SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சாதனையைவிட ஆங்கிலம் பெரிதா? : தங்க மங்கை ஹீமாதாஸ்

2018-08-21@ 15:03:07

நன்றி குங்குமம் தோழி

சர்ச்சைக்குள்ளான இந்திய தடகள சம்மேளனம்

பின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று உலகை இந்தியாவின் பக்கம் திருப்பி இருக்கிறார் தங்க மங்கை ஹீமாதாஸ்.பந்தய இலக்கை 51.46  விநாடிகளில் கடந்து ஹீமா படைத்த பிரம்மாண்ட சாதனையை அடுத்து இந்தியா முழுவதும் அவர் சாதனை குறித்த செய்திகள் பரபரப்பாகின. ஒட்டு மொத்த இந்தியாவையும் பெருமை அடைய வைத்திருக்கும் இந்தப் பெண்ணுக்கு இப்பெருமை அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை.

பல துயரங்களைக் கடந்துதான் ஜெயித்துக் காட்டியுள்ளார் ஹீமாதாஸ். ஆனால் அவருக்கு ஆங்கிலம் சரியாக பேசத் தெரியவில்லை என அரசாங்கத்தின் (இந்திய தடகள சம்மேளனம்) சார்பாக போடப்பட்ட ட்வீட் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அஸ்ஸாமிலுள்ள டிங்கு என்றொரு குக்கிராமத்தில் பிறந்தவர் ஹீமாதாஸ். இவரது தந்தை ஒரு விவசாயி. விளையாட்டின்மீது தீராத  ஆர்வம் கொண்ட ஹீமா கால் பந்தாட்ட வீராங்கனையாக இருந்தார். ஆனால் சுயம்புவாக உள்ளூர் விளையாட்டுக்காரராக இருந்த  ஹீமாதாஸின் தடகளத் திறமையை முதன்முதலில் கண்டறிந்து அவரை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் பயிற்சியாளர் நிபோன்தாஸ்.

அவரின் கண்களில் பட்ட பின்புதான் ஹீமா தாஸ் சாதனையாளரானார். ஹீமாவுக்குள் இருந்த தடகள வீராங்கனையை வெளியே கொண்டு வந்தவர் நிபோன் தாஸ். ஹீமா முதன் முதலில் தடகளப் பயிற்சி எடுக்கவும், போட்டிகளில் பங்கேற்கவும் உதவினாரேயொழிய, இந்திய அரசாங்கமோ, இந்திய தடகள சம்மேளனமோ இல்லை. கிராமத்தில் வயல் வெளிகளில்தான் முதன் முதலாகப் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஹீமா எப்போதும் மெதுவாக  ஓடத்தொடங்கி எல்லைக்கோட்டை நெருங்கும்போதுதான் வேகமாக ஓட ஆரம்பிப்பார்.

இந்தப் போட்டியில் கூட முதல் 35 விநாடிகள் வரை நான்காவது இடத்தில் இருந்த ஹீமா கடைசி 15 விநாடிகளில் அசுர வேகமெடுத்து முதல் இடத்தைப் பிடித்தார். சர்வதேச தடகளப்  போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஹீமா தாஸ்தான். விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் பெரிதாக கவனம்  எடுத்துக்கொள்ளாத இந்த நாட்டில் பிறந்து இத்தகைய சாதனை புரிந்த இந்தப் பெண்ணின் திறமையைப் பாராட்டாமல் அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று ட்வீட் செய்திருக்கிறது இந்திய தடகள சம்மேளனம்.

ஹீமா அரை இறுதியில் வெற்றிபெற்றபோது பத்திரிகையாளர்களை சந்திக்கையில் ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது இந்திய தடகள சம்மேளனம் அவர் அரை இறுதியில் வென்றிருப்பதை பாராட்டியதோடு, அவரது ஆங்கிலம் கொஞ்சம் சரியில்லை என்பதாக ட்வீட் செய்திருந்தது. இது  பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு வீராங்கனைக்கு விளையாடத் தெரிந்திருந்தால் போதும். ஆங்கிலம்  தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்று பலர் கோபமாக பதில் சொல்லி இருந்தனர்.

இந்த கருத்துக்கு பொதுமக்களின் மத்தியில் ஆதரவு பெருமளவில் இருந்தது. தன்னைப் பற்றி இப்படி ஒரு விமர்சனம் வந்தது தெரியாமல் தங்கப்பதக்கம் பெறும் போது தேசிய கீதம் ஒலிக்கையில் ஹீமா தாஸ் உகுத்த கண்ணீர் இந்தியாவில் இருந்த அத்தனை பேரையும் நெகிழ வைத்தது. கடைக்கோடியில் பிறந்த ஒரு பெண் தன் உழைப்பினாலும் பயிற்சியாளரின் ஊக்கத்தினாலும் முன்னுக்கு வந்தவர், அதன் பின்னர் அரசாங்கம் அவருக்கு உதவி இருக்கலாம்.

ஆனாலும் ஒரு  குக்கிராமத்தில் வசதியற்ற குடும்பத்தில் பிறந்த பெண் எத்தனை தடைகளை தாண்டி இருந்தால் இந்த சாதனையை புரிந்திருக்க முடியும். இந்த வீராங்கனையின் பெருமையைக் கண்டறிந்து வளர்க்க வேண்டியதுதான் அரசாங்கத்தின் கடமை. இப்படி சின்னச் சின்ன விஷயங்களை  விமர்சிப்பது அல்ல. இது குறித்து இந்தியாவின் முன்னோடி விளையாட்டு வீராங்கனையான ஷைனி வில்சனிடம் கேட்டோம். “உலகளவில் நடைபெற்ற  தடகளப் போட்டியில் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த இளம் பெண் தங்கம் வென்றிருப்பது மிகப்பெரிய சாதனை.

அது சாதாரண  விஷயமில்லை. எல்லோராலும் இத்தகைய சாதனைகளை செய்துவிட முடியுமா என்ன? அவர் கான்வென்டில் படித்தவர் அல்ல.  அரசாங்கப்பள்ளியில் படித்தவர். அவரது சாதனையைத் தான் போற்ற வேண்டுமே தவிர அவரது ஆங்கிலம் குறித்துப் பேசி இருக்க  வேண்டாம். அவருக்குப் போதிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஊடகங்கள் இவருக்கு இன்னும் கொஞ்சம் அங்கீகாரம் கொடுத்திருக்கலாம். பெரிய அளவில் இவரைப் பற்றி எழுதி அவரை கௌரவப்படுத்தி இருக்கலாம்.

இங்கே விளையாட்டு வீரர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசாங்கமே ஐந்து பேருக்கான ஓராண்டு பயிற்சி  செலவாக ஒரு கோடி ஒதுக்கி இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் அங்கீகாரம், ஊக்குவிப்பு, விளம்பரம் மற்ற  விளையாட்டுகளுக்கு கிடையாது. கிரிக்கெட்டாவது ஏழு எட்டு நாடுகளுடன்தான் போட்டி நடக்கும். ஆனால் தடகளப் போட்டிகளில் பல நாடுகள் கலந்து கொள்ளும்.

அதில் வெற்றி பெறுவது சாதாரண விஷயமில்லை. அதனால் அத்தகைய சாதனை புரிந்த அந்த சின்னப்பெண்ணை ஊக்குவிப்பதுதான் இப்போது முக்கியம். அவருக்குப் பதினெட்டு வயதுதான் ஆகிறது. இப்போது தான் துறைக்கு வந்திருக்கிறார். இனி மேல் காலம் போகப்போக சரியாயிடும். ஆங்கிலம் கற்றுக்கொள்வார். பிற்காலத்தில் நன்றாக ஆங்கிலம் பேசுவார். அவருடைய முயற்சி அவருக்கு உறுதுணையாக இருக்கும்” என்கிறார் ஷைனி வில்சன்.

-ஸ்ரீதேவி மோகன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-09-2018

  21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennaipolicefunction

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

 • railwaysecurityforce

  சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

 • courtchennaispl

  சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

 • russiapresigun

  ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்