SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லூரி மாணவிகளின் தேர்வு

2018-05-02@ 14:17:58

நன்றி குங்குமம் தோழி

நரிக்குறவர்கள் செய்யும் ஆபரணங்கள்

இந்தியா முழுவதும் பழங்குடி மக்களான நரிக்குறவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள்  நாடோடிகளாக அவ்வப்போது  இடம் பெயர்ந்து கொண்டிருப்பார்கள். சிறிய வண்ண வண்ண கற்களால் செய்யப்பட்ட  நகைகள் விற்பது இவர்களின் பிரதான தொழிலாக இருக்கிறது. செல்லும் இடங்களில் கூடாரம் அமைத்து தங்குவது  இவர்களின் பழக்கம். வியாபாரம் முடிந்ததும் வேறு இடத்திற்கு சென்று விடுகின்றனர்.  காடுகளில் கிடைக்கும் அரிய  பொருட்களை பயன்படுத்தி இவர்கள் செய்யும் நகைகள் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. இவர்கள் செய்யும்  ஆபரணங்கள் குறித்து அவர்களிடமே கேட்டேன்.

 சென்னை பெசன்ட் நகர் நடைபாதையில் இத்தகைய ஆபரணங்களைக் கொண்டு கடைவிரித்திருந்த மாலாவிடம்  பேசியபோது... “டெல்லி, குஜராத், காசி, மேற்கு வங்கம், இப்படி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு கிடைக்கும்  அழகூட்டப்பட்ட கற்களை வாங்கி வருவோம். அதை பயன்படுத்தி மக்கள் விரும்புகின்ற வகையில் கழுத்துக்கு அணியும்,  ஆபரணங்கள், கம்மல், குழந்தைகளுக்கு கொலுசு, மணி போன்றவற்றை செய்கிறோம். இந்த நகைகள் செய்வதற்கு  தேவையான ஒரு சில பொருட்களை மட்டும் இங்கேயே வாங்கிக் கொள்வோம். சின்ன சின்ன மணிகள் கொண்ட  நகைகளை செய்ய குறைந்தது 3 மணிநேரம் ஆகும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று கடை விரிப்போம். குழந்தைகளுக்கான மணிகள் ஒவ்வொன்றிக்கும் அதன்
வேலைப்பாடுகள் வைத்து 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்கிறோம். பெண்களுக்கு செய்யப்படும் கற்கள் பதித்த  ஆபரணங்கள், 120 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்கிறோம். நாள் ஒன்றுக்கு  300லிருந்து 800 ரூபாய் வரை  வியாபாரம் இருக்கும். ஒரு சில நாட்களில் ஒன்றும் கிடைக்காது. ஒரு சிலர் எங்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு  போய் அதிக விலைக்கு வெளியே நகைகளை விற்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து வருகிறவர்கள் நாங்கள்   செய்யும்போது அருகில் இருந்தே பார்த்து விரும்பி வாங்கிச்செல்வார்கள். 

ஒரு சிலர் அவர்கள் அணியும் உடைக்கு ஏற்ற நிறங்களில் மணிகள் செய்து தரச்சொல்லி கேட்பார்கள். அவர்களுக்கு  செய்து கொடுப்போம்’’ என்கிறார். இதே தொழிலில் ஈடுபட்டுள்ள முனியப்பனிடம் பேசியபோது, “என் அப்பா, அம்மா  இந்த வியாபாரத்தை செய்தார்கள். அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.  மாதம் ஒரு முறை காசி,  மகாராஷ்டிரா, டெல்லி என பல்வேறு இடங்களுக்குச் செல்வோம், வண்ண வண்ண கற்களை வாங்கி வருவோம். இந்த  கற்கள் எல்லாம் மலைக் காடுகளில் இருந்து கிடைப்பவை.

இவற்றை இழைத்து வழுவழுப்பாக்கி, வெவ்வேறு வடிவங்களில் செய்து கொடுப்பார்கள்.  அவர்களிடமிருந்து நாங்கள்  கிலோ கணக்கில் வாங்கி வருவோம். நேபாளக் காடுகளுக்கு சென்று அங்கு ருத்ராட்சம் போன்ற மணிகளை சேகரித்து  வருவோம். பால மணிகள் சேகரித்து வருவோம். அனைத்து பொருட்களையும் இங்கு கொண்டு வந்து நகைகளாக  செய்வோம். நாங்கள் செய்யும் மணியில் ஒவ்வொரு  ஊரில் இருந்து வாங்கி வந்த பொருளும் இருக்கும். குறைந்தது 5  ஊர்களில் சேகரித்த பொருட்களைக் கொண்டு வளையல், செயின், கம்மல் எல்லாம் செய்கிறோம்.  பல நிறங்களில்  இருப்பதால் கல்லூரி பெண்கள் அதிகமாக விரும்பி வாங்கி செல்கிறார்கள். 

பிறந்த குழந்தைகளுக்கு பால மணி வாங்கி செல்வார்கள். சிறிய கற்கள் பதித்த கம்மல், நெத்திச்சுட்டி, கழுத்துக்கு  அணியும் கற்களால் ஆன நகைகள் அதிகம் விற்பதுண்டு. திருவிழா நட்களில் எங்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும்.  மற்ற நாட்களில் ஒரு நாளைக்கு தேவையான செலவுக்கு காசு கிடைக்கும்” என்கிறார் முனியப்பன். 
 
-ஜெ.சதீஷ்
படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்