SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2018-10-09@ 13:56:48

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா

சென்ற இதழில் அட்கின்ஸ் டயட் பற்றி பார்த்தோம். சர்க்கரை நோய், இதய நோயைத் தடுப்பதற்கான சிறப்பு டயட்டாக இது செயல்படும் இதில், மொத்தம் நான்கு கட்ட நிலைகள் உள்ளன. முதலாவது கட்டத்தை தொடக்க நிலை என்பார்கள். புதிய டயட் ஒன்றை உடலுக்கு அறிமுகப்படுத்துவது இது. இதில், கார்போஹைட்ரேட் மூலம் அன்றாடம் கிடைக்கும் கலோரி அளவு இருபது கிராம் என்பதாக இருக்க வேண்டும். இந்த கார்போஹைட்ரேட் என்பது காய்கறிகள், சாலட்கள், கீரைகள் போன்றவற்றில் இருந்து கிடைப்பதாக, ஸ்டார்ச் குறைந்ததாக இருக்க வேண்டும். அதுபோலவே, கொழுப்புச்சத்து நிறைந்த மீன், புரதச்சத்து நிறைந்த பருப்புகள் போன்றவற்றையும் சாப்பிட  வேண்டும்.

இரண்டாவது கட்டத்தை நிலைப்படுத்துதல் என்பார்கள். நடைமுறையில் உள்ள டயட்டுக்கு ஏற்ப உடலை வடிவாக்கும் நிலை இது. இதில், ஊட்டச்சத்துகள், நார்சத்துகள் நிறைந்த காய்கறிகளை கார்போஹைட்ரேட்டுடன் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நட்ஸ், லோ  கார்போ காய்கறிகள், பழங்கள் ஆகியவையும் இதில் அடக்கம். இவற்றை சிறிது சிறிதாக உடலில் சேர்க்க வேண்டும்.இரண்டாவது நிலையில் முதல் வாரத்தில் இருபத்தைந்து கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது வாரம் முதல் முப்பது கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். எடை குறைவது நின்றுவிட்டால் மேலும் ஐந்து கிராம் குறைவாக எடுத்துக்கொள்வதன் மூலம் மீண்டும்  சிறிது எடை குறையலாம்.

மூன்றாவது நிலையை உடலை முழுமையாக புதிதாக வடிவமைத்தல், சீராக்குதல் என்பார்கள். இதில், ஒவ்வொரு வாரமும் பத்து கிராம் வரை கார்போ அளவை உயர்த்த வேண்டும். எடை குறையும் வரை இவ்வாறு குறைத்து வர வேண்டும்.நான்காவது நிலையை ஆயுளுக்குமான டயட் வடிவமைப்பு நிலை என்பார்கள். இதில், அனைத்து வகையான கார்போஹைட்ரேட் உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.பொதுவாக, அட்கின்ஸ் டயட்டில்  அவகேடோ, முட்டை அதிகமாகச் சாப்பிடலாம். இவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.

அசைவப் பிரியர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எனில் மீன், கோழி, மாடு, பன்றி இறைச்சிகளைச் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் குறைந்த காய்கறிகளான காலிஃபிளவர், புரோகோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றையும் முழுமையான  கொழுப்புச்சத்துகள் நிறைந்த பால் பொருட்களையும் நட்ஸ், விதைகள், எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில், ஆலிவ் எண்ணெய், தேங்காய்  எண்ணெய், அவகேடோ எண்ணெய் ஆகியவற்றையும் சாப்பிடலாம்.

கிரீன் டீ மிகவும் நல்லது.சர்க்கரை, செயற்கைப் பழரச பானங்கள்,  கோலா பானங்கள், கேக், மிட்டாய், சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அரிசி, கோதுமை போன்றவற்றை கிளாசிக் அட்கின்ஸ்  டயட்டில் தவிர்க்க வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நம் நாட்டில் அது இயலாத காரியம் என்பதால் கோதுமையை  சேர்த்துக்கொள்ளலாம். வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, கேரட், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கார்போஹைட்ரேட்  நிறைந்த காய்கறிகள், பழங்களையும் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு அட்கின்ஸ் டயட் எடுத்துக்கொண்டால்  நிச்சயம் உடல் எடை குறையும். சர்க்கரை அளவு கட்டுப்படும்.

எக்ஸ்பர்ட் விசிட்

கர்ப்பகால சர்க்கரை நோய் இன்றைய இளம் தாய்மார்கள் பலரையும் பயமுறுத்தும் பிரச்சனை. மரபியல் காரணிகள், ஒபிசிட்டி, வாழ்க்கைமுறை என இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கர்ப்ப கால சர்க்கரை நோய் சரியாகப் பராமரிக்காவிட்டால் தாய், சேய் இருவருக்குமே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த என்ன மாதிரியான டயட் மேற்கொள்ளலாம் என டயட்டீஷியன் பாயல் சொல்கிறார். ஒவ்வொரு இரண்டரை மணி முதல் மூன்று மணி நேரத்துக்கும் ஒருமுறை ஏதேனும் உணவோ நொறுக்குத் தீனியோ எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே சமயம், ஒரு உணவுக்கும் அடுத்த உணவு அல்லது ஸ்நாக்ஸுக்கும் இடையே குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் இடைவெளி இருக்கட்டும். அதற்கும் குறைவான நேரத்தில் எதையும் சாப்பிட வேண்டாம். உணவை எக்காரணம் கொண்டும் எந்த வேளையும் தவற விடாதீர்கள். அதே சமயம் கார்போஹைட்ரேட் உணவுகளை மிகவும் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். சாப்பிடாமலே இருந்தால் சர்க்கரை கட்டுப்படும் என நினைக்காதீர்கள். அது தவறு.  நேரத்துக்குச் சாப்பிடாமல் கொஞ்சம் தள்ளிப்  போடுவதன் மூலம் பசி அதிகரித்து சாப்பிடும்போது அதிகமாகச் சாப்பிட்டுவிட நேரும். இதனால், உடலின் ரத்த சர்க்கரை அளவு மாறுபடும். கார்போஹைட்ரேட்டைக் குறைவாகச் சாப்பிடும்போது உங்கள் உடலும் வலுவாகிறது;

வயிற்றில் உள்ள கருவுக்கும் நேரத்துக்கு  ஊட்டச்சத்துப் போய் சேர்கிறது.உங்கள் உணவில் நிறைய காய்கறிகள் இருக்கட்டும். நன்கு சமைக்கப்பட்ட ஸ்டார்ச் குறைந்த அல்லது  இல்லாத காய்கறிகளும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் சாலட்டும் சாப்பிடுங்கள். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். புரத உணவுகள் உண்டதும் குளுக்கோஸாக மாறாது. மேலும், உங்கள் வயிறு  நிறைந்த உணர்வையும் தரும். முட்டை, கோழி, மீன், கடல் உணவுகள், சீஸ், நட்ஸ் ஆகியவற்றில் புரதச்சத்தும் உள்ளன. எடை அதிகரித்துக்கொண்டே இருப்பது ஆரோக்கியமான கர்ப்பத்தின் இயல்பு என்று எல்லா தருணத்திலும் சொல்ல முடியாது. நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளையே எப்போதும் சாப்பிடுங்கள்.

நன்கு வறுத்த, பொரிக்கப்பட்ட உணவுகளையும் ஜங்க் ஃபுட்ஸையும்  தவிர்த்திடுங்கள். கொழுப்பு உணவுகள் நேரடியாக உடலில் சர்க்கரையைக் கூட்டாதுதான். ஆனால், இன்சுலினின் பணியை அது கடினமாக்குகிறது என்பதால் கவனம் தேவை. சிவப்பு அரிசி, கறுப்பு அரிசி, சிறுதானியங்கள், கோதுமை என விதவிதமாகச் சாப்பிடுங்கள். எப்போதும் வெள்ளை அரிசியை மட்டுமே உண்பதைவிடவும் இவற்றில் ஆரோக்கியமான குறைவான கார்போஹைட்ரேட்டே உள்ளது.எண்ணெயை சற்று அளவாகப் பயன்படுத்துங்கள். எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது நன்று. ரவை, உப்புமா என்று சாப்பிடுவதைவிட முழுதானிய பாஸ்தா மற்றும்  வெள்ளை மல்டி-க்ரெய்ன் ரொட்டி என்று சாப்பிடலாம்.

அதேபோல உருளைக் கிழங்கைவிடவும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் கிளைசெமிக் விகிதம் குறைவு. மே லும் அதில் நார்ச்சத்தும் அதிகம் என்பதால் ரத்தத்தில் மெதுவாகவே சர்க்கரையைச் சேர்க்கும். எனவே, அதை உண்ணலாம். தினசரி காலை ஓட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவைச் சாப்பிடலாம். நட்ஸ், பெர்ரி போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிடும்போது ருசியும் கிடைக்கும். ஓட்ஸில் நார்ச்சத்துக் கிடையாது. ஆனால், தாய்ப்பால் பெருக்கத்துக்கு அது அவசியம்.தினசரி எட்டு கிளாஸ் தண்ணீராவது அவசியம் பருகுங்கள். அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது அன்னைக்குத் தொந்தரவான விஷயம்தான். ஆனால், குழந்தையின்  உடலில் நஞ்சு சேராமல் தவிர்க்க அது முக்கியம்.விதவிதமான சாலட்களை உண்ணலாம். டோபு கரி போன்றவற்றைச் செய்து நாக்கையும் சந்தோஷப்படுத்தலாம்.

உணவு விதி 13

ப்ராசஸ்டு உணவுகளைத் தொடாதீர்கள்; ஜங்க் ஃபுட்ஸும் வேண்டாம். இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான உணவு விதி இது. வீட்டை விட்டு வெளியில் இறங்கினாலே பானிபூரி, பேல்பூரி, காளான், பர்கர், பீஸா முதல் பார்பிக் சிக்கன், கிரில் சிக்கன் வரை விதவிதமான உணவுகள் நம் நாவை எச்சில் ஊற வைத்துவிடுகின்றன. நாசியை வசீகரித்து நாக்கை அடிமைப்படுத்தும் இந்த உணவுகள் உடலின் முதன்மையான எதிரிகள். என்றாவது ஒரு நாள் கொஞ்சம் அளவாகச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி இப்படியான உணவுகளை உண்பதும் வயிற்றுக்கும் நல்லது இல்லை; பர்ஸுக்கும் நல்லது இல்லை.

நெய்யிலும் நடக்குது கலப்படம்

நெய்யில் எடை அதிகரிப்பதற்காக வனஸ்பதி அல்லது வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கைக் கலக்கிறார்கள் கலப்பட மன்னர்கள். இதை சாதாரணமாகக் கண்டறிய வழிமுறைகள் ஏதும் இல்லை. பரிசோதனை மையங்களில் கொடுத்தால் மட்டுமே இந்தக் கலப்படத்தைக் கண்டுபிடிக்க முடியும். நல்ல தரமான பிராண்ட் நெய்யாக வாங்குவது நல்லது. அதைவிட, நெய்யைக் கடையில் போய் வாங்குவதைவிட வெண்ணெயை வாங்கிக் காய்ச்சுவது மிகவும் சிறந்தது.

அரிசி வரலாறு

இந்தியாவில் அதிகம் உற்பத்தியாகும் உணவுப் பொருள் அரிசிதான். அதேபோல், வட இந்தியர்களில் கணிசமான மக்களாலும் தென்னிந்தியர்களில் முழுமையானவர்களாலும் பிரதானமாக உண்ணப்படும் உணவும் அரிசிதான். ஆனால், நெல்லின் பூர்வீகம் இந்தியா அல்ல. சீனம்தான். மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்த ஒரு சில நூற்றாண்டுகளிலேயே நெல்லின் பயன்பாட்டையும் கண்டறிந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சுமார், 12,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெல்லின் பாசில் படிமங்கள் சீனாவில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சீனாவின் நதிக்கரைகள்தான் நெல்லின் தாய்மடி என்று முடிவு செய்துதிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அங்கிருந்து சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும் தெற்காசியாவின் பிற பகுதிகளுக்கும் பரவிய நெல், கடந்த இரண்டாயிரம் வருடங்களாகத்தான் உலகம் முழுதும் பரவியிருக்கிறது என்கிறார்கள். இந்தியாவின் பழமையான நாகரிகத்தைச் சொல்லும் சிந்து, சமவெளி நாகரிகங்களில்கூட நெல்லின் பயன்பாடு இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

- இளங்கோ கிருஷ்ணன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்