SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூகப் பணிக்காக ஐடி பணியை துறந்தவர்!

2018-05-16@ 13:55:36

நன்றி குங்குமம் தோழி

மாதச் சம்பளம் லட்சத்தை தொட்டிருந்த தனது மென்பொருள் பொறியாளர் வேலையை லட்சியத்திற்காக தூக்கி  எறிந்துவிட்டு இளந்தமிழகம் மற்றும் மென்பொறியாளர்களுக்கான இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான FITEல்  முழுநேரச் செயல்பாட்டாளராய் இயங்கி வருபவரும், இளந்தமிழகம் அமைப்பின் முக்கிய நிர்வாகியுமான பரிமளாவை  மே தினத்திற்காக நேர்காணல் செய்தபோது அவரது வாழ்க்கை குறித்து நம்மிடம் பேசத் துவங்கினார்.

‘‘எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் நெமிலி. மிகச் சிறிய ஊர். விவசாயம், கைத்தறி இவை இரண்டும்தான் அந்த  ஊரின் முக்கிய வாழ்வாதாரம். அம்மா அப்பா பெரிய அளவில் படிக்காதவர்கள். பொருளாதார நெருக்கடி நிலை இளம்  வயதில் எனக்கு அதிகமாகவே இருந்தது. எங்கள் குடும்பம் சிறிய அளவில் விவசாயம் செய்தாலும், அப்பா சொந்தமாக  சின்ன கடை ஒன்றை வைத்திருந்தார். அம்மா பூ வியாபாரம் செய்வார். எங்கள் குடும்பத்திற்கான வருமானம் இதுதான்.  என் பெற்றோர் உழைப்பை மட்டுமே நம்பக் கூடியவர்கள். கடுமையான உழைப்பை செலுத்தக் கூடிய குடும்பம்  எங்களுடையது. என் அம்மா கடுமையான உழைப்பாளி. எனக்கு உழைப்பின் வலிமையை உணர்த்திய இன்ஸ்பிரேசன்  என் அம்மா.  எப்போதும் தன் சொந்தக்காலில் வாழ நினைப்பவர். அவர் தேவைகளுக்காக என் அப்பாவை  எதிர்பார்க்காமல் அவரே உழைத்து பணம் சேர்ப்பார். அப்பாவும் கடுமையான உழைப்பாளி. எனவே எனக்கும் உழைப்பு  பிடித்திருந்தது. எப்போதும் சோர்ந்து போகமாட்டேன். ஓடிக்கொண்டே இருப்பேன்.

அண்ணன் மற்றும் தம்பியுடன் வீட்டில் நான் ஒரே பெண். மேல்நிலை பள்ளிப் படிப்புவரை அரசுப் பள்ளியில் தமிழ்  வழியில்தான் படித்தேன். பணக்காரர்களாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அரசுப் பள்ளியில்தான். அப்போது  தனியார் பள்ளிகள் கிடையாது. என் இளமைக்காலம் அனைத்து தரப்பு வர்க்கத்தினருடனும், அனைத்துத்  சாதியினருடனும் ஒன்றாகவே நகர்ந்தது.பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் நான் பள்ளியில் முதல் மாணவியாக  மதிப்பெண் எடுத்து தேர்வானேன். நான் நன்றாகப் படிக்கிறேன் என்பதை என் வீட்டாருக்குச் சொல்லி, மேலே படிக்க  வைக்க என் பெற்றோருக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தினார்கள்.

என் வீட்டில் இருப்பவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் அவ்வளவாகத் தெரியாது. அம்மாவிற்கோ நான் பெரிதாகப்  படிப்பதில் விருப்பம் இல்லை. எனக்குத் திருமணம் செய்து வைப்பதிலே அம்மா முனைப்புக் காட்டினார். எனக்குச் சொல்லாமலே திருமணம் ஏற்பாட்டையும் செய்தார்கள். என் முதல் போராட்டம் வீட்டிலிருந்தே துவங்கியது. நாள்  முழுவதும் சாப்பிடாமல் இருந்து என் எதிர்ப்பை பதிவு செய்தேன். என்னை மேலே படிக்கச் சொல்லி அப்பா ஆதரவு  தந்தார். ஆனால் அம்மா கடைசிவரை ஒத்துக் கொள்ளவில்லை.

என் குடும்பத்தில் நான்தான் படித்து வெளியில் வரும் முதல் பெண். எதை முக்கிய பாடமாக எடுத்துப் படிக்க வேண்டும்  என்கிற பெரிய விழிப்புணர்வு எனக்கில்லை. வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில்  இளங்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுத்துப் படித்தேன். நான் இருந்த சிறிய கிராமத்தை விட்டு ஒரு சிறு  நகரத்தை நோக்கி நகர்த்திய முதல் நிகழ்வு அது. கல்லூரிக்குச் சென்ற பிறகே என் அறிவு மிகவும் விசாலமடைந்தது.  ஊரில் இருந்தே தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தேன். நான் கல்லூரிக்கு காலடி எடுத்து வைத்த முதல்  நாள், ‘நீ யாரையும் காதல் பண்ணக் கூடாது. அப்படிச் செய்தால் நான் தூக்கு போட்டு செத்துருவேன்’என அம்மா  மிரட்டினார்.  நான் கல்லூரியில் இளங்கலை படிப்பில் இருக்கும்போதே என் அம்மா திடீர் என இறந்துவிட்டார். என்  அத்தை ஒருவரின் வாழ்க்கை சரியாக அமையாமல் கணவனால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அதனால் தொடர்ந்து அப்பா என்னை மேல் படிப்பு படிக்கச் சொன்னார். ‘பெண்கள் நிறைய படிக்க வேண்டும். தன் சுய  காலில் நிற்க வேண்டும். கணவனை நம்பி இருக்காமல் உன்னை நம்பி இரு’ என அப்பா என்னிடம் பேசத் துவங்கினார்.  தொடர்ந்து முதுகலை படிப்பிற்காக நுழைவுத்தேர்வு எழுதி தேர்வாகி சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.சி.ஏ. படிக்க  தேர்வானேன். இப்படித்தான் என் சென்னை வாழ்க்கை துவங்கியது. மேல்படிப்பிற்காக சிறு நகர வாழ்வை விடுத்து,  பெருநகரத்திற்கு இடம் பெயர்ந்தேன். சென்னை பல்கலைக் கழகத்திற்குப் பின்னால் இருக்கும் பெண்கள் விடுதியில்  தங்கி மூன்றாண்டுகள் படித்தேன். நான் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக நினைத்துப் பார்க்கும் நாட்களில் எனது  கல்லூரி காலங்களும் ஒன்று.

கல்லூரி மேல் படிப்பை முடித்ததும் மேல்மருவத்தூர் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக  பணியில்  அமர்ந்தேன். அப்போது என் அப்பா உடல் நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார். அம்மா அப்பா இருவரும் இறந்த  நிலையில் உளவியல் ரீதியான மன நெருக்கடிக்கு ஆளானேன். அதுவும் என் அப்பா இறந்த நேரத்தில் கடுமையான மன  உளைச்சலில் இருந்தேன். தொடர்ந்து எனக்கு ஐ.டி துறைக்குள் பணி வாய்ப்பும் கிடைத்தது. பத்தாண்டுகளுக்கு மேல்  இன்ஃபோஸிஸ், சி.டி.எஸ் என மென்பொருள் துறையில் என் பயணம் தொடர்ந்தது. 20 ஆயிரம் ஊதியத்தில் துவங்கிய  என் பயணம் லட்சத்தை தொட்டது.

எனது பள்ளிப் பருவத்தில் இருந்து கல்லூரி படிப்பு வரை சமூகம் குறித்து ஆழமான அறிவெல்லாம் அப்போது  எனக்கில்லை. மேலோட்டமான அறிவே இருந்தது. எங்கள் கடை பக்கத்தில் இருந்த சிறிய வெட்ட வெளியில்  அவ்வப்போது அரசியல் கூட்டங்கள் நடக்கும். அவற்றை கூர்ந்து கவனிப்பேன். அவை செய்திகளாக மட்டுமே என்  மனதில் பதிந்திருந்தது. சரி தவறு என்கிற கருத்து மட்டுமே அப்போதிருந்தது. சமூகம் குறித்த ஆழமான அறிவு  எனக்கில்லை. பார்ப்பனியம் பற்றியோ, சாதியப் பிரச்சனைகள் குறித்தோ எதுவும் தெரியாது. அரசியல் செயல்பாடுகளில்  பெரிய அளவில் கலந்து கொண்டதும் கிடையாது. எல்லா நிகழ்வுகளிலும் வெறும் பார்வையாளராக  மட்டுமே  இருந்திருக்கிறேன். என் வீட்டிலும் யாரும் அரசியல் செயல் பாட்டிலும் இல்லை.

2008 இன்போசிஸில் பணியாற்றிக் கொண்டிருதேன். ஈழப்போர் அப்போது உக்கிரம் அடைந்த நேரமிது. மிகவும்  கொடூரமாக இருந்தது. போர் செய்திகளை தொடர்ந்து கவனித்து உடன் வேலை செய்பவர்களுடன் விவாதித்துக்  கொண்டிருப்பேன். மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் சொல்வதையே எல்லாரும் பேசினார்கள். அவர்களோடு நிறைய  விவாதிப்பேன். ஈழப் போரை நிறுத்து தமிழர்களைக் காப்பாற்று என்ற முழக்கங்கள் எல்லா இடங்களிலும் கேட்கத்  தொடங்கியிருந்த நேரம் அது. பொதுவாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போது நிறைய  இருந்தது. யாரை எப்படி அணுகுவது என்ற குழப்பத்தில் இருந்தேன்.

ஐ.டி. ஊழியர்களுடைய மனிதச் சங்கிலிப் போராட்டம், உண்ணாவிரதம் பற்றிய செய்தி ஒன்று அப்போது நாளிதழ்களில்  வெளிவந்தது. ‘சேவ் தமிழ்’ என்ற இயக்கம் செய்ததாக அறிந்து அதைப் பற்றிய முழுத் தகவல் அறிய விரும்பி  அவர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பினேன். தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்தில்  என்னை இணைத்தேன். தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்களுடன் பங்கேற்றேன். கூட்டங்களிலும்,  பேரணிகளிலும் பங்கேற்றேன். பொது வாழ்விற்கான எனது பயணம் மெல்ல ஆரம்பித்திருந்தது. என்ன நடக்குது  காஷ்மீரில்? என்றொரு கூட்டம் லயோலோவில் நடந்தது. அதற்குமுன் என் மனதில் முஸ்லீம்களை தீவிரவாதியாக  எண்ணி இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் இருந்த அந்த எண்ணங்கள் சிதையத் தொடங்கின.

2010ல் சோழிங்கநல்லூரில் மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து ஓர் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.  அந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்து, வந்தவர்களை பேச வைத்தேன். அந்த நிகழ்வில்  தோழர் தியாகு, கவிஞர் இன்குலாப் எல்லாம் பங்கேற்றார்கள். அப்போது எனக்கு அவர்களை எல்லாம் தெரியாது.

சேவ் தமிழ் இயக்கம் நிறைய வேலைகள் செய்யத் துவங்கியது. என் செயல்பாடுகள் அவர்களுடன் தொடர்ந்து இருந்தது.  ஆலோசனைக் கூட்டம், போராட்டங்களில் எல்லாம் இயக்கம் சார்பாக கலந்து கொண்டேன். தொடர் சம்பவங்களான  ஈழப் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற பிரச்சனைகள் என்னை கூர் தீட்டின.  இமானுவேல் சேகரன் வரலாறுகளை தேடி அறியத் துவங்கினேன். சாதிய கட்டமைப்புகள், அதன் அழுத்தம் எல்லாம்  எனக்குப் புரியத் துவங்கின. அதைப் பற்றி நிறைய விவாதிக்கத் துவங்கினேன். 2011ல் கூடங்குளம் போராட்டம்  துவங்கியது. அதிலும் தீவிரமாக இறங்கினேன். அந்த மக்களோடு நின்று போராடினேன். 100 மணி நேர  உண்ணாவிரதத்தில் பங்கேற்றேன். அந்த நேரத்தில் இன்ஃபோசிஸில் இருந்து காக்னிசென்ட் நிறுவனத்திற்கு மாறி  இருந்தேன்.

ஐ.டி. பணியில் நான் இருக்கும்போதே சாதிய ரீதியான பிரச்சனைகள் இருப்பதை உணர்ந்து அதை எதிர்க்கத்  துவங்கினேன். இந்தியா முழுவதும் சாதிப்பெயரில் பணியாளர்களை கலாச்சார அணிகளாய் பிரித்ததை எதிர்த்து  பணியாற்றிய நிறுவனத்திற்கு எதிராய் போராடி பணி செய்யும் இடத்தில் சாதிய ரீதியிலான வேற்றுமைகளைக்  கொண்டுவரக்கூடாது எனவும் எதிர்த்தேன். அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. என்னை எச்சரித்தார்கள். சேவ் தமிழ்  இயக்கம் மூலமாக அதனை எதிர்க்க வைத்தேன்.

இது மிகப் பெரிய செய்தியாக ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் வெளியாகி யு.எஸ் கம்பெனி நிர்வாகம் வரை  சென்று மேலதிகாரிகளை மன்னிப்புக் கேட்க வைத்தது. அதன் பிறகு சாதியப் பெயர்களை நீக்கினார்கள். இந்தப்  பிரச்சனையில் 4 மாதங்கள் கழித்து என் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுதந்திரமாக எனக்கு எது தேவை என்கிற முடிவை எடுக்கும் இடத்தில் நான் இருந்ததால், மனதளவில் என்னை தயார் பண்ணிக் கொண்டு நானே  இந்த முடிவை எடுத்தேன். ஒரு லட்ச ரூபாய் மாத வருமானம் தந்த ஐ.டி. துறையைவிட்டு வெளியேறினேன்.

தொடர்ந்து என்னை முழு நேர இயக்க செயல்பாட்டளராக   மாற்றினேன். சேவ் தமிழ் இயக்கத்தின் முழு நேர அரசியல்  பணியில் ஈடுபடும் வேலையைச் செய்தேன். இந்த அமைப்பு சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொருளாதார விடுதலை  எல்லாவற்றையும் பேசும் ஒரு அமைப்பு. 2013ல் இருந்து இதில் முழு நேர செயல்பாட்டாளராக உள்ளேன். 2014 சேவ்  தமிழ் இளந்தமிழகமாக பெயர் மாற்றம் அடைந்தது. அப்போது டி.சி.எஸ் ஊழியர்கள் வேலை இழப்புப் பிரச்சனை நடந்து  கொண்டிருந்த நேரம். இளம் தமிழகத்தின் கொள்கையாக அதனை முடிவு செய்து, ஐ.டி. ஊழியர்களுக்கென யூனியன்  தொடங்க முடிவு செய்தோம்.

இதோ அதன் ஒருங்கிணைப்பாளராய் தொடர்ந்து களத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கிறேன். டி.சி.எஸ் மற்ற  நிறுவனங்களின் ஆட்குறைப்பு, தொழிலாளர் விரோத நடவடிக்கை, சிறு சேரி பெண் மென்பொறியாளர் உமா மகேஸ்வரி  கொலை என அத்தனை விஷயத்திலும் வீதியில் நின்று போராடி இருக்கிறேன்.உலகம் முழுவதும் உள்ள உழைக்கும்  வர்க்கம் மிகப் பெரிய கடுமையான நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். தாராளமயம், பொருளாதார மயம், தங்களுக்கு  சொந்தமான இயற்கை வளமான காற்று, நீர், கனிமவளம், விவசாயம் எல்லாவற்றையும் நாம் இழந்து  கொண்டிருக்கிறோம். இங்கு வேலைக்கு உத்திரவாதம் இல்லை.

எல்லாவற்றையும் தனியார்மயமாக்கி ஒப்பந்தப் பணிகளை நோக்கி மக்களை நகர்த்துகிறார்கள். நிரந்தரமற்ற வேலை,  மோசமான பணியிடச் சூழல், 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வேலை. மிகக் குறைவான ஊதியம்,  மருத்துவ வசதியற்ற சமூகப் பாதுகாப்பின்மை போன்ற கடுமையான நெருக்கடிகளுக்கு ஒட்டு மொத்த மக்களும்  ஆளாகிறார்கள்.இந்தியாவில் விவசாயம் மிகப் பெரும் நெருக்கடியில் இருக்கிறது. சிறு குறு விவசாயிகள் அதிகம்  பாதிப்படைந்துள்ளனர். இதனால் விவசாயக் கூலிகள் கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி நகரத் துவங்கியுள்ளனர்.  நகரங்களில் அவர்கள் குடியிருப்பு வசதியின்றி, தண்ணீர் வசதியின்றி, அடிப்படை வசதிகளற்று மிகப் பெரும்  நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர்.

மத்தியில் ஆளும் வர்க்கம் கார்பரேட்டுகளுக்கு சாதகமான பொருளாதாரக் கொள்கைகளை மட்டும் நிறைவேற்றி, அதை  சாதாரண மக்களின் மேல் உழைக்கும் வர்க்கத்திடையே திணிக்கிறார்கள். உழைப்பாளர் தினம் என்பது உலகம் முழுக்க  உள்ள உழைக்கும் மக்களுக்கான போராட்ட நாள். இது உழைப்பாளர்களின் நாள். உழைக்கும் மக்களுக்கான  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நாள். 8 மணி நேரத்தைத் தாண்டிய கூடுதலான உழைப்புச் சுரண்டலை  பெண்களிடமிருந்தும் பெறுகிறார்கள்.

குறைவான ஊதியம், அதிக பணிச் சுமை, பாலியல் ரீதியிலான சுரண்டல்கள் பெண்கள் மீது தெரிந்தே இங்கு  திணிக்கப்படுகிறது. குடும்பத்தையும் பெண்களே நிர்வகிக்க வேண்டிய சூழலில் இரட்டைச் சுமை பெண்களின் மீது  வலிந்து திணிக்கப்படுகிறது.  இயற்கை வளம் சூறையாடப்படுவதாலும், சுற்றுச்சூழல் நாசமடைவதாலும் பெண்களும்  குழந்தைகளும் அதிகம் பாதிப்படைகின்றனர். முக்கிய வாழ்வாதாரமான தண்ணீர் இல்லை என்றாலும் பெண்கள்தான்  அதைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருகிறார்கள். உணவு தயாரிப்பதில் ஆரம்பித்து, பொருளாதாரம் தேடுவது வரை  எல்லாம் பெண்களாக இருக்கிறார்கள். பெண்ணுக்கு எப்போதும் கூடுதல் சுமைதான். எனவே பெண்களை, உழைக்கும்  மக்களை ஒருங்கிணைத்து நிற்க வேண்டிய நிலையில் நாம்இருக்கிறோம்.

இயற்கை வளச் சுரண்டலின் காரணமாய், வேலை இழந்து, ஒட்டு மொத்த சமூகமும் தொடர்ந்து இடம் பெயர்வதன்  மூலம், வாழ்வை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, அவர்களின் வரலாற்றையும் இழக்கிறார்கள். உழைக்கும் மக்களை  ஒருங்கிணைக்க வேண்டிய போராட்டம் இங்கே மிகவும் முக்கியம். இழப்பின்றி எதுவும் இல்லை. போராடியவர்களின்  வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் மிகப் பெரும் இழப்புகளைச் சந்தித்தவர்கள்தான் நிறைய இருப்பார்கள். மேலும்  எதிர்ப்பென்பதும் மிகவும் அழுத்தமான ஒன்றாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் போராட்டங்கள் மிகவும்  சம்பிரதாயமான ஒன்றாக மாறிப்போய்விட்டது. காவலர்கள் தடுப்புக்களை வைத்து, இங்கேயே நின்று கத்து அல்லது  முழங்கு. மீடியா வந்தா பேட்டி கொடு, கிளம்பு என்கிற சம்பிரதாய சடங்காக போராட்டங்களைமாற்றி  வைத்திருக்கிறார்கள். நமக்கான சிக்கலை கூட நமக்கான வடிவமாக மாற்ற வேண்டிய தேவை இங்கு நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ லில் நாம் நிற்கிறோம்’’ என்கிறார் பரிமளா.                                     

- மகேஸ்வரி
படங்கள்: ஆர்.கோபால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

 • chinaboat

  உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்