SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உதயமாகும் புதிய பாடலாசிரியர் சுமதி ராம்

2018-09-06@ 14:58:52

நன்றி குங்குமம் தோழி

வெளியாகவிருக்கும் ‘பேரன்பு’ திரைப்படத்தில் ‘அன்பே… அன்பின்’ என்ற பாடலை எழுதி இருக்கிறார் சுமதி ராம். ‘கோடிட்ட இடங்களை  நிரப்புக’ என்கிற தனது கவிதைத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர். சர்வதேச திரைப்பட விழாக்களில்  திரையிடப்பட்டிருக்கும் ‘பேரன்பு’ திரைப்படத்தில் பாடல் எழுதிய அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சுமதி ராம்.

“ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மல்லிபுதூர் தான் சொந்த ஊர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் முடித்தேன். கல்லூரியில்  படிக்கும்போது ராமுடன் நட்பு ஏற்பட்டது. அவர் எனக்கு சீனியர். அவர் நிறைய வாசிப்பார். எனக்கு வாசிப்பு ஆர்வத்தினை ஏற்படுத்தியவர்  அவர்தான். மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போதே நிறைய இலக்கியங்களை, அம்பை, வண்ணதாசன் என நிறைய  எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ராம்தான். ஒரு நாளுக்கு ஒரு புத்தகம் படிக்காவிடில் என்னிடம் பேச வேண்டாம் என்று கூட  சொல்லி இருக்கிறார். அதனால் நிறைய படிக்க ஆரம்பித்தேன். ரஷ்ய, சீன இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்களை படிக்கச் சொல்வார்.  அவற்றை வாசிக்க ஆரம்பித்தேன்.

சென்னைக்கு வரச் சொன்னதும் அவர்தான். சென்னை வந்து எம்.ஃபில் படித்தேன். யூஜிசி தேர்வு பெற்று கல்லூரியில் வேலைக்குச்  சேர்ந்தேன். ராம் நிறைய எழுதுவார். ஆனால் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டார். நான் அவருடைய கவிதைகளை இதழ்களுக்கு அனுப்பி  வைப்பேன். ‘சுபமங்களா’, ‘கல்கி’, ‘காலச்சுவடு’, ‘புதிய பார்வை’ என அவருடைய எழுத்துக்கள் வெளியாகின. அவர் எழுதுவதைப் பார்த்து  எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது” எனச்சொல்லும் சுமதி பிள்ளைகளுக்காக தான் பதினோரு வருடங்களாக செய்து வந்த கல்லூரி
பேராசிரியை வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறார்.

‘‘எனக்குத் தோன்றிய கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதி தொகுத்து வைத்ததெல்லாம் சேர்த்து ‘கோடிட்ட இடங்களை  நிரப்புக’ என்றொரு கவிதைத் தொகுப்பை 2010ல் வெளியிட்டேன். கல்லூரி பேராசிரியை ஆக இருக்கும் போதே நாவல் ஒன்று எழுதினேன். அதைத் திருத்தி எழுதும் படி ராம் சொன்னார். அப்படி திருத்தி எழுதியும் அவருக்கு திருப்தி வராததால் மறுபடி மறுபடி திருத்தினேன்.  கூடிய விரைவில் அந்த புத்தகம் வரக்கூடும். இப்படி என் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ராம் தான் இயக்கும் புதிய படமான  ‘பேரன்பு’ எனும் படத்தை இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடத்தி முடித்தார்.

படப்பாடல்களுக்கான மெட்டுகளும் தயாராகி விட்டன. ஆனால் அவரது நண்பரான நா. முத்துக்குமாரின் இழப்பால் வருத்தமாக இருந்தார். முத்துக்குமாரிடத்தில் யாரை வைத்துப் பார்ப்பது என்று  ஒரு தடுமாற்றம் அவருக்கு. பாடலுக்கும் பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராம் சொல்வதை உணர்ந்து எழுதும் அளவுக்கு  பாடலாசிரியருக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வேண்டுமில்லையா?அப்போது ஒரு நாள் “நான் வீட்டில் தானே இருக்கிறேன்.  உங்களுக்கு உதவி வேண்டுமானால் சொல்லுங்கள்.

எந்த விதத்திலாவது வீட்டில் இருந்த படி என்னால் முடிந்த உதவிகளை செய்து தருகிறேன் என சொன்னேன். அப்படியானால் ‘பாட்டு  எழுதிக்கொடு’ எனச் சொன்னார். நான் அவர் ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என நினைத்தேன். ஒரு வாரம் கழித்து பாட்டுக்கான  மெட்டை அனுப்பினார். எல்லா படத்துக்கும் பாடலின் ஒவ்வொரு கட்டத்தையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளும் ராம் அப்படித்தான் இதையும்  அனுப்பி இருக்கிறார் என நினைத்தேன்.

ஒரு வாரம் கழித்து மெட்டு குறித்து அவர் கேட்ட போது, ‘மெட்டு நல்லா இருக்கு’ என்று  சொன்னேன். நீ நல்லா இருக்கு என்று சொல்வதற்காக நான் மெட்டை உனக்குக் கொடுக்கவில்லை. பாட்டெழுதத்தான் கொடுத்தேன்.  எழுதிட்டியா? என சீரியஸாக கேட்டார். ஒரு மாதம் வரை அவர் உண்மையாகத்தான் சொல்கிறார் என நான் நம்பவே இல்லை.  ‘நிஜமாகத்தானா’ என்று பலமுறைக் கேட்டேன். ‘உண்மையாகத் தான் ஒரு முறை முயற்சி செய். கட்டாயம் வரும்’ என்று சொன்னார்.  அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் நான் எழுதியதைப் பார்ப்பார்.

‘டீக்கடையில் டீ, காபி குடித்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன் அந்த பாட்டைக் கேட்டாலும் அவனுக்கும் அப்பாடல் வரிகள் புரிய  வேண்டும், அப்படி எழுது’ என்பார். சினிமா பாட்டில் கவிதைத்தனம் வேண்டாம் என்பார். ‘இப்படி மாற்றி மாற்றிச் சொல்வதாக இருந்தால்  நான் எழுத மாட்டேன்’ என்று கூட சொல்லி இருக்கிறேன். இப்படியாக அவர் பல திருத்தங்கள் சொல்லி 20க்கும் மேற்பட்ட முறைகள் அவர்  பார்த்து மூன்று மாதங்கள் கழித்துத்தான் என் பாடலை ஒப்புக்கொண்டார். ஒரு விஷயம் நன்றாக வர வேண்டும் என்று அப்படி பார்த்துப்  பார்த்து செதுக்குவார். அப்படி உருவானதுதான் ‘அன்பே அன்பின்’ பாடல்.

அந்தப் பாடலை மெட்டுடன் அதனை ஒருவர் பாடிய பிறகு, கேட்ட  போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. என் பாடலுக்கு உயிர் கிடைத்ததுபோல் இருந்தது.
அடுத்தப் பாடல் என்பது சூழ்நிலை பொறுத்து  இயல்பாக அமையும்பட்சத்தில் எழுதுவேன். ஆனால் பாடல் வாய்ப்புக்காக மெனக்கெட மாட்டேன். இந்தத் துறையில் பாடலாசிரியராக வருவேன் என்றெல்லாம் நான் கனவு கண்டதில்லை. பேராசிரியையாக இருப்பதுதான் என் கனவு. அதனைத் தொடர வேண்டும் என்பதுதான்  என் ஆசை. பிள்ளைகள் வளர்ந்த பிறகு பேராசிரியை பணியில் ஈடுபட வேண்டும்” என்று சொல்லி வெகுளியாக சிரிக்கிறார் சுமதி. பெண்  பாடலாசிரியர்கள் குறைவாக இருக்கும் தமிழ்த் திரைப்படத்துறையில் புதிய வரவான சுமதி ராமுக்கு வாழ்த்துகள்.

- ஸ்ரீதேவி மோகன்
படங்கள்: ஆர்.கோபால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mamthaa20

  காங்கிரஸ் எம்.பி.யான தபஸ் பாலின் இறுதி சடங்கு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்

 • accident20

  அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

 • 20-02-2020

  20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • poraattam20

  சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

 • aadi20

  மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்