SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யூடியூப் மூலம் கலை

2018-10-10@ 12:36:53

நன்றி குங்குமம் தோழி

‘Art in life with varthu’ என்கிற யூ ட்யூப் சேனல் மூலம் எளிமையான முறையில் கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி என்கிற விளக்கப் பயிற்சியை அளிக்கிறார் பர்வதவர்த்தினி ஈஸ்வரன். பட்டுக்கூட்டை வைத்து அணிகலன்கள் செய்வது,  குப்பைப் பொருட்களைக் கொண்டு கலைப் பொருட்கள் செய்வது போன்ற கலைப் பயிற்சிகளை குழந்தைகள் மத்தியில் எடுத்துச் செல்கிறார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இவர் பாட்னாவில் உள்ள National institute of fashion technologyயில் முதுகலை ஆடை வடிவமைப்பு படித்திருக்கிறார். நம்மைச் சுற்றிலும் உள்ள பொருட்களைக் கொண்டே சூழலை சீர்குலைக்காமல் கலைப்பொருட்கள் செய்ய முடியும் என்கிறார்.

‘‘படிச்சு முடிச்சதும் சென்னையில் தோல் பொருட்கள் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். சில மாதங்களுக்குப் பிறகு அந்த வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன். ‘கைபுனைவு’ங்குற பெயரில்  பட்டுக்கூட்டை வைத்து கம்மல் மற்றும் கழுத்து அணிகலன்கள் தயாரிச்சு அதை இணையம் மூலமாக விற்பனை பண்ணேன். டெரகோட்டா ஜுவல்லரி  மற்றும் பேப்பர் குவில்லிங் நகைகள் செய்யும் பயிற்சியை  குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழங்கினேன். ஈரோடு, கோவை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட பயிற்சிகளை நடத்தியிருக்கேன்.

எந்த ஒரு பொருளும் குப்பை கிடையாது. எதையும் கலைப்பொருளாக மாற்ற முடியும். கலைநயத்தோட அதை நாம பார்க்கணும். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டு எறியப்படுற குப்பைப் பொருட்களிலிருந்தே ஏராளமான கலைப் பொருட்களை செய்ய முடியும். இயற்கையாகக் கிடைக்கக் கூடிய சிப்பி, சங்கு மற்றும் மரப்பட்டைகள், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு என்னென்ன மாதிரியான கலைப் பொருட்கள் செய்யலாம்ங்கிற பயிற்சியை கொடுக்கிறேன்.

Calli graphy என்று சொல்லக்கூடிய எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் கொடுக்கிறேன், 360 டிகிரியில் வட்டமாக வரையப்படும் ஓவியம் ‘மண்டாலா’. இது ரங்கோலி போன்று ஆன்மிகத்துடன் தொடர்புடைய ஓவியக் கலை. அடுத்ததா ‘ஜென்டேங்கிள்’ மூளைக்குப் பயிற்சி கொடுக்கும் ஓவியக்கலை. இந்த இரண்டு ஓவியங்களை வரைவதன் மூலம் மனது ஒருநிலைப்படும். இதற்கான பயிற்சிகளையும் கொடுக்கிறேன்” என்கிறார்.  

புன்னகை அறக்கட்டளை சார்பில் விருதுநகர் மாவட்டம் கல்லூர் குழந்தைகளுக்கு கழிவு மற்றும் அந்தப் பகுதியில் கிடைக்கும்  பொருட்களைக் கொண்டு ஆபரணங்கள் செய்யும் பயிற்சியை அளித்திருக்கிறார் பர்வதவர்த்தினி ஈஸ்வரன். பயிற்சி பெற்ற குழந்தைகள் தயாரித்த ஆபரணங்களை ‘இலை’ என்கிற ப்ராண்ட்  மூலமாக சந்தைப் படுத்துகிறார்கள். இது போன்ற பயிற்சிகள் குழந்தைகளை தற்சார்பு வாழ்க்கையை நோக்கி பயணிக்க வைப்பதாக இருக்கும் என்கிறார்...

“இது போன்று ஆபரணத் தயாரிப்பில் குழந்தைகள் மிகுந்த ஈடுபாட்டோடு கலந்துக்கிறது மட்டுமில்லாம இதன் மூலமாக அவங்க வருவாயும் பெற முடியுதுங்குறது அவங்களுக்கு உதவிகரமாக இருக்கு” என்கிறவர் சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டி என்கிற ஊரில் செய்தித் தாளிலிருந்து கலை மற்றும் உபயோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சியையும் அளித்திருக்கிறார்.‘‘குழந்தைகள் மத்தியில் ப்ளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தணும்ங்கிற நோக்கத்தோட செயல்பட்டுக்கிட்டிருக்கேன்.

சென்னை புறநகரான கருங்குழி நடுநிலைப்பள்ளியிலும், மறைமலை நகர் உயர்நிலைப் பள்ளியிலும் உள்ள மாணவர்கள் மத்தியில் ப்ளாஸ்டிக் ஏற்படுத்தும் விளைவுகள் பத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அக்குழந்தைகளுடன் இணைந்து சுவரோவியம் வரைஞ்சேன். ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் ஏற்படுத்தும் சூழல் சீர்கேடுகள் ரொம்பவும் அதிகம். இதுக்கான பிரச்சாரத்தை குழந்தைகள்கிட்ட இருந்து எடுத்துட்டுப் போகணும். 2019ம் ஆண்டுக்குள் 50 பள்ளிகளில் ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தணும்ங்கிறதை குறிக்கோளாக வெச்சிருக்கேன்.

‘ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் நிகழக்கூடிய அற்புதமான நிகழ்வு திருமணம்தான். லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரைக்கும் திருமணத்துக்காக செலவு செய்யப்படுது. மணமேடை அலங்காரத்துக்கு திருமணத்தில் முக்கிய இடம் இருக்கு. பொதுவாக நம் மண் சாராத மலர்களைக் கொண்டுதான் மேடை அலங்காரம் செய்வாங்க. ஆனால் நமது மண் சார்ந்த பொருட்களை வெச்சு பாரம்பரியமான முறையில் மேடை அலங்காரம் செய்றதை விரும்புறவங்க உண்டு.

மண் பானை, செங்கல் பொடி, மரத்தூள், பெயர் எழுதுறது, தென்னங்குருத்தில் பிள்ளையார் செய்வது, தோரணங்கள் கட்டுவது, பூ அலங்காரம், பூவில் கோலம் போடுதல் என பாரம்பரியமாகவும் அதே சமயம் சூழலுக்கு இசைவாகவும் மேடை அலங்காரம் செய்யலாம். ஆனந்த பெருமாள் என்பவருடன் இணைந்து கவின் கலைக்கூடம் மூலமாக இது மாதிரியான பாரம்பரியத்தை பறை சாற்றுகிற மண மேடை அலங்காரம் செஞ்சுக்கிட்டிருக்கேன்” என்றவர் தனது யூ ட்யூப் சேனலின் தொடக்கம் பற்றிக் கூறினார்…

“யூ ட்யூப் எளிமையாக மக்களை சென்றடையக் கூடிய ஊடகமாக இருக்கு. எனக்குத் தெரிஞ்ச கலை வேலைப்பாடுகளை பரவலான மக்களுக்கும் சொல்லிக் கொடுக்கணும்ங்கிற நோக்கத்தோடுதான் ‘Art in life with varthu’ங்குற சேனலை ஆரம்பிச்சேன். ரங்கோலி, க்ராஃப்ட், ஓவியம் ஆகியவற்றுக்கான செய்முறை விளக்கம், எம்பிராய்டரி, சுருக்குப் பை, லஞ்ச் பேக் போன்ற அன்றாடத் தேவை சார்ந்த பொருட்கள் செய்வது எப்படிங்கிற விளக்கம்,

அட்டைப்பெட்டி, ஷாம்பு டப்பா, பெட் பாட்டில்கள் மாதிரியான கழிவுப் பொருட்களைக் கொண்டு என்ன மாதிரியான பொருட்களெல்லாம் செய்யலாம்ங்கிறது மாதிரியான பலவற்றை வீடியோக்கள் மூலமா கற்றுக் கொடுத்திட்டிருக்கேன். எப்படிப்பட்ட பொருட்களைக் கொண்டும் கலைப்பூர்வமான பொருட்களைத் தயாரிக்கணும். அதே சமயம் அதனால் சூழலுக்கு எந்தக் கெடுதலும் இருக்கக் கூடாதுங்கிறதை அடிப்படையாக வெச்சுதான் நான் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன்” என்கிறார் பர்வதவர்த்தினி ஈஸ்வரன்.

- கி.ச.திலீபன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்