SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

‘என்னை படிக்க உள்ளே விடுங்க...’

2018-07-18@ 14:35:50

நன்றி குங்குமம் தோழி

மறுக்கப்படும் கல்வி உரிமை


திருப்பூரில் கட்டாயக் கல்வி உரிமைச்  சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்ட மாணவனிடம் ரூபாய் 20 ஆயிரம் பணம் கேட்டு பள்ளி  நிர்வாகம் வெளியேற்றியதால், “என்னை படிக்க உள்ளே விடுங்க” என தனது எழுது பலகையில் எழுதிய வாசகத்துடன் பள்ளிக்கு முன்பாக ஐந்து வயது  சிறுவன் ஒருவன் நடத்திய போராட்டக் காட்சி ஊடகங்களில் பரவியது. அந்தக் காட்சியினைக் காணும் நம்மையும், அந்நிகழ்வு பதைபதைக்க வைத்தது.  சிறுவனுக்குப் பின்னிருந்த பள்ளிச் சுவற்றில், முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் புகைப்படத்தோடு...

“கனவு என்பது நீ
தூக்கத்தில் காண்பதல்ல
உன்னைத்
தூங்கவிடாமல்
பண்ணுவதே”
என்கிற அவரின் வரிகளும் இடம் பெற்றிருந்தன.

வியட்நாம் போரின் போது, போரின் உக்கிரத்தைச் சொல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் உலுக்கியது. தன் கிராமத்தின் மீது  போடப்பட்ட கொத்துக்குண்டின் வீச்சிலிருந்து தப்பித்த சிறுமி, ஆடைகளற்று எரிந்த உடலோடு ஓடி வரும் காட்சிதான் அது. ஒரு தலைமுறையையே  உலுக்கிய அப்புகைப்படம் அமெரிக்க மக்களை, வியட்நாம் போருக்கு எதிராய் ஒன்று திரட்டியது.  அச்சிறுமியின் கதறல் உலகம் முழுதும் அன்று  எதிரொலித்தது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய புகைப்படங்களில் ஒன்றாகவும் அது கருதப்பட்டது.

அதைப்போன்றதொரு விளைவையே கல்விக்காக கையேந்தும், இந்தச் சிறுவனின் பார்வையும், படமும் நமக்கு உணர்த்தியது. விடுமுறை முடிந்து  பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணம், பாடப்புத்தகம், சீருடை, போக்குவரத்து என  எல்லாவற்றிற்காகவும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்களின் நிலையோ அதோகதிதான். பெற்றோர்  மட்டுமல்ல, சமீபகாலமாக குழந்தைகளும் படிப்பிற்கான இடர்பாடுகளை உச்ச பட்சமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

அதற்கான சமீபத்திய சான்றுதான் நீட் தேர்வு. திருப்பூர் அங்கேரிப் பாளையத்தைச் சேர்ந்த பழனிக்குமார் தன் மகன் காந்திஜியை அதேப் பகுதியில்  உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் சேர்த்துள்ளார். இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை  கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என பள்ளி நிர்வாகம் வெளியே அனுப்பியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு எல்.கே.ஜி., யு.கே.ஜி, நடப்பு ஆண்டு  ஒன்றாம் வகுப்பிற்கும் சேர்த்து 20000 ரூபாயினை கட்டணம் செலுத்தினால்தான் பள்ளியில் படிக்க அனு மதிக்க முடியும் என்று சிறுவனை வெளியே  அனுப்பி உள்ளனர்.

அதைக் கேட்க வந்த சிறுவனின் தந்தை பழனிக்குமாரின் இருசக்கர வாகனத்தின் சாவியினை பள்ளி நிர்வாகம் பறித்து வைத்துக்கொண்டதுடன்,  சிறுவனையும் அவனின் தந்தையையும் பள்ளியை விட்டு வெளியே துரத்தி உள்ளனர்.  மாணவனும் அவனின் தந்தையும் பள்ளிக்கு முன்பாக  வெளியில் அமர்ந்து தொடர்ந்து இரண்டு நாட்களாகப் போராட் டத்தை நடத்தி உள்ளனர். பள்ளி நிர்வாகம் கூடுதல் பயிற்சிக் கட்டணம் இன்றி  மாணவனைப் படிக்க அனுமதிக்க இயலாது என்பதில் உறுதியாக இருந்ததால், சிறுவன் ‘என்னை பள்ளிக்கு உள்ளே விடுங்க’ என்ற வாசகத்தை எழுதிய  எழுது பலகையினை கையிலேந்தி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டான்.

அந்த பிஞ்சு சிறுவனின் சோகம் நிறைந்த விழிகள் காண்போரை என்னமோ செய்தது. தகவலறிந்து பொது மக்கள் திரண்டதால் காவல்துறையினர்  தலையிட்டு சிறுவனின் தந்தை பழனிக் குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை மட்டும்தான் அரசு செலுத்தும்  என்றும் பள்ளியில் நடைபெறும் பல்வேறு பயிற்சி வகுப்புகளான யோகா, கராத்தே, டேபிள் டென்னிஸ், நூலகம், தமிழ், ஆங்கிலம் கையெழுத்து வகுப்பு,  கம்யூனிகேஷன், நடனம் மற்றும் பாட்டு வகுப்பு என பட்டியலிட்டு அதற்கான கட்டணங்களை மாணவர்களின் பெற்றோர்கள்தான் செலுத்த  வேண்டுமெனப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அடிப்படைக் கல்விக்கு மட்டுமே அரசு கட்டணம் செலுத்தும் எனவும் மற்றபடி பள்ளி விதிமுறைகளின்படி  பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறி மாவட்ட கல்வி அதிகாரி இந்த விவகாரத்தில்  தலையிட  மறுத்து நழுவ முயன்றிருக்கிறார்.  சிறுவன் காந்திஜி வாசகத்தை கையிலேந்தியபடி தனது போராட்டத்தை மேலும் தொடர்ந்திருக்கிறான். பிரச்சனை பெரிதாகி ஊடகங்களில் பரவத்  தொடங்கிய நிலையில் நிர்வாகம்  மாணவனை உள்ளே அனுமதித்து புத்தகங்களை வழங்கியுள்ளது.

தற்சமயம் இந்தப் பிரச்சனை நிறுத்தி வைக்கப்பட்டாலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கின்ற மாணவர்களை, தனியார் பள்ளிகள்  கீழ்த்தரமாக நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கடுமையான  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்தப்  பகுதி மக்களும் பழனிக்குமாரோடு இணைந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமூகத்தில் நலிவடைந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில் ‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்’  மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, இத்திட்டம் அந்தந்த மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தனியார் பள்ளிகள் எல்.கே.ஜி  மற்றும் 1ம் வகுப்பில் 25% இடத்தை இலவச கல்விக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். 8ம் வகுப்பு வரை அந்த மாணவனுக்கு கட்டணம் இல்லா கல்வி  வழங்குவதை தனியார் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது அரசு வகுத்துள்ள விதி.

குறிப்பிட்ட அந்த கட்டணத்தை மத்திய அரசு தனியார் பள்ளிகளுக்கு செலுத்திவிடும். இந்த நடைமுறையில் தமிழகத் தனியார் பள்ளிகளில் 1 லட்சம்  இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மட்டும், தனியார் பள்ளியில் இலவச கல்வியில் சேர இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 435 மாணவர்கள்  விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இந்தக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை என்றும், அதன் கீழ்  மாணவர்களுக்கு உரிய இலவச இடம் ஒதுக்குவதில்லை என்றும், அப்படியே ஒதுக்கீடு செய்தாலும், கூடுதல் பாடப் பயிற்சி கட்டணம் என்ற பெயரில்  பணம் கேட்டு நச்சரிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகள்

*    அனைத்துக் கட்டணங்களும் அரசே செலுத்தும்.
*    இந்தக் குழந்தைகளிடம் நன்கொடை, பள்ளிக் கட்டணம் வாங்கக் கூடாது.
*    புத்தகம் முழுக்க இலவசமாக கொடுக்க வேண்டும்.
*    சீருடை இலவசமாக கொடுக்கப்பட வேண்டும்.
*    இந்தக் குழந்தைகளின் வீடு பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருந்தால்  போக்குவரத்து வசதி செய்து தர  வேண்டும்.
*    ஒவ்வொரு பள்ளியிலும், அரசின் இத்திட்டத்தின் கீழ் 25 சதவிகிதம் இடம் எங்களிடம் உள்ளது, வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என போர்டு  வைக்க வேண்டும்.

மகேஸ்வரி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்