SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்குலகின் மையம்

2018-07-23@ 17:12:38

நன்றி குங்குமம் தோழி

சரஸ்வதி சீனிவாசன்

அமெரிக்கப் பயணக் கட்டுரை-மினி தொடர்


அமெரிக்காவில்  பல  இடங்களைப் பார்த்தும் ரசித்தும் எவ்வளவு ஆச்சரியமடைந்தோமோ, அதை விடப் பல மடங்கு மால் ஆஃப் அமெரிக்கா அருகில்  இருந்த சீலைஃப் (Sea life) (உயிரினங்களின் கண்காட்சி) பார்த்து வியந்தோம். சில மணி நேரங்கள் வேறு உலகத்தில் வாழ்ந்து வந்த அனுபவம்.  அதுவும் கடலுக்குள் வாழ்ந்து வந்த அனுபவம். எத்தனையோ பார்க், பீச் என்று சுற்றினாலும் கடலுக்குள் செல்வது போல ஆகுமா?  

கடலுக்குள் சென்று அந்த உயிரினங்களை, அதன் வாழ்வு முறை களைக் கண்டு, எண்ணிலடங்கா ஆச்சரியங்களைக் கண்டு களிக்கிறோமென்றால்  அத்தகைய அமைப்பைத் தந்திருக் கிறார்கள் என யோசித்தால், அதற்குப் பின்னால் எத்தனை பேரின் உழைப்பும், யோசனைகளும், அதற்கேற்ற சூழலும்,  அதை நடைமுறைப்படுத்தும் சாத்தியமும் எவ்வளவு வியக்கத்தக்கது? முதலில் எங்களுக்கு அந்த இடத்திற்குச் செல்வதற்கு அவ்வளவு  ஆர்வமில்லாமல்தான் இருந்தது.

பலவிதமான மீன்கள், நீர்வாழ் உயிரினங்களை வைத்திருப்பார்கள். வேறு என்ன இருக்கப்போகிறது? மிஞ்சிப் போனால் முதலை பார்க் போல இருக்கும்  என நினைத்தேன். ஆனால் சென்ற பிறகு தான் அதன் கட்டிடமோ உண்மையிலேயே கடலுக்குள்தான் செல்கிறோமோ என்றெல்லாம் யோசிக்க  வைத்தது. உள்ளே நுழைய தனித்தனிக் கட்டணம். முதலில் கண்ணாடி மாளிகைக்குள் செல்வது போன்று உணர்ந்தோம். அதற்குள் ஏரி, நதி, கடல் என  ஒவ்வொன்றாகக் கடப்பது போன்ற உணர்ச்சி.

ஜில்லென்று தண்ணீரின் குளிர்ச்சி. உண்மையில் நாங்கள் நீரில் நடக்கவில்லை. தரையில்தான் நடந்தோம். ஆனாலும் அப்படி ஒரு மேஜிக். இவ்வளவு  கடல் பிராணிகளை ஒரே இடத்தில் காண முடியுமா? நாங்கள் நினைத்தபடி வெறும் மீன் தொட்டிகள் கிடையாது. ஒவ்வொன்றும் குட்டிக் குட்டி கடல்  போன்ற அளவில் இருந்தன. வெகு அதிசயமான மீன்கள் எத்தனையோ அற்புத வண்ணங்களில் காணப்பட்டன. கடல் குதிரை வெள்ளை மற்றும் கறுப்பு  நிறங்களில் காணப்பட்டன. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வகை உயிரினங்களை மட்டுமே காண முடியும்.

அந்தக் கடல் போன்ற அமைப்பைச் சுற்றிலும் கரை போன்ற அமைப்பு. முழுவதும் அடர்த்தியான செடி கொடிகளால் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு  இடத்தில் சிலிண்டர் வடிவில் குளம் போல பெரிய மீன் தொட்டியை வடிவமைத்திருந்தனர். அதில் நிறைய மீன்கள் காணப்பட்டன. அந்த அழகான  காட்சியின் அருகே புகைப்படம் எடுக்காதவர்களே இருக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அதன் பெயர்கள், உணவுப்பழக்கங்கள், அதன் வாழ்நாட்கள்  மற்றும் அவற்றை வளர்க்கும் முறை, காப்பாற்றும் முறை, மனித குலத்திற்கு அவை எந்தெந்த வகையில் உதவும் போன்ற அனைத்து தகவல்களும்  குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒவ்வொன்றையும் படித்தால் முழு விபரங்கள் நமக்குப் புரியும். கண்ணால் பார்த்து ஒவ்வொன்றின் சிறப்பையும் அறியும் பொழுதுதான் நமக்கு நிறைய  விஷயங்கள் புலப்படுகின்றன.  அதுவே நமக்கு செய்முறை விளக்கமாகிறது. விதவிதமான நட்சத்திர ஆமைகள் கண்ணைப் பறிக்கும் விதத்தில் கலர்  கலராக காணப்பட்டன. எந்த ஒரு நீர்வாழ் உயிரினத்தையும் அவ்வளவு அருகில் சுத்தமாக பார்க்க முடியுமா என்பது சந்தேகம். ஆனால் இங்குள்ள  கண்ணாடிக் கடலில் இது சாத்தியமாயிற்று. மிக அருகில் நின்று ஒவ்வொரு அசைவையும் பார்க்க முடிந்தது.

சிறிய குழந்தைகள் கண்ணாடியில் தட்டினால் நீர்வாழ் உயிரினங்கள் உட்புறம் வந்து எட்டிப்பார்க்கும். தண்ணீர் அப்படி ஒரு சுத்தம். கூட்டம்  கூட்டமான  பென் குயின்கள் குழந்தைகள் போல் குதித்து குதித்து ஓடிக் கொண்டிருந்தன. அதன் குட்டிகள் குழந்தைகள் போன்றே அழகாக இருந்தன. ஆங்காங்கே  நடுநடுவே இயற்கைச் சூழல் அமைப்புக்காக மரம், செடிகள் காணப்பட்டன. அத்தகைய மரத்தின் அடியில் ஓடும் நீரில் கூட வண்ணமயமான மீன்கள்  ஓடின. பார்க்க மிகவும் அரிதான ஜெல்லி மீன்கள் கண்ணைக் கவர்ந்தன. அங்கங்கே நிறைய சவாரி வண்டிகளும் குழந்தைகளுக்காக  பிரத்யேகமாக   இருந்தன.

இது மட்டுமல்லாமல் தரை, நீர் இரண்டிலும் வாழக்கூடிய பிராணிகள் ஒருபுறம். ஒவ்வொரு கண்ணாடிக் கூண்டிற்குள்ளும் சென்று பார்க்கும்  பொழுதெல்லாம், கடல் பகுதியின் அடிவரை சென்று வருவது போன்ற பிரமை வரும். நிறையக் கூட்டம் காணப்பட்டாலும், பெயரளவில் கூட தூசி  காணப்படவில்லை. தரையோ அப்படி ஒரு பளபளப்பு. எந்த  இடத்திலும்  பெயருக்குக்கூட கடல் பிராணிகள் அல்லது அவற்றிற்கு இரையாகக்  கொடுக்கப்படும் உயிரினங்களின் உடல் நாற்றம் என்பதே துளியுமில்லை.

கடல்வாழ் உயிரினங்கள் என்றால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு டால்பின்கள் ஏராளம். அதன் குட்டிகள் நீரில் துள்ளி ஓடுவது அப்படி  ஓர் அழகு. குழந்தைகளுக்கு டால்பின்ஸ் பகுதி ஸ்பெஷல் என்று கூறலாம். சுறா மீன்கள் என்றாலே பயப்படும் நாம், அங்கு அவை நம் தலைமேல்  மிதப்பதைப் பார்க்கலாம். எங்களின் தலை மேல் இரண்டு சுறாமீன்கள் ஓடி விளையாடுவதை துல்லியமாகப் பார்த்தோம். அதாவது நம் கைக்கெட்டும்  தூரத்தில், நம் தலைக்கு மேல் முழுவதும் கண்ணாடி வளைவில் கடலாகக் காட்சி தரும். அந்த நீரில்தான் நாம் பயங்கரமான உயிரினங்களைக் காண  முடியும்.

அதிலும் ‘டால்பின் ஷோ’ கொஞ்சம் ஸ்பெஷல். இரவின் தகதகக்கும் விளக்கின் ஒளியில் பல டால்பின்கள் ஒரே நேரத்தில் மேலே வந்து குதிக்கும்.  நிறைய பந்துகளை போட்டிருப்பார்கள். அவற்றையும் மனிதர்கள் போல் தூக்கி எறியும் காட்சி வியப்பானது. டால்பின் ஷோவை அடுத்து துருவக்  கரடிகள் எனப்படும்  போலார் கரடிகள் பார்க்க வியப்பாக இருக்கும். வெள்ளை வெளேரென்ற உருவில் மிகப் பெரிய உருவத்தோடு அவ்வப்பொழுது  வெளியில் வந்து மனித உருவங்களைப் பார்க்கும். அதற்கென தனிப்பகுதி உண்டு. அங்கு சென்றுதான் அவற்றைப் பார்க்க முடியும்.

அழியும் விலங்கினங்களை அழியாமல் பாதுகாப்பதும், அதன் எண்ணிக்கையை பெருக்குவதும் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் எதிர்கால  சந்ததியினர் இத்தகைய உயிரினங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் வழிவகுக்கும். எல்லா வயதினரும் சென்று பார்த்து  அனுபவம் பெற வேண்டிய இடம். எல்லா வயதினருக்கும் வேண்டிய வசதிகள் அனைத்தும் உண்டு. ஏனெனில் இது குழந்தைகளுக்கான தீம் பார்க்  என்றும் சொல்லலாம். கண்காட்சி அரங்கிற்கு உள்ளேயே அங்கங்கே, உணவுப் பொருட்களும் கிடைக்கும். உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்ள,  குறிப்பாக கடல்வாழ் பிராணிகளை ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால் இங்கே கட்டாயம் செல்ல வேண்டும்.

மேலும் கல்வி சம்பந்தப்பட்ட சுற்றுலா செல்வதற்கு மிகச் சிறந்த இடம். வருடத்தில் பாதி மாதங்கள் பனி பெய்யும்.  பனியில்லாத காலத்தில் இந்த  ஊரில்  இது போன்ற இடங்களில் இங்கே இருப்பவர்கள் செலவிடுகின்றனர். அனுபவம் மிக்க நிபுணர் குழுக்களால் பராமரிக்கப்படுவதால் நன்கு  சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. இதுவரை எத்தனையோ கோடிக்கணக்கானவர் இதைப் பார்த்துச் சென்றுள்ளனர். நமக்கும் ஏதோ  பொழுதை  கழித்தோம் என்றில்லாமல், கண்களுக்கு விருந்தளிப்பதுடன், நிறைய விஷயங்களை பார்த்தும் தெரிந்தும் அனுபவம் பெறுகிறோம்.

(பயணம் தொடரும்!)
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்