SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்.எஸ்.ராஜேஸ்வரி நினைவலைகள்

2018-05-10@ 14:07:55

நன்றி குங்குமம் தோழி

ஒரு கலைஞர் முதுமை காரணமாக ஓய்வில் இருந்தாலும் அவர் நம்முடனே எப்போதும் இருப்பது போன்ற உணர்வையே அவருடைய படைப்புகள் தரும். அவ்வகையில், பாடி ஆண்டுகள் பல ஆயினும் அந்தக் குரலை நாம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பதால் நம்மால் அவர் இப்போது  இல்லை என்பதையும் கூட நம்ப முடியவில்லை. எம்.எஸ்.ராஜேஸ்வரியின் முதுமை குரலை நாம் கேட்கவேயில்லை. என்றும் அவருடைய குரலாக இளம்பெண்ணின்  குரலையோ அல்லது ஒரு மழலையின் குரலையோ நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்.

நுரையீரல் பிரச்சனை காரணமாக ஓராண்டாக உடல் நலிவுற்றிருந்த அவர் தன் 85வது வயதில் மறைந்திருக்கிறார். சுட்டித்தனமாகப் பாடும் ‘புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே’யில் நம் மனதையும் தொட்டவரல்லவா? துயரத்தைப் பிழிந்து மழலைக்குரலில் பாடும் ‘கோழி ஒரு கூட்டிலே’ பாடலில் பிரிந்திருக்கும்  பெற்றோருடைய‌ குழந்தைகளின் பதட்டத்தையும் துயரத்தையும் ஒருசேர தன் குரலில் இழைத்தவர் அவர். ‘ஓ ரசிக்கும் சீமானே’ ஒரு காலத்தைய இளைஞர்களின் கனவுக் குரல் அல்லவா?

பி.சுசீலா ஒரு புறம் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இரு குரலிசையாக டி.எஸ்.பகவதி, பி.சுசீலா, எஸ்.ஜானகி போன்ற பலரோடு இணைந்து பாடியிருக்கிறார். ‘சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே தெய்வீக வீணையும் ஏதுக்கம்மா’ என அவர் குரலெடுத்துப் பாடுகையில்’மயங்காத உள்ளங்களும் உண்டா?‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் வரும் ‘வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடலுக்கு ‘சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத் தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்’ என்கிற எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலில் வரும் பாடல் அல்லவா முன்னோடி?

எம்.எஸ். ராஜேஸ்வரி குறித்து நினைவுகளை பகிர்கிறார்கள் திரைத்துறையினர்...

இயக்குநர் சுகா

கவியரசு கண்ணதாசன் ஒரு முறை சொன்னாராம். ‘எந்தப் பாட்டைத் தந்தாலும் இந்தப்பொண்ணு குழந்தை பாடுற  மாதிரி பாடுறாங்களே' என்று ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா’ பாடல் பற்றி சொன்னாராம். இசைஞானி  இளையராஜா இசையில் ‘தாய் மூகாம்பிகை’ திரைப்படத்தில் ‘இசையரசி என்னாளும் நானே’ என அற்புதமான  பாடலொன்று உண்டு. அதில் மனோரமாவுக்கு குரல் கொடுத்திருப்பார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. சல்லாப ராகத்தில் அமைந்த  பாடல் அது. கஷ்டமான பாடலை அநாயசமாகப் பாடியிருப்பார்.  பி.சுசீலா, எஸ்.ஜானகியோடு இணைந்து பாடிய பாடல்.  அப்புறம் கமல் சாரை குழந்தை நட்சத்திரமாகக் கொண்டு சேர்த்த அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் பற்றி நான்  சொல்லியா தெரியவேண்டும்?”

நடிகர் கமல்ஹாசன்

“குழந்தைகளுக்குப் பாடுவதில் பெயர் பெற்றவர் அவர். அவருடைய உச்சஸ்தாயியில் பாடும் திறனும் ஸ்ருதியும்  அவரை ஒரு நட்சத்திரக் குழந்தைப் பாடகராக ஆக்கியது. ‘களத்தூர் கண்ணம்மா’வில் அவர் எனக்காகப் பாடியபோது  பலரும் என்னிடம் ‘ உனக்காக யார் பாடியிருக்காங்க தெரியுமா?’ என்று வியப்பாகக் கேட்பார்கள். அப்போது எனக்கு  அது எவ்வளவு பெரிய பெருமை என்பது விளங்காத வயது. ஆகவே அப்போது எனக்குத் தெரியவில்லை. அதன்பின் ‘களத்தூர் கண்ணம்மா’ தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட நூறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்குச்  சென்றிருப்பேன்.

இப்போது கட்சி ஆரம்பித்தபிறகு எப்படி ஊர் ஊராகப் போகிறேனோ அதுபோலவே அந்தப் படத்துக்காகவும் சென்றேன்.  அவர் அந்தப் பாடலை நிகழ்வு மேடைகளில் பாடுவார். அவர் அளவுக்கு எனக்குப் பாட வராது என்றாலும், நான்  அவருக்கு முன்னால் ‘அம்மாவும் நீயே’பாடி இருக்கிறேன். அவர் தெற்கத்திப் பக்கத்தைச் சேர்ந்தவர். சிவகங்கைதான் ஊர். தெற்கு மாவட்டங்களில் போகுமிடங்களில் எல்லாம் அவருக்கு பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வரவேற்பில்,  அவருடைய புகழில் அவர் குரலுக்கு வாயசைத்து நடித்ததால், என் பெயரும் ஒட்டிக்கொண்டது. பின்னாளில் என் புகழில்  அவருடைய பெயர் ஒட்டிக்கொண்டது.

என் மீது பெரும் ப்ரியம் கொண்டவர். மிகத் தன்மையானவர். கொஞ்சம் வளர்ந்தபிறகு சந்திக்க வாய்ப்புகளற்றுப் போயின. ஐந்தாறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவரை சந்திக்கும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் ‘நான் எம்.எஸ். ராஜேஸ்வரி’ என்று அறிமுகப்படுத்திக்கொள்வார். ‘‘உங்களை எனக்குத் தெரியாதா? ஏன் ஒவ்வொரு முறையும்  அறிமுகப்படுத்திக்கொள்கிறீர்கள்?” என்று கேட்பேன். “சிறுபிள்ளையாய் இருந்து இப்போது வளர்ந்தபிறகு  நினைவிருக்குமா என்று தெரியாது இல்லையா. அதனால்தான்” என்று சொல்வார்.

‘நாயகன்’படத்திலும் கூட ஒரு பழைய தன்மை வேண்டும் என்பதற்காக எம்.எஸ்.ராஜேஸ்வரியையும் ஜமுனாராணியையும் பாடவைக்கவேண்டும் என ராஜா சார் முடிவு எடுத்து அவர்களைப் பாட வைத்தார். அவர் மேல்  கொண்ட ப்ரியத்தால்தான் விஸ்வரூபம் 2ல் ‘அம்மாவும் நீயே‘ பாடலிலிருந்து இரண்டு வரிகளை எடுத்து நான்  எழுதிய பாடலில் இணைத்திருக்கிறேன்.

எனக்கு எம்.எஸ்.ராஜேஸ்வரி போன்ற நல்லவர்களின் தொடர்பு கிடைத்தும் நான் அவர்களை எல்லாம் அதிகம் சந்திக்காமல் போய்விட்டேன் என‌ ஆதங்கமாக இருக்கிறது. இன்றைக்கு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசனை  சந்தித்தேன். அப்போது கூட நினைத்துக்கொண்டேன். கவிதா ஹோட்டலில் கவிஞர் கண்ணதாசனுக்கு நிரந்தர அறை உண்டு. எப்போதாவது எனக்குத் தோன்றும்போது அங்கு சென்று அவரோடு பேசிவிட்டுவருவேன். அந்த சந்திப்பு ஒரு  வாழ்க்கைப் பாடம் போலிருக்கும். எப்படி நாடகக்கொட்டகைக்குப் போவேனோ அப்படித்தான் அங்கும் செல்வேன்.

ஐம்பது அறுபது முறை அவரை அப்படி அந்த அறையில் சென்று பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும்  அங்கே தமிழ் கற்றிருக்கிறேன். அறிவைப் பெற்றிருக்கிறேன். வாழ்க்கையை கற்றிருக்கிறேன். இன்றைக்குத் தோன்றுகிறது. அவரை ஆயிரம் முறை சந்திக்க வாய்ப்பிருந்தும் நான் சந்திக்காமல் இருந்துவிட்டேன். அவரிடம்  எனக்கிருந்த உரிமையை பயன்படுத்தி நான் சென்றிருக்கவேண்டும். வாழ்க்கைக் கல்வி முழுவதுமாக எனக்குக்  கிடைத்திருக்கும்.

டி.கே.சண்முகத்துடனான சந்திப்புகளும் இப்படித்தான். பாலமுரளி கிருஷ்ணாவின் இசை வகுப்புகளில் நடுவில் சென்று நான் அமர்ந்து இசை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் எனக்கு இருந்தன. கே.பி. சுந்தராம்பாளின் வீடு எங்கள் வீட்டுக்குப் பின்புறம்தான். தொட்டடுத்த வீடு. தாவிக்குதித்துப் போய்விடலாம். இப்போதும் அவருடைய மகன் கணபதி  சுப்பிரமணியம் அங்கு இருக்கிறார். இப்படி பெரும் வாய்ப்புகள் இருந்தும் நான் அறிந்தோ அறியாமலோ அவற்றை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட பெரியவர்களை எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற பெருமையால் நான்  இதைச் சொல்லவில்லை. அப்பேற்பட்டவர்கள் முன் நான் பணிவானவன் என்கிற உணர்வில் சொல்கிறேன். அப்படித்தான்  எனக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியும்.”   

- கவின் மலர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்