SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்ம ஊரு சந்தை...

2018-05-28@ 15:17:32

நன்றி குங்குமம் தோழி

மார்ச், ஏப்ரல் மாதங்களில் மெல்லிய நறுமணம் தரும் மஞ்சள் பூக்களால் மலர்ந்து மயக்கும் பெருங்கொன்றை வகைகளில் ஒன்று இயல்வாகை. இந்த  இயல்வாகையைப் போல அந்தக் கண்களில் இயற்கையின் மீதான பேரன்பு ஒளிருகிறது. நம்மாழ்வாரின் புன்னகையின் மிச்சம் அவரது விரல்களில்  இருந்து விழுதுகளுக்குத் தாவுகிறது. யார் இவர்? இயல்வாகை என்ற அமைப்பைத் தொடங்கி இன்று நம்ம ஊரு சந்தை வரை வளர்ந்து நிற்கிறார்  அழகேஸ்வரி. தன் அன்புக்குரியவர்களால் அக்கா என அழைக்கப்படுகிறார்.

ஊத்துக்குளியில் இயல்வாகை அமைப்பைத் துவங்கி சிறுவர்களுக்கான நூலகம், மரபு விதைகள், செடிகளுக்கான நாற்றுப்பண்ணை, இயற்கை வேளாண்  விஞ்ஞானி நம்மாழ்வார் உயிரோடிருந்த காலங்களில் அவரோடு, ஊத்துக்குளி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு  விதைக்கான பயணம்,  பனையைத் தேடி ஒரு பயணம் என நடந்து திரிந்தவர். அந்த விதைகளைப் பந்தாக்கி கிராமத்துக் குழந்தைகளின் பிஞ்சுக் கரங்களால் மலை முழுக்க  வீசச் செய்தவர். இயல்வாகை அமைப்பை பதிப்பகமாக உயர்த்தினார். நம்மாழ்வார் மற்றும் இயற்கை மீது நேசம் கொண்டவர்களின் படைப்புகளையும்  புத்தகமாக வெளியிடுகிறார்.  குழந்தை களையும் படைப்பாளர்களாக மாற்றியுள்ளார்.

பாரம்பரிய விதைகளைச் சேகரித்து புத்தகக் கண்காட்சிகள் வழியாக மக்களிடம் சேர்த்த அழகேஸ்வரி இப்போது நம்ம ஊரு சந்தை என்ற பெயரில்  இயற்கை வேளாண் பொருட்களுக்கான சந்தையை நடத்தி வருகிறார். இதில் காய்கள், கீரைகள், மதிப்புக் கூட்டிய இயற்கை வேளாண் பொருட்கள்,  நாட்டு மாடுகள், கோழிகளும் நம்ம ஊரு சந்தைக்கு  விற்பனைக்கு வருகின்றன. "பணம் கொடுத்து பொருள் வாங்கும் நுகர்வுக் கலாச்சாரத்தில்  இருந்து...நுகர்வோரையே உற்பத்தியாளராக மாற்றும் முயற்சியின் தொடக்கமே" இது என்கிறார் அழகேஸ்வரி. நம்ம ஊர் சந்தை தொடர்பான  அனுபவங்களை நம்மோடு பகிர்கிறார் அழகேஸ்வரி. "இயற்கை வேளாண்மை முறையில விளைவிக்கிற உற்பத்திப் பொருட்களை மார்க்கெட்ல மொத்த  விற்பனைக்கு நிர்ணயிக்கிற விலையில  கொடுக்கிறது விவசாயிக்கு நஷ்டத்தையே கொடுத்தது.

உழைப்புக்கான பலன் உழவனுக்குக் கிடைக்கல. இவங்க கிட்டப் பொருளை வாங்கி மார்க்கெட்டிங் பண்றவங்களால இயற்கை வேளாண்  பொருட்களோட விலை பயப்படற அளவுக்கு இருந்தது. வருமானம் அதிகமா இருக்கிற ஆட்களால தான் நஞ்சில்லா உணவுகள சாப்பிட முடியுமான்ற  ஏக்கம்... இதெல்லாம் தான் நம்ம ஊரு சந்தைக்கான தேவையை உருவாக்கியது.  திருப்பூர், கோவை மாவட்டத்துல நம்ம ஊரு சந்தை நடத்த  திட்டமிட்டோம்.   பக்கத்து ஊர்கள்ல விளையுற பொருட்கள் அந்தப் பகுதில வாழற மக்களுக்குக் கிடைக்கணும். இப்படித்தான் நம்ம ஊரு சந்தைக்கான  மாடல வடிவமைச்சோம். முதல்ல கீரை, காய்கள் விற்பனைக்கு வந்தது. பாரம்பரியக் கலைஞர்களோட நிகழ்ச்சிகளும் அதுல சேர்த்தோம். ஒவ்வொரு  சந்தையிலயும் தற்சார்பு வாழ்வியலுக்கான பயிற்சியும் கொடுக்கறோம்.

வீட்டுல கிச்சன், டாய்லெட், பாத்திரம் கழுவ, வீடு துடைப்பதற்கென்று தனித்தனி பிராண்டட் பொருட்களை நாம பயன்படுத்தறோம். இத்தனை  புராடக்டுகளோட வேலையும் அழுக்கை நீக்குறது மட்டுமே. ஒரு வேலைக்கு எதற்கு இத்தனை பொருட்கள் என்று நாம் யோசிப்பதில்லை. மேலும்  இதில் பயன்படுத்துற ரசாயனங்கள் உடல் நலத்துக்கு எதிரானது. அதைப்பற்றியும் நமக்குக் கவலை இல்லை. இதற்கு மாற்றா இயற்கைப் பொருட்களை  வைத்து  அழுக்கு நீக்கி தயாரிக்க நம்ம ஊரு சந்தைல பயிற்சி  கொடுத்தோம்.  நாம தினமும் காலைல எழுந்ததும் குடிக்கிற டீயில் கொக்ககோலா   குடிக்கிற அளவுக்கான பாதிப்புகள் இருக்கு. டீயில் நிறத்தைக் கூட்டும் பொருள் சேர்க்கறாங்க. அதுல இனிப்புக்காக பயன்படுத்துற வெள்ளை சர்க்கரை,  பால் இரண்டிலுமே நச்சுக்கள் இருக்கு. இதெல்லாம் சேர்த்து காலைல எழுந்தும் சேர்த்துக் குடிக்கிறோம்.

இதற்கு மாற்றாக மல்லி புதினா இலை டீ மிக்ஸ், சுக்கு மல்லி டீ என வெவ்வேற சுவை தர்ற டீ பவுடர்கள் நம்ம ஊரு சந்தைல கிடைக்குது. இதுல  தேயிலை கலக்கப்படறதில்லை. இதற்கு பாலும் தேவை இல்லை. நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி சேர்த்து இந்த டீயைப் பருகலாம். இந்த  சந்தை   திருப்பூர், கோவை, அவினாசி மூன்று ஊர்கள்ல நடத்தியிருக்கோம். ஞாயிற்றுக்கிழமைல நடக்குது. அந்த ஊர் நண்பர்கள் மூலம் அந்தப் பகுதியில  உள்ள இயற்கை வேளாண் பண்ணைகளுக்கு நேரடியா விசிட் செய்றோம். ஆர்கானிக் விளைச்சல் தானான்னு மண்ணை ருசிச்சு உறுதிப்படுத்தறோம்.  இயற்கை வேளாண்மைல விளைஞ்சது மட்டுமே சந்தைக்கு வருது. நகரப்பகுதி மக்கள் கிட்ட நுகர்வுக்காக எந்த விலையும் கொடுக்கிற மன நிலை  இருக்கு.

நுகர்வோர்ன்ற நிலைல இருந்து அவங்கள உற்பத்தியாளர்களா மாத்துறதும் இந்த சந்தையோட நோக்கம். நல்ல காய்கறிகளை எப்படி வீட்லயே  வளர்க்கலாம்னு பயிற்சி கொடுக்குறோம். பணத்தின் பின்னால ஓடறதைக் குறைச்சு தற்சார்பு வாழ்க்கைக்கு மக்களை நகர்த்துறது தான் நம்ம ஊரு  சந்தையோட நோக்கம். இந்த சந்தையோட எதிர்கால வடிவம் பண்ட மாற்று முறைதான். அந்த ஊர் மக்களோட காசு அங்கிருக்கிற உழவர்கள் மற்றும்   அந்தப் பகுதில இருக்கிறவங்ககிட்டவே இடம் மாறும். பணத்தின் பின்னால ஓடி, அதைக் கொடுத்து ரசாயன உணவுகளை உண்டு கொடூரமான நோயின்  பிடியில சிக்கி மரணத்தை நோக்கிப் பயணிக்கிற நிலைமை யாருக்கும் வரக் கூடாது.  

நமக்கான நஞ்சில்லா உணவு, குறைந்த பட்சத் தேவைகளோட எளிமையான வாழ்வு, ஆரோக்கியமான பயணம். இது தான் நம்ம ஊரு சந்தையின்  அடுத்த கட்டம். சந்தை முடிஞ்சதும் மீதம் உள்ள வேளாண் பொருட்கள விவசாயிகள் பண்ட மாற்று முறையில் மாற்றிக்கிறாங்க. இதுவும் சந்தோஷம்.   மற்ற மாவட்டங்கள்லயும் நண்பர்கள் நம்ம ஊரு சந்தை நடத்த கேட்டிருக்காங்க. இயற்கை வேளாண் விவசாயிக்கு சரியான விலை கிடைக்கும்.  சரியான விலைல தரமான பொருள் நுகர்வோருக்குக் கிடைக்கும். இதெல்லாம நம்மாழ்வார் ஐயாவோட கனவுகள்ல ஒன்னு. அவரோட கனவுகளை  மண்ணுலயும், மக்கள் மனசுலயும், குழந்தைகளோட சிந்தனைலயும் விதைக்கிற வேலையைச் செய்யறோம்" என்கிற அழகேஸ்வரியின் வார்த்தைகளில்  அத்தனை நம்பிக்கை!

யாழ் ஸ்ரீதேவி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்