SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

THE ROAD HOME

2018-11-14@ 15:58:34

நன்றி குங்குமம் தோழி

பெண் மைய சினிமா

எப்பொழுது ஒரு பெண்ணால் தன்னுடைய பலவீனத்தால் அல்லாமல் பலத்தாலும், தன்னை தாழ்த்திக்கொள்ளாமலும் உறுதியுடனும் காதலிக்க  முடிகிறதோ அப்பொழுது காதல் அவளுக்கானதாக இருக்கும். ஆணுக்கு அது மரணத்தை நோக்கி நகர்த்தாமல், வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க  வேண்டும்.
-Simone de Beauvoir

ஒரு  பெண்ணின் உறுதியான காதலை அழகாகவும் அற்புதமாகவும் சித்தரித்திருக்கும் படம் ‘The Road Home’. மழை கிளறிவிடும்  மண்வாசனையைப் போல நம் மனதுக்குள் பத்திரப்படுத்திய காதலை வெளிக்கொணரும் ஓர் அற்புதக் கதை இது. சீனாவின் தலைநகரில் வசிக்கும்  மகனுக்கு கிராமத்திலிருக்கும் அப்பாவின் மரணச் செய்தி கிடைக்கிறது. நிலைகுலைந்து போகும் அவன் உடனே சொந்த ஊருக்குக் கிளம்பி வருகிறான்.  வீட்டில் அம்மா மட்டுமே தனியாக துயருடன் அமர்ந்திருக்கிறாள். ஊரே ஆழ்ந்த அமைதியில் மௌனம் காக்கிறது.

அப்பா ஓர் ஆசிரியர். அதனால் ஊரில் அவருக்கு செல்வாக்கு அதிகம். ஊரே அவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறது  என்ற விஷயத்தை  அறிகிறான். அப்பாவின் உடலை ஏதாவது வண்டியில் வைத்து வீட்டிற்குக் கொண்டு வந்துவிடலாமா என்று அம்மாவிடம்  கேட்கிறான். மறுப்பு தெரிவிக்கும் அம்மா தன் கணவனின் உடலை ஆட்களை வைத்து கால்நடையாக தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்று மகனிடம்  அன்பு கட்டளையிடுகிறாள். மகனும் அம்மாவின் கட்டளையை நிறைவேற்றுகிறான்.

இதற்கிடையில் அம்மாவும் அப்பாவும் ஜோடியாக நிற்கும் இளம்பருவத்துப் புகைப்படம் ஒன்று மகனின் கைக்குக் கிடைக்கிறது. அந்தப் புகைப்படம்  மகனின் மனதுக்குள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான காதல் கதையை கிளறிவிடுகிறது. அது அப்படியே திரையில் ஒரு கவிதை போல  விரிகிறது. பசுமையான ஒரு கிராமம். அங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். கட்டிட  வேலையில் ஈடுபடுபவர்களுக்கு ஊரில் இருக்கும் வீடுகளிலிருந்து உணவு, தண்ணீர் செல்கிறது.

அந்தப் பள்ளிக்கு நகரிலிருந்து இருபது வயது இளைஞன் ஒருவன் ஆசிரியராக வருகிறான். அந்த ஆசிரியர்தான் இறந்துபோன அப்பா. அவரும்  பள்ளிக்கூட கட்டுமானப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். முதல் பார்வையிலேயே அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு  ஆசிரியரின் மீது காதல் மலர்கிறது. அந்தப் பெண்தான் மகனிடம் அன்பு கட்டளையை இடும் அம்மா. சாலையில் நடந்துசெல்லும் ஆசிரியரைக் காணும்  ஒரு நொடிக்காக மணிக்கணக்காக நாள்தோறும் காத்துக்கிடக்கிறாள்.

ஆனால், அவள் ஒருபோதும் தன் காதலை வார்த்தைகளினூடாக  அவருக்கு  வெளிப்படுத்துவதே  இல்லை. ஆசிரியருக்கு திருமணம் ஆகவில்லை  என்பதை அறிந்ததும் தன் காதலில் இன்னமும் உறுதியாகிவிடுகிறாள். இருவரும் நேருக்கு நேராக சந்திக்கும் நொடிகளில் புன்னகையை மட்டுமே  பரிமாறிக்கொள்கிறார்கள். ஆசிரியர் சொந்த வேலையாக  நகருக்குச் சென்று விடுகிறார். அவர் முதல் முதலாக கிராமத்துக்கு வந்த சாலையின்  நுழைவுப்பகுதியில் அவரது வருகைக்காக இரவு பகல் பாராமல் கடும் பனியில் காத்திருக்கிறாள்.

நாட்கணக்கில் காத்திருந்ததால் அவளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகிவிடுகிறாள். காதலனின் வருகையே அவளை  குணப்படுத்துகிறது. கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தப் பெண், ஆசிரியரின் மேல் வைத்திருக்கும் காதலை அவருக்கு உணர்த்தி  இருவரையும் சேர்த்து வைக்கிறார்கள். அதற்குப்பிறகு ஒரு நிமிடம் கூட அவர்கள் பிரியவேயில்லை என மகன் தன் தாயுக்கும் தந்தைக்கும்  இடையேயான அற்புதமான காதலை நினைவுகூர்கிறான். மறுபடியும் கதை பழைய இடத்துக்கே திரும்புகிறது.

நகரத்தில் இருந்து ஆட்களை வைத்து கால்நடையாகவே அப்பாவின் உடலை  அம்மாவின் விருப்பப்படி கொண்டு வந்து அடக்கம் செய்கிறான் மகன்.  அம்மா மகனிடம் இன்னொரு ஆசையை நிறைவேற்றுமாறு மீண்டும் ஒரு அன்பு கட்டளையிடுகிறாள். அது தன் கணவன் ஆசிரியராகப் பணியாற்றிய  பள்ளியில் ஒரே ஒரு முறை மகன் பாடம் நடத்தவேண்டும் என்பதே.  பாடம் நடத்தும் மகனின் குரலைக் கேட்ட அந்த அம்மாவுக்குத் தன் கணவனின்  நினைவுகள் வர, மீண்டும் அவள் தன் காதலனுக்காக காத்திருந்த அந்த சாலைக்குத் திரும்புவதோடு படம் நிறைவடைகிறது.

அப்பாவுக்கு அம்மாவுக்கு ஒரு காதல் இருக்கும் என்பதையும் அதை மகன் நினைவுகூர்ந்து பார்ப்பது என்பதே உன்னதமானது. காதலர்களுக்கு சந்திக்க,  அன்பைப் பரிமாற என பொதுவாக ஓர் இடம் இருக்கும். இந்தக் காதலர்களுக்கு சாலை. அந்த சாலையின் வழியாகத்தான் ஆசிரியர் கிராமத்துக்குள்  நுழைந்தார். அந்த சாலையில்தான் வெயிலுக்கும் மழைக்கும் இடையில் அவரைக் காண அவள் காத்துக்கிடந்தாள். அந்த சாலையில்தான் முதன்  முதலாக அவரின் கரம் பற்றினாள். அந்த சாலைதான் அவர்களது காதலின் நினைவுச்சின்னம்.

அவர்களை இணைத்த அந்த சாலையும், காதல் நினைவுகளும் எப்பொழுதும் அவரின் மனதில் நிலையாகப் பதிய வேண்டும் என்பதால் தான் அவரின்  உடலை பல கி.மீ. தூரம் கால்நடையாகவே தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்று மகனிடம் வேண்டுகிறாள் அந்த அம்மா. அந்த சாலையே படத்தின்  தலைப்பாக மிளிர்வது அருமை. நிகழ்காலத்தில் நடப்பது கருப்பு, வெள்ளையிலும், பசுமையான காதல் நினைவுகள் வண்ணத்திலும் படமாக்கியது சிறப்பு.  பின்னணி இசை காத்திருத்தலின் வலியை, காதலின் தீவிரத்தை ஆழமாக நமக்குள் செலுத்துகிறது.

பல கி.மீ. தூரம் ஆசிரியரைத் தூக்கி வந்தவர்கள் மகன் கொடுக்கும் பணத்தை வாங்க மறுக்கிற காட்சி நெகிழ்வு. ஏனென்றால் அவர்கள் எல்லோரும்  அந்த ஆசிரியரிடம் பாடம் பயின்ற மாணவர்கள். காதலினூடாக ஐம்பதுக்கு பிந்தைய காலத்தில் சீனாவில் நிலவிய கல்விச்சூழலையும் இப்படம்  தோலுரித்துக் காட்டுகிறது. காதல் உணர்வுகளையும், காதலனைப் பார்க்க காதலி காத்திருக்கும் நிமிடங்களையும் எந்தவித உரையாடலும் இல்லாமல்   மிகவும் அற்புதமான காட்சிகளின் வழியாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஷாங் யுமு.

த.சக்திவேல்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

 • dakkafire

  வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்