SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இவள் நவீன உலகின் ஏகலைவன்!

2018-11-29@ 17:31:05

நன்றி குங்குமம் தோழி

வடசென்னை, பல ஆயிரம் திறமைசாலிகளையும் விளையாட்டு வீரர்களையும் தன்னகத்தே வைத்திருக்கும் உழைக்கும் மக்கள் வாழும் ஒரு பகுதி. இந்தப் பகுதியில் வசித்து வரும் பிரேம்நாத், ஸ்வேதா தம்பதியின் மூன்று வயது மகள் சஞ்சனா, அம்பு எய்வதில் கின்னஸ் சாதனையை எட்டியிருக்கிறார். மூன்று வயதாகும் சஞ்சனா அம்பு எய்த பயன்படும் வில்லின் உயரம் கூட இல்லை. ஆனால் 3 மணிநேரம், 27 நிமிடம், 22 நொடிகளில் 1111 அம்புகளை தன் பிஞ்சுக் கைகளால் எய்து கின்னஸ் சாதனை வரை சென்றுள்ளார் இந்த சுட்டிப் பெண். மழலை மொழிகூட மாறாத இந்த வயதில் யாரும் எட்டிடாத உயரத்தை எட்டியிருக்கும் சஞ்சனாவை அவர் வீட்டில் சந்தித்தோம்.

கொத்தவால்சாவடி காய்கறி மார்க்கெட் போல பரபரப்பான வடசென்னையின் ஒரு மார்க்கெட் பகுதியில் தான் இவர் வீடு அமைந்திருந்தது. இரு சக்கர வாகனம் மட்டுமே செல்லக்கூடிய சிறிய தெருவில் குறுகளான படிக்கட்டுகள் சஞ்சனாவின் வீட்டுக்கு வழி காண்பித்தன. அந்த சிறிய வீட்டில் வில்லையும் அம்பையும் தன் பிஞ்சு விரல்களுக்கு நடுவே அழுத்தி பிடித்தவாறு சுவற்றில் உள்ள இலக்கை பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார் குட்டி தேவதை சஞ்சனா. என்ன செய்கிறீங்க என்று கேட்ட அடுத்த நிமிடம், “கிட்ட வராதீங்க ‘போ’வை(வில்) சடாரென என்னால கீழ இறக்க முடியாது, ஏரோ மேல பட்டுடும்” என்று தன் மழலை மொழியில் எச்சரித்தாள்.

இந்த சிறிய வயதிலும் என் மேல் காயம்பட்டு விடும் என்று என் பாதுகாப்பை பற்றி நினைத்த அவளின் சிந்தனை சொல் என்னை ஆச்சரியப்பட வைத்தது.  ஒரு நிமிடம் நான் சிலை போல நின்றுவிட்டேன். சஞ்சனாவின் வீடு சின்ன வீடு தான். ஆனால் வீடு முழுதும் அவள் பெற்ற பதக்கங்களும், சான்றிதழ்களும்  நிரம்பிக் கிடந்தன. சட்டென குறிபார்த்து அம்பை எய்திட்டு பேசத் துவங்கினாள். “நான் தான் சஞ்சனா, எல்.கே.ஜி படிக்கிறேன். எனக்கு ‘போ’ வும் ஏரோவும் ரொம்ப பிடிக்கும். தூங்கும் போது கூட நான் அதை கட்டிப் புடிச்சிட்டுதான் தூங்குவேன்.

என்னுடைய மாஸ்டர் எனக்கு தினமும் பிராக்டிஸ் குடுக்குறாரு, அதனாலதான் நான் இவ்வளவு மெடல் வாங்கி இருக்கேன்” என்று ஓடிச்சென்று தான் பெற்றபதக்கங்களையும், சான்றிதழ்களையும் குதூகலத்துடன் எடுத்துக் காட்டினார். “இது கின்னஸ் ரெக்கார்டு பண்ணும் போது கொடுத்தாங்க. இது ‘Recurve compound’ நேஷ்னல் சாம்பியன்ஷிப்ல வாங்குனது” என அடுக்கிக்கொண்டே போனவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வேன்’’ என்றார். “ஸ்கூல்ல டீச்சர்ஸ் எல்லாம் பாராட்டுனாங்க, என்னோடு ஃபிரண்ட்ஸ் எல்லோரும் என்னை விஷ் பண்ணாங்க.

தினமும் காலையில ஸ்கூல் போயிட்டு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் பிராக்டிஸ் போயிடுவேன். நைட்டு 8 மணிக்கு வீட்டுக்கு வந்து படிப்பேன். இந்த வருஷம் போன மாசம் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில  ஜெயிச்சதால சி.எம் சாரை பார்த்தோம். அவர் என்ன பாராட்டுனாரு. ஆக்டர் லாரன்ஸ் அங்கிள் கூட என்ன பாராட்டுனாங்க” என கண்களை உருட்டி பேசினார் சஞ்சனா. அவரை தொடர்ந்தார் சஞ்சனாவின் அம்மா ஸ்வேதா. “சஞ்சனாவுக்கு அப்ப இரண்டு வயசு. அவளின் இரண்டாவது பிறந்தநாளுக்கு பிளாஸ்டிக் வில் அம்பு ஒன்னு பரிசா கிடைச்சது.

வீட்டுல விளையாட அவ்வளவு விளையாட்டுப் பொருள் இருந்தும் சஞ்சனா அந்த வில் அம்பை மட்டுமே நாள் பொழுதும் வைத்து விளையாடிகிட்டு இருப்பா. தூங்கும் போது கூட அதை விட மாட்டா. பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் தூங்குவா. நாங்க எவ்வளவோ சொல்லியும் சஞ்சனா வில் அம்பை விட்டு விலகல.  அப்போதான் அவளுக்கும் வில் அம்பிற்கும் ஏதோ தொடர்பு இருக்கு என்று நாங்க உணர்ந்தோம். இவளுடைய ஆர்வத்தை பார்த்து நாங்க, அவளுக்கு வில் அம்பு பயிற்சி தரலாம்னு முடிவு செய்தோம். பயிற்சி வகுப்புக்கும் அழைத்து போனோம். ஆனா இரண்டரை வயது ஆவதால் இப்ப சேர்த்துக்க முடியாது. கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொல்லிட்டாங்க.

அந்த நேரத்தில்தான் நண்பர் ஒருவர் மூலம் கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசேனி பற்றி கேள்விப்பட்டோம். அவர் தான் அவரிடம் கூட்டிட்டு போங்கனு சொன்னார். நாங்களும் ஹுசேனியை சந்திக்க போனோம். சஞ்சனாவை பார்த்ததும் எந்த கேள்வியும் கேட்காம சேர்த்துக்கொண்டார். ஒரு நாளைக்கு ஒரு வில்லை பயன்படுத்தி 72 அம்புகள் மட்டுமே விட முடியும். சஞ்சனா பிராக்டிஸ் எடுக்கும் போது ஒவ்வொரு நாளும் 72 லிருந்து 100, 150 என அதிகமாகவே அம்பு விட தொடங்கினா. இதைப் பார்த்து தான் மாஸ்டர் கின்னஸ் ரொக்கார்டுக்காக ஏற்பாடு செய்தார்” என்றவரை தொடர்ந்தார் சஞ்சனாவின் அப்பா பிரேம்நாத்.

“சஞ்சனாவை முதல் நாள் பார்க்கும் போதே இவளுக்குள்ள பெரிய திறமை இருக்கு... நீங்க கவலைப்படாதீங்க.  நிச்சயமா இவள் பெரிய ஆளா வருவான்னு மாஸ்டர் சொன்னார்.  பிராக்டிஸ்க்கு சேர்த்து ஒரு வாரத்திலே நல்லா அம்பு விட ஆரம்பிச்சிட்டா. சேர்ந்த மூணு மாதத்தில் நல்லா கத்துக்கிட்டா. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் கின்னஸ் ரெக்கார்டுக்கான முயற்சி நடக்க இருப்பதாக கூறினார். சஞ்சனாவை அதில் பங்கு பெறவும் செய்தார். 3 மணி நேரம், 27 நிமிடம், 22 நொடியில் 1111 அம்பு எய்தி எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தா. மூணு வயசு குழந்தையின் கைவிரல் பட்டு போல இருக்கும்.

அந்த பிஞ்சு விரலில் அம்பு விட்டு ரத்தமே வந்தது. நிறுத்த சொல்லியும், முடிக்கணும்ன்னு வைராக்கியத்தோடு விளையாடினா சஞ்சனா. உலகிலேயே குறுகிய நேரத்தில் இவ்வளவு அம்புகளை எய்த முதல் குழந்தை சஞ்சனாதான். எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாவும் இருந்தது. சஞ்சனாவின் திறமையை வெளிக் கொண்டு வரக்காரணம் அவளின் மாஸ்டர்தான். நான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வேலைப் பார்க்கிறேன். பொருளாதார சிக்கல் இருந்தாலும் மாஸ்டர்தான் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவளுக்கு தேவையானதை எல்லாம் பார்த்துக்கிறார்.

இந்தாண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி ‘Indian Recurve Compound’ தேசிய அளவிலான போட்டி நடந்தது. நடைபெற்ற மூன்று போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்றாள். அவள் விருப்பப்படி ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்க வைக்கணும். அதற்கான முயற்சி செய்திட்டு இருக்கேன்’’ என்று நெகிழ்ச்சியாக பேசினார் பிரேம்நாத். சின்ன குழந்தையானாலும் திறமை இருந்தால் சாதிக்க முடியும்ன்னு அவள் மேல் நம்பிக்கை வைத்தவர் மாஸ்டர் ஷிஹான் ஹுசேன். ‘‘உலகிலேயே வில் வித்தையில் இப்படி ஈடுபாடு கொண்டிருக்கும் ஒரு குழந்தையை தன் வாழ்நாளில் சந்தித்ததில்லை’’ என்று வியக்கிறார் பிரபல கராத்தே மற்றும் வில் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசேன்.

“சஞ்சனா 2 வயது 9 மாதம் இருக்கும் போது என்னிடம் அவள் பெற்றோர் அழைத்து வந்தனர். முதல் முறை பார்த்த போதே இவளிடம் அசாத்திய திறமை இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. ஒரு சிறிய வில் அம்பை எடுத்து கொடுத்து விடச் சொன்னேன். கொடுத்த வில்லையும் அம்பையும் அவளிடம் இருந்து திரும்பப்பெற நான் படாத பாடுபட்டேன். எவ்வளவு அம்புகளை எய்தாலும் சோர்வு என்பதையே நான் அவளிடம் பார்க்கவில்லை. தொடர்ந்து அம்புகளை எய்வதில் குறியாக இருந்தாள். இந்த சிறு வயதில் இப்படி ஆர்வம் உள்ள குழந்தையை நான் இத்தனை ஆண்டு அனுபவத்தில் பார்த்ததில்லை.

சஞ்சனாவிற்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்தேன். ஒவ்வொரு நாளும் சஞ்சனா எய்தும் அம்புகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருந்தது. எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. ஒரு நாளைக்கு இவளால் எவ்வளவு அம்புகளை விட முடியும் என்று பார்க்க ஒரு சின்ன முயற்சி செய்து பார்த்தேன். மூன்று மணி நேத்தில் 800 அம்புகளை எய்து பிரமிக்க வைத்தாள். சஞ்சனா அம்பு எய்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டேன். இரண்டு நாட்களில் லட்சக்கணக்கானோர் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.

கின்னஸ் ரெக்கார்டில் தேடிய போது இதுவரை 3 வயது குழந்தை யாரும் இப்படி ஒரு சாதனையை செய்யவில்லை என்று தெரிந்தது. கின்னசில் இடம் பெற பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். கடந்த மாதம் கின்னஸ் சாதனைக்கான தேர்வில் 3 மணி நேரம், 27 நிமிடம், 22 நொடியில் 1111 அம்புகளை எய்து ஆச்சரியப்பட வைத்தாள். அடுத்து மூன்று விதமான வில்லை பயன்படுத்தி எய்துவதற்கான பயிற்சி கொடுத்தேன். ஒன்று இந்தியன் போ, இரண்டாவது காம்போனன்ட் போ, மற்றொன்று ரிக்கர்வ் போ.

இந்த மூன்றையும் கையாண்டு அம்பு எய்த உலகின் முதல் சிறுமி என்கிற சாதனையும் படைத்திருக்கிறாள். இதற்காக நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கத்தையும் வென்று இருக்காள். நிச்சயமாக நல்ல வில்வித்தை வீராங்கனையாக சஞ்சனா எதிர்காலத்தில் அடையாளம் காணப்படுவாள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒலிம்பிக் போட்டிக்கு சஞ்சனாவை தயார் படுத்திக்கொண்டிருக்கிறேன். ஏகலைவனே பெண் உருவத்தில் பிரேம்நாத், ஸ்வேதா தம்பதியருக்கு பிறந்திருக்கிறாள்” என்று பிரமிக்கிறார் கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசேன்.

- ஜெ.சதீஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்