SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வானவில் சந்தை

2018-06-13@ 14:22:17

நன்றி குங்குமம் தோழி

நெருப்பின்றிப் புகையாது


சமீபத்தில் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவன உயரதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் 2015 சென்னை மழை வெள்ளத்தின் போது பெருமளவு  நட்டத்தைச் சந்தித்தது, சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தான் என்றார். ஏனென்றால், நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் காப்பீடு  செய்யப்பட்டிருந்தன. அதுவே வீடுகளுக்கும் பொருந்தும் என்றார். மழை வெள்ளம் ஏழை பணக்காரர் என்று அனைவரையும் பாதித்தது என்றாலும்,  மீள்வதற்கு பணக்காரர்கள் காப்பீடு வைத்திருந்தனர் (காப்பீடு இல்லையென்றாலும் சரி செய்வதற்கான பணம் அவர்களிடம் இருக்கும்).

ஏழைகளுக்கோ நடுத்தர வர்க்கத்துக்கோ, பணமும் இருக்காது காப்பீடும் இருக்காது என்றார் அந்த அதிகாரி. உண்மைதான், மழை வெள்ளம், தீ விபத்து  போன்ற பேரிடர் அபாயங்கள் வர்க்க வேறுபாடின்றி எல்லோரையும் பாதித்தாலும், தப்பிப் பிழைக்கும் வசதி உயர் வர்க்கத்திற்குத்தான் கூடுதலாக  இருக்கிறது. மழை வெள்ளம், பூகம்பம் போன்றவற்றிலிருந்து யாரும் தனது வீட்டைப் பாதுகாக்க முடியாது என்றாலும் தீ விபத்திலிருந்து அதைப்  பாதுகாத்துக் கொள்ள முடியும். காப்பீடு செய்வதற்கும் கூடுதலாகச் சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வது நலம். அதுவே, வருமுன் காப்பது.

இந்தியாவில் ஒரு ஆண்டில், தோராயமாக 163000 பேர் தீ விபத்தில் இறந்து போகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். மொபைல் போன், லேப்டாப்,  குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி என எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் மின்னணுச் சாதனங்களால் சூழப்பட்ட நவீன வாழ்வு, தீ  விபத்திற்கான அதிக சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. ஆரம்பிக்கிற நெருப்பானது ஆறு நிமிடங்களில் பெரிதாகப் பரவி விடும் என்கிறது ஆய்வு.  அந்த நேரத்திற்குள் யாரும் உதவி கோர முடியாது. கோரினாலும் உதவி வந்து சேர்வதற்குள் எல்லாம் முடிந்து விடும்.  
 
தீ விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். நெருப்பை முன்னறிந்து எச்சரிப்பது, நெருப்பை அணைப்பது, தீப்பிடித்த  வீட்டிலிருந்து தப்பித்து வெளியேறுதல் ஆகியவையே அவை. இவை அனைத்திற்கும் உயர் தொழில்நுட்பக் கருவிகள் சந்தையில் வந்து விட்டன.  சோஃபா, டிவி போன்றவற்றை வாங்குவது போலவே ஒரு குடும்பம், தீ விபத்திலிருந்து பாதுகாக்க மேற்கண்ட கருவிகளை வாங்கிப் பொருத்த  வேண்டும். அவற்றில் அடிப்படையான சில கருவிகளை மட்டும் இங்கே நாம் பார்க்கலாம்.

புகை எச்சரிக்கைக் கருவி (Smoke Detector Alarm)

புகை எச்சரிக்கைக் கருவி, ஒருவர் தீ விபத்தில் இறந்து போவதற்கான சாத்தியத்தை நாற்பது சதவீதம் குறைக்கிறது. ஏனென்றால் நெருப்பை விட  வேகமாகப் பரவுவது புகை. இக்கருவி அறையின் தட்பவெப்ப நிலை மாறுபாட்டை உணர்ந்து எச்சரிக்கை ஒலியை எழுப்பும். வீட்டின் ஒவ்வொரு  அறையிலும் இவற்றைப் பொருத்துவது அவசியம். சில நூறு ரூபாய்களிலிருந்து பல ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் இக்கருவி  கிடைக்கிறது. பெரும்பாலும் பேட்டரியினால் இயங்குவதால், இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

தீயணைப்பான் (Fire Extinguisher)

இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். திரையரங்குகளிலோ வணிக வளாகங்களிலோ பார்த்திருப்போம். தீயைக் கண்டவுடன் அதை  அணைக்க உதவுவது இது. சீஸ்ஃபயர் (Cease Fire) , யுரேகா ஃபோர்ப்ஸ் (Eureka Forbes), ஃபயர் ஸ்டாப் (Fire Stop)) போன்றவை பிரபலமான  பிராண்டுகள். சில நூறு ரூபாய் மதிப்புள்ள சிறிய தீயணைக்கும் கருவியிலிருந்து, பல ஆயிரம் விலையுள்ள அழகாகத் தோற்றமளிக்கும் தீயணைப்பான்  கருவி வரை இன்று சந்தையில் கிடைக்கின்றன. இவற்றையும், அவை பயன்பாடற்று காலாவதியாகிவிடாமல் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

நீர் தெளிப்பான் (Water Sprinkler)

இவற்றைச் சிறிய வீடுகளில் யாரும் நிர்மாணிப்பதில்லை. பெரிய பல அறைகள் கொண்ட வீடுகளுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் இவை  பொருத்தமானவை. புகை எச்சரிக்கைக் கருவி புகையை உணர்ந்ததுமே இவை செயல்பட ஆரம்பிக்கும். தண்ணீர் தொட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும்  இவை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும். அறையில் மழை போலத் தண்ணீரைப் பொழிவதன் மூலம் இவை தீயை கட்டுப்படுத்தி அணைக்கும்.

சில பாதுகாப்பு ஆலோசனைகள்   

* வீட்டின் உறுப்பினர் அனைவருக்கும் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு அவசியம். அனைவருக்கும் தீ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டுமென்று  தெரிந்திருக்க வேண்டும்.
* ஹீட்டர்கள், அயன் பாக்ஸ்  மற்றும் சூடான பொருட்கள் போன்றவற்றை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களான துணிகள், காகிதங்கள், பிளாஸ்டிக்  போன்றவற்றின் அருகில் வைக்கக் கூடாது.
* கேஸ் அடுப்பு, அதிலிருந்து சிலிண்டருக்குச் செல்லும் குழாய் ஆகியவற்றைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். கசிவு எதுவும் இல்லாமல்  பார்த்துக்கொள்வது அவசியம். அடுப்பிற்கு அருகில் துணி, பிளாஸ்டிக் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* வீட்டின் மின்கம்பிகள் காலப்போக்கில் பழுதாகிவிடும். அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால் மின்  கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்கலாம்.
* மின் சாதனப் பொருட்களான குளிர்சாதனப் பெட்டி, ஏ. சி. போன்றவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பராமரித்து வர வேண்டியது  அவசியம்.
* தீயணைப்புக் கருவிகளின் செயல்பாட்டையும், அவற்றைச் சரியாகக் கையாளுவது பற்றியும் வீட்டிலுள்ள அனைவரும் பயிற்சி பெற்றிருக்க  வேண்டும். இல்லாவிட்டால், கருவி இருந்தும் பயனில்லாமல் போகும்.
* தீ அணைக்க முடியாத அளவு இருந்தால், வீட்டை விட்டு வெளியேறி   தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து விட வேண்டியதுதான். நாமே  தீயுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவசர எண்களை அனைவரும் மனப்பாடமாய் வைத்திருக்க வேண்டியது அவசியம்.  அப்போது தேடிக்கொண்டிருக்க முடியாது.
* தீ விபத்தின் போது வெளியேறத் தோதாக அவசர வழி ஒன்று எப்போதும் இருக்க வேண்டும். அதற்கு முன் கூட்டியே திட்டமிட வேண்டும்.
ஏனென்றால், பொருட்கள் போனாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். உயிர் அரியது.

(வண்ணங்கள் தொடரும்!)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்