SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காற்றின் மொழி

2018-09-28@ 12:42:39

நன்றி குங்குமம் தோழி

சோவெனப் பெய்யும் மழை, அருவியில் ஆர்ப்பரிக்கும் நீர், திடீரென விழும் இடி, பறவைகளின் கீச்..கீச் ஒலி, மிரட்டும் விலங்குகளின்  சத்தம், புல்லாங்குழலின்  மெல்லிசை. இதமாய்  வருடும் காற்றின் மென்மை, இவற்றோடு இணையும் காற்றின் மொழியோடு, இவ்வுலகம்  பலவித சத்தங்கள் நிறைந்தது. அந்த சத்தங்கள் நம் செவிகளுக்குள் சுத்தமாக விழவில்லை என்றால்..? சத்தங்கள் புகாத அறையில்  இருந்தால் அதன் விளைவு புரியும். செவித் திறன் குறையோடு பிறந்த தன் குழந்தை பிரனீத்தாவுடன் தன் உணர்வுகளை நம்மிடம்  பகிர்ந்தார் பிரபாவதி.

  “தன் குழந்தை ஏதோ ஒரு குறையுடன் பிறந்துவிட்டால் அவ்வளவுதான்.. குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் எதிர்காலம்  இருட்டத்தான் துவங்கும்… குறை இருந்தால் என்ன? அது என் குழந்தை.. அவள் தன் குறைகளைக் களைந்து தன்னம்பிக்கை நடை போட  வேண்டாமா? சொந்தக் காலில் அவள் நிற்க வேண்டாமா?. பெற்றோராகிய நாங்கள் அதற்கு துணை நிற்க வேண்டாமா?” என நம்மிடம்  பேசத் துவங்கினார் பிரபாவதி.என் திருமணம் உறவுக்குள் நடந்தது. சொந்த தாய் மாமா மகனை திருமணம் செய்து கொண்டேன். என் மகள்  பிரனீத்தா பிறந்து செவிலியர்கள் அவளை என் கைகளில் கொடுத்தபோது, அவளின் கை விரல்களில் இரண்டும், கால் விரல்களில்  இரண்டும் ஒட்டி பிறந்திருந்தன. ஒரு சொட்டு கண்ணீர்கூட எனக்கு வரவில்லை. யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளவும் இல்லை.  ஆனால் அந்த நிமிடம் என் பிள்ளையை நன்றாகக் கொண்டுவர வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். அவளுக்கு வேறு  எதுவும் குறை உள்ளதா என மற்ற பரிசோதனைகளும் எடுத்தோம்.

அவளின் குழந்தைப்பருவ செயல்பாடுகள் எல்லாம் மிகவும் தாமதமாகவே இருந்தது. அவளுக்கு பிறப்பிலே செவித்திறன் குறை இருப்பது  அப்போது எங்களுக்கு தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவளை பெயர் சொல்லி அழைத்தபோது திரும்பிப் பார்க்காமலே இருந்தாள்.  எதையாவது சத்தம் வரும் அளவு கீழே போட்டால்கூட அதிர்வில் அவள் திரும்புவது இல்லை என்பதைத் தாமதமாய் உணர்ந்தோம். 95 சதவிகிதம் செவித்திறன் குறை அவளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதை அறிந்தபோது இரண்டு ஆண்டுகள்  கடந்திருந்தன.

நம்மைச் சுற்றி நிகழ்பவற்றின் சப்தங்கள் செவிக்குள் சேரவில்லை என்றால் இயல்பாகவே பேச்சுத் திறனும் இருக்காது. எனவே அவளின்  தொடர்பியல் மொழி போனது. மருத்துவர்களின் பரிந்துரையால் அவளுக்கு பாக்கெட் ஹியரிங் எய்ட் வாங்கி பயன்படுத்தத் துவங்கினோம்.  அவளை பேச வைக்க முயற்சிகளை தொடர்ந்து எடுத்தோம்.. அப்போது சென்னை தியாகராயநகரில் செயல்படும் சிறுமலர் செவித்திறன்  குறைபாடுடையோர் பள்ளி பற்றித் தெரியவந்தது. அங்கு பிரனீத்தாவை சேர்த்தபோது அவளின் வயது ஐந்து. செவித்திறன் குறைபாடுடைய  குழந்தைகளை மிகச் சிறு வயதிலேயே, அதாவது ஒரு வயதுக் குழந்தைகளைக்கூட அவர்கள் சேர்த்து, கனிவுடன் மொழியினை கற்றுக்  கொடுப்பதும், கேட்க வைப்பதும் எனக்கு பிரமிப்பாக இருந்தது.

அரசு உதவிபெற்று இயங்கும் அந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் மிகமிக அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்கள். முன்பே  அறிந்திருந்தால் பிரனீத்தாவை விரைவாய் அங்கு சேர்த்திருக்கலாம் என்று எப்போதும் நினைப்பேன். எவ்வளவு சீக்கிரம் போகிறோமோ  அந்த அளவுக்கு மொழி வசப்படும்.பள்ளிக்குச் சென்றதும் ‘பிகைன்ட் இயர் ஹியரிங் எய்ட்’ வாங்கி பயன்படுத்தத் துவங்கினோம். ஒலியினை  சுத்தமாக உணராத குழந்தைகள், திடீரென இரைச்சல் சத்தம் செவிக்குள் வந்தால் பயப்படுவார்கள். கொஞ்சம் கொஞ்சமான ஒலியின்  அளவை ஏற்றித்தான் அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். பள்ளியில் முதல் பாடமாக எப்போதும் தொடர்ச்சியாய் ஹியரிங் எய்ட்  குழந்தைகள் தானாகவே போடவும், கழட்டவும் பழக்கப்படுத்துவார்கள்.

ஹியரிங் எய்டுடன் எப்போதும் இருப்பதே குழந்தைக்கு நல்லது.. அப்போதுதான் பேருந்துகள் வரும் சத்தம் கேட்கும். சிறுமலர் பள்ளியில்  குரூப் ஹியரிங் மெஷின் மூலமாக ஆசிரியர்கள் மைக் வைத்து அதில் பேசி பாடத்தை கற்பிப்பார்கள். வார்த்தைகள் காதில் விழாத  நிலையில், பொருட்களின் பெயர் தெரியாது. ஒரு பொருளை, உதாரணத்திற்கு பஸ் எனச் சொன்னால் புரியாது. பஸ் படம் வரைந்து  காண்பித்தால்தான் பஸ் எனத் தெரியும். படம் பார்த்துத்தான் எதையும் உணர்வார்கள். சாப்பாடு எனத் தெரியும். ஆனால் அதன் பெயர்  தெரியாமலே இருக்கும். சாப்பாட்டின் அத்தனை வகையும் படமாக ஒட்டி சொல்ல வேண்டும். அவர்களையும் சொல்ல வைக்க வேண்டும்.  நம்மை பார்க்கும்போது லிப் மூவ்மென்ட் வைத்து குழந்தை நாம் பேசுவதைக் கண்டு பிடிப்பாள்.

அவளின் 4 வயது முதல் 9 வயது வரை 5 வருடங்கள் தொடர்ந்து அவளோடு பள்ளிக்குச் சென்றேன். குழந்தையின் குறைபாடு எந்த அளவு  என்பதை ஆசிரியர் அறிந்து அதற்கேற்ப ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பெஷல் அன்டென்ஷன் கொடுப்பார்கள். வண்ணங்களை அடுக்குவது,  பொருட்களை அடையாளம் காண்பது என விளையாட்டு மூலமாகவே கற்றுத் தருவார்கள். ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை கூடவே  இருந்து கவனித்து, அதே முறையை பயன்படுத்தி பெற்றோர் வீட்டிலும் பயிற்சி கொடுக்கும்போது பேச்சு மொழி விரைவில் வரும். படிப்பு  தவிர மற்ற செயல்பாடுகளான விளையாட்டு, ஓவியம், நடிப்பு என குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறார்கள். இப்போது அவளாகவே பள்ளிப்  பேருந்தில் ஏறித் தனியாகச் செல்கிறாள். இந்தத் தன்னம்பிக்கை பள்ளி சென்றதாலே வந்தது. நம் குழந்தைக்கு பிரச்சனை இருக்கிறது எனத்  தெரிந்தால், தாமதிக்காமல் உடனடியாக செயலில் இறங்க வேண்டும். குழந்தைகளின் விருப்பம் அறிந்து அந்தத் துறையில் அவர்களை  தனித்துவமாக வளர்த்தெடுக்க வேண்டும். எனக்கு நேரமில்லை, வேலை இருக்கிறது என்கிற சாக்குபோக்கு எல்லாம் சரியாக வராது. நம்  குழந்தையை நாம் பார்க்கவில்லை என்றால் யார் பார்ப்பார்கள்?” என்கிற கேள்வியுடன் முடித்தார்.

செவித்திறன் குறைபாடு குழந்தைகளின் கற்றல் முறை பற்றி அறிய அவர்களுக்காகச் செயல்படும் தியாகராய நகரில் இயங்கும் சிறுமலர்  பள்ளியை அணுகியபோது, இன்முகத்தோடு நம்மை வரவேற்ற அதன் தலைமை ஆசிரியர் சிஸ்டர் ஜெசிந்தா ரோஸலினோடு, அப்பள்ளியின்  ஒரு சில ஆசிரியர்களான புவனா, உஷா, நிர்மலா, குளோபிள்டா மற்றும் ராணி ஆகியோர் குழந்தைகளின் கற்றல் முறை குறித்து  விவரித்தனர். அடையாளம் தெரிவதற்காக எங்கள் மாணவர்கள்ஆசிரியர்களை பேர் வைத்தே அழைப்பார்கள் என பேச ஆரம்பித்தனர்…“செவித்திறன் இழப்பு எவ்வளவு ஏற்பட்டிருக்கிறதோ அதைப்பொறுத்தது குழந்தைகளுக்கு மொழி வருவதும் வராமல் இருப்பதும். ஹியரிங்  எய்டைப் பொறுத்தவரை நாம் எப்போது குழந்தைக்கு பொருத்துகிறோமோ அன்றுதான் அவர்களுக்கு டே ஒன். முறைப்படி ஹியரிங் எய்டை  பயன்படுத்தப் பழக்க பெற்றோருக்கும் அறிவுரை தருவோம்.

பேச்சு மொழியிலேயே குழந்தைகளுக்குக் கற்பிப்போம். அதாவது தாய்வழி மொழி முறை. அம்மா குழந்தையிடம் பேசுவதுபோல்  ஆசிரியர்களும் குழந்தைகளிடம் பேசுவோம். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 வார்த்தைகளையாவது சொல்ல வைப்போம். கிண்டர் கார்டன்  குழந்தைகளுக்கு தினமும் பெற்றோர் உடன் இருந்து கற்றலை கவனிப்பார்கள். 5ம் வகுப்பு வரை பெற்றோர் தேவைப்படுவர்.  குழந்தைகளுக்கு கற்பித்தலின் வழிமுறைகளை பெற்றோர்களுக்குச் சொல்லித் தருவோம். நாங்கள் எப்படி குழந்தைகளிடம் பேசுகிறோமோ  அதே பயிற்சியை வீட்டில் பெற்றோர் வழங்க வேண்டும்.

லலலலா…உஉஉஊ.. வாவாவா… தாதாதா… என உயிர் எழுத்தின் ஒலி, மெய்யெழுத்தின் ஒலி என ஒலி வடிவில் மொழியைக் கொண்டு  வருவோம். ஒலியை கேட்க வைத்து கேட்க வைத்து, மொழியை கொண்டு வருவோம். அதன் பிறகு வார்த்தைகளை ஸ்பீச் பலூன்  பயன்படுத்தி சொல்ல வைப்போம். நடித்தும் காட்டுவோம். காட்சிகளாகக் கொண்டு வருவோம். செயல்களை உணர வைப்போம். ஒரு  வார்த்தையை காதில் வாங்கும்போது அந்தப் பொருளை அடையாளப்படுத்தத் தெரியாது. அதைக் காட்சி வடிவில் காட்ட வேண்டும். இது  தான் இட்லி, சட்னி, சாம்பார் என அன்றாடம் அவர்கள் எடுத்து வரும் உணவுகளை வைத்தே காட்சிகளாகச் சொல்லித் தருவோம்.  சப்பாத்திக்கு குருமா, இட்லிக்கு சட்னி தொட்டுதான் சாப்பிட வேண்டும் என்பவற்றையும் படத்தின் மூலமே புரிய வைப்போம். நிறங்களை  அடையாளப்படுத்த சொல்வோம். நீளம், அகலம், குட்டை, உயரம், விரைவாக, மெதுவாக என எல்லாத்தையும் உணர வைப்போம்.

மொழியில் மட்டுமே எங்களுக்கு முதல் கவனம். உரையாடல், ஆடிட்டரி டிரெயினிங், ரீடிங், கிரியேட்டிவ் ரைட்டிங், ஸ்டோரி, ரைம்ஸ் என  கூடுதல் பாடங்களும் நிறைய உண்டு. பொருள், குரல், எழுத்து மூன்றையும் அவர்களுக்கு காட்சிப்படுத்திக் காட்டுவோம். அவர்களுக்கென  நிறைய  50 முதல் 100 பயிற்சிகள் உள்ளன. ஒரு நாளைக்கு குறைந்தது 5 சொற்கள், அதற்கு 20 விதங்களில் பயிற்சி கொடுப்போம்.  நாங்கள் கொடுக்கும் பயிற்சிகளைப் பெற்றோர் வீட்டிலும் சொல்லித் தரும்போது குழந்தையின் மொழி வசப்படும்.

இந்த  உலகத்தில் சத்தம் இருக்கிறது  இல்லை என்பதை மத்தளத்தை பயன்படுத்தியே உணர வைப்போம். மத்தளம், மணி, விசில் இதை  வைத்து சத்தங்களின் வேறுபாட்டையும் உணர வைப்போம்.. அதில் குறைவாக மற்றும் நீண்ட ஒலிகளையும், அளவையும் உணர  வைப்போம். பிறகு வார்த்தைப் பிரயோகத்தை சொல்ல வைக்க முயற்சிப்போம். வார்த்தைகளை குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள்  இழுக்காமல் முடிக்கக் கற்றுத் தருவோம். ரிதமிக்காக டிரம் பீட் வைத்தும் கொண்டு வருவோம். குழந்தைகளின் குதூகலத்தில் இருந்தே  வார்த்தைகளை வரவைப்போம். விலங்கு, பறவை, வாகனங்களின் சத்தங்களை வைத்தே ஆரம்பிப்போம். கவனத்தை ஒருங்கிணைத்த பிறகு  பாடம் கற்றலை, வார்த்தைகளை, கேள்விக்கு பதிலை சொல்ல வைப்போம். கோயில் எது, சிற்பம் எது, வீடு எது, மிருகக்காட்சி சாலை எது  என எல்லாவற்றையும் இணையம் மூலமாக விஷுவலாகச் சொல்லித் தருவோம். குரூப் ஹியரிங் எய்ட், சிஸ்டம், புரஜெக்டர் என எல்லா  வசதிகளும் எங்கள் பள்ளியில் உள்ளன.

லாங்வேஜ் ஸ்கில்ஸ், லிஸனிங் ஸ்கில்ஸ், தாளம், நடன அசைவு என எல்லா வழிகளிலும் மொழிகளை குழந்தைகள் அறியத்  துவங்குவார்கள். இம்முறைகளை தொடர்ந்து பயிற்சி பெறுவதன் மூலமாக நம்மைப்போலவே பேசத் துவங்குவார்கள். இதற்கு பெற்றோர்,  ஆசிரியர், மாணவர் மூவரின் ஒத்துழைப்பு மிகமிக முக்கியம். இணைய பயன்பாடு, கை பேசிகளின் பயன்பாடு தற்போது அதிகமானதால்  தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கில அறிவு தேவைப்படுகிறது. எனவே ஆங்கிலத்தில் சின்னச் சின்ன வார்த்தைகளையும் அவ்வப்போது  சொல்லித்தரத் துவங்கியுள்ளோம். சில பெற்றோர் படிப்பறிவற்றவர்களாக இருப்பதாலும், ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும்  ஒருசில குழந்தைகளும் சற்று பின்தங்கி இருப்பார்கள். அவர்களை மேலே கொண்டுவரவும் சிறப்புக் கவனம் எடுக்கிறோம். எங்கள் இலக்கு  தாய் மொழியில் அவர்களை பயில வைப்பது. எந்தக் குழந்தையையும் முடியாது என விடமாட்டோம். எப்படியாவது பேச வைத்து, படிக்க  வைப்பதே எங்களின் நோக்கம்.

தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கிலம் கிடையாது. ஆங்கில வழி பயில்வோருக்கு தமிழ் கிடையாது. அரசுத் தேர்வும் இப்படித்தான்  இருக்கும். எங்கள் மாணவர்களுக்கு தேர்வில் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். 10ம் நிலை வரை 4 பாடங்கள்தான் அவர்களுக்கு.  தமிழ், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என 400 மதிப்பெண்கள் மட்டுமே. பிறகு +2 தேர்வுக்கு  ஆங்கிலம்1, ஆங்கிலம் 2 என தனி  பயிற்சி கொடுத்து ஆங்கில மொழியினைக் கற்றுத் தருவோம். இதற்கான தேர்வை தனியாக நடத்தி தனிச் சான்றிதழ் வழங்கப்படும்.  அப்போதுதான் அரசுப் போட்டித் தேர்வுகளை அவர்களால் எதிர்கொள்ள முடியும். எங்கள் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக  மதிப்பெண் எடுப்பதில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளனர்.

விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளிலும் மாநில அளவில் விருதுகளை வென்றுள்ளனர். மேலும் எங்களிடம் கற்ற மாணவர்கள்  வங்கி, ரயில்வே, அணுமின் நிலையம் மற்றும் ஐ.டி துறை சார்ந்து பரவலாகப் பணியில் உள்ளனர். எங்கள் பள்ளியில் விடுதி வசதியும்  உண்டு. பிற மாவட்ட மாணவர்கள், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் விடுதியில் தங்கி பயில்கிறார்கள். ஐந்தாம் வகுப்புவரை  இருபாலரும் பயில்கிறார்கள். ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகு மாணவிகள் மட்டுமே. மாணவர்கள் அடையாரில் உள்ள பள்ளிக்கு  அனுப்பப்படுவார்கள். சிறப்புப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கல்லூரிப் படிப்பை ரெகுலர் கல்லூரியில் மற்ற மாணவர்களோடு இணைந்து  அவர்களுக்கு சமமாகவே பயில்கிறார்கள்.

டி.வி.யில் வால்யும் இல்லை என்றால் நம்மால் செய்தியை புரிந்துகொள்ள முடியாது. ஆனால் செவித்திறன் குறைபாடுடையோர் நன்றாகப்  புரிந்து கொள்வார்கள். சைன் லாங்வேஜ் நாங்கள் ஊக்குவிப்பதில்லை. அவர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது தொடர்புபடுத்த சைகை  மொழியில் பேசுகிறார்கள். அது இயல்பாய் அவர்களுக்கு வருகிறது. அவர்களை பேச வைப்பதும், படிக்க வைப்பதுமே எங்களின் குறிக்கோள்.  எங்கள் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இரவு பகல் கடந்து, மாணவர்கள் நிலை அறிய ஹோம் விசிட் செய்கிறார்கள்.
என் குழந்தை பேசுமா என எதிர்பார்த்து பெற்றோர் வருவார்கள். ஒரு குழந்தையை பேச வைப்பதே ஒவ்வொரு ஆசிரியரின் முன்னிருக்கும்  சவால்” என்கிறார்.       

-மகேஸ்வரி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china_cloning11

  செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

 • snow_river_falls11

  மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

 • christmas_planeealm1

  உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

 • sutrula_12Icehotel1

  சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

 • mumbai_theevibathu11

  மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்