SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போராடி கிடைத்த வெற்றி

2018-05-16@ 13:57:37

நன்றி குங்குமம் தோழி

ஜீவிதா சுரேஷ்குமார் - தன் ஆவணப் படங்கள் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்துபவர். நீரின்றி அமையாது  உலகல்லவா? அதன் முக்கியத்துவம் கூறும் ‘கிணறு' ஆவணப்படம் மூலம் கவனம் கவர்ந்தவர். “பதினோராம் வகுப்பு  படிக்கும் போதிலிருந்தே விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கணும்னுதான் விரும்பினேன். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் அது  குறித்துக் கேட்டதற்கு அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. அப்புறம் ஒருவழியாக அப்பாவின் சம்மதத்தோடு படித்தாலும்  அவருக்குப் பெரிதாக விருப்பம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் முதல் வருடம் ஓர் ஆவணப்படம் எடுத்துக்  காண்பித்த பிறகு தான் அப்பா என் திறமையையும், என் லட்சியத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்” என்கிறார்  குறும்படங்களை இயக்கும் ஜீவிதா சுரேஷ்குமார்.

தமிழகத்தில் குறும்படங்கள் இயக்கும் பெண்கள் குறைவு. அதிலும் சமூக நலம், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை  படமாக எடுப்பவர்கள் ரொம்பவே குறைவு. இப்படியான சூழ்நிலையில் கடந்த ஒன்பது வருடங்களாக தொடர்ச்சியாக  குறும்படங்களை இயக்கி வருகிறார் ஜீவிதா.“சொந்த ஊர் கோயம்புத்தூர். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில்  விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். படிக்கும் போது சன் டிவியில் இன்டன்ஷிப் செய்தேன். எங்கள் கல்லூரியில்  இருந்து சென்னைக்கு வந்து இன்டன்ஷிப் செய்த முதல் பெண் நான்தான். அதன் பிறகு மற்ற மாணவிகளும் வர  ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அங்கு கிடைத்த தொடர்புகள், புரிதல்கள்  மூலம் ஆவணப்படங்கள் மற்றும்  குறும்படங்களை இயக்க ஆரம்பித்தேன். எனக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்து அப்பா என்னைப் புரிந்து கொண்டார்.  ஆவணப்படங்கள் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

சுனாமி பாதிப்புகள் குறித்து டாக்குமென்ட்ரி எடுத்தேன். புதுச்சேரி, வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளை ஆய்வு  செய்து ஆவணப்படம் எடுத்தேன். அந்த ஆவணப்படத்தால் ஒரு தொண்டு நிறுவனம் 40 கிராமங்களை தத்தெடுத்தது.மொத்தம் இதுவரை 12 ஆவணப்படங்கள், 3 குறும்படங்களை இயக்கி இருக்கிறேன்.பெற்றோர்கள் படிப்பதற்காக தங்கள்  குழந்தைகளுக்கு மனதளவில் கொடுக்கும் அழுத்தத்தை ‘என்னை விடு’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்தேன். இது  ஓர் உண்மைக்கதை. இந்த மன அழுத்தத்தால் பிள்ளைகள் உளவியல் ரீதியாக எத்தகைய பாதிப்பை அடைகிறார்கள்  என்பது குறித்து எடுத்திருந்தேன்.

2007ல் எனக்கு திருமணம் நடந்தது. அப்பாவை போலவே என் கணவரும் முதலில் என் வேலையைச் செய்ய  ஒப்புக்கொள்ளவில்லை. கல்யாணத்திற்குப் பிறகு வேலைக்குப் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்பாவுக்கு பேசி  பேசி புரிய வைத்தது மாதிரி அவங்களுக்கும் புரிய வைக்க இரண்டு வருஷம் ஆச்சு. ஒரு ஆன்லைன் நியூஸ் சேனல்  தொடங்கினேன். மாதத்தில் இரண்டு நாள் போறேன்னு அப்படி இப்படிச் சொல்லி ஒப்புக்கொள்ள வைத்தேன். அதன்  பிறகு நீ ஆன்ஸ்கிரின் வரக்கூடாது, குழந்தைகளை எப்போதும் நீ தான் பார்த்துக்கொள்ள  வேண்டும் என்று  நிபந்தனைகளோடு என் வேலையை நான் பார்க்க ஒப்புக்கொண்டார். அதனால்  இப்போதும் வெளியிடங்களுக்கு எனது  வேலை தொடர் பாகப் பயணங்கள் மேற் கொள்ளும் போது என் குழந்தைகளை நான் உடன் அழைத்துச் செல்வேன்.  பார்த்துக்கொள்வேன். என் குழந்தைகளும் என் சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள்.

எங்கள் ஆன்லைன் சேனலில் வேலை பார்க்கும் எங்கள் குழுவினருடன் சென்று ஒரு வாரம் தேனி மாவட்டத்தில் தங்கி  இருந்து தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள மலையோர கிராமங்களில் நிலவும் பிரச்னைகளை மையப்படுத்தி ‘கிணறு’  என்ற பெயரில் குறும்படம் இயக்கி இருக்கிறேன். மலைக்கிராமங்கள் என்றால் செழிப்பாக இருக்கும் என்ற எண்ணம்  பலரிடையே நிலவுகிறது. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. தேனி மாவட்டத்தில் பல கிராமங்களில் குடிக்கத்  தண்ணீர் கூட கிடையாது. கழிப்பறையைப் பயன்படுத்தவும் தண்ணீர் இல்லை. எங்கும் திறந்த வெளி கழிப்பிடங்களை  பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களுக்கு சுகாதாரம் குறித்து தெரியவில்லை.  அவர்களின் தண்ணீர் பிரச்னையை இயக்க முடிவு செய்தேன்.

எங்கள் குழுவினருடன் சென்று மொத்தம் 17 கிராமங்களை பதிவு செய்தேன். தேக்கம்பட்டி, பொன்னம்மாள் பட்டி,  திம்மநாயக்கன் பட்டி, எரணம்பட்டி, கோணம்பட்டி, சிந்தலைச்சேரி ஆகிய இடங்களில் மக்கள் தண்ணீர் இன்றி  அல்லல்படுவதை நேரடியாக பார்த்தோம். சில பேர் சொந்த செலவில் போர் போட்டு தண்ணீர் எடுக்க முயல்கிறார்கள்.  சிலர் வழியில் பைப் உடைந்து வெளியேறும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்.மேற்கூறிய இடங் களில் எங்கு கிணறு  தோண்டினாலும் தண்ணீரே வருவ தில்லை. அதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் ‘கிணறு’ என்று இப்படத்திற்கு  பெயர் வைத்தேன். இதனை தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்தேன். குறும்படம் எடுப்பதால் தொண்டு  நிறுவனங்கள் மூலம் உதவும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. பல நேரங்களில் இதற்கு பலன் கிடைத்திருக்கிறது.பெண்கள் எப்படி விபச்சாரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்பது குறித்து ஓர் குறும் படம் எடுத்தேன்.

மைசூரில் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் உள்ளது. அங்கே 3000 மொழிகளை குறித்து ஆராய்ச்சி  செய்கிறார்கள். தமிழின் கலாச்சாரம் குறித்த ஆவணப்படங்களை அவர்களுக்கு நான் இயக்கி தந்துள்ளேன். இருளர்,  முதுவான் போன்ற  பழங்குடியினரின் வாழ்க்கை கலாச்சார சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களை, கதகளி போன்ற  நடனங்கள் குறித்த ஆவணப்படங்களையும்  இயக்கி இருக்கிறேன். எனது படங்கள் மொழி சார்ந்த ஆய்வுக்காக அங்கு பயன்படுத்தப் படுகின்றன.

பிபிசியில் இருந்து சில ஆவணப்படங்களை வாங்கி மொழிபெயர்ப்பு செய்து தமிழ் நாட்டில் உள்ள ஒரு தனியார்  சேனலுக்கு கொடுத்து வந்தேன்.ஆவணப்படங்கள், குறும் படங்கள் எடுத்த அனுபவங் களினால் தற்போது சினிமாவில்  நுழைந்திருக்கிறேன். சினிமாவில் கிரியேட்டிவ் புெராடியூசராக இருக்கிறேன். ‘என்னை விடு’ குறும்படத்தைக்கூட  திரைப் படமாக எடுக்கும் முயற்சியில் இருக்கிறேன்.விழிப்புணர்வு குறைவு, தகவல் தொடர்பின்மை போன்ற பல்வேறு  காரணங்களால் குறும்படம் எடுக்க பெண்கள் மத்தியில் ஆர் வம் குறைவாக உள்ளது. ஆனால் முயற்சி செய்தால்  பெண்களும் இந்த துறையில் வெற்றிகரமாக வலம் வரலாம்'' என்கிறார்.

- ஸ்ரீதேவி மோகன்
படங்கள்: ஆர்.கோபால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்