SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2018-05-14@ 14:05:53

நன்றி குங்குமம் தோழி

டயட் மேனியா


வீகன் டயட்… இன்றைய பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை எல்லா உட்டாலங்கடி பிரபலங்களையும் வசீகரித்திருக்கும்  டயட் இது. உண்மையில் இது ஒன்றும் அத்தனை புதுசு அல்ல. நமது ஊரில் காலங்காலமாக நனி சைவம் என்று  சொல்லிவந்த டயட் முறைதான். காந்தி காலத்துப் பழசு. ஆமாம், காந்தியே வீகன் டயட் பின்பற்றினார் கொஞ்சம் காலம்.  காந்தி மட்டும் அல்ல ஐன்ஸ்டைன் போன்றவர்களும் இதைப் பின்பற்றியிருக்கிறார்கள். சரி பில்டப் போதும். டயட்  என்னவென்று பார்ப்போம். இறைச்சியை மட்டும் விலக்கினால் சைவம். இறைச்சி உணவுகளோடு பால், முட்டை உட்பட  அனைத்துவிதமான விலங்கு உணவுப் பொருட்களையும் தவிர்த்துவிட்டு, தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப்  பொருட்களை மட்டுமே உண்டால் அதுதான் வீகன் டயட்.

வீகன் டயட்முறையில் தாவர உணவுகளில் இருந்தே கொழுப்புச்சத்தும் பெறப்படுகிறது. வீகன் டயட்டில் பெறப்படும்  கொழுப்புச்சத்துக்கள் அனைத்துமே நல்ல கொழுப்பு என்ற வகையைச் சேர்ந்தது. ஹெல்த்தைப் பதம்பார்க்கும் கெட்ட  கொழுப்பு கிடையாது என்பதால் குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவருமே இதை முயற்சி  செய்யலாம்.

தாவர உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்தவை. செரிமானத்துக்கும் எளிதானவை. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள்,  இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஒபிஸிட்டி பிரச்சனையால்  அவதிப்படுபவர்களுக்கு வீகன் டயட் நல்ல சாய்ஸ். சர்க்கரை போன்ற தீவிர நோய் உள்ளவர்கள் எதற்கும் உங்கள்  டாக்டரிடம் ஒரு அட்வைஸ் கேட்டுவிடுங்கள்.  

காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழு தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள், நட்ஸ், உலர்  பழங்கள், எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்களை வீகன் டயட்டில் வெளுத்து வாங்கலாம். அனைத்து வகையான  அசைவ உணவுகள், பால், மோர், தயிர், பாலாடைக் கட்டி, வெண்ணெய், நெய், பனீர்,  யோகர்ட்,  மயோனைஸ்  ஆகியவற்றுக்கு வீகன் டயட்டில் தடா. ஆனால் இவற்றுக்கு எல்லாம் வீகனில் மாற்று உணவுகள் உள்ளன.  பசும்பாலுக்குப் பதில் தேங்காய்ப்பால், பாதாம் பால், சோயா பால், வேர்க்கடலைப் பால் பயன்படுத்தலாம். பனீருக்குப்  பதில் சோயா பனீர், முந்திரி சீஸ் பயன்படுத்தலாம். சோயா மற்றும் வேர்க்கடலைப் பாலில் இருந்து மோர் தயாரிக்க  முடியும். காபி, டீக்குப் பதில் மூலிகை டீ, கிரீன் டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்தலாம். பாலில் இருந்து  கிடைக்கும் கால்சியத்தைவிட எள்ளில் கிடைக்கும் கால்சியம் அதிகம். எனவே, தினமும் ஓர் எள்ளுருண்டை  சாப்பிடலாம். இறைச்சிக்குப் பதிலாக காளான், சோயா டோஃபு சாப்பிடலாம்.

இட்லி எனும் வந்தேறி

சில மண்ணின் மைந்தர்களுக்கு இந்தத் தலைப்பு அதிர்ச்சியைத் தரக்கூடும். ஆனால் அதுதான் உண்மை. இட்லி நம்ம  ஊர் உணவு இல்லையாம். இன்று நாம் சாப்பிடும் இட்லியின் செய்முறை பற்றிய குறிப்புகள் இந்தோனேஷிய ஹிந்து  அரசர்கள் பற்றிய குறிப்புகளில்தான் உள்ளன என்கிறார் உணவியல் ஆய்வாளர் கே.டி.அசய்யா. நமது சங்க இலக்கியம்  போன்ற பழம்பெரும் இலக்கியங்களில் இட்லி பற்றிய குறிப்புகள் இல்லை. ‘வடாராதனே’ என்ற பத்தாம் நூற்றாண்டு  கன்னட நூலில் இட்லி வீடு திரும்பும் பிரம்மசாரிக்குப் படைக்கப்படும் 18 உணவுகளில் ஒன்று என்ற குறிப்பு உள்ளது.  ஆனால், இந்த இட்லியின் செய்முறை இப்போதைய இட்லி போல் இல்லை. உளுந்துப் பருப்பை மோரில் ஊறவைத்து  அரைத்து,  தயிர், சீரகம், கொத்தமல்லி, மிளகு சேர்த்து வட்டமாக இட வேண்டும் என்று உள்ளது.

13ம் நூற்றாண்டு சமஸ்கிருத நூலில் ‘இட்டரிக’ என்று ஒரு பண்டம் உள்ளது. ஆனால் இது நெய்யில் சுடப்படுவது.  17ம் நூற்றாண்டு தமிழ் நூலான மச்ச புராணத்தில்தான் இட்லி பற்றிய குறிப்பு உள்ளது. அப்படியானால், அரிசி மாவும்  உளுந்து மாவும் கலந்து புளிக்க வைத்துச் சாப்பிடும் வழக்கம் எப்போது வந்தது. இதற்கு இலக்கியத்தில் பதில் இல்லை.  இந்தோனேசியர்கள் எல்லாவற்றையும் புளிக்கவைத்துச் சாப்பிடும் வழக்கம் உடையவர்கள் எனும் அசய்யா அவர்களிடம்  ‘கெட்லி’ எனும் ஓர் உணவும் இருந்தது என்கிறார். ஒருவேளை அதுதான் இட்லியா? யாருக்குத் தெரியும்?  உண்ணும்  உணவின் வரலாற்றைத் தேடினால் ஒருவேளை அது நாம் விரும்பாத விஷயங்களுக்குள் செல்லக்கூடும்.

உலகின் மிகச்சிறந்த காலை உணவுகள் பட்டியலில் இட்லிக்கு எப்போதும் இடம் உண்டு. உடலின் திசுக்களைப்  புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மற்ற உணவைவிட மூன்று மடங்கு இட்லியில் அதிகம். அதுபோலவே  சிறுநீரகச் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் 10 மடங்கு அதிகம்.  எனவே, இட்லி எனும் வந்தேறியை (?)
வணங்கி ஏற்போம்.

உணவு விதி #3

பழங்களை ஜூஸாகக் குடிப்பதைவிடவும் அப்படியே கடித்துப் புசிப்பதுதான் பெஸ்ட். பழத்தை ஜூஸாக்கும்போது அதன்  சத்துக் கட்டுமானங்கள் சிதைவதால் அவை முழுமையாக உடலுக்குக் கிடைக்காமல் போகின்றன. பால், சர்க்கரை,  ஐஸ்கட்டி, தண்ணீர் சேர்த்து  ஜூஸாக்கும்போது  இருக்கும் மிச்சம் மீதி நுண்ணூட்டச்சத்துகளும் பணாலாகிவிடுகின்றன.  எனவே, பழத்துக்கு  ‘ஓ’  போடுங்க… ஜூஸுக்கு ‘நோ’ போடுங்க!

பச்சைப் பட்டாணிக்கு ஒரு ரெட் அலெர்ட்

மாலசைட் க்ரீன் (Malachite green) என்று சொன்னால் நிறையப் பேருக்குப் புரியாது. சாணி பவுடர் என்றால்  சட்டென்று புரியும். வீடு மொழுகுவதற்கு சாணியில் கலக்கப் பயன்படும் இந்த ரசாயனம் ஒரு மோசமான விஷம். கடந்த  தசமங்களில் இதைப் பயன்படுத்தித் தற்கொலை செய்துகொள்வது அதிகரிக்கவே அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு  முடக்கியது. ஒருவழியாக சாணி பவுடர் தற்கொலைகள் குறைந்தன. ஆனால், அதே மாலசைட் க்ரீன் கரைசலில்  முக்கித்தான் நமது பச்சைப் பட்டாணிகள் சந்தைக்கு வருகின்றன என்று பகீரடிக்கிறார்கள் சில உணவியல் நிபுணர்கள்.  பச்சைப் பட்டாணிகள் மட்டும் அல்ல பச்சை மிளகாய், குடமிளகாய் போன்றவை பச்சைப் பசேல் என கண்ணை பறிக்கும்  வண்ணத்தில் இருக்க இந்த வேதிப் பொருள்தான் காரணமாம். செரிமான மண்டலத்தை முற்றிலும் சிதைத்து  புற்றுநோயை ஏற்படுத்தும் மோசமான உயிர் கொல்லி இது. ‘பச்சைப் பட்டாணி வாங்கி அதை நீரில் போட்டதும்  தண்ணீர் பச்சை நிறமாக மாறினால் அதைப் பயன்படுத்தாதீர்கள். அது மாலசைட் க்ரீன் கலந்தது’ என்கிறார்கள்  நிபுணர்கள்.

எக்ஸ்பர்ட் விசிட்

பூஜா மகிஜா இந்தியாவின் புகழ் பெற்ற நியூட்ரீஷியனிஸ்ட். ஹெல்த்தியான உணவுப் பழக்கம் பற்றி பூஜா சொல்லும்  செய்திகள் முக்கியமானவை. கார்போஹைட்ரேட் நம்மை குண்டாக்கும் என்பது தவறான நம்பிக்கை என்று அடித்துச்  சொல்கிறார் பூஜா. ‘உடலின் அடிப்படையான வளர்சிதை மாற்றத்துக்கு கார்போஹைட்ரேட் முக்கியம். கார்ப்ஸ்  உங்களை பருமனாக்காது. ஆனால் தவறான உணவுப் பழக்கம் குண்டாக்கக் கூடும்’ என்கிறார். அதுபோலவே  சர்க்கரையாலான இனிப்பு உணவுகளை சிலர் அதிகம் உண்பதற்குக் காரணம் போதுமான ஹெல்த்தியான உணவுகள்  உண்ணாததுதான் என்கிறார். சரியான நேரத்துக்கு சரியான உணவை உண்டால் உடல் சர்க்கரை கேட்பதை தானாகவே  நிறுத்துமாம். மேலும் காலை உணவை நிறுத்துவதும் காலையில் ஆரோக்கியமற்ற உணவை எடுத்துக்கொள்வதும்  மோசமான விஷயங்கள் என்கிறார். காலையில் டீ, காபி போன்ற காபின் கலந்த பானங்கள் பருகுவது மிகத் தவறான  விஷயம். குறிப்பாக, பெட் காபி குடிப்பது செரிமான மண்டலத்தையே பதம் பார்த்துவிடும். எனவே, பெட் காபிக்கு நோ  சொல்லுங்கள். இரவில் உறங்கப் போகும் முன் டீ, காபி குடிப்பதும் தேவையில்லாத பழக்கம். அது இரவு உறக்கத்தைப்  பாதித்து, உடலின் மெட்டபாலிசத்தைக் கெடுக்கும் என்கிறார் பூஜா.

-இளங்கோ கிருஷ்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்