SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைராக்கியமே என்னை வாழவைத்தது

2018-05-15@ 15:23:08

நன்றி குங்குமம் தோழி

“வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்'' என்ற  முண்டாசுக் கவியின்  வரிகள் உண்மையாகி இருக்கின்றன திருநெல்வேலியை அடுத்துள்ள பாபநாசத்தைச் சேர்ந்த பிரேமாவின் கதையில். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மிகவும் பின்தங்கிய கிராமச் சூழலில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த  பிரேமா தொடக்கப்பள்ளி படிப்பைக் கூடத் தாண்டாதவர். உடன் பிறந்த நான்கு பேரும் பெண்கள் மற்றும் இரண்டு  சகோதரர்கள் என்ற நிலையில் குழந்தைகளை வளர்க்க பிரேமாவின் பெற்றோர்கள் கஷ்டப்பட்ட நிலையில், பெற்றோருக்கு உதவியாய் தொடக்கப் பள்ளியோடு படிப்பை நிறுத்திவிட்டு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார் பிரேமா.

இந்நிலையில் பிரேமாவின் 19ம் வயதில் தென்காசியினைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும்  பிரேமாவிற்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். விக்னேஷ் சொந்தமாக பாபநாசத்தில் அம்மா ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு போட்டோ ஸ்டுடியோவை நிறுவி அந்த  ஊரில் நிகழும் திருமணம், மற்ற நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுக்கும் தொழிலை செய்து  வந்திருக்கிறார்.இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் பிரேமா கணவரோடு பாபநாசத்தில் இல்வாழ்க்கையை  ஆரம்பித்திருக்கிறார்.

ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. நான்காண்டு இடைவெளியில் பிரேமா மீண்டும் கருவுற்றார்.  இந்நிலையில் பிரேமாவின் கணவர் விக்னேஷ் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையை இழக்கத் துவங்கி இருக்கிறார். பார்வை குறை தொடர்பாக பல கண் மருத்துவர்களையும், பல்வேறு மருத்துவமனைகளையும் அணுகியபோதும் அவரின் பார்வை இழப்பிற்கு தீர்வு கிடைக்கவில்லை. பார்வை தொடர்பான நரம்புகள் பலகீனம் அடைந்ததால் அவர் பார்வை  இழப்பிற்கு ஆளாகியுள்ளதாக மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். அவர் பார்வையை மீட்டெடுக்கும் முயற்சிகள் பயனற்றுப் போயின.

இரண்டாவது குழந்தை பிறக்க சில மாதங்களுக்கு முன்பு அவரின் பார்வை முற்றிலும் பறிபோனது.  குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது. விக்னேஷின் கண்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்போதே தனது மிக நெருங்கிய நண்பர் ஒருவருக்கு  புகைப்படத் துறையின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்து, தனக்கு வரும் ஆர்டர்கள், தனது  வாடிக்கையாளர்கள், தனது தொழில் சார்ந்த இணைய வழி தொடர்புகள், அதற்கான கடவுச் சொற்கள் என  அனைத்தையும் நண்பனுக்கு கற்றுக் கொடுத்து தன் அம்மா ஸ்டுடியோவை பார்த்துக்கொள்ள உதவிக்காக அவரை  தயார்படுத்தியிருக்கிறார்.

தொழில் ரகசியங்களைக் கற்றுக் கொண்ட நண்பன், விக்னேஷின் பார்வை முற்றிலும்  பறிபோனதும் அவரை ஏமாற்றி, மிகப் பெரிய நம்பிக்கை துரோகத்தையும் அவருக்குச் செய்துவிட்டு, விக்னேஷின்  ஸ்டுடியோவிற்கு பக்கத்திலேயே புதிய ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்கி வாடிக்கையாளர்களையும் வருமானத்தை
யும் தன் வசப்படுத்தியிருக்கிறார். வருமானம் முற்றிலும் தடைபட்ட நிலையில், கண் பார்வை இழந்த கணவர், குழந்தைகள் என சாப்பிட வழியின்றி  குடும்பத்தோடு, கிட்டதட்ட வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து 6 நாட்களை கழித்திருக்கின்றனர் பிரேமாவின் குடும்பம். என்ன செய்வதென்று தெரியாத நிலையில்,

பிரேமா தங்களை ஏமாற்றிய தன் கணவரின் நண்பரிடம் சென்று போட்டோ எடுக்கும் நுணுக்கங்களையும், தொழில் நுட்பங்களையும் தனக்குக் கற்றுக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். அதற்கு விக்னேஷின் நண்பர், ‘நீ ஒரு படிக்காத முட்டாள். உனக்கு எப்படி புகைப்படம் எடுக்கக் கற்றுத் தருவது. உனக்கு என்ன தெரியும் என கேட்க வந்துவிட்டாய். கம்ப்யூட்டரில் உன்னால் என்ன செய்ய முடியும்’ என ஏளனம் செய்திருக்கிறார். பிரேமாவின் மனதில் அவர் தன்னை முட்டாள் எனச் சொன்ன வார்த்தைகள் வைராக்கியமாய் பதிய தன்னை கூர் தீட்டக் கிளம்பினார்.

தத்தளிக்கும் குடும்பத்தைக் காப்பாற்ற கேமாராவோடு வைராக்கியத்தையும் சுமந்து அடுத்த நொடியே களத்தில் இறங்கினார் பிரேமா. அடுத்தடுத்து பிரேமாவின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பயங்கரத் திருப்பங்கள் நிறைந்தவையாக இருந்தது. வைராக்கியத்தோடு இருந்த பிரேமாவை குடும்பச் சூழல் வெறியேற்ற துணிந்துபார்வை இழந்த கணவனிடமே ஒவ்வொன் றாக கேட்டுக் கேட்டு கற்றுக்கொள்ளத் துவங்கியிருக்கிறார். கேட்பதற்கே மிகவும் ஆச்சரியமான விசயம்  என்ன வென்றால், தமிழ் கூட சரியாக படிக்க வராத பிரேமா ஒரே வாரத்தில் முயன்று போட்டோ ஷாப் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தார்.

புகைப்படம் எடுக்கும் கலையையும் கைவசப்படுத்தினார். புகைப்படத்திற்கான பிரேம் வைப்பதில் துவங்கி, ஒளி உள்வாங்கல் நுட்பங்களை ஒவ்வொன்றாக விக்னேஷ் சொல்லிக் கொடுக்க, தன் மனதில் கனன்ற வெறி அணையாமல் அப்படியே வைத்துக் கொண்டு புகைப்படக் கலையை முழுவதுமாகக் கற்றார். கேமராவை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டே தன் கணவர் விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் முன்னேறினார் பிரேமா.

பிரேமாவின் வேகமும், ஆர்வமும் அவருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கியதுடன் ஆர்டர்களைப் பெற்றுத் தந்தது. பாபநாசத்தை சுற்றி உள்ள ஊர்களில் நிகழும் திருமணங்கள், கலை நிகழ்ச்சிகள், மற்ற குடும்ப நிகழ்ச்சிகள் என  ஆர்டர்கள் நிறைய வரத் துவங்கின.வெளி உலகையே அறியாத பிரேமா தன் மனதில் இருந்த தடைகளை உடைத்தார். அனைவரோடும் பழகத் துவங்கினார். துவக்கத்தில் தொழில்ரீதியாக பல சங்கடங்களை உணர்ந்தபோதும் அவற்றை  எல்லாம் பார்வை இழந்த கணவர், இரண்டு குழந்தைகளை நினைத்தபடியே, தடைக் கற்களை படிக் கற்களாய் மாற்றி முயன்று ஏறத் துவங்கினார்.

வெளியில் இருந்து வரும் ஆர்டர்களை துணிந்து பெற்று, தன்மீது வீசப்படும் ஏளனப் பார்வைகளை தகர்த்து முன்னேறினார். இணைய செயல்பாடுகளின் அத்தனை நுணுக்கங்களையும் கணவரிடம் இருந்து கேட்டே கற்றுக் கொண்ட பிரேமா கொஞ்சம் கொஞ்சமாக இணையத்திலும் வலம் வரத் துவங்கினார். போட்டோ ஷாப் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ப்ளெக்ஸ் பேனர்களையும், கரிஷ்மா ஆல்பங்களையும் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கினார்.  

அவரது வேலைகள் வாடிக்கையாளருக்குப் பிடித்துப் போகவே தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக புகைப்படம் எடுப்பதற்கான ஆர்டர்கள் வரத் துவங்கியிருக்கின்றன. கண் பார்வையினை இழந்து தொழிலில் செயல்பட முடியாமல்  போன கணவன், தொடக்கப்பள்ளியில் காலடி எடுத்து வைத்திருக்கும் சின்ன வயது மகன், வீட்டைச் சுற்றி தத்தி தத்தி நடைபோடும் இரண்டு வயது மகள் எனத் தன்னைத் துரத்தும் அத்தனை குடும்பச் சூழலையும், கணவன் செய்து வந்த  தொழிலையும் சேர்த்தே குடும்பத்திற்காக சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளானார் பிரேமா.

வெளி நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் கிடைத்து புகைப்படம் எடுக்கச் செல்லும்போதும், பார்வை இழந்த கணவரை வெளியில்  அழைத்துச் செல்ல வேண்டிய நிலையிலும், பேருந்தில் பயணித்து குறிப்பிட்ட இடத்தை அடைவதில் ஏற்படும்  சிரமங்களை உணர்ந்தவர், அடுத்ததாக அதிரடியாக ஒரு வேலையும் செய்தார். யார் உதவியும் இன்றி தானாகவே  முயன்று இரு சக்கர வாகனத்தை ஒரே நள்ளிரவில் வெறியோடு முயன்று ஓட்டக் கற்றுக் கொண்டார். இப்போது வெளியில் இருந்து வரும் அத்தனை ஆர்டர்களுக்காகவும், மற்ற வேலைகளுக்காகவும் பாபநாசத்தில் இருந்து தென்காசி வரை இருசக்கர வாகனத்திலே பறக்கிறார்.

"எங்கள் வாழ்க்கை முற்றிலும் சூன்யமானதோடு, நண்பனின் துரோகமும் இணைந்து எங்களை நிலை குலையச் செய்ய,  என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த வேளையில், நானும் பிரேமாவும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம். ‘முடிந்தவரை முயற்சிப்போம். தோற்றுப்போனால் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொள்வோம் என்பதே' அது. என்  பிரேமாவின் வைராக்கியம் என் குடும்பத்தை வாழ வைத்திருக்கிறது. நாங்கள் தோற்கவில்லை. பெண்களால் எல்லாம்  முடியும்" என்கிறார் விக்னேஷ், பிரேமாவை அணைத்துக்கொண்டு மிகவும் பெருமிதத்துடன்.பிரேமாவின் நம்பிக்கையும்,  விடாத முயற்சியும் அவருக்கு சாதனைப் பெண்மணி விருதையும் பாபநாசம் பகுதியில் பெற்றுத் தந்திருக்கிறது. கல்வி  கற்கும் முயற்சியிலும் இருக்கிறார் பிரேமா.தேவதைகள் கதைகளில் மட்டுமல்ல நிஜத்திலும் வாழ்கிறார்கள்.       
             
- மகேஸ்வரி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-04-2019

  22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்