SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2018-06-26@ 15:03:36

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா

ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுனாமியாய் வாரிக்கொண்டு கலக்கியடித்த டயட் ஒன்று இருக்கும் என்றால் அது பேலியோ டயட்தான். ஒரு கட்டத்தில்  பேலியோ டயட் ஒரு மதமாய் மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற வியப்பே ஏற்பட்டது. அநேகமாய் இந்த வருடம்தான் அதன் ஆர்ப்பாட்டம் சற்று  குறைந்திருக்கிறது என்று சொல்லலாம். ‘கொழுப்பு நல்லது’... இதுதான் பேலியோ முன்வைத்த மந்திர வார்த்தை. மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள்  முதல் அனைத்துத் தரப்பினரும் அசந்து போனார்கள்.

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், பாடி பில்டர்கள் என சகல தரப்பையும் பேலியோ  குடும்பத்தாராக்கியது இந்த டயட். விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய காலத்தில், இப்போது நாம் உண்ணும் எதையும் உணவு என்று  கண்டுபிடிக்காத காலத்தில், குகைகளில் வாழ்ந்த பேலியோலித்திக் மனிதர்கள் எனும் நம் முன்னோர் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்களோ அதைச்  சாப்பிடுவதுதான் பேலியோ டயட். உயிர் வாழ முக்கியமான உணவாக அந்தக் கால மனிதர்களுக்குக் கிடைத்தது, நல்ல ஆரோக்கியமான மாமிசக்  கொழுப்புதான்.

எனவே, பேலியோ டயட்டில் மாமிசம்தான் முக்கிய உணவு. இன்னும் சரியாகச் சொன்னால் கொழுப்புச்சத்து. பேலியோ டயட்டைப் பொறுத்தவரை  அரிசி, கோதுமை, மைதா, பேக்கரி பொருட்கள், பழங்கள்/ஜூஸ், அனைத்துவகை இனிப்புகள், தேன், நாட்டுச்சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரை, சுகர் ஃப்ரீ  மாத்திரைகள், ஓட்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டூ குக் உணவுகள், ரிஃபைன்ட் எண்ணெய் வகைகள், ஜங்க் ஃபுட், அனைத்து  வகை பீன்ஸ், கிழங்கு வகைக்காய்கறிகள், அனைத்து வகைக் கடலைகள், அனைத்து வகைப் பருப்புகள், புளி, அனைத்துவகை சோயா பொருட்கள்,  காபி, டீ, அனைத்து வகை கூல் டிரிங்க்ஸ் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

மாவுச்சத்து இல்லாத காய்கறிகள், பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், மஞ்சள் கருவுடன் முட்டை, கொழுப்புடன் கூடிய இறைச்சி, கடல் உணவுகள், பால்,  நெய், வெண்ணெய், சீஸ், பனீர், தயிர், மோர் போன்ற அனைத்துப் பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் (செக்கில் ஆட்டியது  என்றால் மிகவும் நல்லது),  அனைத்து வகைக் கீரைகள் போன்றவற்றைச் சாப்பிடலாம். உணவுகளை இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற  குறிப்பிட்ட அளவு ஏதும் கிடையாது. வயிறு நிரம்பும்வரை உண்ணலாம். பசி அடங்கியபின் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இது மிகவும்  முக்கியம். முழு முட்டை, இறைச்சிகளில் கொழுப்பு அதிகம் உள்ள இறைச்சியே நல்லது.  

கொழுப்புச்சத்து குறைவான கருவாடு, சிக்கன் போன்றவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புக் குறைவான உணவுகளை  சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பேலியோ டயட்டும் வொர்க் அவுட்டை வலியுறுத்துகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவைப் போலவே  உடல் உழைப்பும் முக்கியம் என்கிறது. சாதாரண நடைபயிற்சி முதல் ஜிம் பயிற்சிகள் வரை ஆளுக்குத் தகுந்தது போல் உடல் உழைப்பு செய்ய  வேண்டியது அவசியம். பேலியோ டயட் பின்பற்றினால் உடல் எடை மிகச் சிறப்பாகக் குறைகிறது, தொப்பை காணாமலாகிறது, சர்க்கரை விகிதம்  கட்டுப்படுகிறது என்று பரவலான கருத்து உள்ளது. முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்துவிட்டு தகுந்த நிபுணர்கள் அறிவுரை மற்றும்  மேற்பார்வையில் இந்த டயட்டில் ஈடுபடலாம்.

உணவு விதி #6

தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம். இது ஒரு முக்கியமான விதி. இந்தியா போன்ற மித வெப்ப மண்டல நாடுகளில் தினசரி  குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிக்காவிடில் உடல் விரைவில் டீஹைட்ரேட் ஆகிவிடும். எனவே, எந்தக் காரணத்தை முன்னிட்டும் தண்ணீர் குடிப்பதைத்  தவிர்க்காதீகள். நம் உடலின் சூப்பர் டீடாக்ஸ் ஏஜென்ட் தண்ணீர்தான். உடலில்  உள்ள தேவையற்ற நஞ்சுக்களை நீக்கி உள் உறுப்புகளை  சுத்தமாக்குகிறது.

எக்ஸ்பர்ட் விசிட்

ஷிகா சர்மா இந்தியாவின் புகழ்பெற்ற கிளினிக்கல் நியூட்ரிஷியனிஸ்ட். ‘முதலில் நான் ஒரு மருத்துவர். குறிப்பாக, ப்ரவெண்டிவ் மெடிக்கல் எனப்படும்  வருமுன் காக்கும் துறை நிபுணர். பிறகுதான் நான் உணவியல் நிபுணர்’ என்று சொல்லும் இவர் டீடாக்ஸ் எனப்படும் உடல் நச்சுக்களை நீக்கும் சிகிச்சை  பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ‘நம் உடலில் நாள்தோறும் கழிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. வியர்வை, சிறுநீர், மலம் வழியாக  முக்கியமான கழிவுகள் வெளியாகிவிட்டாலும் இன்னும் பலவிதமான கழிவுகள் உடலில் இருக்கவே செய்கின்றன.

இவற்றை முறையான பழக்கங்கள் மூலம் நீக்கினால் நோயின்றி வாழலாம். நம் முன்னோர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன் வயிற்றைச் சுத்தம்  செய்துகொண்டது அதனால்தான். இந்த டீடாக்ஸ் ட்ரிக்ஸை ஒரு வாரம் பயன்படுத்தலாம். முழுமையான டீடாக்ஸுக்கு ஐந்து நிலைகள் உள்ளன.  முதலில், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளில் மசாஜ், வெந்நீர் குளியல், பஞ்சகர்மா தெரப்பி போன்றவை மூலம் உடலில் உள்ள  அதிகப்படியான நச்சுக்களை நீக்கிக்கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்தை அதிகமாகச் சேருங்கள். டீ, காபி, கோலா பானங்கள், செயற்கையான  பழச்சாறுகள் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்திடுங்கள்.

பழச்சாறுகள், பீட்ரூட், கேரட், தக்காளி போன்ற காய்கறிச் சாறுகள், இளநீர், சூப் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் தினசரி இரண்டரை  லிட்டர் பருகலாம். ஆர்கானிக் முறையில் விளைந்த அரிசி, சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை மட்டுமே உண்ணுங்கள்.  செயற்கை உரம் தெளிக்கப்பட்டு விளைந்த உணவுப்பொருட்களால் டீடாக்ஸ் செய்வதில் பொருளே இல்லை. எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து  வேகவைத்துச் சாப்பிடுங்கள். பால் பொருட்களைத் தவிர்த்திடுங்கள். பால், தயிர், மோர், வெண்ணெய், பாலாடைக்கட்டிகள், நெய், சீஸ், மயோனைஸ்  ஆகியவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்கிறார்.

தனியா தெரியாது தனியா (கொத்தமல்லி)

கொத்தமல்லி விதைகள் எனப்படும் தனியாவிலும் இப்போது கலப்படம் வந்துவிட்டது. கொத்தமல்லி பார்க்க பளபளவென இருக்க வேண்டும்  என்பதற்காக இதனுடன் சல்ஃபர் டை ஆக்சைடு கலக்கிறார்கள். மேலும் எடை கிடைக்க வேண்டும் என்பதற்காக மரத்தூளையும் கலக்குகிறார்கள்.  பார்ப்பதற்கு வெண்மையாக இருந்தால் அது கலப்பட தனியா. அடர் பழுப்பாக இருப்பதுதான் நல்ல தனியா.

தனியாவில் மரத்தூள் இருந்தால் தண்ணீரில் போடும்போது அது மிதக்கும். எனவே, கொத்தமல்லி வாங்கும்போதும் உஷாராக இருங்கள். கலப்படம்  இருந்தால் அந்த பிராண்டை வாங்குவதையே தவிர்த்திடுங்கள். ஏனெனில், சல்ஃபர் டை ஆக்சைடு செரிமான மண்டலத்தைத்தான் முதலில் சிதைக்கும்.  குடல் புற்றுநோய் வரை கொண்டுவரும் கொடூர வேதிப்பொருள் இது.

உசிரை வாங்கும் பரோட்டா

கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் 1951ல் வெளியான திரைப்படத்துக்காக ஒரு பாடல் எழுதினார். ஓர் உணவுப் பண்டத்தின் வரலாற்றைச் சொல்லும்  அழகான பாடல். ‘ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா உணவுப் பஞ்சமே வராட்டா நம் உசிரை வாங்குமா பரோட்டா’  இதுதான் அந்த வரிகள். இரண்டு உலகப்போர்கள் மற்றும் வெள்ளையர் அரசின் கொள்ளை கொள்கைகளால் இந்தியாவில் கொடும் பஞ்சம் நேர்ந்தது.  அப்போதுதான், வட இந்தியாவில் கோதுமையை ப்ராசஸ் செய்து உருவாக்கப்படும் மைதா தமிழகத்துக்கு வந்தது.

உண்டால் நீண்ட நேரம் பசி தாங்கும். குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிறையும் போன்ற காரணங்களால் நமது உழைக்கும் மக்கள் அதிகமாக  உண்ணத் தொடங்கினார்கள். விரைவிலேயே மைதாவின் ருசிக்கும் அனைத்துத் தரப்பினரும் அடிமையானர்கள். இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத  உணவுப் பொருளாக பரோட்டா இருக்கிறது. மைதா இல்லாத இனிப்பே இல்லை எனும் அளவுக்கு எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது மைதா.

சர்க்கரை நோயின் நண்பன் என்று மருத்துவர்கள் மைதாவை வர்ணிக்கிறார்கள். குடல் புற்றுநோயை உருவாக்கும் குளூட்டான் என்ற வேதிப்பொருள்  மைதாவில் அதிகமாக இருக்கிறது. மேலும், மைதா செரிமான மண்டலத்தைச் சிதைக்கும் உணவுகளில் ஒன்று. என்றாவது ஒருநாள் ஓரிரு பரோட்டா  சாப்பிடுவதில் தவறே இல்லை. அடிக்கடி பரோட்டா சாப்பிடுவதும் மைதாவில் தயாரித்த உணவுப் பண்டங்களை அதிகமாக எடுத்துக்கொள்வதும்  நிச்சயம் ஆரோக்கியம் இல்லை என்கிறார்கள்.

இளங்கோ கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-06-2019

  27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்