SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திரைப்பட்டறை

2018-07-11@ 16:43:30

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளுக்குள் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது,சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும்  திரைப்பட்டறை. பல்வேறு தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் திரைப்பட்டறையில் பயிற்சி பெற்ற குழந்தைகள்  தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சினிமாவிற்குள்ளும் நுழைந்திருக்கின்றனர். திரைப்பட்டறையில் நடிப்பு மட்டுமில்லாமல் பறை இசை,  நாட்டுப்புறக் கலைகள், மரபு விளையாட்டுகள் என அனைத்தும் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

இதன் துவக்கம் பற்றி திரைப்பட்டறையை நடத்தி வரும் ராமிடம் பேசினேன். “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட்டறையை தொடங்கினேன்.  பெரியவர்களை விட குழந்தைகளிடமே தனித்துவமான சில திறமைகள் இருக்கும், அதை பெற்றோர்கள் அந்த சமயத்தில் ரசித்துவிட்டு சென்று  விடுவார்கள்.குழந்தைகளும் வளர வளர அதை மறந்து விடுவார்கள். அப்படி குழந்தைகளுக்குள் இருக்கும் தனித்திறமையை கண்டறிந்து அவர்களுக்கு  பயிற்சி அளிக்கும் நோக்கத்தோடு திரைப்பட்டறை தொடங்கப்பட்டது. இன்றுவரை அதை நேர்த்தியாக செய்து வருகிறோம்.

குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டு இன்று பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும்  நாடகப் பயிற்சி, ஸ்டோரி டெல்லிங், பொம்மலாட்டம், திறன்  வளர்ப்பு வகுப்புகள், பாவனை நாடகம் (மைம்) போன்றவை கற்றுக்கொடுக்கிறோம். இது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு மரபுக் கலைகளான பறை  இசை, பொய்க்கால் குதிரை, தேவராட்டம், கரகாட்டம் போன்றவையும் கற்றுத்தரப்படுகின்றன‌. அழிந்து வரும் மரபு விளையாட்டுகளை நவீன  முறையில் பாதுகாப்பாக எப்படி விளையாடுவது என்று பயிற்சி அளிக்கிறோம்.

நாடகப் பயிற்சி, நாடக முறையில் கதை சொல்லுதல், மேடை நாடகங்கள், வீதி நாடகங்களுக்கு எப்படி தங்களை தயார் படுத்திக்கொள்ளுதல் என  பலவும் கற்றுத்தரப்படுகின்றன‌. குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சியின் மூலம் நல்ல கருத்துகளை அவர்களுக்கு எளிமையாக கற்றுத்தர முடிகிறது.  தனிநபர் நாடகம், குழுவாக ஒரு நாடகத்தில் எப்படி நடிப்பது, கேமரா முன் எப்படி நடிக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறோம். திரைப்பட்டறையில்  பயிற்சி எடுக்கும் குழந்தைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தயார் படுத்துகிறோம்.

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான நாடக நிகழ்ச்சியில் நமது திரைப்பட்டறையைச் சேர்ந்த குழந்தைகள்  தங்களது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர். குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை பழக்கப்படுத்துகிறோம். இது  அவர்களின் புத்திக் கூர்மையை அதிகப்படுத்தும். பள்ளியில் சேர்த்தவுடனே குழந்தைகளுக்கு படிப்பு தவிற வேறொன்றும் தேவையில்லை என்று  நினைக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் ஆக்டிவாக இருப்பதை தடுக்கிறார்கள். இது அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.

இன்று சினிமா போன்ற வெகுமக்கள் ஊடகமும், சமூக வலைத்தள‌ங்களும் தனிநபர் திறனை வெளிப்படுத்த தேவையான இடத்தை சமகாலத்தில்  கொடுத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி குழந்தைகளின் திறமைகளை மக்களுக்கு காட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.   சிறந்த கதைச்சொல்லிகளை வரவழைத்து அறிவுபூர்வமான கருத்துகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறோம். குழந்தைகளுக்கு கலை மிக  முக்கியம் என்று நான் கருதுகிறேன். நம்முடைய பாரம்பரிய கலைகள் பற்றி இன்றைய தலைமுறையை சேர்ந்த பலருக்கு தெரிவதில்லை.

அதை குழந்தைகளிடம் கற்றுக்கொடுக்கும் போது அந்தக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு அவர்களால் கடத்திச் செல்ல முடியும் என்று  நம்புகிறேன். அழிந்து வரும் பல கலைகளையும் அவற்றின் வரலாறுகளையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறோம். மிக ஆர்வமாக  கற்றுக்கொள்வதை பார்க்கமுடிகிறது. கிராமப்புறங்களில் குழந்தைகள் ஓடி விளையாட பரந்த நிலப்பரப்பு இருந்தது, இன்று நகர வாழ்க்கையில்  அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தைகள் சிறைபட்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு திரைப்பட்டறை சுதந்திர‌மான இடத்தை வழங்குகிறது. அவர்கள்  விரும்பும் எல்லா கலைகளையும் இங்கு அவர்களால் கற்றுக்கொள்ள முடியும்”  என்கிறார் ராம்.

ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்