SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரீன் மென்சுரேஷன்.........

2018-10-09@ 13:54:20

நன்றி குங்குமம் தோழி

மகிழ்வாய் கடப்போம் மாதவிடாய் நாட்களை...

டாக்டர் அபிராமி பிரகாஷ் ஒரு நேச்ரோபதி மருத்துவர். இவர் கேரளாவில் கோட்டையம் பக்கத்தில் செங்கணச்சேரியில் உள்ள ஒரு  மிஷினரி மருத்துவமனையில் மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றுகிறார். இவரது எண்ணத்தில் உதித்ததுதான் ‘பிறை’. இவர்கள் பெண்கள் மத்தியில் கிரீன் மென்சுரேஷன் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். துணியால் மென்சுரேஷன் பேடுகளை உருவாக்கி  விற்பனையும் செய்கின்றனர். பிறை முழுநிலவாய் வளர்ந்த கதையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அபிராமி...

“நான் வேலை பார்க்கிற மருத்துவ மனையின் ஒரு பகுதியில் கேன்சர் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துவது, அமைப்புகள் மூலமாக பள்ளியில் என்னோட விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்துவது என செயலாற்றி வந்தேன். கேரளாவில் சானிடரி நாப்கின்களைப்  பயன்படுத்திவிட்டு அதை அப்படியே தூக்கிப்போட முடியாது. ஒவ்வொரு மாசமும் பயன்படுத்திய மென்சுரல் பேடை வெளியேற்றுவது பெரிய கவலையாக இருந்தது. இதற்கு ஏதாவது தீர்வு கண்டுபிடித்தே ஆகவேண்டும் எனத் தேடியபோதுதான் கப், கிளாத் பேட் என நிறைய விஷயங்கள் பற்றி அறிந்தேன். அதன்பிறகு எனக்கான துணிப் பேடை பயன்படுத்தத் தொடங்கினேன்.

எனக்கு அது மிகவும் வசதியாக  இருந்தது. எனது வாழ்க்கை முறையே மாறின மாதிரி இருந்தது. துணிப் பேடில் இன்னும் சிறந்ததாக எல்லோரும் பயன்படுத்தற மாதிரி கொண்டு வரவேண்டும் என விரும்பினேன். பெண்களைத் தாக்குகிற புற்று நோயில் கருப்பை வாய்ப் புற்று நோய் முக்கியமானதா இருக்கிறது. தற்போது இந்தியாவில் பெண்கள்  பயன்படுத்துகிற சானிடரி நாப்கினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது பற்றி இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கவில்லை. அதில் என்னென்ன பயன்படுத்தப்பட்டிருக்கு, அது பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் வைக்க ஏற்றதா என்பது பற்றியெல்லாம் யோசிக்க  வேண்டியிருக்கு. இங்கு வழங்கப்படுகிற நாப்கின் கவரில் உள்ளே என்னென்ன இருக்கின்றது எனத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.   

பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கினில் என்னென்ன கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது? நாப்கின் பேட் இவ்வளவு மெலிதாக இருக்க என்ன மெக்கானிசம் பயன்படுத்தப்படுகிறது? இப்படி எதுவுமே நமக்குத் தெரியாது. இந்தியாவில் இதைக் கண்காணிப்பதற்கான அமைப்பு எதுவும் இல்லை. 1980ல் தான் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த சானிடரி பேட்  எவ்வளவு லிக்விடை உறிஞ்சிக்கொள்கிறது என்பது பற்றி மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் இருப்பது காட்டனா, அது உடலுக்கு  உகந்ததா என்றெல்லாம் பார்க்கப்படவில்லை. விஸ்பர் வந்த புதிதில் நான்கு மணி நேரம் பயன்படுத்தலாம் என்றார்கள்.

இது 8 மணி நேரம்  ஆச்சு. இப்ப 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என விளம்பரப்படுத்துகிறார்கள். இதற்காக அந்தப் பேடில் என்ன சேர்க்கப்படுகிறது  என்பது நமக்குத் தெரியாது. பெண்ணுடலில் மற்ற இடங்களில் உள்ள சருமம் மாதிரி பிறப்புறுப்புப் பகுதியில் இருக்காது. நுண்ணுணர்வு நரம்புகள் அதிகம் இருக்கும் மிகவும் மென்மையான சென்சிட்டிவான பகுதி அது. ரசாயனங்கள் விரைவாக அந்த இடத்தால் உரிஞ்சப்படும்.  தொடர்ந்து சானிடரி நாப்கின் பயன்படுத்துவதால் அந்த இடத்தில் நுண்ணுணர்வுகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. நான் சானிடரி நாப்கின் பேடை ஆய்வு செய்தேன்.

அதில் இருப்பது காட்டன் கிடையாது. வுட் பல்ப். அதாவது மரக்கூழ். இதனை பிளீச் செய்து வெள்ளையாக மாற்றுகின்றனர். பிளீச் செய்யும் போது குளோரைடு பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து டயாக்சின் வெளியாகுது. இந்த டயாக்சின் கேன்சரை உண்டாக்கும் கெமிக்கல் தன்மை கொண்டது. இந்த டயாக்சின் நாம் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்ல இருக்கு. இதைத்தான் ஒவ்வொரு மாசமும்பயன்படுத்துறோம். இதெல்லாம் தெரிய வந்தபோது ஒரு மருத்துவரா மன அழுத்தத்தை உணர்ந்தேன்.  இது பற்றி  நோயாளிகளிடம் பேசத் துவங்கினேன். பாலிசிஸ்டிக் ஓவரீஸ் பிரச்னை உள்ள பெண்களுக்கு எப்போ பீரியட்ஸ் வரும்னே தெரியாது.

அவர்கள் வேலைக்குப் போகும் சமயத்தில்  தினமும் பேடை பயன்படுத்துவதாகச் சொன்னார்கள். மெனோபாஸ் நேரத்திலும் சில பெண்கள் அதிக நாட்கள் சானிடரி நாப்கின்களை  பயன்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் சுற்றுச்சூழலை இது எப்படி பாதிக்கிறது என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். நகரம், கிராமம் என எல்லா இடத்திலும் பயன்படுத்திய நாப்கினை கவரில் கட்டித் தூக்கி எறிகிறோம். ஒரு சானிடரி பேட் மக்குவதற்கு 500  ஆண்டுகள் ஆகும். ஒரு பெண் 15 வயசுல இருந்து 50 வயசு வரைக்கும் சானிடரி நாப்கினை உபயோகித்து தூக்கிப் போடுறாங்க. அப்படியெனில் ஒரு பெண் அவளின் வாழ்நாளில் 135 கிலோ நாப்கின்களை தூக்கி எறிகிறார்.

இந்தியாவில் சுமார் 355 மில்லியன் பெண்கள்  இருக்கிறார்கள். ஒவ்வொருத்தரும் 135 கிலோ எனும்போது எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் மாசு என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு பொருளை பயன்படுத்த துவங்கும்போதே அது இறுதியில் என்னவாகும் என யோசிக்க வேண்டும். நாப்கினை வாங்கி பயன்படுத்தி  விட்டுத் தூக்கிப் போடுகிறோம். குப்பையை பராமரிப்பவர்கள் அதை கையால் தூக்கிப் போடுறாங்க. அது மண்ணில் சேரும் போது  சுற்றுச்சூழலில் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என பலவிதமாக யோசித்தபோதுதான் இதற்கு மாற்றான ஒரு விஷயத்தைக்  கொண்டுவர வேண்டுமெனத் தீவிரமானேன்.

ஒரு கடைக்குப் போகிறோம் சானிட்டரி நாப்கினோட, கிளாத் பேடும் விற்பனைக்கு இருந்தால் மக்கள் அதை வாங்கிப்பயன்படுத்துவார்கள்.  அப்படியொரு விருப்பத் தேர்வை எல்லாப் பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக கிளாத் பேட் உருவாக்கிற முயற்சியில் ‘வெல்  பீயிங்’ என்ற பெயரில் என்னோட நிறுவனத்தைத் தொடங்கினேன். மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நிலையான தீர்வு இவை  இரண்டும்தான் என்னுடைய நோக்கம். மாதவிடாய் குறித்துப் பேசுவதில் இருக்கிற தயக்கத்தை முதலில் உடைக்க வேண்டும். அதற்கான  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறேன்.

பாளையங்கோட்டைப் பள்ளியில ஒரு பெண் குழந்தை மாதவிடாய் நேரத்தில் அவளின் உடையில் ரத்தக்கறை பட்டு, அதை பலரும் கேலி  பண்ணியதால் அவள் தற்கொலை செய்து கொண்டாள். ஆண்கள் பெண்களோட மாதவிடாய் நேரத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். இந்த விஷயத்தில் ஆண்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கு. இந்த சம்பவத்துக்கு அப்புறம் பள்ளிக்  குழந்தைகளிடம் இது பற்றிப் பேச ஆரம்பித்தோம். பெண்ணோட உடையில் ரத்தக்கறை படுவது சாதாரண விஷயம். மனசுல அது கெட்டது  என்ற எண்ணம் பதியப்பட்டிருக்கு. யார் என்ன சொன்னால் என்ன அதற்காக அவமானப்படத் தேவையில்லையென அந்தப் பெண்  குழந்தைக்குத் தோணவில்லை.

இதைப் பெண் அவமானமாக உணர்வதால் இது போன்ற முடிவுகளை பெண் குழந்தைகள் எடுக்குறாங்க. மாற்றத்திற்காக எல்லோரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது. ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் நேரத்தில் 150 மில்லி ரத்தம் தான் வெளியேறுகிறது. விளம்பரத்தில் ஒரு பேட் 200 மிலி வரை உறிஞ்சும் என விளம்பரப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு மாதமும் தன்னுடைய உடம்பில் இருந்து எவ்வளவு ரத்தம் வெளியேறுகிறது என்பதுகூட ஒரு பெண்ணிற்குத் தெரிவதில்லை. மாதவிடாய் தொடர்பான விஷயங்களை பெண்ணே சிந்திப்பதில்லை. நமது அறியாமையைப் பயன்படுத்தி சிலர் இதை பிசினஸ்  செய்கிறார்கள். நாங்க லூனார் காலண்டர் பண்ணியிருக்கோம். நிலாவிற்கும் பெண்களுடைய பீரியட் சைக்கிளுக்கும் தொடர்பு இருக்கு.  

அறிவியல் வளர்ச்சி அடைவதற்கு முன் நிலாவால்தான் மாதவிடாய் பெண்களுக்கு வருதென நம்பியுள்ளனர். நிலவு வளருது, தேயுது. நிலாவின் சுழற்சியும் 28 நாட்கள்தான். பிரசவத்துக்கு பத்து மாசம் என்பது 280 நாட்கள்தான் எனச் சொல்லுவோம். நிலா மாதிரி ஒவ்வொரு  நாளும் பெண்ணோட உடம்பு மாற்றம் அடையுது. உள்ளிருக்கும் திசுக்கள் வளருது, பெண்ணோட மனநிலை மாறுது. விளைவு  ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்ல மாற்றங்கள் ஏற்படுது. இதனால் கூட பெண்களுக்கு அதிகக் கோபம் வரலாம். இதை அனைத்தையும் அவர்களுக்கும் சொல்கிறோம். இந்த மாற்றத்தை ஆண்களுக்கும் புரிய வைக்கிறோம். வெல்பீயிங் அமைப்போட ஒரு  கிளை தான் பிறை.நிறையப் பேர் பாலித்தீன் கவர் பற்றிப் பேசுறாங்க.

இயற்கை உணவுப் பொருட்களைத் தேடி வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு மென்சுரல் பேட் 4 பாலித்தீன் கவருக்கு சமம். குழந்தைகளுக்குப் பயன்படுத்துற டயாப்பரும் இதே தன்மை கொண்டதுதான். மாதவிடாய் பற்றிப் பேசுவதில் உள்ள வெட்கம், தயக்கம் இரண்டும் இதுபோன்ற விஷயங்களைப் பேச விடாமல் செய்கிறது. பாலின சமத்துவத்தில் இதையும் ஒரு பகுதியாப் பார்க்கிறோம். சில நிறுவனங்களில் இது தொடர்பாக நடக்கும் கூட்டங்களில் ஆண்கள் பங்கேற்பதில்லை. பெண்களை மட்டும் அழைத்துப் பேசி  முடிச்சிடுங்க என விலகிப் போகின்றனர். நாப்கின் விளம்பரம் டி.வியில் வருகிறது. எல்லா இடங்களிலும் விளம்பரப் படுத்தப்படுது.

அது  எப்படி பெண்களுக்கு மட்டுமேயான பிரச்னையாகும். இது எல்லோருக்குமான பிரச்னை. இதில் ஆண்களும் பொறுப்பெடுத்துக்கணும். இதை  ஒரு சமூகப் பிரச்னையாகத்தான் பார்க்க முடியும். ஒரு காலத்தில் பெண்கள் காட்டன் துணியை மாதவிடாய் நேரத்தில்  பயன்படுத்தினார்கள். அதை ஆண்கள் பார்க்கவே கூடாது என்ற பயத்தினால், அதை இருட்டான இடத்தில் காயப்போடுவார்கள். அந்தத்  துணியில் தேள், பூரான் தொல்லைக்கும் பெண்கள் ஆளாகியுள்ளனர். நோய்த்தொற்றால் அவதிப்பட்டுள்ளனர். பிறை அமைப்பு மூலமாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் பேட்களை அறிமுகப்படுத்தியிருக்கோம். இந்த பேட்களில் பட்டன்கள்  இருக்கும். பயணம், அலுவலகம் என எல்லா இடத்திலும் பெண்கள் இதைப் பயன்படுத்தலாம்.

பேடை மாற்றும் போது அதை ஒரு ஜிப்லாக்  பவுச்சில் வைத்து எடுத்துக் கொள்ளலாம். வீட்டுக்கு வந்ததும் துவைத்து காயவைத்துக் கொள்ளலாம். இதில் கறை படியாது. பயன்படுத்த எளிதாய் வடிவமைச்சிருக்கோம். பெண்களோட தேவைக்கு ஏற்ப சிறிய மற்றும் பெரிய வடிவத்திலும் இருக்கு. பள்ளிகளில் இது குறித்து  விழிப்புணர்வு வகுப்பு எடுக்கும் போது ஆண் குழந்தைகளையும் வைத்தே சொல்லித் தருகிறோம். பதின்ம வயதில் பல வழிகளிலும் பெண்ணைப் பற்றி ஆண் தேடித் தெரிந்து கொள்கிறான். அப்படித் தேடிக் கிடைக்கும் விஷயங்களில் அவளுக்குள் மாதம்தோறும் இப்படி ஒரு  விஷயம் நடக்கிறது என்பதை யாரும் கற்றுத் தருவதில்லை. தமிழ்நாட்டில் சிவகாசியில் உள்ள அரசுப் பள்ளிகளில் இது பற்றிய  விழிப்புணர்வு வகுப்புகளை எடுத்திருக்கிறோம்.

சானிடரி  நாப்கின்ல உள்ள  அபாயங்களை இன்றைய இளம் பெண்கள் புரிந்து கொண்டு கிளாத் பேடுக்கு மாறிக்கொண்டு வருகிறார்கள். நமக்கும் நல்லது, இயற்கைக்கும் நல்லது என யோசிக்கும் குழந்தைகளும் மாறிடுறாங்க. கிளாத் பேட்ல எந்த கெமிக்கலும் இல்லை. இது  கொஞ்சம் வித்தியாசமான  துணி. சாதாரண தண்ணீர்ல ஊறவச்சுத் துவைச்சால் இதில் இருக்கிற கரை போய்விடும். இதுல உள்ள கடைசி லேயர்ல ஒரு ஆன்டி லீக் வச்சிருக்கோம்.
பாலியுரேத்தின் லேயர் அது. இதனால லீக் ஆகாது. ஒரு பேடை 2 ஆண்டுகள் வரைக்கும் துவைத்துப் பயன்படுத்தலாம். இதையும் பழைய துணிகளைப் போல எரித்து விடலாம்.

மண்ணோடு மக்கிப் போகும். மெனோபாஸ், யூட்ரஸ் பிரச்னை உள்ளவங்க முதல்ல அவங்க ஹெல்த் பிரச்னைய சரி செய்ய வேண்டும். தினமும் கெமிக்கல் பேட் பயன்படுத்தினா அவங்க உடல்நலம் ரொம்பவே மோசமாகும். காட்டன் பேட் யூஸ் பண்ணும் போது எரிச்சல், தொடைகளில் புண், பிறப்புறுப்பு பகுதியில அதிக  வெப்பம், அந்த இடம் அதிக கருப்பாவது போன்ற பிரச்னைகள் இருக்காது. கிளாத் பேட் மாதிரியும் இருக்கு. டவல் மாதிரியும் இருக்கு. துவைத்துக் காய வைக்கிறதும் பிரச்னை இல்லை. துணி பேட் பயன்படுத்துவது குறித்து முதலில் விழிப்புணர்வு மட்டும் தான் செய்தோம். பேசி முடித்த பிறகு அனைவரும் கேட்கிற கேள்வி  இந்த பேட் எங்கே கிடைக்கும்?

ஆன்லைன்ல போங்க, அமேசான்ல தேடுங்க எனச் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தோம். எல்லாப் பெண்களும் ஆன்லைன்ல வாங்குகிற நிலையில் இல்லை. அம்மா சிவகாசில இருக்காங்க. என் தங்கை பானுமதி ஒரு டிசைனர். எல்லாரும் சேர்ந்து இதுக்கு ஒரு தீர்வு கொண்டு வரவேண்டும் என நினைத்தோம். நான் கனவு கண்ட ஒரு விஷயத்துக்கு என் தங்கையும் அம்மாவும் வடிவம் கொடுத்திருக்காங்க. கிரீன் மென்சுரேஷன்ற மாற்றத்துக்கு நாங்க குடும்பமா முயற்சித்தோம். இப்போ என் தங்கை பானுமதி கிளாத் பேட்ஸ் விற்பனை செய்யறாங்க. நான் இதற்கான தேவை மற்றும் விழிப்புணர்வை செய்யறேன். பாலின சமத்துவத்தை எட்டுவதற்கான முதல்படியா நான் இதைப் பார்க்கிறேன், என்கிறார் அபிராமி.”

- யாழ் ஸ்ரீதேவி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

 • 13-12-2019

  13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்