்தேன்.

வளர்ந்த பிறகு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற காலக்கட்டத்தில் எங்கள் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்து கல்கி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன் என சிறந்த இலக்கியப் புத்தகங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்பா 1949 ல் இருந்து திராவிட இயக்கத்தில் இருந்ததால் மாநாடு, கூட்டங்களுக்கெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார். எனவே இயல்பாகவே தமிழ் மீது ஆர்வம் வந்தது.

ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றாலும் பள்ளியில் நடக்கும் தமிழ் நாட்டியங்கள், நாடகங்கள் போன்றவற்றில் ஆர்வமாக பங்கேற்பேன். பலவிதங்களில் நான் படித்த பள்ளியும் என் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தது. 16 வயதில் ‘மாரி’ என்றொரு கவிதை எழுதினேன். வானம் பார்த்த பூமியான எங்கள் விவசாய நிலத்தைப் பற்றிய கவிதை அது.

இப்படியாக என் வாசிப்புக்கும் எழுத்துக்குமான துவக்கப் புள்ளியாக இருந்தது என் ஊரும் ஊரைச் சேர்ந்த பெண்களும்தான். என் மண் சார்ந்த விஷயங்களைத்தான் நான் எப்பொழுதும் எழுதுகிறேன். இன்னும் அங்கே சொல்லித் தீராத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்திற்கென்று ஒரு மரியாதை எப்போதும் இருக்கும்.

அதனால் அவர்களைப் பொறுத்த வரை நான் எப்போதும் ‘சார் மக’ ‘டீச்சர் மக’ தான். நான் நானாக இருக்கும் இடம் என் ஊர் தான். படைப்பிற்கான ஒரு இடம் அது. என்னைப் பொறுத்தவரை எந்தப் பூச்சுகளும் கட்டுப்பாடுகளும் அற்ற ஓர் இடம். கிராமத்தில் பெறும் அனுபவ ஞானங்களைத்தான் நான் என் எழுத்தில் கொடுக்கிறேன். அந்தக் கரிசல் காட்டு பூமியின் பெண்கள் எனக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதலைக் கொடுக்கிறார்கள்.

படிப்பில்லாதவர்களாக இருந்தாலும் சுயமாக வாழ்க்கையை எப்படி தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வது என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். நாம் படித்து எழுதி தெரிந்து கொள்ளும் பலப்பல விஷயங்களை பெண்ணியக் கருத்துக்களை தன் இயல்பான வாழ்க்கையின் மூலம் உணர்ந்துள்ள அவர்களின்  சாதாரண பேச்சில் சுலபமாக பெண்ணியப் பார்வையை, ஒரு சொலவடையில் கூட சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

அந்தளவு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் அவர்களிடம் இருக்கிறது. தொன்மவியலும், நாட்டுப்புற வழக்காற்றியலும், சடங்குகளும், சிறுதெய்வ வழிபாட்டு முறையும், நாட்டார் கலைகளும், செவிவழிச் சொலவடைகளும், நம்பிக்கைகளும், பழ மரபுக் கதைகளும் கொண்ட உலகம் என்னுடையது. நான் அந்த கரிசல் நிலத்தின் பேச்சி. பள்ளி முடித்ததும் சென்னை மீனாட்சி கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றேன்.

நான் படித்த ஆங்கில இலக்கியம் உலக இலக்கியங்களுக்கான திறவுகோலாக இருந்தது. அத்துடன் கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப் பெற்ற நாட்டிய நாடகங்கள் கலைகளின் வழியாக எனக்கு தமிழ் இலக்கியத்தை மேலும் உணர்த்தின. மதுரை தியாகராஜ கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பயிலும் போது சுப்பாராவ் எனும் பேராசிரியர் (கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்) எங்களிடம் பிறமொழி இலக்கியங்களை படிப்பதோடு நம் தாய் மொழியின் செவ்வியல் இலக்கியங்களை பயில வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

குறைந்த பட்சம் தாய் மொழி இலக்கியங்களிடத்தில் பரிச்சயமாவது இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால் அந்த காலகட்டத்துக்கு நவீன இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். சைவ சமய இலக்கியங்கள் அங்கே எனக்கு அறிமுகமாகின. அம்மா வைணவத்தில் ஈடுபாடு கொண்டவர். அம்மாவிடமிருந்து வைணவ இலக்கியங்களை கற்றுக்கொண்டேன். ஆண்டாள் அப்படித்தான் எனக்கு ஆதர்சமான கவி ஆனாள்.

முதுகலை படிக்கும்போது கல்லூரியில் ‘அருவி’ என்றொரு இதழ் நடத்தினோம். அதில் தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்ற பல சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை பற்றிய குறிப்புகளைப் பகிர்வாக எழுதினேன்.பின்னர் கவிதைகளும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அப்பாதான் என் படைப்பின் முதல் வாசகர். என்னை எழுதச் சொல்லி எப்போதும் உற்சாகப்படுத்துவார்.

படைப்புகள்

கரிசல் மண் மக்களது வாழ்க்கையினைப் பதிவு செய்திருக்கின்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு ‘எஞ்சோட்டுப் பெண்’. இந்நூலின் கவிதைகள் பல கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘வனப்பேச்சி’, உயிர்மை பதிப்பகத்தில் டிசம்பர் 2007 ல் வெளிவந்தது. வனப்பேச்சி என்பது சிறு தெய்வம். சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாத சக்தியின் வடிவம். அவள் என் துணையுமானவள்.

அவளை முன்னிறுத்தி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்புதான் வனப்பேச்சி. இந்த தொகுப்பிற்கு பின்தான் எல்லோரும் என்னை பேச்சி என
செல்லமாக அழைக்கின்றனர். சிறு பத்திரிக்கைகளில் வெளியான எனது கவிதைகளின் தொகுப்பு ‘மஞ்சணத்தி’ எனும் கவிதை நூலாக டிசம்பர் - 2009ல் வெளிவந்தது.

தீராநதியில் வெளியான எனது கவிதைகளின் தொகுப்பு ‘அருகன்’  எனும் கவிதை நூலாகவும், பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த எனது நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு ‘பேச்சரவம் கேட்டிலையோ’  எனும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. பத்திரிகைகளில் வெளியான எனது கட்டுரைகளின் தொகுப்புகளான ‘மயிலிறகு மனசு’ மற்றும் ‘மண்வாசம்’ ஆகிய நூல்களும் வெளியாகி இருக்கின்றன.

டிசம்பர் 2015ல்  ‘அவளுக்கு வெயில் என்று பெயர்’ (கவிதைத் தொகுப்பு),‘பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை’ விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு எனும் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. எர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கின்டையர் எனும் நாடக ஆசிரியரது ஆங்கில நாடக ஆக்கங்களை முன்வைத்து சென்னைப் பல்கலைக்கழகத்தில், நான் செய்த முனைவர் (Ph.D) பட்டம் ஆய்வினை ‘Island to Island’ எனும் ஆங்கிலப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்.

சா.தேவதாஸ் அவர்களால் இப்புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘நிழல் வெளி’ எனும் நூலாக வெளிவந்தது சிலர் இள முனைவர் பட்டத்திற்காகவும், முனைவர் பட்டத்திற்காகவும் எனது புத்தகங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு பல்கலைக்கழகங்களில், அவர்களின் ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மரியா ரேமோந்தஸின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தேன்.

அவை ‘கல்லின் கடுங்கோபம்’  எனும் கவிதை நூலாக செப்டம்பர் 2017ல் வெளிவந்தது. இதுவரை வெகு குறைவாகவே சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். இன்னும் சிறுகதைத் தொகுப்புப் போடவில்லை. நாவல் என்பதும் பிரமிப்பான வடிவம். அதற்குள்ளும் நான் இன்னும் போகவில்லை. நான் எழுதும் கட்டுரைகளைப் படித்துவிட்டு கி.ராஜ நாராயணன் ஐயா இதில் சிறுகதைக்கான விஷயங்கள் இருக்கின்றன... இதனை கதையாகவே எழுதி இருக்கலாம் என்று அடிக்கடி சொல்லுவார்.

என்னைப் பொறுத்தவரை கருதான் படைப்பின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது. திட்டமிட்டெல்லாம் படைப்பை எழுத முடியாது. கவிதை என்பது மொழியின் அரசி. கவிதை என்பது சவாலான விஷயம். சமயங்களில் தலைப்பு கொடுத்து எழுதச் சொல்லும்போது கவிதைகள் பிறப்பதில்லை. செய்யப்படுகின்றன என்றே சொல்லுவேன். கவிதை என்பது படிமம், உவமை, உருவகம் என்ற பல விஷயங்களால் ஆனது. எனவே அதனை வடிக்க மெனக்கெடக் கூடாது. கவிதை என்பது தானே இயல்பாக பிறக்க வேண்டும்.

என்னுடைய படைப்புகளில் பிராந்தியத் தன்மை அதிகம் இருப்பதாகச் சொல்வார்கள். வட்டார வழக்குச் சொல்லாடல்கள் அதிகம் இருக்கும். வட்டார வழக்குதான் எனது கரிசல் மொழியின் முக்கிய அடிப்படை. சிலர் “நீங்கள் பொதுமொழியில் எழுதினால் உங்கள் படைப்பை மொழிபெயர்த்து சர்வதேச அளவில் கொண்டுச் செல்லலாமே” என்பார்கள்.

என் மொழி என்பது ரத்தமும் சதையுமாக இயல்பாக வருவது. சர்வதேச அங்கீகாரத்துக்காக என் பிராந்தியத் தன்மையை காவு கொடுக்க வேண்டியதில்லை. எனக்கான மொழியில் எனக்கான விஷயங்களை எழுதுகிறேன். இயல்பான உணர்வோடு புனைவும் கலந்து வரும்போது படைப்பு வெகு நேர்த்தியாக அழகாகிறது.

பிற மொழி இலக்கியங்களிலும் (குறிப்பாக ஆங்கிலம்), தத்துவங்களிலும், கோட்பாடுகளிலும் தீவிர ஈடுபாடும், விருப்பமும், சிறிதளவு அறிமுகமும் உள்ள நான், முழுக்க எனது கவிதைகளில் ‘சர்வ தேசியத்திற்கு’ எதிராக அல்லது மாற்றாக எனது நிலம் சார்ந்த அடையாளங்களை முன்வைப்பது என்பது ஒரு பின் நவீனத்துவ செயல்பாடுதான்.

பாடலாசிரியர்

மிஷ்கின் எனது நண்பர். அவர் மூலமாக கவிஞராக இருந்த நான் ‘பிசாசு’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானேன். மெட்டுக்குப் பாட்டெழுதுதல் என்பது கொஞ்சம் சவாலான விஷயம்.‘பிசாசு’, ‘சவரக்கத்தி’, ‘நாச்சியார்’ மற்றும் ‘பாரீஸ் பாரீஸ்’ போன்ற படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். என்னை புரிந்து கொண்டு சுதந்திரமாக செயல்பட விடும் இயக்குனர்களின் படங்களில் மட்டும் பணி புரிய விரும்புகிறேன்.

எழுத வரும் பெண்கள் மனதில் சரி என்று படுவதை துணிச்சலோடு எழுத வேண்டும். ஆனால் அதற்கு முன் நிறைய வாசிக்க வேண்டும். பயணங்கள் நம் அறிவை விசாலப்படுத்துவது போல் வாசிப்பும் நம் அறிவை விசாலப்படுத்தும். தமிழ் நூல்கள் மட்டுமின்றி பலவிதமான மொழிகளின் மொழிபெயர்ப்புகளையும் படிக்க வேண்டும். பல மொழி நூல்களைப் படிப்பதன் மூலம் பல்வேறு பண்பாடுகளைப் புரிந்து கொள்ள இயலும்.

அதன் பின் நீங்கள் சொல்ல விரும்பும் விஷயத்தைத் தெளிவோடு எழுதுங்கள். என்னைப் பொறுத்தவரை பொதுவாக பெண்கள் புரிதலான அன்புடன் ஆணுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து வாழ வேண்டும். வாழ்க்கையை எளிமையாய், பகுத்தறிவோடு, சுயசிந்தனையோடும் அனுபவ ஞானத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியமா? பணம், பதவி, புகழ் அவசியமா என்பதை அந்தப் பெண்கள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

பெண்களே! முதலில் உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். பெண்கள் தன் குடும்பத்தினருக்காக தியாகத் திருவுருவங்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.  தங்களது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தங்களை அவர்கள் முதலில் அவர்கள் நேசிக்க வேண்டும். அப்போது தான் குடும்பத்தையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்ள முடியும்.

குடும்ப வாழ்க்கை முக்கியம் தான். ஆனால் அது சரியில்லாத போது வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது. நல்ல பணியைத் தேர்ந்தெடுத்து தன்னம்பிக்கையோடு வெற்றிகரமாக வாழ வேண்டும்” என்னும் தமிழச்சி தங்க பாண்டியனின் கணவர் சந்திரசேகர் ஐஜியாக இருந்து ஓய்வு பெற்றவர். மகள்களில் ஒருவர் இன்ஜினியர். இன்னொருவர் மருத்துவர்.

விருதுகள்

‘எஞ்சோட்டுப் பெண்’ கவிதை நூலிற்கு ‘கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது’ 2004,

மகாகவி பாரதியார் அறக்கட்டளையின் கல்வியியல் விருதான ‘மகாகவி பாரதியார் விருது’ 2005,

‘வனப்பேச்சி’ தொகுப்பிற்கு ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஏலாதி இலக்கிய விருது’ - 2008 மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது- 2009,

தமிழ்நாடு அரசின் 2009ம் ஆண்டிற்கான ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’,

‘களம் புதிது’ இலக்கியக் குழு வழங்கிய 2010ம் ஆண்டிற்கான ‘சிறந்த கவி ஆளுமை விருது’,

கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளையின் 2013ம் ஆண்டிற்கான ‘சிறந்த கவிஞர் விருது‘,

பாரதியார் சங்கத்தின் 2015ம் ஆண்டிற்கான ‘பாரதி பணிச் செல்வர் விருது’,

கலகம் கலை இலக்கியத் தமிழ்த் தேசியத்தடம் 2015ம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் விருது,

மார்ச் 2017ல் விடியல் அறக்கட்டளையின் சார்பாக  படைப்புத் திறன், பன்முக ஆற்றலைப் பாராட்டி பாரதி விருது,

Madras Development Society (Chennai) ஏப்ரல் 2017ல் வழங்கிய Crown Jewel Of Social
Activist (சமூக ஆர்வலர் மாமணி)  விருது,

கவிமுகில் அறக்கட்டளை வழங்கிய ‘கவிஞாயிறு தாராபாரதி விருது- ஜூன் 2017,

ஆகஸ்ட் - 2017ல் கம்பன் கழகம் சென்னை, நீதியரசர் மு. மு. இஸ்மாயில் நினைவுப் பரிசு,

SPARRC - IISM (Indian Institute of Sports Medicine) வழங்கிய பிப்ரவரி - 2018ல்  Pride Of India  விருது.

-ஸ்ரீதேவி மோகன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்