SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேஸ்ட் பாட்டிலை அலங்கரித்து வருமானம் பார்க்கும் டிகோபேஜ் கலை!

2018-10-31@ 15:28:52

நன்றி குங்குமம் தோழி

வீடு முழுவதும் குப்பையாக பொருட்கள் நிறைந்து கிடக்கின்றனவா? இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பார்க்கிறீர்களா? அதைத் தூக்கி எறிவதற்கு  முன் அதை வைத்து ஏதாவது உபயோகமாகச்  செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

இங்கே, உதவாத பொருட்களைக் கொண்டு அழகான உதவக்கூடிய பொருட்களை செய்வது எப்படி என்பதை விளக்குகிறார், கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் கிறிஸ்டினா’ஸ்  ஆர்ட் ஸ்டு டியோ நடத்தும் கிறிஸ்டினா ரஞ்சன். இவர் 2014 முதல் உலகத்தரம் வாய்ந்த காட்சிக்கலைகள் (Visual  arts) மற்றும் பல்வேறு நாட்டின் (அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், இத்தாலி, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஈரான், போலந்து) கைவினைக் கலைகளை  கற்றுக்கொடுத்து வருகிறார். இங்கே டிகோ பாட்டில் கலை குறித்து விளக்குகிறார்.

‘‘எளிதான மற்றும் புதிய கைவினைப் பொருள் செய்முறைகள் உங்கள் வீட்டுக் குப்பைகளை மறுசுழற்சி செய்வது மட்டுமல்ல வீட்டிற்கு வரும்  விருந்தாளிகளையும் ஈர்க்கும். எனவே உங்களின் கற்பனைச் சிறகைப் பறக்கவிட்டு இந்தப் பொருட்கள் செய்யும் முறைகளை கவனித்தால்  உங்களுக்குள் இருக்கும் கலைத்திறன் வெளிப்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம். பழைய பாட்டில்கள் உங்கள் பழைய பொருட்கள் அடைத்திருக்கும்  அறைகளில் உள்ள கண்ணாடி பாட்டில்களை தூக்கி எறிய வேண்டாம்.

இதை வைத்து ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்களைச் செய்யலாம். பழைய பீர் பாட்டில்கள் அல்லது மற்ற வகை மது பாட்டில்களை  சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் அழகான ஓவியங்களைத் தீட்டி அதில் சிறு அலங்கார தொங்கும் வேலைப்பாடுகளைச் செய்து அதை அலங்கார  பொருளாகவோ அல்லது மெழுகுவர்த்தி பிடிப்பான்களாகவோ பயன்படுத்தலாம். இன்றைய அவசரமான உலகில் வாழும் நாம் வீட்டை சில நிமிடங்களில்  எளிதாகவும், அழகாகவும், ஆச்சரியப்படுத்தும் முறையில் மாற்றும் கலை தான் ‘டிகோபேஜ்’ முறை.

டிகோபேஜ் என்ற கலை 17ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் உருவானது. டிகோபேஜ் என்ற வார்த்தை டிகோப்பர் என்ற பிரெஞ்சு மொழியில் இருந்து  வந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்தக் கலையானது பரவியது. இந்தக் கலையை குழந்தைகள் (வயது 10 முதல்)  பள்ளி, கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், வேலைக்குச்  செல்பவர்கள், வயதானவர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கிறிஸ்டினா  ஆர்ட் ஸ்டுடியோவில் வந்து கற்றுக் கொள்கிறார்கள்.

இந்த கைவினைக் கலையின் சிறப்பு அம்சமே மறுசுழற்சிதான். அதாவது வீட்டில்  உபயோகமில்லாத  காலி கண்ணாடி பாட்டில்கள், உதாரணமாக தேன்,  ஊறுகாய் போன்ற பலவித வடிவிலான கண்ணாடி பாட்டில்களை வைத்து இந்த டிகோபேஜ் என்ற அழகான கலை செய்யப்பட்டு கண்ணை கவரும்  விதத்தில் மாற்றப்படுகிறது. இவ்வாறு அழகாக மாற்றப்பட்ட கண்ணாடி பாட்டில்களை மலர் குவளைகளாகவும், வீட்டை அழகுபடுத்தும் பொருளாகவும்  பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

உபயோகமில்லாத காலி பாட்டில், அக்ரிலிக் வண்ணம், டிகோபேஜ் பசை, காகிதம், டிகோபேஜ் வார்னிஷ். இந்த அனைத்து பொருட்களையும் வாங்க  சுமார் 1500 ரூபாய் தேவை. 1 லிட்டர் பாட்டிலை அழகுபடுத்தி ரூ. 300 முதல் 400 வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் பெண்களுக்கு  வீட்டிலிருந்தபடியே தானே சுயமாக  சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. ஒரு பாட்டில் அலங்கரிக்க சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி  நேரம் ஆகும்.

தினமும் வீட்டிலிருந்தபடியே சுமார் நான்கு முதல் ஆறு பாட்டில்களை தயாரிக்கலாம். டிகோபேஜ் செய்வதற்கு வசதியாக அமர்வதற்கு ஒரு  நாற்காலியும், ஒரு ேமஜையும் போதுமானது. நாம் செய்யும் இந்த தொழிலில் மிகவும் முக்கியமானது கவனமாக நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தி  கைவினைப் பொருட்காட்சி மற்றும் பல இடங்களிலும் விற்பனை செய்யலாம். இந்த கலையினால் மனநிம்மதி, கவனம் சிதறாமை, செய்வதற்குரிய  ஆர்வம் பெருகும்.

- தோ.திருத்துவராஜ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

 • 17-05-2019

  17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்