SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வானவில் சந்தை

2018-05-04@ 13:54:22

நன்றி குங்குமம் தோழி

மொபைல் போன் காப்பீடு


சில வாரங்களுக்கு முன்  தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் நண்பனொருவன் தனது தொழில்  சகாக்களுடன் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு நீண்ட சுற்றுப் பயணம் சென்றான். காசிரங்கா அருகே ஒரு விடுதியில்  தங்கியிருந்த போது, ஓரிரவு, ஒரு அறையில் இருந்த மூன்று செல்பேசிகள் களவு போயின. திருடன் ஜன்னல் வழியாக  வந்திருக்கலாம் என்று விடுதி நிர்வாகம் சொல்லியிருக்கிறது. பிறகு, அங்கிருந்த காவல் நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளனர். ஆனாலும் அவர்களே நம்பிக்கையோடு போன்கள் திரும்பி வரும் என்று நினைக்கவில்லை.

இதிலும் நண்பனுக்கு ஒரே ஒரு ஆசுவாசம். அவன் தனது நிறுவனம் கொடுத்த ஐபோனை, மேசையில் அல்லாமல்  துணிகள் கொண்டு சென்ற பையில் வைத்ததால் அது தப்பித்தது. இழப்பு எழுபதாயிரம் ரூபாய் என ஆகாமல்  முப்பதாயிரம் ரூபாயோடு போனது என்று பெருமூச்சு விட்டான். அவன் களவு கொடுத்த போனை அப்போதுதான்  முப்பதாயிரத்திற்கு வாங்கியிருந்தான். டேட்டா போன்றவை திருடு போகாமல் தொலை தூரத்திலிருந்தே ரீசெட்  செய்துவிட முடியும் என்றாலும், பணம் போனது போனதுதான்.

புதிய போன்களை வாங்கும் பலரும், அழகிய பாதுகாப்பு உறைகளையும், கூடுதலாக திரையைப் பாதுகாக்கும்  வலிமையான கண்ணாடித் திரைகளையும் உடனே வாங்கி விடுகின்றனர். அதற்காக கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்  வரையில் செலவிடுகின்றனர். ஆனால், திருட்டு, உடைந்து போதல், நீரில் நனைதல் போன்ற அன்றாட  சாத்தியங்களினால் ஏற்படக்கூடிய இழப்பிற்கு தேவையான பாதுகாப்பை செய்யப் பெரும்பாலும் யாரும்  விரும்புவதில்லை. பாதுகாப்பு ஒரு மொபைல் காப்பீடு எடுப்பதே. இந்தக் கட்டுரையில் நாம் செல்பேசிகளைக் காப்பீடு  செய்வது பற்றி பார்க்கலாம்.

மொபைல் இன்சூரன்ஸ் எந்த அபாயங்களைக் காப்பீடு செய்கின்றன?

செல்பேசியைப் பொறுத்தவரை அதற்கு நேரக்கூடிய அபாயங்களை இரண்டாகப் பிரிக்கலாம். அதன் மென்பொருள் பிழை  போன்ற தொழில்நுட்பச் சிக்கல்கள். திருட்டு, உடைந்து போவது போன்ற புறவயமான அபாயங்கள்.  கீழ்க்கண்டவற்றிலிருந்து செல்பேசியைப் பாதுகாக்கிறது மொபைல் காப்பீடு.
 
* நீர் புகுந்ததால் ஏற்படும் பிரச்னைகள்.
* தொடுதிரை வேலை செய்யாமல் போதல், சார்ஜ் ஏறாமல் போதல் போன்ற வன்பொருள் பிரச்னைகள்.
*தீயினால் ஏற்படும் பாதிப்புகள்
*கலவரம், போராட்டம், தீவிரவாதச் செயல்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள்.
*தீங்கிழைக்கும் நோக்குடன் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள்.
*தொடுதிரை உடைந்து போதல்.
*கொள்ளை, வீடு புகுந்து திருடுதல், காணாமல் போதல் ஆகியவற்றினால் ஏற்படும் இழப்பு.
*பூட்டப்பட்ட வாகனத்திலிருந்தோ, கட்டிடத்திலிருந்தோ காணாமல் போகும் இழப்பு.
*கருவியின் உள் மற்றும் வெளிப்புறப் பாகங்களில் ஏற்படும் பாதிப்புகள்.

விலக்குகள்

கீழ்கண்டவற்றிக்கு இழப்பீடு கிடைக்காது.
*மொபைல் போன் மர்மமான முறையில் காணாமல் போவது.
*பாதுகாப்பற்ற வாகனத்திலிருந்தோ கட்டிடத்திலிருந்தோ செல்பேசி திருடு போதல்
*உரிமையாளர் அல்லாது வேறு ஒரு மூன்றாம் நபர் பயன்பாட்டிலிருக்கும் போது மொபைல் பாதிப்பிற்குள்ளாவது  அல்லது தொலைந்து போவது.
*எந்திரவியல் அல்லது மின்னனுச் சேதாரங்களுக்கு இழப்பீடு கிடைக்காது
*வழக்கத்திற்கு மாறான வகையில் பயன்படுத்தப் பட்டாலோ சோதனைக் குட்படுத்தப்பட்டாலோ உண்டாகும் பாதிப்பிற்கு  இழப்பீடு கிடையாது.
*வழக்கமான தேய்மானங்களினால் உண்டாகும் பாதிப்புகள்.
*வானிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகள்.
*வேண்டுமென்றோ அல்லது தீய நோக்குடனோ கருவியின் உரிமையாளரால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள்.
*சுத்தம் செய்யும் போதோ அல்லது பழுது பார்க்கும் போதோ உண்டாகும் எந்த பாதிப்புக்கும் இழப்பீடு கிடையாது.

காப்பீட்டுக் கட்டணம் (பிரீமியம்) எவ்வளவு?

ஒவ்வொரு காப்பீட்டாளரும் வெவ்வேறு வழிமுறையை வைத்திருந்தாலும், பொதுவாகக் காப்பீடு செய்யப்படும் ஒரு  ஆயிரம் ரூபாய்க்கு, 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை பிரீமியம் வசூலிக்கப் படுகிறது. தோராயமாக 10,000 ரூபாய்  மதிப்புள்ள போனுக்கு 160 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தேய்மானம்   

இழப்பீடு கோரும்போது தேய்மானத்தை கணக்கில் கொண்டே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். வாங்கியதிலிருந்து 90  நாட்களுக்குள் இழப்பீடு கோரப்பட்டால் தேய்மானம் எதுவுமில்லை. 91ம் நாளிலிருந்து 180 நாட்களுக்குள் கோரப்படும்  இழப்பீடுகளுக்கு 25 சதவீதம் தேய்மானம் கணக்கிடப்படும். 181 நாட்களைத் தாண்டியவற்றுக்கு 50 சதவீதம் தேய்மானம்  கணக்கிடப்பட்டே இழப்பீடு வழங்கப்படும்.

மொபைல் காப்பீட்டுச் சந்தை

இந்தியாவில் பல நிறுவனங்கள் மொபைல் காப்பீட்டில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்
.
*நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (New India Assurance)  மேலே சொல்லப்பட்ட அனைத்து. பாதிப்புகளுக்கும்  இழப்பீடு வழங்குகிறது. இந்தியாவின் முக்கியமான அரசு காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றானது இது.

*குவிக் ஹீல் காஜட் இன்சூரன்ஸ் (Quick Heal Gadget Insurance). ஆன்டி வைரஸ் மென்பொருளுக்காகப்  புகழ்பெற்றது இந்நிறுவனம். 599 ரூபாயிலிருந்து 2499 ரூபாய் வரையில் காப்பீட்டுக் கட்டணம் வசூலிக்கும்  இந்நிறுவனம், குவிக் ஹீல் மென்பொருளையும் காப்பீட்டுடன் வழங்குகிறது.

*சிஸ்கா காஜட் செக்யூர் (Syska gadget secure). இந்நிறுவனம் ஐந்து விதமான திட்டங்களை வழங்குகிறது.  4000 ரூபாயிலிருந்து 60000 ரூபாய் விலை வரையிலுள்ள போன்களை காப்பீடு செய்யும் சிஸ்கா கட்டணமாக ரூ.599  லிருந்து ரூ.1999 வரை வசூலிக்கிறது.

*வாரன்டி பஸார் (Warranty Bazaar). ரூ.5000லிருந்து ஒரு லட்சம் வரையிலான விலையில் உள்ள போன்களை  காப்பீடு செய்கிறது. ஐ போனுக்கெனத் தனியான காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருக்கிறது. வாங்கித் தொண்ணூறு  நாட்களுக்குள் ஆகியிருக்கும் போன்களுக்கு கூடுதல் வாரன்டிக்கான வாய்ப்பைத் தருகிறது இந்நிறுவனம்.

*மொபைல் அசிஸ்ட் (MobileAssist). திருட்டினாலோ உடைந்து போவதனாலோ ஏற்படும் தகவல் இழப்பினையும்  சேர்த்தே பாதுகாக்கிறது மொபைல் அசிஸ்ட். புகார் கொடுத்தால், வீட்டிலேயே வந்து போனை வாங்கிச் சரி செய்து  தருகிறது இந்நிறுவனம். கூடுதலாக, சரி செய்யப்படும் வரை ஒரு தற்காலிக பயன்பாட்டுக்கான போனையும்  கொடுக்கிறது. ரூ.599 லிருந்து கட்டணங்கள் ஆரம்பமாகின்றன.

கூடுதல் வாரன்டி (Extended warranty)

மொபைல் போன் காப்பீடு ஒரு வருடமே செல்லுபடியாகும். ஒரு வருடத்தைத் தாண்டி ஏற்படும் பாதிப்புகளை  எதிர்கொள்ள காப்பீட்டு நிறுவனங்கள் கூடுதல் வாரன்டியை அளிக்கின்றன. ஆரம்பத்திலேயே சிறிது கூடுதலாக  காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதன் மூலம் காப்பீட்டுக் காலத்தை நீட்டித்துக் கொள்வது நல்லது.

(வண்ணங்கள் தொடரும்!)
-ஜெ. சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-08-2018

  16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-08-2018

  15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்