SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கிடாக்குழி என் ஊரு... மாரியம்மாள்னு பேரு...

2018-05-11@ 16:36:27

நன்றி குங்குமம் தோழி

கிராமியப் பாடகி மாரியம்மாள்

“மஞ்ச வெயிலடிச்சி மழை வாய கட்டுதல்லோ,கொஞ்சம் வெயில நம்பி தஞ்சமுன்னு நானு வாரேன்.கிடாக்குழி என்   ஊரு... எனக்கு மாரியம்மாள்னு பேரு”என்று குரலெடுத்துப் பாடும் பாடலிலே சுய அறிமுகம் செய்துகொள்கிறார்   நாட்டுப்புறப் பாடகி மாரியம்மாள். தன் நாட்டுப்புற கலைப் பயணத்தின் அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

“நான் பிறந்தது சிவகங்கை மாவட்டம் கிடாக்குழி கிராமம்.  கிடாக்குழி மாரியம்மாள் என்றாள் எங்கள்   சுற்றுவட்டாரத்தில் என்னை தெரியாதவர்களே இல்லை. சிறு வயதிலிருந்தே கிராமியப் பாடல்கள் பாடுவது எனக்கு   மிகவும் பிடிக்கும். ஊர் திருவிழாக்களில் நாடகம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது, ‘நானும் ஒரு   பாட்டு பாடுறேன்' என்று அப்பாவிடம் அடம்பிடித்திருக்கிறேன்.என்னுடைய தொல்லை தாங்க முடியாமல், அப்பா கிராமத்   தலைவரிடம் கேட்டு என்னை பாட வைப்பார்.

அப்போது எனக்கு 10 வயது இருக்கும். நாட்டுப்புறப் பாடல், முளைப்பாரி, கும்மியடிப் பாடல்கள் பாடுவேன். என்னுடைய   பாடலை  விரும்பி கேட்பவர்கள் அன்பளிப்பு கொடுப்பார்கள். அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. அப்படி ஒரு முறை எங்கள்   ஊருக்கு அருப்புக்கோட்டையில் இருந்து கரகாட்டக் குழுவினர் வந்திருந்தனர். அந்தக் குழுவின் நிகழ்ச்சியில் ஒரு பாடல்   பாடினேன். என்னுடைய பாடல் அவர்களுக்கு பிடித்துப்போக, “நீ நல்லா பாடுறே எங்களோட வந்தால் நாட்டுப்புறக்   கலைகள் எல்லாம் கத்துக்கலாம்” என அழைத்தார்கள். நான் அவர்களோடு நாட்டுப்புறக் கலைகளை கற்றுக்கொள்ள   அருப்புக்கோட்டை பக்கத்தில் உள்ள புறவக்குளம் என்னும் ஊருக்கு சென்றேன். அங்கு அவர்களோடு பல நிகழ்ச்சிகளுக்கு   சென்று பாடிக்கொண்டிருந்தேன். நான் பெரியவளான பின் அப்பா என்னை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.
 
எங்கள் பகுதியில் வயதுக்கு வந்த பெண்களை வெளியில் போக விட மாட்டார்கள். வீட்டிலே முடக்கப்பட்டேன். வெளி   ஊர்களுக்குத்தான் செல்லக் கூடாது உள்ளூரில் பாடலாம் என்று, கிராமத்தில் யாரேனும் இறந்து விட்டால்   இறந்தவர்களுக்கு ஒப்பாரிப் பாடல்கள் பாடி வந்தேன். ஒப்பாரிப் பாடல்கள்தான் என்னை அடுத்த தளத்திற்கு கொண்டு   சென்றது. எங்கள் கிராமத்தில் நடக்கும் ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்' நாடகத்தில் வீர வெள்ளையம்மாள் வேடத்தில்   நடித்து வந்தேன். அந்த நேரத்தில்தான் “மஞ்ச வெயிலடிச்சி மழை வாய கட்டுதல்லோ” என்ற பாடலை நானே எழுதி   பாடினேன்.

எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர், வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்திருந்தார். அவரோடு அந்த   நாட்டை சேர்ந்த ஒருவரும் வந்தார். அவர்களிடம் கேசட் போட்டு பாட்டு கேட்கும் டேப் ரெக்கார்டர் இருந்தது. அதில்   என்னை பாடச்சொல்லி ரெக்கார்ட் செய்துகொண்டனர். என்னுடைய அக்கா என் பாட்டுக்கு பானையில் தாளம்   போட்டுக்கொண்டிருந்தாள். அந்த நிகழ்வு இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ரெக்கார்டு செய்யப்பட்ட கேசட்டை   என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியாது.

ஒரு நாள் பக்கத்து ஊரின் திரு விழாவில் அந்த பாட்டு ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த ஊருக்கு பிரபல   நாட்டுப்புறப் பாடகர் கோட்டைச்சாமி கச்சேரிக்கு வந்திருந்தார். என்னுடைய பாடலை கேட்டு “யார் இந்த பொண்ணு   நல்லா பாடுது” என்று என்னை தேடி விசாரித்து என்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டார். “நீங்க நல்லா பாடுறீங்க...   எங்களோடு வாங்க. நிறைய பாடல்கள் கற்றுத்தருகிறோம்” என்றார். அவரோடு இணைந்து முற்போக்கு மேடைகளிலும்   நாட்டுப்புறப் பாடல்களை பாடினேன். நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம். அவர் உயர் சாதி சமூகத்தை   சேர்ந்தவர் என்பதால் எங்களுடைய திருமணம் நடப்பதற்கு பெரிய போராட்டமே நடந்தது. பல எதிர்ப்புகளையும்   கடந்துதான் எங்கள் திருமணம் நடந்தது. அதன்பின் பல மேடைகளில் நாங்கள் இருவரும் ஒன்றாகப் பாடி  வந்தோம்.இருவரும் சேர்ந்து “அமுத கானம் கலைக்குழு” ஒன்றை உருவாக்கினோம்.

எங்களுடைய பாடல்களை கேட்டு மதுரையில் பெரிய நிறுவனம் ஒன்று எங்களை அழைத்து எங்களுடைய பாடல்களை   கேசட் போட்டனர். சுமார் 15 தலைப்புகளில் கேசட்டுகளை அந்த நிறுவனம் வெளியிட்டது. அனைத்து கேசட்டுகளும்   நன்றாக விற்றன‌. பொருளாதார ரீதியாக நாங்களும்  வளர்ச்சி பெற்றோம். அதன் பிறகு எங்களுடைய வளர்ச்சிக்கு   முக்கிய காரணமாக இருந்தது புதுக்கோட்டை மாவட்டம்தான். நாட்டுப் புற  கலைஞர்களை அரவணைத்து ஆதரிக்கும்   மாவட்டம் என்றால் அது புதுக்கோட்டை மாவட்டம்தான். என்னுடைய மகள் லட்சுமியும் நாட்டுப்புறப் பாடல்கள்   பாடுவதில் தீவிரம் காட்டுகிறாள். அவள் சிறு வயதில் பாட்டு பாடும்போது' கலைத்துறைக்குள் நீ வர வேண்டாம்,   நன்றாக படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும்' என்று சொன்னேன்.

ஆனால் இந்தக் கலை மீது அவளுக்கு   இருக்கும் ஆர்வத்தினால் எனக்கே தெரியாமல் கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி பாராட்டு பெற்றிருக்கிறார்.  டாக்டர் கலைஞர் இவளுடைய பாட்டைக் கேட்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். எத்தனை திரை இசைப் பாடல்கள் வந்தாலும் கிராமிய பாடலுக்கென்று என்றும் மக்கள் மனதில் இடம் உண்டு. இன்று   திரைத்துறையில் நாட்டுப்புறப் பாடல்கள் வருவதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். நாட்டுப்புறப் பாடல் இந்தப்  படத்தில் இருக் கிறது என்பதற்காகவே படம் பார்க்க செல்லக் கூடியவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். நாங்கள் இளைஞர்களாக இருந்த காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் கிராமிய இசை கச்சேரிகளுக்கு வரவேற்பு கிடையாது.   ஆனால் இ்ப்போது அப்படி இல்லை. இளைஞர்கள் நாட்டுப்புறப் பாடல்களை விரும்பி கேட்கிறார்கள். அந்த அளவிற்கு   திரைப்படங்களின் வாயிலாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிராமியப் பாடல்கள் சென்று சேர்ந்திருக்கின்றன.

இப்போது நாட்டுப்புறப் பாடல்களை பாடுவதற்கு இளைய தலைமுறையினர் ஆர்வமாக வருகிறார்கள். உலகெங்கும்   உள்ள தமிழ் மக்களுக்கு கிராமியப் பாடல்களை கொண்டு செல்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால்   கோட்டைச்சாமி எழுதிய பாடலொன்றை ஒரு நிகழ்ச்சியில் பாடியபோது, “ஏற்கெனவே முன்னால் பாடிய பெண் ஒருவர்   பாடிவிட்டார். அந்தப் பெண்ணின் பாடலை ஏன் நீங்க பாடுறீங்க?’’ என்று அவரிடம் கேட்க, எங்களுக்கு அதிர்ச்சியாக   இருந்தது. ஏனெனில் அது அவர் எழுதிய பாடல். இது மாதிரி பல சம்பவங்கள்.

எங்களுடைய பாடல்களை இப்போது பாடும் இன்றைய கலைஞர்கள் அருமையாக கொண்டு செல்கிறார்கள். அவர்களை   நாங்கள் வாழ்த்துகிறோம். அதே நேரத்தில் கிராமியப் பாடல்களை பாடும்போது, அது யாருடைய பாடல் என்று   மக்களுக்கு சொல்வது அவர்களுடைய கடமை என்று நான் கருதுகிறேன். எங்களுடையபிள்ளைகள்   தொலைக்காட்சிகளில் எங்களுடைய பாடல்களை பாடி பாராட்டு பெறும்போது எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக   இருக்கிறது. அது இன்னாருடைய பாடல் என்று சொல்லி பாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார்   மாரியம்மாள்.

- ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்