SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2018-12-03@ 17:23:54

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா


சமைக்ப்படாத,  வேக வைக்கப்படாத, ப்ராசஸ் செய்யப்படாத உணவுகளை உண்ணும் டயட் முறைக்கு ராஃபுட் டயட் என்று பெயர். இதில்  பலவகை உள்ளன. சைவம், அசைவம் என இரு தரப்பினருமே வேறு வேறு வகையான ரா ஃபுட் டயட்களைப் பின்பற்றுகின்றனர். ரா ஃபுட்  டயட் என்பது எடைக்குறைப்பு போன்ற சிறப்புக் காரணங்களுக்காகப் பின்பற்றப்படும் டயட் அல்ல. இது ஒரு வாழ்க்கைமுறை டயட்.  ஆனால், தொடர்ச்சியாக இதைப் பின்பற்றி, உடற்பயிற்சி, போதுமான ஓய்வு என்று மேற்கொள்ளும்போது எடைக்குறைப்பு மிக இயல்பாக  நிகழ்கிறது என்கிறார்கள் இதைப் பயன்படுத்தியவர்கள். கொஞ்சம் உடல் கொழுப்பு கூடிவிட்டது. சிக்கென்று ஃபிட்டாக இருந்தால் நன்றாக  இருக்கும் என நினைப்பவர்கள் ரா ஃபுட் டயட்டைப் பின்பற்றலாம்.

ப்ராசஸ் செய்யப்படக்கூடாது என்பது இதன் அடிப்படையான நிபந்தனை. காய்கறிகள் என்றால் பச்சையாக சாப்பிடலாம். அரிசியை  வேகவைத்துச் சாப்பிடலாம். மாமிசங்களை வேகவைத்துச் சாப்பிடலாம். பொரிக்கக்கூடாது. நட்ஸ், விதைகள் போன்றவற்றையும் அப்படியே  சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்கவே  கூடாது. இதுதான் ரா ஃபுட் டயட்டின் முக்கியக் கோட்பாடு. அதுபோலவே, அனைத்தும் இயற்கை  முறையிலான உணவாகவே இருக்க வேண்டும். செயற்கையான சுவையூட்டிகள், மணமூட்டிகளுக்கு இந்த டயட்டில் ஸ்ட்ரிக்ட் தடா. ஒருவர்  உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்காவது சமைக்கப்படாத உணவாக, பச்சைக் காய்கறிகளாக இருக்க வேண்டும் என்பதும் இதில்  முக்கியம்.

சிலர் வீகன் டயட் இருப்பவர்களைப் போல பால், அசைவம் போன்றவற்றைக்கூட உண்ணாமல் முழுமையான ரா ஃபுட் டயட் இருப்பார்கள்.  ஆரோக்கியமானவர்கள் இதையும் சில நாட்களேனும் பின்பற்றலாம். நன்றாக உடல் இளைக்கும். ஆனால், நட்ஸ், சோயா போன்ற  கொழுப்புச்சத்துகளை போதுமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். முழுமையான வெஜிடேரியன்கள் உண்ணும் தாவரங்கள், பால்  பொருட்கள் அடங்கிய வெஜிடேரியன் ரா ஃபுட் டயட், முழுமையான வீகனியர்கள் உண்ணும் பால் பொருட்கள் தவிர்த்த நனி சைவ ரா ஃபுட் டயட், ஆம்னிவோர்ஸ் எனப்படும் சைவ-அசைவப் பிரியர்கள் கலந்து கட்டி சாப்பிடும் ரா ஃபுட் டயட் எனப் பல வகை இதில்  உண்டு.

ஊற வைத்த முளைகட்டிய தானியங்கள், விதைகள், பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற உலர் விதைகள், காய்கறிகள், பழங்கள்,  பழச்சாறுகள், தேங்காய், தேங்காய் பால், வெயிலில் காயவைத்த காய்கறிகள், முட்டை, மீன், மாமிசங்கள், பாஸ்டுரைஸ் செய்யப்படாத  பால் ஆகியவை இந்த டயட்டில் உண்ணக்கூடியவை.மசாலா சேர்த்து நன்கு சமைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட, ப்ராசஸ்  செய்யப்பட்ட உணவுகள், ரிஃபைண்டு எண்ணெய்கள், உப்பு, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, மைதா மாவு, காபி, டீ, பாஸ்தா  ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இயற்கையான முறையில் டீஹைட்ரேட் எனும் ஆக்சிஜனேற்றம் மூலம் சூடாக்குவது மட்டுமே  இந்த  டயட்டில்  அனுமதிக்கப்பட்ட  சூடாக்கும் முறை. உணவை 116 டிகிரிஃபாரன் ஹீட் அல்லது 46 டிகிரி செல்சியஸ்க்கு மேலே சூடாக்கக் கூடாது. அப்படி செய்தால் அதன்  பண்பு மாறிவிடும் என்பதால் அது ரா ஃபுட் லிஸ்டில் சேராது. அளவான உஷ்ணத்தில் பொருட்கள் சூடாக்கப்படுவதால் அதில் உள்ள  என்சைம்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கின்றன.

இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக மேம்படுகிறது. நீரில் கரையக்கூடிய  வைட்டமின் பி மற்றும் சி போன்றவை நன்றாகச் சமைக்கும்போது நீங்கிவிடுகின்றன. இந்த டயட்டில் அவையும் முழுமையாக உடலுக்குக்  கிடைக்கின்றன. அதிக ஆற்றல், பளபளப்பான சருமம், சிறப்பான செரிமானம், எடைக் குறைப்பு, இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைவு  ஆகியவை இந்த டயட் மூலம் நிரூபிக்கப்
பட்ட பலன்கள் என்று சொல்கிறாகள்.

உணவு விதி 15

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள். ‘இரந்து உண்டாலும் இருந்து உண்’ என்றார்கள் நம் முன்னோர். அதாவது, பிச்சை எடுத்துச்  சாப்பிட்டாலும் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது இதன் பொருள். சிலர், நாற்காலியில் அமர்ந்து சாப்பிடக் கூடாதா என்று கேட்பார்கள்.  அது தவறான விஷயம் இல்லை. ஆனால், சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்போது நம் அடிவயிற்றின் செரிமான உறுப்புகள் செயலூக்கம்  பெறுவதால் உண்ணும் உணவு சிறப்பாக செரிக்கும்.

மேசையில் அமரும் போது நாம் அதிகமாக வளைய மாட்டோம் என்பதால்  அதைவிடவும் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதே சிறந்தது. இன்று நிறைய பேர் ஃபாஸ்ட் ஃபுட் என்று நின்றுகொண்டே சாப்பிடுகிறார்கள்.  சிலர், வீட்டுக்குள் தட்டை வைத்துக்கொண்டு நடந்துகொண்டே சாப்பிடுவார்கள். இவற்றை எல்லாம் பெரிய தவறு என்று சொல்ல  முடியாதுதான். ஆனால், நிச்சயம் இவற்றால் பலன்கள் ஏதும் இல்லை என்பதைச் சொல்ல முடியும்.

எக்ஸ்பர்ட் விசிட்

வெறும் டயட் மட்டுமே ஆரோக்கியத்தைக் கொண்டு வந்துவிடாது. உணவு என்பது சத்துக்களைச் சேர்ப்பது என்றால் வேலை என்பது  சேர்த்த சத்துகளை எரிப்பது. நம் உடலில் இந்த இரண்டுமே சம அளவில் நடந்தால்தான் நாம் ஆரோக்கியமாக இருப்போம். எனவே, டயட்  என்பது உணவு மட்டும் அல்ல உடற்பயிற்சியும் இணைந்ததுதான். உடற்பயிற்சி தேவைப்படாத டயட் என்ற ஒன்றே கிட்டதட்ட இவ்வுலகில்  இல்லை. இருந்தாலும் அதை நெடுநாட்கள் செய்யக் கூடாது. அது ரிஸ்க். இந்தியாவின் புகழ்பெற்ற உணவியல் நிபுணர் ருஜ்தா திவேகர்  உடற்பயிற்சி செய்பவர்களுக்கான ஃபுட் டிப்ஸ் சிலவற்றைத் தருகிறார்.

உடற்பயிற்சியும் உணவும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. சிறப்பான உணவுப் பழக்கமே சிறப்பான உடற்பயிற்சிப் பலன்களைத் தருகிறது. உடற்பயிற்சிக்கு முன்பான உணவுகள், உடற்பயிற்சிக்குப் பின்பான உணவுகள் இரண்டிலுமே கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சியில்  ஈடுபடும் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு ஏதேனும் ஒரு பழத்தை முழுமையாகச் சாப்பிடலாம். ஜூஸ் குடிக்க வேண்டாம். பழமாகச்  சாப்பிடவும். வயிறு முட்ட உணவு உண்டதுமே உடற்பயிற்சியில் இறங்க வேண்டாம். திருப்தியான உணவுக்குப் பின்பு குறைந்தது ஒரு  மணி நேரம் கழித்துதான் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

உடற்பயிற்சிக்குப் பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சியால் ஆக்சிஜன் நன்றாக வெளியேறி இருக்கும் என்பதால் நீர்  பருகினால் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைத்து உற்சாகம் அடையும். வாழைப்பழம் போன்ற உடனடியாக ரத்தத்தில் கிளைகோஜென் சேர்க்கும்  பழங்களை உடற்பயிற்சிக்குப் பிறகு உண்டால் உடனடி எனர்ஜி கிடைக்கும்.தசைகள் உடற்பயிற்சியால் தளர்வுற்றிருக்கும். எனவே,  அவற்றுக்குப் புரோட்டீன் தேவைப்படும். புரோட்டீன் ஷேக் ஏதும் பருகலாம். முளைகட்டிய தானியங்கள், முட்டை சாப்பிடலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு உண்ணும் உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய தேவை. வைட்டமின் இ, சி, துத்தநாகம், செலீனியம் நிறைந்த  உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

அரிசி சாதம் உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்றது. அரிசியில் பிசிஏஏ எனும் மூளைக்கு வலு சேர்க்கும் அமினோ அமிலம் உள்ளது. இது  செரிமானத்தையும் சீராக்கும். பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி நல்லது.மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில்  மாவுச்சத்தோடு நார்ச்சத்தும் உள்ளது. எனவே, பெண்களுக்கு உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிட இது மிகவும் ஏற்றது. ஹார்மோன்  சமநிலையை உருவாக்கி தோற்றத்தையும் பொலிவாகக் காட்டக்கூடிய மேஜிக் இதில் உள்ளது. ஆலிவில் இரும்புச்சத்தும் ஃபோலிக்  அமிலமும் நிறைந்துள்ளன. கர்ப்பப்பையை வலுவாக்கும்.இதனையும் பெண்கள் உடற்பயிற்சிக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.

வீ புரோட்டீன்களில் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன. இவை உடற்பயிற்சி முடிந்ததும் உடலுக்குத் தேவையான  ஆற்றலைத் தருவதோடு செரிமானத்தையும் சிறப்பாக்குகிறது. எனவே, வீ புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்ணலாம்.தேங்காயில் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது. இதை உடற்பயிற்சிக்குப் பிறகான உணவில் சேர்க்கும்போது கெட்ட கொழுப்பு நீங்குகிறது.  நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. எனவே, இதனையும் தவிர்க்காமல் உணவில் சேர்க்கலாம்.

மாவின் பால்

பாலில் தண்ணீரைக் கலந்தது போய் கண்டதையும் கலந்து கொண்டிருக்கிறார்கள் இப்போது. தண்ணீர் கலந்த பால் அடர்த்தியாக வேண்டும்  என்பதற்காக அதில் ஸ்டார்ச் எனும் மாவுப் பொருளைக் கலக்கிறார்கள். சில பெரிய நிறுவனங்களேகூட மரவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச்  பவுடரைக் கலக்கிறார்கள் என்ற புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. இதனால், ஆவின் பால் குடித்த காலம் போய் மாவின் பால் குடிக்க  வேண்டியதாகிவிட்டது. இந்தக் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எளிதுதான். சிறிதளவுப் பாலில் சில துளிகள் டின்ச்சா, அயோடின் அல்லது  அயோடினைச் சேர்க்கும்போது பாலின் நிறம் நீலமாக மாறினால் அது ஸ்டார்ச் (மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட கலப்படப் பால் என்பதைக்  கண்டுகொள்ளலாம்.

தீபாவளி பலகாரங்கள் எப்போது தோன்றின?

ஒரு வாசகர் தீபாவளி பலகாரங்கள் எப்போது தோன்றின என்று கேட்டிருக்கிறார். தீபாவளி என்பது இந்தியாவில் பல ஆயிரம்  வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதற்கு ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு  காரணங்கள் சொல்லப்படுகின்றன. புத்தாண்டு பிறப்பு, நரகாசுரன் அழிந்த நாள் என்று இந்துக்கள் ஒருபுறம் சொல்கிறார்கள். மகாவீரர்  ஞானமடைந்த நாள் என்று சமணம் சொல்கிறது. ஆக, இது மதங்களைக் கடந்து கொண்டாடப்படும் ஒளி விழா என்பது மட்டும் நிஜம்.  

மறுபுறம் தீபாவளி பலகாரங்கள் என்று தனியாக ஏதும் இல்லை. இந்தியா பல்வேறு பண்பாடுகளின் சங்கமம் என்பதால் அந்தந்த ஊரின்  ஸ்பெஷலே தீபாவளியின் ஸ்பெஷலாக இருக்கிறது. லட்டு, பாதுஷா, ஜிலேபி, குலோப் ஜாமூன், ரசகுல்லா, ரசமலாய், கச்சோரி,  மைசூர்பாகு, பர்ப்பி, முறுக்கு, சீடை, மிக்சர் என்று எல்லாமே இந்தியப் பூர்விகம் கொண்டவைதான். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு  காலகட்டத்தைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவானவை.

-இளங்கோ கிருஷ்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-04-2019

  26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்